பகுத்தறிவாளர் கழக பொன்விழாத் தொடக்க மாநாடு

பகுத்தறிவாளர் கழகத்தினை தொடங்கிவைத்து உரையாற்றிய தந்தை பெரியார் ‘இன்றுதான் மனிதர்களின் கழகத்தினை தொடங்கி வைக்கிறேன்’ என்றார். தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்து பகுத்தறிவாளர் கழகத்தின் பொன்விழாத் தொடக்க விழா மாநாடு விருதுநகரில் 16.11.2019 அன்று காலை முதல் இரவுவரை நடைபெற்றது. விருதுநகர் எங்கும் திராவிடர் கழகக் கொடிகள் பட்டொளி வீசி பறக்க, அணி அணியாய் காலைமுதலே தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பகுத்தறிவாளர்கள் வந்து குவிய ஆரம்பித்தனர்.

காலை 9 மணிக்கு, பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர்களாக இருந்து அண்மையில் மறைந்த வடசேரி.வ.இளங்கோவன்,புதுச்சேரி மு.ந.நடராசன் மற்றும் தூத்துக்குடி பொறியாளர் சி.மனோகரன்,விருதுநகர் ஆ.வெங்கடாசலபதி நினைவு அரங்கத்தில்  தாமிரபரணி கலைக்குழுவினரின் பகுத்தறிவு கலை நிகழ்ச்சியோடு மாநாட்டின் நிகழ்ச்சிகள் தொடங்கியது. பகுத்தறிவாளர் கழகத்தின் பொன் விழா மாநாட்டிற்கு பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் மா.அழகர்சாமி தலைமை ஏற்க, இந்த மாநாட்டின் அடித்தளமாய் நின்று நிகழ்த்திக்காட்டிய விருதுநகர் க.நல்லதம்பி அனைவரையும் வரவேற்றார்.மாநாட்டின் தலைவரைப் பகுத்தறிவாளர் கழகத்தின்  மா நிலத்துணைத்தலைவர் கோபு.பழனிவேல் முன்மொழிய, பல மாவட்டப்பொறுப்பாளர்கள அவரை வழிமொழிந்தனர்.

மாநாட்டினைத் திறந்துவைத்து திராவிடர் கழக்த்தின் துணைத்தலைவர், மின்சாரமாய் எதிரிகளுக்கு ஷாக் கொடுக்கும் கவிஞர் கலி.பூங்குன்றன் பகுத்தறிவாளர் கழகத்தின் தொடக்கக் கால வரலாறு, பொறுப்பாளர்களாய் பதவி வகித்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், உறுப்பினர்களாய் தங்களைப் பதிவுசெய்து கொண்ட தமிழக மந்திரிகள் எனப்பட்டியலிட்டு இன்றைய நிலையில் பகுத்தறிவாளர் கழகத்தின் தேவையினை வலியுறுத்தி உரையாற்றினார்.

பகுத்தறிவுப்போராளிகள் படங்களைத் திறந்து வைத்து திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் சு.அறிவுக்கரசு உரையாற்றினார். மறைந்த பகுத்தறிவுப்போராளிகளை மட்டுமல்ல, இன்றும் போராளிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும்

தனுவச்சபுரம் சுகுமாரன்,மங்களூர் நரேந்திர நாயக் ஆகியோரையும் குறிப்பிட்டு இந்துமதம்,கிறித்துவமதம், இஸ்லாமிய மதங்களை எதிர்த்துப் போரிட்ட பகுத்தறிவாளர் களை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.

பொதுவுடைமை இயக்கத்தைச்சார்ந்த பேராசிரியர் அருணன் தந்தை பெரியாரின் படத்தை திறந்துவைத்து மூட நம்பிக்கையின் முடை நாற்றம் எப்படி எல்லாம் மத்திய,மாநில அரசின் மூலமாக வீசுகின்றது,சமூகத்தில் அறிவியல் ஊடகங்கள் மூலமாகப் பரப்பப்படுகின்றது, தந்தை பெரியார் அந்தக் காலத்தில் எப்படி எல்லாம் போரடினார், வாதாடினார் என

விலாவாரியாக எடுத்துரைத்தார்.அறிவியல் கண்காட்சியைத் திறந்துவைத்து, அறிவியல் மனப்பான்மை ஏன் தேவைப் படுகின்றது,அதற்கு இந்தக் கண்காட்சி எப்படிப் பயன்படும் என்பதனை தனது உரையில் சுட்டிக்காட்டினார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்.

பிற்பகல் 11.30 மணியளவில் ‘புதியதோர் உலகம் செய்வோம்’  என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கத்திற்கு தலைமை வகித்து  பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு உரையாற்றினார்.அந்த நேரத்தில் அமெரிக்க மனித நேய இயக்கத்தால் ‘மனித நேய வாழ்நாள் சாதனையாளர்’ விருதுபெற்ற

பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர்,திராவிடர் கழகத்தலைவர்

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அரங்கினுள் நுழைய, தோழர்களின் உணர்ச்சிமிக்க  முழக்கத்தால் வரவேற்கப் பட்டார்.

கருத்தரங்கத்தின் தொடக்க உரையை ஊடகவியலாளர், எழுத்தாளர் ப.திருமாவேலன் ஆற்றினார். சுயமரியாதை இயக்கத்திற்கும் விருதுநகருக்கும் உள்ள தொடர்பினை, பகுத்தறிவாளர் கழகத்தின் பணியினைப் பாராட்டி தேர்ந்தெடுத்த சொற்களால் செறிவான உரையைப்

ப.திருமாவேலன் ஆற்றினார். தொடர்ந்து ‘பெரியாரை உலகமயமாக்குவோம்’ என்னும் தலைப்பில் பேரா.ப.காளி முத்து’ ‘ஜாதி ஒழிப்பு’ என்னும் தலைப்பில் எழுத்தாளர் மஞ்சை வசந்தன், ‘முறியடிப்போம் மூட நம்பிக்கைகளை’ என்னும் தலைப்பில் தகடூர் தமிழ்ச்செல்வி, ‘மதவெறி மாய்ப்போம்’ என்னும் தலைப்பில் அண்ணா சரவணன், ‘பெண் விடுதலை நோக்கில் பாலியல் சமத்துவம்’ என்னும் தலைப்பில் பேரா.மு.சு. கண்மணி ஆகியோர் உரையாற்றினர்.

விருதுநகரில் பேராசிரியராகப் பணியாற்றி, தான் பகுத்தறிவாளராக இருந்தது மட்டுமல்ல தன்னிடம் படித்த

பல மாணவர்களைப் பகுத்தறிவாளர்களாக மாற்றிய பகுத்தறிவுப் பேராசிரியர், இனமானப்பேராசிரியர் க.அன்பழகன்

அவர்களின் இளவல் பேரா.திருமாறன் அவர்களுக்கும் அவரது

இணையர் செந்தாமரை அவர்களுக்கும் மாநாட்டு மேடையில் பொன்னாடை போர்த்தி பாராட்டி மகிழ்ந்தார் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தொடர்ந்து வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இந்திய நாத்திகக் கூட்டமைப்பின் (திமிஸிகி) தலைவர் கர்நாடக மாநில பேராசிரியர். நரேந்திர நாயக்,துணைத்தலைவர் கேரளா யுக்திவாதி சங்கத்தின் பொறுப்பாளர்- தனுவாச்சபுரம் சுகுமாறன்,மும்பை பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் அ.இரவிச்சந்திரன் ஆகியோர் மாநாட்டினை வாழ்த்தி உரையாற்றினர். தொடர்ந்து திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கல்வி வள்ளல் காமராசர், அண்ணல் அம்பேத்கர் படங்களைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். அ.தா.சண்முகசுந்தரம் அவர்களின் நன்றியுரையோடு காலை அமர்வு முடிவுபெற்றது..

மதிய உணவு திருமண மண்டபத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதிய உணவுக்குப்பின் நடைபெற்ற தீர்மான அரங்கத்திற்கு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில துணைத்தலைவர் கோ.ஒளிவண்ணன் தலைமையேற்று,கடந்த காலங்களில் நமது மேடைகளில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் இன்றைய சட்டங்கள்..அதைப்போல இன்று நிறைவேற்றப்படும் பல தீர்மானங்கள் நாளைய சட்டங்களாகும் எனக்குறிப்பிட்டார். முத்தான,

‘‘நீட்’’ ‘‘டெட்’’ போன்ற தேர்வுகளை நீக்குக, புதிய தேசியக் கல்வி கொள்கையை முற்றிலும் கைவிடுக’’ போன்ற கருத்துக்களின் அடிப்படையில் அமைந்த 21 தீர்மானங்கள்  பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்கள் முன் மொழிய  மாநாட்டில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து பகுத்தறிவாளர் கழகப்பொருளாளர் சி.தமிழ்ச் செல்வன் தலைமையில் ‘பகுத்தறிவுப் பிரச்சாரம் உடனடி தேவை’ என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. அறிவார்ந்த பட்டிமன்றத்தின் நடுவராக ஊடகவியலாளர் நக்கீரன் கோவி.லெனின் அவர்கள் பொறுப்பு ஏற்க, ஆண்களிடமே  என்னும் தலைப்பில், வழக்குரைஞர் பா.மணியம்மை,இறைவி,ச.இன்பக்கனி, தெ.அ.ஓவியா ஆகியோர் அனல் தெறிக்க உரையாற்றினர். ‘‘பெண்களிடமே ‘என்னும் தலைப்பில் முனைவர் அதிரடி அன்பழகன்,இரா.பெரியார்செல்வன்,கோபி.வெ.குமாரராசா,தேவகோட்டை அரவரசன் ஆகியோர் சொற்போர் புரிந்தனர். முடிவில் நகைச்சுவையும்,நயமிக்க கருத்துக்களும் நிரம்பிய தனது முடிவுரையாக பகுத்தறிவுப்பிரச்சாரம் உடனடித்தேவை ஆண்களிடமே எனத்தீர்ப்பளித்தார். தொடர்ந்து பேரா.நரேந்திர நாயக்  அவர்களின் மந்திரமா?தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது.காவல்துறையின் அனுமதி மறுப்பால்  பகுத்தறிவாளர் பேரணி நடைபெறாமல் தடைபட்டது. 

மாலை 6 மணிக்கு சுயமரியாதைச் சுடரொளி  பேராசிரியர்

பு.இராசதுரை  நினைவரங்கத்தில் பொதுக்கூட்டம் தொடங்கியது.

அனைத்துக்கட்சிப் பிரமுகர்களால், பொதுமக்களால், பகுத்தறி வாளர்களால், போடப்பட்டிருந்த நாற்காலி இருக்கைகள் நிறைந்து மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. சில தந்திரங்களை கற்றுக்கொண்டு, மந்திரம் என்னும் பெயரால் மக்களை எப்படி கார்ப்பரேட் சாமியார்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதனை

ஈட்டி கணேசன் அவர்கள் தனது மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி மூலம் தோலுரித்துக் காட்டினார். விருது நகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் இல.திருப்பதி அவர்கள் வரவேற்புரை ஆற்ற,பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையேற்று உரையாற்றினார். திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன், பத்து ஆண்டுகளுக்கு மேலாக பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளராகப் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு பகுத்தறிவாளர் கழகத்தின் சிறப்புக்களைப் பட்டியலிட்டார். திராவிடர் கழகத்துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன அவர்களின் உரையைத்  தொடர்ந்து உளவியல் மருத்துவர் ஷாலினி அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் ஆரியர்கள் எப்படி நம்மை முட்டாளாக்கினார்கள் என்பதனை உவமைகளால் குறிப்பிட்டு விழிப்புணர்வு ஒன்றே நமக்கு விடியல் என்று உரையாற்றினார்.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர், மந்திரி பதவி என்றாலும் பழி சுமத்தப்பட்டு அடைக்கப்பட்ட சிறைச்சாலை என்றாலும் புடம் போட்ட தங்கமாய் ஒளிவிடும் ,உண்மைதனை உரக்கச்சொல்லும் ஆ.இராசா எம்.பி.அவர்கள் சிறப்பாக நாட்டில், நாடாளுமன்றத்தில் நிகழும் நிகழ்வுகளைக் குறிப்பிட்டு அண்ணல் அம்பேத்கர்,தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் எனப் பகுத்தறிவுப் பாதைக்கு அடித்தளம் அமைத்தவர்களை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.

தொடர்ந்து எழுச்சித்தமிழர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தந்தை பெரியாரின் தொலை நோக்கு சிந்தனைகளைக் குறிப்பிட்டு,

சாதி எப்படி எல்லாம் இந்திய அரசியலை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது, சனாதன சக்திகளை எதிர்கொள்ள நாம் ஒன்றிணைய வேண்டும். இது பகுத்தறிவாளர் கழகத்தின் பொன்விழாத் தொடக்க விழா மாநாடு, அடுத்த ஆண்டு நடைபெறும் பொன்விழா நிறைவு விழா மாநாட்டிலும் நான் கலந்து கொள்வேன் என்று உரையாற்றினார்.

நிறைவாக பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் திராவிடர்

கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார். விருதுநகர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளர் சு.பாண்டி அவர்கள் நன்றி கூற பகுத்தறிவாளர் கழகத்தின் பொன்விழாத் தொடக்க மாநாடு நிறைவு பெற்றது.

அரசு ஊழியர்கள் தங்கள் கடவுள் நம்பிக்கையை கடைப் பிடிப்பதும், பரப்புவதும் எப்படி அவர்களது உரிமையோ

அதனைப்போல அரசு ஊழியர்களாக இருக்கும் பகுத்தறிவா ளர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் தங்கள் கொள்கையை கடைப்பிடிப்பதும் பரப்புவதும் அவர்களின் அடிப்படை உரிமை என்ற அடிப்படையில் முகிழ்ந்ததுதான் பகுத்தறிவாளர் கழகம். பகுத்தறிவு ஆசிரியர் அணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் என விரியும் பொன்விழாக் காணும் பகுத்தறிவாளர் கழகத்தின் கிளைகள் ஊர் தோறும் தோன்ற வேண்டும்.

இந்தியாவில் அல்லது உலகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு உறுப்பினர்களையும் தொடர் செயல்பாடுகளையும் கொண்ட பகுத்தறிவாளர் கழகம்  இன்னும் விரிவடைய வேண்டும்.

மக்களின் மனதில் மீண்டும் மீண்டும் மூட நம்பிக்கைகளை விதைப்பதற்காக அரசும் ஊடகங்களும் போட்டி போட்டுச் செயல்படும் இந்தக் காலகட்டத்தில் பகுத்தறிவாளர்களின் தேவை,வேலை இன்னும் கூடுதலாகின்றது.

இந்தியாவில் நாம் இழந்த பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், கல்புர்க்கி, கௌரி லங்கேஷ் ஆகியோர் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அஞ்சாமையையும் உண்மையையும் உள்ளத்திலே தேக்கி வைத்து ஊர் ஊராய்ச் சுற்றி உண்மை சொல்லும் பயணத்தையே தனது வாழ்க்கைப்பயணமாய் ஆக்கிக்கொண்ட தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட, பகுத்தறிவாளர் கழகம்- தோற்றுவிக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை அதன் புரவலராய் இருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில், வழிகாட்டுதலில் பொன்விழாக் கொண்டாடும் வாய்ப்பு ஒரு பொன்னான வாய்ப்பு.அதனை மிகச்சரியாக தொடங்கி வைத்திருக்கிறார்கள் அதன் பொறுப்பாளர்கள். வாழ்த்துவோம், மகிழ்ச்சியடைவோம், பகுத்தறிவாளர் கழகத்தின் பயணத்தில் நம்மையும் நாம் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம்.

-வ.நேரு

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: