அறிவு+உணர்வு+துணிவு=கி.வீரமணி

தந்தை பெரியார் , தனக்குப் பிறகு தன் கொள்கைகளையும் இயக்கத்தையும் காப்பாற்றவும் பரப்பவும் வழி நடத்தவும் தகுதியும் நம்பிக்கையும் உள்ள தொண்டர்களாக நம்பித்தேர்வு செய்தார் இரண்டு மணிகளை- ஒருவர் அரசியல்மணி என்று முதலில் அழைக்கப்பட்ட மணியம்மை; இரண்டாமவர் கி.வீரமணி!

தந்தை பெரியார் தத்துவத்தையும், சித்தாந்தத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். அந்தக் கருத்துகளைப் பரப்பும் கடமையையும் தம் தலையில் தூக்கிச் சுமந்தார். அதைச் செயல்படுத்தும் களங்களையும் அமைத்து, முதல் தொண்டனாகத் தன்னையே முன்னிறுத்தினார். சிறைவாசம் என்று வந்த போது சிரித்த முகத்துடன்  அதனை மேளதாளத்தோடு வரவேற்றார். அதற்காக எதிர் வழக்காடவில்லை.

பார்ப்பன நீதிபதிகள் ஆசனத்தில் அமர்ந்து தீர்ப்புக் கூறும் நிலையில் இருந்த போதும் கூட, பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு – கடும் புலிகள் வாழும் காடு என்று கர்சித்தார். தனக்குப் பின், தன் கொள்கைகளே, நூல்களே வாரிசு என்று சொல்லியிருந்தாலும்கூட தனக்குப் பின் இந்தக் கொள்கையைக் கொண்டு செலுத்தி, இயக்கத்தை நடத்த ஒருவன் வருவான் என்றார். அவன் எத்தகைய நிலையில் இருப்பான் என்பதை-யும் சொல்லத் தவறவில்லை அந்தத் தத்துவ ஆசான். சிவகங்கை பொதுக்கூட்டத்தில் (10.4.1965)  பேசிய பொழுது, அத்தகைய கருத்-தொன்றைப் பதிவு செய்தார் பகுத்தறிவுப் பகலவன்.

தனது உரையில், தனக்குப் பின் தனது புத்தகங்களே வழி-காட்டும் என்று குறிப்பிட்டார். இந்தத் தொண்டும், பிரச்சாரமும் அறிவை சேர்ந்த-தல்ல; உணர்ச்சியைச் சேர்ந்தது. அந்தப் பக்குவம் உள்ள ஒருவன் இருந்தால், அவன் அடுத்துத் தலைமை ஏற்க வருவான் என்று குறிப்பிட்டார்.

முகம்மது நபியைப் பார்த்து உங்களுக்குப் பின் யார்?என்று கேட்டதற்குஅவர், எனக்குப் பின் வேறு யாருமில்லை என்று கூறிவிட்டார். நான் அப்படிக் கூறவில்லை. அறிவும், உணர்ச்சியும், துணிவும் உள்ள யார் வேண்டுமானாலும் வரலாம் என்று குறிப்பிட்டார். (விடுதலை 23.4.1965).

அறிவு – உணர்ச்சி, – துணிச்சல் மூன்றும் சேர்ந்த ஒருவன் தலைமையேற்க வரக்கூடும் என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் கருத்தும் – கணிப்பும்.

இந்த மூன்றும் நிறைந்த முழு மனிதராக – தந்தை பெரியார் கணிப்பு என்ற கொள்கலனில் பொருந்தக்கூடிய ஒருவராகத் திகழ்பவர்தான் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

1961இல் திராவிடர் கழகப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார். 1962இல் ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1978 அன்னை மணியம்மையார் மறைவுக்குப் பின் திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்று பல சாதனைப் பணிகளைச் செய்தார்.

தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு இயக்கம் இருக்குமா என்று வினா தொடுத்தவர்களுக்கு நெற்றியடி கொடுத்து இருக்கும் – வேகமாக இருக்கும் – புலிப் பாய்ச்சலாக இருக்கும் என்று நிரூபித்துக் காட்டி வருகிறார். இந்தியாவின் தலை நகரிலேயே ஜெசோலாவில் 5 அடுக்குக் கட்டடத்தில் பெரியார் கொள்கையை மய்யம் கொள்ளச் செய்துள்ளார்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் பெரியார் பன்னாட்டு மய்யம் என்ற அமைப்பின் மூலம் பெரியார் கருத்துகளை மய்யம் கொள்ளச் செய்திருக்கிறார்.

பெரியார் மறைவுக்குப் பிறகு, அவர் இருந்த இடத்தை வெறி சோடிப்போகாமல் காப்பாற்றி விட்டார் வீரமணி என்ற கருத்தின் மூலம் (மறைந்த) தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களின் தொண்டிற்கு அங்கீகாரம் அளித்துள்ளார்.

பெரியார் இல்லையென்றால் இந்த இனத்திற்கு விடுதலைஎன்பது இல்லை. அதேபோல் ஆசிரியர் கி.வீரமணி இல்லையேல் இன்று விடுதலை இதழ் இல்லை என்று ஆகியிருக்கும்.

1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் ‘விடுதலை’ அச்சகம் offset  இயந்திரத்தின்மூலம் அச்சாகத் துவங்கியது. இயந்திரத்தைத் துவக்கி வைத்த அன்றைய முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள், ” Upset ஆகிவிடுமோ என்ற நிலையில் இருந்த ‘விடுதலை’ யைஆப்செட்அச்சகம் என்ற நிலைக்கு உயர்த்திய பெருமை வீரமணியையே சேரும்” என்று கூறினார்.

விடுதலை நாளிதழின் ஆசிரியராக 57 ஆண்டுகள் நிறைவுசெய்து இருக்கிறார் ஆசிரியர் கி.வீரமணி. இந்திராகாந்தி அம்மையார் ஆட்சியில் எமர்ஜென்சி நடைமுறைக்கு வந்தபோது, கழுத்து நெறிக்கப்பட்ட பத்திரிகைகளில் விடுதலையும் முதன்மையானது. ஆசிரியர் அவர்கள் மிசா சிறைவாசியாக, சென்னை மத்திய சிறையில் நேரடித் தாக்குதலுக்குள்ளாகி பல துன்பங்களை அனுபவித்துவந்த நேரத்தில், விடுதலை நாளேடு நாள்தோறும் தணிக்கைக்குள்ளாகி பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. பெரியார் என்ற வார்த்தையைக்கூட தணிக்கை செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நேரங்களிலும் பத்திரிகையைத் தொடர்ச்சியாக வெளிவரச் செய்யும் நிலைமையை உருவாக்கியவர் ஆசிரியர் அவர்கள்.

விடுதலையின் 25வது ஆண்டு துவக்கத்தில் ‘’இலட்ச ரூபாய்களை விடுதலை நடப்புக்காகச் செலவிட்டு, நஷ்டமடைந்த நிலையில், இதனை ஏற்க முன்வந்த வீரமணி அவர்களது துணிவையும், தியாகத்தையும் சுயநலமற்ற தன்மையையும் கருதி, விடுதலை வீரமணி அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது’’ என்று தந்தை பெரியார் குறிப்பிட்டிருக்கிறார்.

எப்படிப்பட்ட சூழலில், விடுதலையின் ஆசிரியராக வீரமணி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார் என்பதைப் பெரியாரே விளக்கினார். மேலும் அவரே, ”உண்மையைச் சொல்கிறேன். தோழர் வீரமணி இந்த முழுநேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால் தினசரி விடுதலையை நிறுத்தி வாரப்பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். பெரியாருக்கு அத்தகைய நெருக்கடியான நிலையை ஏற்படுத்தாமல் ஆசிரியர் அவர்கள் விடுதலை நாளேட்டை சிறப்பாக நடத்தத் தொடங்கி இன்றுவரை அதனை மிக அருமையான முறையிலே  திருச்சியிலிருந்தும் ஒரு பதிப்பை  நடத்திவருவதை நாம் அனைவரும் காண்கிறோம்.

மானமிகு ஆசிரியர் கி.வீரமணி எழுதிய நூல்கள் 75 க்கும் அதிகம். அவற்றில் பார்ப்பனர்களை அதிரச்செய்த நூல்களில் சில

சங்கராச்சாரி – யார்?  ஓர் ஆய்வு . கீதையின் மறுபக்கம்

உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?

சட்டப்படி நாம் இன்னும் சூத்திரரே!

மேலும், பெரியார் மணியம்மையார் திருமணத்தைப் பற்றிய பல அய்யப்பாடுகளை விளக்கும் ‘பெரியார் மணியம்மை திருமணம் ஒரு வரலாற்று உண்மை விளக்கம்’ என்ற நூல்! இது பெரியாரியத் தொண்டர்களுக்கும் கையேடாகப் பயன்படுகிறது. வீரமணி என்றால், பார்ப்பன எதிர்ப்பு,கடவுள் மறுப்பு என்று மட்டுமே நினைப்பதற்கு மாறாக அவருடைய ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூல்கள் அவர், உலக வாழ்வை எந்த அளவுக்கு உற்று நோக்குகிறார்  என்பதை புரிய வைக்கின்றன.

மானமிகு என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் திராவிடர் கழகத்தினர் அனைவரும் மானமிகுஎன்று தன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி அதை நடைமுறைப்படுத்தி,டாக்டர் கலைஞர் அவர்களே,தன்னை மானமிகு சுயமரியாதைக்காரன் என்று அழைக்கப்படுவதையே விரும்புவதாக சொல்லும் அளவுக்கு அந்த சொல்லின் பொருளை விளக்கமுறச் செய்தவர்.

1994 ஜூலை 19 ஆகிய இந்நாள் சமூக நீதி வரலாற்றில்  வைரக்கீற்றைப் பொறித்த புதுநாள் ஆகும். இன்றுதான் தமிழ்நாட்டின் 31சி சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்த ஒரு பொன்னாள்.

எந்த மாநிலத்திலும் இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டை விஞ்சக்கூடாது என்ற ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றம் ஆணி அடித்துக் கூறிவிட்டது. (16.11.1992).

தமிழ்நாட்டில் இருந்து வரும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பெரிய பள்ளத்தில் விழுந்துவிட்டது. இனி எழுவது என்பது இயலாத ஒன்று என்று இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் பார்ப்பன ஆக்டோபஸ்கள் ஆனந்த மலர்ப் படுக்கையில் படுத்துப் புரண்டனர்.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இந்த நெருக்கடியிலிருந்து சமூக நீதியைக் காக்கத் தயாரித்துத் தந்த சட்ட முன்வடிவுதான்  இந்திய அரசமைப்புச் சட்டம் 31சி யின் அடிப்படையில் அமைந்த ஒன்றாகும். இந்தச் சட்டம் மூன்று பார்ப்பன அதிகார வட்டத்துக்குள் நுழைந்து வெற்றிகரமாக வெளிவந்தது என்பது சாதாரணமானதல்ல.

தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா (பார்ப்பனர்) சட்டத்தை தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிக் கொடுத்தார். (31.12.1993)நாடாளுமன்றத்தில் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் (பார்ப்பனர்) இச்சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தார். குடியரசுத் தலைவர் சங்கர்தயாள்சர்மா (பார்ப்பனர்) ஒப்புதல் அளித்தார்.

54 முறை கைதான தலைவர்:  மக்களின், சுயமரியாதை, கல்வி-வேலைவாய்ப்பு , இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை ஜாதி இழிவு ஒழிப்பு , மொழிஉரிமை, மாநில உரிமை  நுழைவுத்தேர்வு எதிர்ப்பு,விலைவாசி உயர்வு எதிர்ப்பு, சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு  என்று மக்கள் நலனுக்கான போராட்டங்களை நடத்தி சிறைச்சாலையை மக்கள் நலனை சிந்திப்பதற்கான ஓய்வறையாகப் பயன்படுத்துகிறவர் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள்.

மனுதர்ம அடிப்படையில்தான், இந்து லா சட்டங்கள் இருக்கின்றன. அந்த மனுதர்மத்தைப் பொருத்தவரையில், உயர்ந்த ஜாதி-\தாழ்ந்த ஜாதி,  தொடக்கூடிய ஜாதி – தொடக்கூடாத ஜாதி,  பார்க்கக்கூடாத ஜாதி – பார்க்கக்கூடிய ஜாதி என்று பிரித்திருப்பதோடு மட்டுமல்லாமல், பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்து, பிறவியில் ஆண்கள் எஜமானர்கள்; பெண்கள் அடிமைகள்; எந்தக் காலத்திலும் பெண்கள் சுதந்திரமாக இருக்கத் தகுதியற்றவர்கள்;  கல்வி அறிவு பெறக்கூடாதவர்கள் என்பதை வலியுறுத்துவதோடு, சூத்திரர்கள் என்று மிக பெரும்பாலான உழைக்கின்ற மக்களை, காலங்காலமாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டு களாக ஆக்கி வைத்துள்ளது மனுதர்மமே! அதனுடைய அடிப்படையில்தான் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறார்கள்.

எனவேதான், இந்த ஆபத்தை உணர்த்து வதற்காக, மனு அநீதி, மனுதர்மம் மனித தர்மத்திற்கு விரோதமானது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் தமிழ்நாடு முழுவதும் இந்த மனுதர்ம எரிப்பு நடைபெறுகிறது.என்று சொல்லி மனு (அ)தர்ம நூலை எரித்து  2019 பிப்ரவரி 7 ஆம் நாள் 54 நான்காம் முறையாக கைது செய்யப்பட்டார்.

‘’இப்போது வயது நாற்பத்தி ஆறு. தோற்றம் வயதைத் தெரிவிக்காது என்றாலும் முதிர்ச்சி பெற்ற கருத்துகளை மேடைகளில் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். சற்றுக் குனிந்து வளைந்து ஆனால், யாருக்கும் வளையாத கொள்கைகளை அள்ளித் தருகிறார். கருப்புச் சட்டை மேனியை அலங்கரிக்கிறது. கையிலே சொற் பொழிவுக் கான குறிப்புகள். அருகேயுள்ள மேசையிலே அன்றைய பேச்சுக்கான ஆதாரங்களை எடுத்துக் கூறுவதற்கு வாய்ப்பான பெரிய பெரிய புத்தகங்கள். இங்கேதான் நீங்கள் முக்கியமாய் கவனிக்க வேண்டும், அது தான் முக்கியமானது. மிக முக்கியமானது என்ற சொற்றொடர், அடிக்கடி பேச்சினிடையே வந்து கொண்டிருக்கிறது. மணிக்கணக்கில் பேசுகிறார். யார் இவர்?

வேறு யாருமல்ல, தனது பத்தாவது வயதிலேயே திராவிடர் இயக்க மேடைகளில் பேச ஆரம்பித்தார். இன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் – “விடுதலை” நாளிதழ் ஆசிரியர் வீரமணி அவர்களைத் தான் குறிப்பிடுகிறேன். ”பேசும் கலை வளர்ப்போம்’ நூலில்  கலைஞர் மு. கருணாநிதி, அவர்கள்  நாற்பது ஆண்டுகளுக்கு முன் சொன்ன சொற்கள் இப்போதும் பொருந்துகிறது.

2003 இல் காரைக்குடி அழகப்பா, பல்கலைக்கழகம் இவருக்கு ‘மதிப்புறு  முனைவர்’ பட்டம் அளித்து பெருமைப்படுத்தியது.  ‘டாக்டர்’ பட்டம் வாங்கினாலும், மக்கள் நோய் போக்கும் மாமருத்துவராம் தந்தை பெரியாரின் ‘மானமும் அறிவும்’ என்ற மருந்தை நாடெங்கும் கொடுக்கும் மருந்தாளுனர் என்றே தன்னை அறிவித்துக் கொள்கிறார் ஆசிரியர் வீரமணி (‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ நூலின் முன்னுரையில்)

இயக்க வரலாற்றில் பல நாள்கள் – பல நிகழ்வுகள் முக்கியத்துவம் பெற்றன. அந்த நாள்கள் – நிகழ்வுகளின் பட்டியலில் செப்டம்பர் 22 (2019)  முக்கியமான இடத்தை வகிக்கிறது என்பதில் அய்யமில்லை.அந்த நாளில் தான் அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டன் – மேரிலாண்டில் பெரியார் பன்னாட்டு அமைப்பு – அமெரிக்கன் மனிதநேய சங்கமும் சேர்ந்து மனித நேயம் மற்றும் சுயமரியாதை தத்துவ மாநாடு நடத்தியது.அமெரிக்கன் மனித நேய சங்கம்(American Humanist Association) திராவிடர் கழகத் தலைவர் – ‘விடுதலை’ ஆசிரியர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு 2019ஆம் ஆண்டுக்கான “வாழ்நாள் சாதனையாளர் விருது” (Humanist Lifetime Achievement Award)  அளித்து மகிழ்ந்தது. இந்த விருதினை அமெரிக்கன் மனித நேய சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக் ஹார்ட் (Roy Speck hardt) வழங்கியபோது அரங்கமே குலுங்கிய வண்ணம் கரஒலி எழுந்தது.தந்தை பெரியார் வாழ்க, ஆசிரியர் வாழ்க என ஒலி முழக்கம் எங்கும் – எங்கும்!இந்தத் தருணம் மிக முக்கியமானது – அங்கீகாரத்தன்மை கொண்டது என்பதில் அய்யமில்லை.இதற்கு முன் பால் கர்ட்ஸ் (Paul Kurtz) மற்றும் கார்ல் சாகன் (Carl Sagan) ஆகியோர்க்கு இத்தகைய விருது அளிக்கப்பட்டது.தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு அவர் யாத்த மனித நேய – சுயமரியாதைத் தத்துவத் தொண் டினை வியப்புறு வகையில் ஆற்றிவரும் மகத்தான தலைவருக்கு மிகப் பொருத்தமான வகையில் அமெரிக்கன் மனித நேய அமைப்பு விருது சமுதாயத்தில் நிலவும் சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களையவும், சமூகநீதி காத்து, மனிதநேயம் வளர்க்கவும் இவர் வாழ்நாள் முழுவதும் முழுநேரத் தொண்டு செய்து வருவதைப் பாராட்டி இவ்விருதினை வழங்குகிறோம்.’’ என்று செயல் இயக்குநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

பெரியார்,நான் திராவிடர் சமுதாயத்தைத் திருத்தி, இந்த மக்களை, மானமும் அறிவும் உள்ள மக்களாக ஆக்குவதுதான் என்னுடைய ஒரே பணி; அந்தத் தொண்டை நான் ஏன் என்மேல் போட்டுக் கொள்கிறேன்? அதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது, என்று நீங்கள் கேட்கலாம். வேறு எவரும் செய்ய முன்வராததாலேயே நான் செய்கிறேன். எனக்கு அந்த ஒரு தகுதியே போதும் என்றார்.

தந்தை பெரியாரின் தலைமை மாணாக்கர் கி. வீரமணி.எனக்கு சொந்த புத்தி தேவையில்லை;பெரியார் தந்தபுத்தி போதும்என்று சொல்லி,தொண்டறம்புரிய கால நேரம் ஏதுமில்லை  என்ற முடிவோடு, ஐம்பது வயதில் உடல் நலம் கெட்ட பிறகும், சிலமுறை இதய அறுவை சிகிச்சை செய்த பின்னரும் பலமுறை, மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்திய பிறகும், தோழர்களின் அழைப்பை மறுக்க முடியாமல் சுற்றிச்சுற்றி பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார்  86 வயதே ஆன இளைஞர் கி.வீரமணி!  வாழ்த்துவோம் அவர் இன்னும் நூறாண்டு நலமுடன் வாழ்க!

.- க.அருள்மொழி

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

One thought on “அறிவு+உணர்வு+துணிவு=கி.வீரமணி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: