திருவிழா

ஆத்திருநாவுக்கு இன்னும்

ஒருமாசம்தான் இருக்கு!

அதுக்குள்ள சொந்தக்காரங்களுக்கு

கடுதாசி எழுதி வரவைக்கனும்!

ஊர்லேயே பெரிய

திருநானா அதுதான்!

எல்லா வீட்லயும் சொந்தம் பந்தங்க

நெறஞ்சி இருப்பாங்க

திருநாவுக்கு மூணுநாள்

நாலுநாள் முன்னாடியே வந்துருவாங்க!

ஊரே அமர்க்களமாய் இருக்கும்!

குப்பாத்தா பாட்டி

ஒண்டிக்கட்டையா ஒத்தை

குடிசையில காலத்த ஓட்டிட்டு

இருந்தது!

இருந்த ஒரேஒரு பொண்ணையும்

ரொம்ப தொலைவுல செங்கத்துக்கு

அப்பால தானிப்பாடில கட்டி

குடுத்துருச்சு!

அப்பப்போ வரபோக முடியாது

ஒட்டுத்திண்ணைல ஒக்காந்துட்டு

ஏதாச்சும் ஒண்ண

பொலம்பிட்டே இருக்கும்!

மகக்காரியோ நெனச்சோ இல்லனா

பேரப்புள்ளைங்கள நெனச்சோ!

பள்ளிக்கோடத்து பையை வீட்ல

தூக்கிப்போட்டுட்டு

வயிறு கலக்குதுனு தாமரைகொளத்து

பக்கமா ஓடுனேன்!

“அமராவதி பையனா கொஞ்சம்

நில்லுடானு” ஒட்டுத்திண்ணைல

உட்கார்ந்த குப்பத்தா பாட்டி கூப்டது

காதுல விழுந்து திரும்புனேன்!

“என் மகக்காரிய திருநாவுக்கு

வரச்சொல்லி ஒரு கடுதாசி எழுதனும்;

கொஞ்சம் எழுதிக்குடுத்துட்டு போயானு”

சொல்லுச்சு

நானும் கொளத்து வரைக்கும் போயிட்டு

வந்து எழுதறேனு சொல்லிட்டு

வேகமா ஓடினேன்!

திரும்பி வரப்போ

பதினஞ்சி பைசா தபால்கார்டை

கையில வச்சிட்டு காத்துட்டு இருந்தாங்க!

“இருங்க பாட்டி நான் போயிட்டு மைக்குச்சி

எடுத்துட்டு வரேனு “வீட்டுக்கு ஓடி

எடுத்துட்டு வந்து சொல்லுங்க பாட்டினு

சொன்னேன்!

“அன்பும் பாசமும் நிறைந்த மகளுக்கு

அம்மா எழுதும் கடிதம்  நான் இங்கு நலம். நீங்கள் எல்லோரும் நலமா? பெரியவனும் சின்னவனும் பள்ளிக்கோடம்  போறாங்களா? பத்திரமா பார்த்துக்கோ. “ சொல்லும்போதே எழுதிட்டியானு கேட்டாங்க!

“ம்ம்ம் எழுதிட்டேன் அப்புறம் சொல்லுங்கனு” மைக்குச்சியை உதறியபடியே சொன்னேன்

“செவலைக்கன்னு கன்னு போட்டுருச்சா

கெடேரியா? சேங்கனையானு கேளுப்பானு” சொன்னாங்க!

“கொல்லையில துவரஞ்செடி பூ எடுத்துருச்சானு” கொஞ்சம் கேட்டு எழுதுப்பான்னாங்க!

“பக்கத்துவீட்டு முருகாயி எப்படி இருக்கா

அப்பப்போ சண்டை போட்டுட்டு ஆத்தா வூட்டுக்கு போயிருவாளே இப்போ சண்டை

இல்லாம ஒழுங்கா இருக்காளானு” கேளுப்பான்னாங்க;

 அப்புறம் எதிர்வூட்டு எல்லம்மா, அம்சா ,முருகாயி, ஏகாம்பரம் கிழவன் “இவங்க எல்லாரையும்

ஒருவார்த்தை கேட்டேனு எழுதுப்பா!

“அப்புறம் முக்கியமா ஒரு விசயம்னு” பாட்டி சொல்லும்போதே

தபால்கார்டு முழுதும் நெறஞ்சி இருந்தது

“இதுக்குமேலே எழுத முடியாது

முகவரி மட்டும்தான் எழுத முடியும்னு சொன்னேன்!

“அய்யோ திருநாவுக்கு வரசொல்லத்தான் கடுதாசியே எழுத சொன்னேன்;

அத மறந்துட்டு என்னன்னமோ எழுதி தொலைச்சிட்டேன்; இந்த சேதிய மட்டும்

ஏதாவது ஒரு மூலையில எழுதிடுப்பானு”

கெஞ்சுனாங்க

எப்படியோ முகவரி எழுதுற

எடத்துக்கு கீழே எழுதிட்டேன்!

இக்கடித்தை கண்டவுடன் ஆத்திருநாவுக்கு

ஒருவாரத்துக்கு முன்னதாக உடனே

புறப்பட்டு வரவும்

மற்றவை நேரில்

இப்படிக்கு

உங்கள் அன்பை என்றும் மறவாத

அம்மா குப்பாத்தா!

எரவானத்துல சொருகிவச்சிருந்த

தாளை எடுத்து நீட்டினார்கள்

அதில்தான் பாட்டியின் முகத்தைப்

போலவே ஆங்காங்கே சுருக்கங்களோடு

இருந்தது முகவரி!

திருநாவுக்கு நாலைஞ்சி நாள்தான்

இருந்தது

ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது

எல்லோர் வீட்லயும் சொந்தக்காரங்க

வந்து குவிஞ்சிருந்தாங்க;

ஒவ்வொரு ஊரைப் பத்தியும் அவங்க

கதைகளையும் ஆளாளுக்கு

சொல்லிட்டு இருந்தாங்க!

திருவிழாவுக்கு ரெண்டுநாள்தான்

இருந்தது; குப்பாத்தா வீடு மட்டும்

வெறிச்சோடி கிடந்தது.

அவளது பார்வை தெருவை வெறித்தபடி

எதிர்நோக்கி கிடந்தது! அவ்வப்போது

அட்ரச சரியா எழுதனானானு தெரியலேயேனு புலம்பல் வேற!

எனக்கும் சங்கடமாகத்தான் இருந்தது

அவர்களை கடந்து செல்ல!

எப்போதும் வெறுமையை உற்று நோக்கும்

அவளது கண்ணில் நீர்த்திவலைகள்!

திருவிழாவுக்கு முந்நாள் ஒன்றரை மணி

டவுன்பஸ்ல குப்பாத்தா மகளும் பேரப்புள்ளைங்களும் தானிப்பாடில இருந்து வந்து எறங்குனாங்க!

நான்தான் ஒரே ஓட்டமா ஓடிப்போய்

குப்பாத்தா பாட்டிகிட்ட மக வர்ற சேதிய

சொன்னேன்!

“தெரியுன்டா ராசா, எம்மக எப்படியும் வந்துருவானு; நீ எழுதுன கடுதாசி கடல்கடந்து பினாங்கு வரைக்கும் போயி

பதில் வந்துருச்சுனா; இது எம்மாத்தூரம்னு

நெனச்சேன்டா

இதோ குப்பாத்தா வாசலில்

மாக்கோலமும் செம்மண் வரிகளும்

பூத்திருந்தது!

திருவிழா வெடிச்சத்தம்

மத்தாப்பூக்களாய் தெறித்தது

அவள் வீட்டு வாசலில்!

  • காமராசன் மண்டகொளத்தூர்

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: