நம் குழந்தைகளின் வாழ்க்கையை யார் முடிவு செய்கிறார்கள்? – அ.அருள்மொழி

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றால் மனதில் ஒரு புத்துணர்வு பிறக்கும் . எனக்கும் அப்படியே. அதனால் எவ்வளவு

தொலைவாயினும் பயணம் செய்து எத்தனையோ பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் ஊர்வலங்களிலும் திருமணங்களிலும் கல்லூரி மாணவர்களின் கூட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறேன். துயரம் மிகுந்த மனநிலையோடு பங்கேற்ற திலீபனின் நினைவேந்தல் கூட்டங்களிலும் ‘மருத்துவர்’அனிதாவின் முடிவு பற்றியும் கண்ணீருடன் அழுதபடி பேசியிருக்கிறேன்.

ஆனால் அண்மையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள ஒக்கநாடு மேலையூர் என்ற சிற்றூரில் திராவிடர் கழகத்தோழர் ராமகிருஷ்ணன்-ஈசுவரி ஆகியோரின் ஒரே மகனும் அவர்களின் ஒரே மகளான அஞ்சலியின் அன்புத் தம்பியுமான எழிலன் (வயது 17) படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று இரங்கலுரையாற்றியது ஒரு மாறுபட்ட அனுபவத்தை ஏற்படுத்தியது. இழப்பின் வலியும் அதன் காரணம் பற்றிய சமூக உணர்வும் மேலிட நான் பேசியது என்ன என்பதை விட… அங்கே நடந்த முக்கியமான சில செய்திகளையும் அது தொடர்பான எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

தோழர் ராமகிருஷ்ணன் அவர்கள் சிறந்த கபடி விளையாட்டு

வீரர். இந்திய அளவிலான கபடிப் போட்டிகளுக்கு நடுவராக இருப்பவர். அந்தத் துறையில் இந்திய அளவில் மிக மதிக்கப்படுபவர். ஆனால் அதை வைத்து தன் பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ளாதவர். நகர வாழ்க்கைக்கு மாறாமல் தனது கிராமத்தின் முன்னேற்றம் அந்த ஊர் பிள்ளைகளின் கல்வி அவர்களது கல்விக்கு ஒரே ஆதாரமான ஒக்கநாடு மேலையூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சி அந்த மாணவர்களின் விளையாட்டுத்துறை பங்களிப்பு என வளரும் தலைமுறையின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகிறார். அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் கூட. அவ்வூரில் யாருடைய குடும்பத்தின் இன்ப துன்ப நிகழ்வாக இருந்தாலும் திராவிடர் கழகம் மட்டுமின்றி எந்த பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் நிகழ்வை ஒழுங்குபடுத்தி நடத்திக் கொடுப்பவர் தோழர் ராம கிருஷ்ணன்தான்.அவரது திருமணத்தை நடத்திவைத்தவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணிஅவர்கள் . அவர்தான் பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் மாநிலச் செயலாளராக தோழர் ராமகிருஷ்ணனை நியமித்திருந்தார்.

தோழர் ராமகிருஷ்ணன் இப்படி ஒரு பொது மனிதராக வாழ்வதனால் ஏற்படும் சுமைகளை ஏற்றுக் கொண்டு அவரை அப்படியே வாழ அனுமதித்தவர் ராமகிருஷ்ணன் அவர்களின் இணையர் ஈசுவரி அவர்கள். இவர்களின் மூத்த மகள் கல்லூரியில் படிக்கிறார்.

இளைய மகன் எழிலன் சொந்த ஊரில் அரசுப்பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் 398 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பட்டுக்கோட்டையில் மேல்நிலை வகுப்பில் சேர்க்கப்பட்டிருந்தார். தனக்கு வெளியூர் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை என்று கூறி வந்த எழிலன் 18.9.2019 அன்று தான் பத்தாம் வகுப்பு வரை படித்த அரசுப் பள்ளியின் தோட்டத்தில் ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் . அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியிலும் நம்பிக்கையிலும் இடிவிழுந்தது.

பெரியார் கொள்கைத் தோழர்களுக்கும் மாணவர்களின் கல்வி விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கும் சொந்த ஊருக்கும் துணையாக இருந்த அந்தத் தோழருக்கு அவர்கள் அனைவரும் ஆறுதல் கூறித் தேற்றினார்கள்.

இந்நிலையில் தன் மகனுக்கு படத்திறப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றும் அதில் நான் பங்கேற்க வேண்டும் என்றும் திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பாளர் தோழர் ஒரத்தநாடு குணசேகரன் அவர்கள் மூலம் கேட்கவே நானும் ஒப்புக்கொண்டு 29.9.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஒக்கநாடு மேலையூரில் அவரது வீட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று எழிலனின் படத்தைத் திறந்து வைத்தேன்.

அந்த நிகழ்வில் திராவிடர்கழகத் தோழர்களும் பொறுப்பாளர்களும் சட்டமன்ற உறுப்பினரும் உறவினர்களும் ஊர்ப் பெரியவர்களும் அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த பொறுப்பாளர்களும் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் கூட கலந்து கொண்டார்கள். ஒரு பெரியார் தொண்டர் எப்படி மற்றவர்களுடன் பழக வேண்டும் என்பதை தோழர் ராமகிருஷ்ணன் அவர்கள் மீது மற்றவர்கள் காட்டிய அன்பு புலப் படுத்தியது.

எல்லாவற்றையும் விட முதன்மையானது தோழர் ராமகிருஷ்ணன் அவர்களின் உரை. அவர் முதலில் பேச வேண்டும் என்ற முடிவோடு இல்லை. நன்றி கூறுவதாகத்தான் இருந்தது. ஆனால் நிகழ்ச்சியில் முதலில் பேசிய சிலரது கருத்துகள் எழிலனின் முடிவுக்கான காரணங்களாக அவர் மேல்நிலை கல்விக்காக சேர்க்கப்பட்ட பள்ளியை காரணம் காட்டுவது போல் இருந்ததால் தான் சில செய்திகளை விளக்க விரும்புவதாகக் கூறி பேச வந்தார் தோழர் ராமகிருஷ்ணன்.

அவர் பேச்சுதான் இந்தத் தலைப்பை உருவாக்கியது .

தன் மகன் மரணம் பற்றி தோழர் ராமகிருஷ்ணன் பேசியது இதுதான்.

“ என் மகனுடைய முடிவு குறித்து சில தவறான கருத்துகள் பேசப்படுகின்றன. அதனால் நடந்தது என்ன என்று விளக்குகிறேன்.

என் மகன் எழிலன் 10 ஆம் வகுப்புவரை ஒக்கநாடு மேலையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நல்லவிதமாகப் படித்தான். ஆண் மாணவர்களில் அவன்தான் பத்தாம் வகுப்பு போதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான். ஆனால் அவனை பட்டுக்கோட்டையில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து விடுதியில் தங்கவைத்தோம்.

அந்தப் பள்ளியில் அவனுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அங்குள்ள ஆசிரியர்களும் நல்லவிதமாகத்தான் நடத்தினார்கள். என் மகனுடைய முடிவிற்கு அந்தப் பள்ளியின் மீது எந்தத் தவறும் சொல்லமுடியாது .

எழிலனுக்கு ஆடு மாடுகள் மீது பிரியம் அதிகம் . காலையில் எழுந்து மாடு கன்றுகளுக்கான வேலைகளை பார்த்துவிட்டுதான் பள்ளிக்குச் செல்வான். அதனால் அவன் வீட்டில் இருந்து படிக்கவேண்டும் என்று விரும்பினான். ஆனால் அப்படியே இருந்து படித்தால் மேல்நிலையில் நல்ல மதிப்பெண் பெற முடியாமல் போய்விடுமோ என்று நினைத்துதான் இந்த முடிவை எடுத்தேன். அவனுக்கு அங்கு மனம் ஒட்டவில்லை. நானும் அவனுக்கு எடுத்துச் சொன்னேன். பிறகு அவன் விருப்பத்திற்கே விட்டு விடுவோம் என்று நினைத்து வீட்டிலிருந்து ஒரத்தநாட்டிற்கு சென்று படித்து விட்டு வரட்டும் என்று வேறு பள்ளியில் இடம் ஏற்பாடு செய்து விட்டேன். அதன்பிறகு அவனுக்கு என்ன தோன்றியதோ .. நான் பட்டுக்கோட்டையிலேயே படிக்கிறேன் அப்பா என்று சொல்லிவிட்டு தான்படித்த பள்ளிக்குச் சென்றவன் அங்கேயே மறைவாக உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டுக் கொண்டான். அப்பா அம்மாவுக்கு அவமானம் தேடிவிட்டேன் என்று சட்டைப்பையில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தான் .

அவன் வெளியூரில் படிக்க விருப்பமில்லாமல் இருந்தாலும் அவனது எதிர்காலத்திற்காகத்தான் அந்த முடிவை எடுத்தேன். அவனது மனநிலை அதை ஏற்கவில்லை என்பதால் வேறு ஏற்பாடும் செய்தேன். என்பிள்ளைகளிடம் நான் ஒரு நண்பனைப் போல்தான் பேசுவேன். அவன் என்னிடம் சொல்லியிருக்கலாம். எனக்கு வருத்தம் கொடுத்துவிட்டதாக நினைத்து விட்டானோ என்னவோ… இப்படி செய்து விட்டான். ஏற்றுக் கொள்ள முடியவில்லைதான். ஆனால்

மீண்டு வருவேன். என் மகன் இனி இல்லை. எல்லா பிள்ளை களையும் என் பிள்ளைகளாக நினைத்துக் கொள்கிறேன்.”

இது மட்டுமல்ல அவர் பேசியது… தனது கபடி விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் ஈடுபாடு, தந்தை பெரியார் கொள்கை மீதான பற்று, திராவிடர் கழகப் பணிகள் , அந்த ஊரின் பள்ளி வளர்ச்சி, பிள்ளைகளின் கல்வி , விளையாட்டு முன்னேற்றம்.. இவை அனைத்திற்கும் தொண்டாற்ற தன்னை அனுமதித்த மனைவி மகள் மகன் என பல செய்திகளை மிகக் கோர்வையாகப் பேசினார்.

அவர் பேசியதைக் கேட்ட பலர் கண்ணீர் சிந்தினார்கள். ஆனால் அவர் அழவே இல்லை. இழப்பின் வலியும் துயரத்தால் அவ்வப்போது நடுங்கிய குரலும் கேட்டவர்களை கலங்க வைத்தது.

ஒரு பெரியார் தொண்டராக தன் மகனது மரணத்தின் காரணங்களை அவர் விளக்கியது மிக அரிய ஒரு நிகழ்வு…

அவர் கூறிய கருத்துக்கள் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி பல கேள்விகளை எழுப்புகின்றன.

குழந்தைகளிடம் நண்பர்களைப் போல் பழகுங்கள் என்றொரு அறிவுரையும் , நாம் நண்பர்களாகப் பழகினால் மட்டும் போதாது அவர்கள் நம்மை நண்பர்களாக ஏற்றுக் கொண்டார்களா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற இன்னொரு அறிவுரையையும் அதிகமாகக் கேட்கிறோம். இப்படி நண்பர்களாகப் பழகுவது மட்டும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து விடாது என்பதைத்தான் எழிலனின் மரணம் உணர்த்துகிறது.

அப்படியானால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ?

நமது குழந்தைகளின் வாழ்வை நாம் முடிவு செய்வதாக நினைக்கிறோம். நமது முடிவுகளை யார் செய்கிறார்கள்?

எந்தப் படிப்பு படித்தால் நம் குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும் என்று புரிந்தாலும் அந்தக் கல்வியின் மூலம் பொருளீட்டவும் முடியுமா என்று நினைக்க வேண்டிதானே இருக்கிறது. ? அதில் என்ன தவறு?

எந்தப் படிப்புக்கு சமூகத்தில் ‘நல்ல’ மரியாதை இருக்கிறது?

எதில் வேகமாக மிக வேகமாக வயது அனுபவம் எதுவும் இல்லாமலே அதிகமாகச் சம்பாதிக்க முடியுமோ அந்த வேலைதான் மதிக்கப்படுகிறது.

எனவே அந்த வேலையை அடையும் பாடத்தைப் படித்து முன்னேற தன் பிள்ளையை ஊக்கப்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும் என்ற கேள்வியோடுதான் போராடிக் கொண்டிருக்கிறார்கள் பெற்றவர்கள்.

ஆசிரியர்களின் உழைப்பு தனிப்பட்ட அக்கறைஆகியவை மாணவர்களுக்கு நல்ல மனநிலையைக் கொடுக்கும். ஆனால் அவர்களின் எதிர்காலத்திற்கு வழியமைத்துக் கொடுக்குமா? இன்று ஆசிரியர்களின் மனநிலை எப்படி இருக்கிறது?

இந்த மும்முனைச் சிக்கலுக்குரிய தீர்வைப் பற்றிப் பேசுவதற்கு முன் இன்றைய பெற்றோரும் பிள்ளைகளும் எத்தகைய சூழலில் வாழ்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பெற்றோரின் கடமை என்று நமது மூத்த தலைமுறை நினைத்தது என்ன? தங்கள் குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து, அவர்களது பாதுகாப்பான வருமானத்திற்கு வழி செய்து வைத்து அவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு ஒரு நல்ல துணையும் அமைத்துக் கொடுப்பதுதான். (இதில் சாதி பொருளாதாரம் அரசியல் ஆகியவற்றின் பங்கும் உள்ளடக்கம்.)

அத்தகைய பெற்றோரால் வளர்க்கப்பட்டவர்கள்தான் இன்று வயது 30கள் முதல் 60களில் இருக்கும் பெற்றோர். ஆனால் இன்றைய பெற்றோருக்கு பிள்ளை வளர்ப்பு என்பது கடமையாக இல்லை. கவலையாக இருக்கிறது. வெறும் கவலையல்ல, தூக்கத்தைக் கெடுக்கும் பெருங்கவலை.

இந்தப் பெற்றோர்தான் தங்கள் பெற்றோருக்கு அஞ்சி வளர்ந்தவர்கள். தங்கள் பிள்ளைகளிடமும் பயந்து நடுங்குபவர்கள் என்பது இவர்களின் தனித்துவமாகும்.

வறுமைக்கு கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களை விட கொஞ்சம் வருமானம் ஈட்டும் நிலைக்கு மாறும்போதே கடமைகளை விட மகிழ்ச்சியைவிட நிம்மதியைவிட பிள்ளைகளைப் பற்றிய கவலை அதிகமாகி விடுகிறது.  பிள்ளைகளின் படிப்பு , தேவைகள், ஆசைகள், பிடிவாதங்கள் இவை பெற்றோரை மிரட்டுகின்றன. புதிதாக வேலைக்குச் சேர்ந்த சிறுவனை சீனியர் மெக்கானிக் பின்னந்தலையில் அடிப்பதைப் போல அடித்து அடித்து ஓடு.. ஓடு என்று விரட்டுகின்றன.

குழந்தைகளுக்காக பயப்படும் சமூகச்சூழலும் குழந்தைகளிடம் பயப்படும் குடும்பச் சூழலும்தான் இன்றைய அகநானூறும் புறநானூறும் என ஆகிவிட்டது.

நாம் நல்ல தாய் தந்தையா என்று பெற்றோருக்கே அடிக்கடி சந்தேகம் வந்துவிடுகிறது. குழந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியாத நாம் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறோம் என்று நினைக்கும் அளவிற்கு பெற்றோர் இன்று தம் பிள்ளைகளைப் பற்றிய எண்ணங்களால் மீளமுடியாதபடி அழுத்தப்படுகிறார்கள். இதற்கு ஆங்கிலத்தில் ளிதீsமீssவீஷீஸீ என்று பெயர் .

அதனால்தான் குழந்தை வளர்ப்பு பற்றிய புத்தகங்களும் குழந்தைகளுக்கான மனநல மருத்துவர்களும் தொலைக்காட்சி ஆலோசனைகளும் போதாமல் யார் யாரிடமோ ஆலோசனை கேட்கிறார்கள் . தன் பிள்ளையை விட ஏதோ ஒரு வகையில் இன்னொரு குழந்தை சிறந்து விளங்கினால் அந்தக் குழந்தையின் பெற்றோரை நட்பு கொண்டோ அல்லது வேவு பார்த்தோ அவர்கள் என்ன உணவு கொடுக்கிறார்கள் எப்படி தன் குழந்தைக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள்? யாரிடம் டியூஷனுக்கு அனுப்புகிறார்கள் என்று தெரிந்து கொண்டு அதே முறைகளைத் தன் பிள்ளைகள் மீது கையாண்டு பார்க்கிறார்கள்.

ஒரு பெற்றவரின் இடத்தில் இருந்து பார்த்தால் இதெல்லாம் குற்றமா? என்றுதான் தோன்றும். ஏனெனில் அவர்களின் நோக்கத்தில் குறை சொல்ல முடியாது .

சரி இவையெல்லாம் பெற்றோரின் நிலை. பிள்ளைகளின் நிலை என்ன?

                பார்ப்போமா?..

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: