தலைமையை கற்போம் தலைவர்களிடமிருந்து… டாக்டர் பீமாராவ் அம்பேத்கர்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். கைத்தடி வாசகர்களை ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் சந்திப்பதில் மிக்கமகிழ்ச்சி. ஒரு குழந்தையின் வளர்ச்சி என்பது உடல்வளர்ச்சி, அறிவு வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியது. இன்று குழந்தைகளின் உடலுக்கு வலிமை சேர்க்கும் விளையாட்டுக்களை அடுத்துஅவர்களின் அறிவையும் மனதை பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். இன்றைக்கு தொழில்நுட்பங்கள், பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்கள் வளர்ந்திருக்கும் காலகட்டத்தில் நிறைய மாணவர்கள் உயர்கல்வி படிக்க போராடி பெருமுயற்சிக்குப்பின் இடம் கிடைக்காமலும், அவ்வாறு போராடி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்தபின் அங்கு கல்வி நிறுவனங்கள் தரும் அழுத்தம் தாங்காமலும் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று செய்தியைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமளிக்கிறது.

அதற்கெல்லாம் அரசின் கொள்கை முடிவுகள், குறிப்பிட்ட மக்களின் ஆதிக்கம் போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்த மாதிரியான பிரச்னைகள் சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல வாழ்க்கையில் வெற்றி பெற்றமா பெரும் தலைவர்களுக்கும், அறிஞர்களுக்கும், பெரும் அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கும் இருந்திருக்கிறது என்பதை அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது. இன்றைய இளைஞர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் மற்றும் தலைமைப் பண்புகள் பல தலைவர்களின் வாழ்க்கையில் இருப்பதால் அவர்களிடமிருந்தே அவற்றை கற்கலாம் எனத்தோன்றியது. எனவே தலைமையைக் கற்போம் தலைவர்களிடமிருந்து… என்ற தொடர் கட்டுரையை கைத்தடியில் எழுத உள்ளேன். வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும், படித்து பயன்பெற வேண்டும் என்றும் மேலும் பலருக்கு இதைநீங்கள் கொண்டு செல்ல வேண்டும் என அனைவரையும் அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

தலைமை என்பது பதவியோ பொறுப்போ அல்ல ஆனால் பதவியில் இருப்பவர்களும் பெரும் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய பண்பாகும். என்ன அது பெரும்தலைவர்களுக்கு மட்டும் உரியபண்போ அல்லது ஒரு நிறுவனத்தின் உயர்பதவிகளில் இருப்பவர்கள் மட்டும் வளர்த்துக் கொள்ளவேண்டிய பண்போ அல்ல. அது ஒட்டுமொத்த மனித சமூகமேவளர்த்துக் கொள்ள வேண்டிய பண்பு. ஏனெனில் தலைமைப் பண்பு எல்லாதுறைக்கும் தேவைப்படுகிறது. மேலும் தலைமை என்பது தலையில்மை ஏற்றும் காலத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய பண்பு அல்ல. அது கருவறையில் காலடி எடுத்து வைக்கும் போதிலிருந்தே பழகிக்கொள்ள வேண்டிய பண்பு. அவ்வாறு கற்றுக்கொண் ட பண்பை யார் தன்சுயநலத்திற்காகப் பயன்படுத்தாமல் பொதுநலத்திற்காகப் பயன்படுத்துகிறார்களோ அவர்களே என்றும் மக்கள் போற்றும் தலைவர்களாக அறியப்படுகின்றனர்.

இந்த பூமிக்கு வரும் எந்த மனித உயிர்களும் எப்படி வாழவேண்டும் என்று தெரிந்து கொண்டு இங்கு வருவதில்லை. அவ்வாறு வந்தவர்கள் தானே முயன்று கற்று தங்களை மற்றவர்கள் வாழ்விற்கு முன்னுதாரணமாகிக்கொண்டவர்களில் ஒருவர் தான் டாக்டர்பி.ஆர்.அம்பேத்கர்ஆவார். மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அம்பவதே என்றகிராமத்தில் பிறந்து மஹூ என்ற இடத்தில் இராணுவப் பள்ளியொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தராம் ஜிக்கும்பீமாபாய்க்கும், 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் பிறந்த பதினான்காவது குழந்தைதான் பீம் என்னும் கடைக்குட்டி செல்லப்பிள்ளை. பீம்பள்ளிக்கு சேர்வதற்குள் அவர் தந்தை பணியிலிருந்து ஓய்வுபெற்று தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். அவர் தந்தைக்கு கிடைக்கும் ஓய்வு ஊதியத்திலிருந்து வாழ்க்கையை நடத்துவது என்பது ஓடமில்லாமல் ஆற்றைக்கடப்பது போன்றிருந்தது. தம் சொந்த ஊரில் வேலையில்லாமலும் நிரந்தர வருவாய் இல்லாமலும் இருந்ததைவிட ராம்ஜிக்கு மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால், தான்மஹர் என்ற தீண்டப்படாத வகுப்பில் பிறந்ததால் தன் மகனை பள்ளியில் சேர்த்துக் கொள்ளவில்லையே என்பது தான்.

தன் மகனை பள்ளியில் சேர்த்துக் கொள்ளாத அந்த கிராமத்தை காலிசெய்துவிட்டு பம்பாயில் உள்ள சதாரா என்ற பகுதிக்கு குடியேறி அங்குள்ள ஓர் இராணுவப்பள்ளி ஒன்றில் பீம் சேர்க்கப்பட்டார். பொதுவாக பெற்றோர்களின் வயதான காலத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிபுத்திசாலியாக இருப்பார்கள் என்பார்கள், அதைப்போலவே பீமும் படிப்பில் ஆர்வம்மிக்கவராக இருந்தார். அதேநேரத்தில் தன்னோடு படிக்கும் மாணவர்களோடு வம்பிழுத்துக்கொண்டு வருவதுஅவனது பெற்றோர்களுக்கு வருத்தமாக இருந்தது. பீம் ஆறு வயதாக இருக்கும்போது அவன் தாய் பீமாபாய் உடல்நலக்குறைவால் மறைந்தார். இந்த நேரத்தில் ராம்ஜிக்குகுழந்தைகளை வளர்ப்பதற்கு உடல் ஊனமுற்ற தன் தங்கை மீராபாய் தானாக முன்வந்து உதவினாள். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தன் மனம் தளராமல் நன்றாகப் படித்ததால் அம்பேத்கர் என்னும் ஆசிரியரின் மனம் கவர்ந்த மாணவராகிப் போனார் பீம். பின் தன் பெயரையே பீமாராவ் அம்பேத்கர் என மாற்றிக் கொண்டார். இங்கு தான் நம் இளைஞர்கள் அவரிடமிருந்து கற்க வேண்டும் எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலை ஏற்பட்டாலும் வாழ்கையில் கல்வியை கைவிடக்கூடாது. அது தான் நம்மை நாம் விரும்பும் இடத்திற்கு கொண்டு செல்லக்கூடியது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்தச் சூழ்நிலையின் தாக்கத்தினால் தான் பின்னாளில் அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்கும் அவர்களின் மனிதஉரிமைக்கும் குரல்கொடுத்தார்.

அந்த பண்புதான் அவரை தலைமைப் பொறுப்புக்கு அழைத்துச் சென்றது. ஆறு தான் செல்லும் பாதையில் ஏற்பட்ட தடையால் நின்று போவதில்லை, மண்ணில் விதைத்த விதைகள் தன்மீது அழுத்திக் கொண்டுள்ள மண்ணைத்தாண்டி முளைத்து வருவதுபோல அம்பேத்கர் தனக்கு ஏற்பட்ட தடைகளை எல்லாம் தாண்டி குதித்தார்.

பீம் தான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது பள்ளிக்கு நோட்டுப் புத்தகம் எடுத்துக்கொண்டு போனதை விட பள்ளியில்உட்காருவதற்கு கோணிப்பையைச் சுமந்து கொண்டு போனதுதான் அதிகம். ஒருநாள் வகுப்பறையில் ஆசிரியர் தன்னை கரும்பலகையில் கணக்கு போடச்சொன்னதும் ஆர்வமாகச் செல்வதற்குள் சகமாணவர்கள் சென்று தீட்டுபட்டுவிடும் என்று தனது சாப்பாட்டு பைகளை எடுத்துக்கொண்டு வந்ததும் அந்த வயதில் அவருக்கு மனதில் தீராத காயத்தை ஏற்படுத்தியது. பீம் நான்காம் வகுப்பு படிக்கும்போது ராம்ஜி தன் இருப்பிடத்தை பம்பாயில் உள்ள பரேல் என்ற பகுதிக்கு மாற்றினார். அங்கு ஒரே ஒரு அறைதான் இருந்தது அதில் தான் சமைக்க வேண்டும், படிக்க வேண்டும், தட்டுமுட்டுச் சாமான்களையும் வைத்துக் கொள்ளவேண்டும் மேலும் அங்கேயேதான் தூங்கவும் வேண்டும்.

ராம்ஜி இந்த நேரத்தில் பீமை மாலை நேரத்தில் தூங்கச் சொல்லிவிடுவார், பிறகு நள்ளிரவுக்குப்பிறகு பீமை எழுப்பிவிட்டு படிக்கச் சொல்லிவிட்டு அவன் தூங்கிய இடத்தில் தான் படுத்துக்கொள்வார். மகன் மண்ணெண்ணெய் விளக்கில் விடியவிடிய படிப்பான். இவ்வாறு பள்ளியிலும் தனது வீட்டிலும் மிகுந்த மனவேதனைக்கும் இடநெருக்கடிக்கும் தள்ளப்பட்ட பீம் இவற்றை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு புத்தகத்தின் மீது தன் முழுகவனத்தையும் திருப்பினான்.மெட்ரிகுலேசன் படிப்பில் தான் சமஸ்கிருதம் மொழியை விருப்பப்பாடமாக படிக்க விரும்பியபோது அவருடைய ஆசிரியர் அதை மறுக்கவே வேறுவழியின்றி பாரசீக மொழிப்பாடத்தை எடுத்துப்படித்து வெற்றியும் பெற்றார். பின் கோலூஸ்கர் என்பவரின் நட்பு கிடைத்தது அது நடுக்கடலில் திசை தெரியாமல் தவிக்கும் கப்பலுக்கு கிடைத்த வழிகாட்டியைப்போல் இருந்தது. அவர் மெட்ரிகுலேசன் படிப்பில் தேர்ச்சி பெற்றதைப் பாராட்டி புத்தர் பற்றிய புத்தகம் ஒன்றை பீமுக்கு வழங்கினார், அது மன மாற்றத்திற்கும் மதமாற்றத்திற்கும் உதவியது. அவர்வழிகாட்டுதலில் பல நல்ல புத்தகங்களை படித்ததோடு அமெரிக்கா, இலண்டன் என வெளிநாட்டிற்குச் சென்று சட்டத்தில் பாரிஸ்டர் பட்டமும் பொருளாதரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

இலண்டனுக்கு மேற்படிப்புக்குச் சென்றபோது அங்குள்ளஅருங்காட்சியக நூலகத்தில் தான் தனது பெரும்பாலான நேரங்களைச் செலவிட்டு பல புத்தகங்களை படித்து குறிப்பெடுத்துக் கொண்டார். அந்த பழக்கம் தான் அவருக்குபின் நாளில் ஆய்வுக்கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதுவதற்கு உதவின. அது மட்டுமல்லாமல் உலகத்திலேயே அந்த நூலகத்தை மிக அதிகநேரம் பயன்படுத்தியவர்கள் என்ற பெருமையைப் பெற்றவர்கள் காரல்மார்க்ஸ்க்கும் அண்ணல்அம்பேத்கரும் ஆவர். மாணவர்களும் இளைஞர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம்இது. தனக்கு விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கவில்லை, விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை, விரும்பிய நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தோடு வேலை கிடைக்கவில்லை, தான் விரும்பிய பெண்ணை மணக்க முடியவில்லை என்று விலை மதிப்பற்ற உயிரை மாய்த்து கொள்ளக்கூடாது.மாறாக அண்ணல் அம்பேத்கர் போல் கவனத்தை ஒருமுகப்படுத்தி கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி நன்றாகக் கற்கவேண்டும் என்ற மனஉறுதியைப் பெறவேண்டும்.

அம்பேத்கர் தனது 17 ஆவது வயதில் சுமைதூக்கும் தொழிலாளியின் மகளான ராமியை பெண் பார்த்து நிச்சயம் செய்துவிட்டு திருமணத்திற்கு மண்டபம் தேடினால் ஒருவரும் கல்யாண மண்டபம் கொடுக்கவில்லை. எனவே அப்பகுதியில் இருந்த மீன்மார்க்கெட்டையே கல்யாண மண்டபமாக அலங்கரித்து ராமி என்கிற ராமாபாயை மணந்தார்.திருமணத்திற்குப் பின் வாழ்கை நடத்த, பொருள் வேண்டும் வேலை வேண்டும் என்று பல்வேறு வாழ்க்கைப் பிரச்சனைகள் இருந்தாலும் அவர் மனம் மட்டும் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தது. அவரது ஆர்வத்தைக் கண்டு கேலுஸ்கர், பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாட்டிடமிருந்து உதவித்தொகை பெற்று அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு  மேற்படிப்புக்கு அனுப்பினார்.

அங்கு தான் மனிதர்கள் சாதிவேறுபாடு இன்றி சமமாக நடத்தப்படுவதையும் சகமாணவர்கள் அவரை மதிப்பதையும் கண்டார். நண்பர்கள் எல்லாம் சுற்றிப்பார்க்க அழைத்தாலும் தன் நோக்கத்தில் குறியாக இருந் துகல்வி கற்றார். அவர் எப்பொழுதும் வரலாறு, சமூகவியல், தத்துவம் மற்றும் மனோதத்துவம் போன்ற துறைகளில் ஆர்வம் செலுத்தினார். எளிய உணவுப் பழக்கத்தையும் உடைகளையுமே பின்பற்றினார். அதன் பிறகு இலண்டன் சென்று சட்டம் மற்றும் பொருளாதாரத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். துரதிஸ்டவசமாக அந்த நேரத்தில், அவருக்கு கல்வி உதவித்தொகைக்கான காலம் முடிந்ததால் பரோடா மன்னர் உடனே வரச்சொல்லி கடிதம் போட்டார். வழக்கமாக பரோடாவிற்கு நன்கு கற்றவர்கள் வந்து இறங்கினால் இரயில்நிலையத்திலிருந்து ராஜமரியாதையோடு அழைத்துச் செல்வார்கள். ஆனால் அம்பத்கர் வந்து இறங்கியதும் இரயில்நிலையத்தில் யாரும் இல்லை இவரை வரவேற்க. அதுமட்டுமல்ல அங்கு தங்குவதற்கு யாரும் விடுதியில் அறையும் தரவில்லை.

இறுதியாக ஒரு பார்சி விடுதியில் தங்கிவிட்டு பரோடா மன்னரைச் சந்தித்தார். பரோடா மன்னர் இவருடைய திறமையைப் பார்த்து இராணுவச் செயலாளர் வேலையைக்கொடுத்தார். மன்னர் இவர் மீது மிகுந்த நம்பிக்கையையும் மரியாதையையும் வைத்திருந்தாலும் அவருடன் வேலை செய்கிறவர்கள் யாரும் மதிப்பதற்கு தயாராக இல்லை என்பதனை அவர்களின் செயல்கள் மூலம் உணர்த்தினார்கள். சரியானசூழல் இல்லாவிட்டாலும் மன்னரிடம் கல்விஉதவித்தொகை பெறும் போது போட்ட ஒப்பந்தத்தின்படி வேலைசெய்தார். எனினும் நீண்டநாட்களுக்கு அந்த பணியைத் தொடரமுடியாமல் உதறித்தள்ளினார்.

பின்பு பம்பாயில் உள்ள சைத்தான் ஹாம் கல்லூரியில் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். அவரது சரளமான மொழி, ஆளுமை நிறைந்த பேச்சு மற்றும் கம்பீரமான குரல் வளத்தால் மாணவர்களின் உள்ளம் கவர்ந்த பேராசிரியரானார், அதை சக பேராசிரியர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அவர்கள் அவரை அவமதித்தார்கள் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என நினைத்தார். ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை என்பதையும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார். அங்கு அவருக்கு கிடைத்த 15 ரூபாய் மாதச்சம்பளத்தில் குடும்பச்செலவுக்குப் போக மிச்சம் பிடித்து சேமித்து வைத்த தொகையோடு நண்பர்களிடம் கடன்பெற்று இலண்டனில் பாதியில் விட்டுவிட்டு வந்த படிப்பைத் தொடர்ந்தார். அவர் இலண்டனில் இருந்தாலும் அவர் மனம் எப்போதும் மனிதர்களை மதம் என்ற பெயரில் பிரித்து அவமானம் செய்யும் கும்பலை எதிர்த்துப் போராட வேண்டும் என்று எண்ணியது. தீண்டப்படாத மக்களின் பிரச்சனைகளை மற்றவர்களுக்கு புரிய வைக்கவும் அந்த மக்களை தட்டி எழுப்பவும் எழுத்து மற்றும் பேச்சு என்ற ஆயுதத்தைத் தேர்ந்தெடுத்தார். அதனால் பத்திரிகையை ஆரம்பித்தார் நிறைய ஊர்களில் மேடைகளில் பேசி மக்களின் மனங்களைக கவர்ந்தார். தலைவன் என்பவன் அடுத்தவர்களின் மனங்களைக் கவரவும் மக்களின் உணர்வுகளையும் பிரச்சனைகளையும் புரிந்து அதைத் தீர்க்கவும் வேண்டும். இவையெல்லாம் அம்பேத்கரிடம் இருந்ததால்தான் அவர் ஒடுக்கப்பட்டவர்களின் தலைவனாக மிளிர்ந்தார். புறக்கணிக்கப்பட்டவர்களின் நலன்களைக் காக்க உருவாக்கப்பட்ட ஹித்தகாரணி என்ற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் தீண்டப்படாத மக்கள் உயர்கல்வி கற்பதற்காக அவர்களுக்கு விடுதிகள், நூலகங்கள், வாசகர் வட்டங்கள், பொருளாதார நிலையை உயர்த்த தொழில்பயிற்சி மையங்கள் போன்றவற்றை உருவாக்கி அவர்களின் குறைகளை நீக்கினார்.

இவரின் சமூக அக்கறையை கண்டு 1927 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக பம்பாய் மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக அம்பேத்கரை கவர்னர் நியமித்தார். பின்பு அவரேஅந்தச் சட்டமன்றத்தின் மக்கள் பிரதிநிதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தில் அவர் ஒடுக்கப்பட்டவர்களின் கட்டாயக்கல்வி, சுகாதாரம், மதுக்கட்டுப்பாடு, சமத்துவம் மற்றும் அவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தார். கல்வி மேல் தட்டு மக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்கள் போதிக்கும் கல்வி அடித்தட்டு மக்களுக்கு முழுமையாகச் சென்று சேருவதில்லை எனவே ஒரு சாதியிடமிருந்து மீட்டு பல சாதிக்காரர்களும் கல்வி போதிக்கும் பணிக்கு நியமிக்கப்பட்ட வேண்டும் என்றார் அம்பேத்கர். இப்படி குற்றச்சாட்டுக்களை ஆதாரத்தோடு எடுத்துக்கூறி பல நேரங்களில் காந்தியையே எதிர்த்தார். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் பிரிட்டிஷ்காரர்கள் அவரை வட்டமேசை மாநாட்டிற்கும் அழைத்தார்கள்.

பிரதமர் ஜவஹர்லால் நேருவும் அவரைச் சுதந்திர இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சராகவும் அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராகவும் நியமித்தார். இந்தியாவிலேயே அதிக எண்ணிகையில் ஒரு தலைவருக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளது என்றால் அது அம்பேத்கருக்குத்தான். ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்து, தனக்கு ஏற்பட்ட அவமானங்களை எல்லாம் தாங்கிக்கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே உருவாக்கும் நிலைக்கு உயர்ந்தார் என்றால் அவரின் பண்பும் உழைப்பும் திறமையுமே காரணம், அது போற்றப்பட வேண்டும். அவர் வாழ்க்கை படிக்கப்படவேண்டிய பாடம். அவர் வாழ்க்கையில் இன்றைய இளைஞர்களின் வாழ்வியல் வெற்றிக்கான சூத்திரம் ஒளிந்திருக்கிறது. எனவே அம்பேத்கரின் பண்பை, உழைப்பை, மனஉறுதியைக் கற்போம்.

(தொடரும்…)

கு.முருகேசன்

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: