பசி

அந்தப்பூனை வழக்கம்போல் அதிகாலை ஐந்தரை மணிக்கே வாசலில் வந்து நின்று கரைந்தது. ஒரு சின்ன குழந்தையின் கெஞ்சுதல் அந்தக்குரலில்.

ஸ்டெஃபி நேற்றே அவள் பாட்டி வீட்டிற்குச் சென்றது அதற்குத் தெரியாது.

கதவைத் திறந்து வெளியே தலைநீட்டிய பாட்டியின் முகம் நோக்கி அதே கெஞ்சுதல்; பாலுக்குக் கேவும் சின்னஞ்சிறு குழந்தைகயின் உடைந்த குரலில்.

பூனையைப் பார்க்காமல், தொலைவிலிருந்து அந்த குரலைக் கேட்டால் நிச்சயமாக அது ஒரு குழந்தையின் கெஞ்சும் குரல்தான்.

‘ம்யாவ்…ம்யாவ்… மியா…வ்…வ்…”

ஒரே மொழி! ஓவ்வொரு முறையும் வெவ்வேறு தொனி! பொருள் ஒன்று தான்…

‘பசிக்குது தாயே…சீக்கிரமா

பாலூத்த மாட்டியா…”

பாட்டிக்குப்புகுந்ததாதெரியவில்லை, வாசல்படியில் நின்று தலைநீட்டிப்பார்த்த பாட்டியின் முகம் அதற்குப் பொருட்டல்ல.

குரல்கேட்ட மறுநொடியே, ஒரு சின்னஞ்சிறு கிண்ணத்தில் பாலோடு வாசலைத் தாண்டிவரும் ஸ்டெஃபியின் முகமல்ல இது..!

ஸ்டெஃபி ஒரு போதும் வெறும் கையுடன் வந்து இப்படிப் பார்த்ததில்லை…

கலைந்து கிடக்கும் தலையோடு, கண்களில் ததும்பும் தூக்கக் கலக்கம் மாறாமல், கையில் ஒரு கிண்ணப் பாலுடன் மெள்ள நடந்து வரும் அந்தப் பாப்பா – எட்டு வயது ஸ்டெஃபி – எங்கே காணோம்…

பூனைக்குத் தெரிகிறது இது ஸ்டெஃபி இல்லையென்று.

எப்போதாவது ஸ்டெஃபியோடு கூடவந்து,

“பாப்பு வச்சிட்டு இந்த ண்டவா,

அது பசீல கடிச்சுடும்” என்று

சத்தம் போடும் இந்த முகமும் இந்தக் குரலும் அதற்குப் பரிச்சயமானதே தவிர மனதில் அழுத்தப்பதிந்ததில்லை.

இப்போது பூனையின் பிரச்சினை அதுவல்ல. பாப்பாவைக் காணோம்! பாலோடு வருவாள் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து குழைந்தகுரலில் கரைந்து கொண்டிருந்தது. பாட்டியைத் தாண்டி உள்ளே நுழைந்து பாப்பா பாலோடு வருகிறாளா என்று பார்க்க ரொம்ப ஆசைதான். வாசலைத் தாண்டி உள்ளே நுழைய துணிச்சல் வரவில்லை. கரைந்து கொண்டிருந்தது.

காரில் தாத்தாவீட்டுக்குப் புறப்படும் அந்தக் கணங்களில், டோருக்கு வெளியே தலைநீட்டி

“பாட்டி… பூனைக்கி பால் வைக்கணும் பாட்டி…  மறந்துடக் கூடாது! பாவம், பசியோட வந்து கத்தும்…  தூங்கிட்டே இருந்துடாதீங்க பாட்டி…”

கார்; புறப்படும் வரை அவள் திரும்பத்திரும்பச் சொன்னது, இப்போது பாட்டியின் நினைவில் எழுந்தது.

பாட்டி மனசோடு பேசிக் கொண்டே உள்நோக்கித் திரும்பினாள்.

“பாவம் ஸ்டெஃபி…  ஊருக்குப் புறப்படும் போது எத்தனை முறை சொன்னா…  கெஞ்சிக் கெஞ்சி… வேற எதப்பத்தியும் பேசலியே! பூனைய மறந்துடாதீங்க பாட்டி!… பூனைய மறந்துடாதீங்கா…” யோசித்தபடியே நடந்த பாட்டி அடுக்களைப்பக்கம் இருந்த ஃபிரிட்ஜை திறந்து பால் இருந்த பாத்திரத்தை வெளியே எடுத்தாள். பூனைக்கும் பொறுமையில்லை…  அதே கரைச்சல் குரலோடு வாசற்படியைத் தாண்டி பாட்டிக்குப் பின்னே மெள்ள நடந்துவந்தது.

உள்ளிருந்து கேட்ட “பூனையின் குரல், இன்னும் எழாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த தாத்தாவுக்கு எரிச்சலூட்டியது. ஏகப்பட்ட எரிச்சல். அடுக்களையில் மனைவி இருப்பது அவருக்குத் தெரியாது. திருட்டுப்பூனை எதிலாவது வாய்வைத்துவிடுமோ என்ற பயம்…  கோபம்… . வேகமாக எழுந்து வெளியே வந்தவள் நடுமுற்றம் வரை முன்னேறிக் கரையும் பூனையை நோக்கி “ச்சீ சனியனே…  போ வெளியெ” என்ற கூச்சலுடன் பூனையை நோக்கி நடந்தாள். எரிச்சல், கோபம் எல்லாமும் சேர மறுபடியும் கத்தினாள்” “சனியனே… போ வெளிய… .”

பூனை விரைவாக வெளியேறி வாசற் படிக்கு வெளியே நின்று, மறுபடியும் குரல் கொடுத்தது. தன்னைவிரட்ட கையை ஓங்கிய அவள் முகத்துக்கு நேரே அதன் பார்வை உயர்ந்தது இருபுறமும் அடர்ந்த மீசை அதிர்ந்தது. குழைந்த குரல் மறைந்தது. விரிந்த வாய் வழியே “ஸ்… ஸ்… ஸ்… ” என்ற ஓசை. பெருங்காற்றின் ஓலத்தைப்போல்! “ஸ்… ஸ்… ஸ்… ”வாய் மட்டுமல்ல கண்களும் விரிந்தன. ஓரடி பின்னோக்கி நகர்ந்து – நின்று – ஆக்ரோஷத்துடன் பார்த்தது. சீற்றத்தின் குரல், ஒரு குட்டிப் புலியின் தோற்றத்தை நினைவூட்டிக் கொண்டிருந்தது.

தாத்தாவுக்குக் கோபம் தலைக்கேறியது ‘கேவலம் பூனை! என்ன திமிர்!,  வாசலுக்கு வெளியே கால்வைக்க நினைத்தவரை பாட்டியின் குரல் நிறுத்தியது.

“இருங்க… .இருங்க… .வெரட்டாதீங்க அது ஸ்டெஃபியோட பூனை. இந்தப்பாலவச்சிடலாம்… .”

வாசலில் நின்றவரைத் தாண்டிவந்த பாட்டியைப் பார்த்து “ம்யாவ்” என்றது “செல்லம்”.

“அந்த மனப்புயல்? அது எங்கே மறைந்தது”? அதிர்வுடன் பின்னோக்கி நடந்து சோஃபாவில் அமர்ந்ததும். மனம் காரணம் தேடி அலைந்தது.

குனிந்து ஓரமாயிருந்த கிண்ணத்தில் மெள்ள பாலூற்றிக்கொண்டிருந்த பாட்டியின் முகத்தைக் கூட பார்க்காமல் கிண்ணத்தில் வாய் பதித்தது “செல்லம்”

புலவர் நாகை பாலு

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: