பேசப் பழகுங்கள்! இளம் பேச்சாளர்களுக்கான டிப்ஸ்! சே.மெ.மதிவதனி / கி.சூரியா – நேர்காணல்

1. சமீபத்தில் நடைபெற்ற “கைத்தடி விருதுகள் 2019” நிகழ்ச்சியில் வளரும் பெரியாரியல் பேச்சாளர் விருது பெற்று இருக்கிறீர்கள். இந்த விருதை எப்படி பார்க்கிறீர்கள்!

“கைத்தடி விருதுகள்” கடந்த இரண்டு ஆண்டுகளாக, சமூகம் சார்ந்து சமூகத்திற்காக ஏதோ ஒரு வகையில் ஒரு பணியைச் செய்யக்கூடிய ஆற்றலாளர் களை அடையாளம் கண்டு விருது வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக வளரும் பேச்சாளர் என்பதை தாண்டி ‘வளரும் பெரியாரிய பேச்சாளர் விருது’என்பதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது. காரணம் அரசியல் கட்சி மேடை, நகைச்சுவை மேடை என்று வணிக கண்ணோட்டத்தோடு நிறைய இளைஞர்கள் பேசி வரும் சூழ்நிலையில் அய்யா தந்தை பெரியாரின் கொள்கைகளை மேடைதோறும் முழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் திராவிடர் கழக மேடைகளில் கொள்கை சார்ந்து இயங்கும்போது, இந்த விருது எனக்கான விருது மட்டும் அல்ல என்னை வார்த்தெடுத்த பெரியாரின் கொள்கைக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன்.விருது என்பது ஒரு அங்கீகாரமே, இந்த விருது நான் பேசும் கொள்கை நீர்த்து போக முடியாத கொள்கை,எந்த காலத்திலும் இச்சமூக விடுதலைக்கு தேவையான கொள்கை என்பதற்கான அங்கீகாரமாக பார்க்கிறேன்.

2. சே.மெ.மதிவதனி, பேச்சாளர் மதிவதனியாக உருவெடுக்க காரணமாக இருந்தவை எவை? கல்லூரிக் காலங்களில் இருந்து சமூகம் சார்ந்த போராட்டங்களில் தன்னை ஈடுப்படுத்தி செயல்பட்டு வருவதை அறிவோம்! இந்த துணிச்சல் யாரால், எங்கிருந்து வந்தது?

நான் பேச்சாளராக உருவெடுக்க முதல் காரணம் என் அப்பாவும் அம்மாவும் தான்..அப்பா திராவிடர் கழகத்தில் பேச்சாளர், அம்மா அவர் சார்ந்து இருந்த ஆசிரியர் கூட்டணி பொறுப்புகளில் இருந்த போது மேடைகளில் பேசக்கூடியவர்.பள்ளி காலத்தில் அம்மா எழுதிக் கொடுப்பதை எனக்குப் புரிவதைப் போல் நினைவில் வைத்து நானாக இயல்பாகப் பேசுவதைப் போல் எல்லாப் போட்டிகளிலும் பேசுவேன்.12 வயதில், யாருடைய உதவியும் இல்லாமல் நீயாக நம் மேடையில் நாளை பேச வேண்டும் என்று அப்பா சொன்னார். அவர் குறிப்பு எடுத்து வைப்பதை கவனிக்கும் பழக்கம் இருந்ததால் துண்டறிக்கையின் பின் பக்கம் குறிப்பு என்ற பெயரில் என்ன பேச வேண்டும் என்று நானாக எழுதி வைத்து கொண்டேன். ஒரு 15 நிமிடம் அடுத்த நாள் கூட்டத்தில் பேசி அனைவரின் பாராட்டையும் பெற்றவுடன் இனி நாமாக பேச  வேண்டும் என்று நினைத்து தொடர்ந்து பேச ஆரம்பித்தேன்.அப்பாவின் இறப்புக்குப் பிறகும் மதிவதனிக்குப் பேசும் ஆற்றல் இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது இயக்க மேடைகளே. 2016ஆம் ஆண்டு திருவாரூர் பெண்கள் மாநாட்டில் கருத்தரங்கத்தில் பேசிய பிறகு தான், எல்லா ஊர்களிலும் பேசும் வாய்ப்பைப் பெற்றேன்.

போராடும் துணிச்சல் இயல்பாகவே ‘திராவிட இயக்க’குடும்பங்களில் பிறந்த பெண்களுக்கு இருக்கும்.அதிலும் பிரச்சாரம், போராட்டம் இவையே இயக்கத்தின் மிகப்பெரிய பணியாகக் கொண்ட திராவிடர் கழகப் பெண்களுக்கு துணிச்சல் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.அய்யா பெரியாரின் துணிச்சலை, ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களின் வாயிலாக காணும் வாய்ப்பை நம் தலைமுறை பெற்று இருக்கிறது. அதைத்தாண்டி யாருக்கும் அஞ்சாதவர் என் தந்தை, யாராக இருந்தாலும் நேருக்கு நேர் நின்று வாதம் செய்பவர், அவர் இறப்பிற்குப் பிறகும் நான் பெண் என்று காரணம் சொல்லி இச்சமூகம் என்மீது எந்த  அடிமைத் தனத்தை திணித்தாலும் ஒருபோதும் அடிமையாய் இருக்கமாட்டேன் என்ற அதீதமான துணிச்சல் எப்போதும் இருக்கிறது.

3. உங்கள் பார்வையில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ்…

தந்தை பெரியார் என்ற ஒரு மானுடத் தலைவர் இல்லையென்றால் பெண்ணாக தமிழகத்தில் பிறந்த மதிவதனிக்கு இப்படி வாய்ப்புகள் கிடைத்து இருக்குமா என்பது கேள்விக்குறி. பெரியார் என்றால் அறிவியல்.அறிவியல் அற்ற சமூகம் வளர வாய்ப்பில்லை, பெரியாரை ஏற்காத சமூகமும் அப்படித்தான்.சமூக விடுதலைக்கான formula  வாக நான் பார்ப்பது பெரியாரியத்தை தான். அம்பேத்கர் அவர்கள் ஒட்டுமொத்த சமூகத்திற்கான தலைவராகப் பார்க்கப்பட வேண்டியவர்.சமத்துவ சமூகம் படைக்க அண்ணலை வாசிக்க வேண்டிய கட்டாயம் பொது சமூகத்திற்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

மார்க்ஸ் என்ற உடனே தோன்றும் கருத்து பொது வுடைமை தான்.பொதுவுடைமை சித்தாந்தத்தை உழைக்கும் மக்களிடம் புரிய வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. வறுமையிலும் கொள்கை பேசிய தலைவராக மார்க்ஸை அடிக்கடி நினைப்பேன்.

“பெரியார் என்றால் சமூகநீதி

அம்பேத்கர் என்றால் சமத்துவம்

மார்க்ஸ் என்றால் பொதுவுடைமை என் பார்வையில்”

4. தொடர்ந்து மாணவர்களோடு மாணவர் அமைப்புகளோடு பயணித்து வருகிறீர்கள் தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் மனநிலை என்னவாக உள்ளது? ஜல்லிக்கட்டுக்காக ஒன்றுகூடிய மாணவர்கள் நீட்டுக்காக பெரிய அளவில் ஒன்றுகூடவில்லை என்பதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இன்றைய காலகட்டத்தில் நம் இன விடுதலைக்கு எது தேவை என்பதை மாணவர்கள்  தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்! ஆனால், அதை நோக்கிய தேடலை  அவர்கள் விரிவுபடுத்த நிறைய தடை இருக்கிறது. அதில் மிக முக்கிய காரணிகளாக இந்த முகநூல், புலனம், போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகள் பெரிய தடையாகப் பார்க்கிறேன். காரணம் பொய்யான தகவலை,வரலாற்றை மாற்றி பதிவிட்டு புரட்டுகளை கட்டவிழ்க்கும் கூட்டத்திடம் விலை போகும் அபாயம் அதிகரித்து இருக்கிறது. அதே நேரம், இந்த தொழிநுட்ப வளர்ச்சியால் நம்முடைய உழைப்பை நேர்மையான முறையில் முன் வைக்கும்போது பெரியாரின் தேவையை உணர்ந்து நிறைய இளைஞர்கள் பெரியாரை நோக்கி வர ஆரம்பித்து இருக்கிறார்கள். பாசிசப் போக்கைக் கடைப்பிடிக்கும் பிஜேபி, rss போன்ற அமைப்புகளின் தாக்கத்தைக் குறைக்க அவர்களின் ஆபத்தைப் புரிய வைக்க மாணவர்களிடம் நாம் நிறைய உரையாட வேண்டிய தேவை இருக்கிறது.

ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும் ஜல்லிக்கட்டை நம் மாநில இளைஞர்கள் மாடு பிரச்சனையாக மட்டுமே பார்த்து இருந்தால் அதற்கும் இவ்வளவு பெரிய கிளர்ச்சி உண்டாகி இருக்க வாய்ப்பில்லை, அவர்கள் அதை கலாச்சார, பண்பாட்டுப் பிரச்சனையாக ஊடகம் மூலமாக மாற்றியதன் விளைவே அந்த உணர்ச்சிப் பெருக்கு. ஆனால் நீட் என்பது சமூகநீதிக்கு சவக்குழி தோண்டும் தேர்வு என்பதை அவர்களுக்கு மட்டுமல்ல அவர்கள் பெற்றோருக்குப் புரிய வைக்கவே ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் நமக்குத் தேவைப்பட்டு இருக்கிறது. குறிப்பாக திராவிட மாணவர் கழகம், இளைஞரணி சார்பாக 2017 மார்ச் மாதம் 4 நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு நீட்டின் ஆபத்தை விளக்கினோம். மாட்டு பிரச்சனை என்பது உணர்வு வயப்பட்டு கூடும் பிரச்சனை ஆனால் நீட் பிரச்சனை என்பது நம்மை போன்ற முற்போக்காளர்கள் அதனால் ஏற்படும் சமூகநீதி பாதிப்பைச் சொல்லி அறிவு வயப்பட செய்து போராட்டக் களத்திற்கு அழைத்து வர வேண்டிய காலத்தின் கட்டாயம் இருக்கிறது

5. தொடர்ந்து பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படுவதை கேட்கிறோம் / பார்க்கிறோம்! இதற்கு காரணம் இந்தியாவில் பாலியல் கல்வி இன்னும் பரவலாக்கப்படவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? இதற்கான தீர்வு என்னவாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

செய்தித்தாள்களை எடுத்தாலே தலைப்பு செய்தி ஆரம்பித்து தொடர்ந்து பக்கத்திற்கு பக்கம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல் குறித்த செய்திகள்தான் வருகிறது. சட்டங்களும் அதற்கான தீர்வை இதுவரை தரவில்லை. ஒருவேளை கொடுத்தாலும் சட்டங்கள் மட்டுமே இதற்கு தீர்வை தர இயலாது. நான் ஆண் என்ற மனநிலையில் மாற்றம் வந்தால் ஒழிய இது மாறாது. பாலியல் கல்வி இந்தியாவில் பரவலாக்கப் படவில்லை என்பதை தாண்டி பாலியல் கல்வியே நம் பாட புத்தகங்களில் இல்லை என்பதே நாம் ஏற்றுகொள்ள வேண்டிய ஒன்று.அதைப் பாடமாக அமைத்து ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் தொடங்கி இதைப் பற்றி பேச வேண்டும். பெண் பிள்ளைகளைப் பாலியல் பண்டமாகப் பார்க்கும் போக்கை மாற்றி அமைக்க வேண்டும்.இதற்கு எல்லாம் முன் பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சியை அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கற்று கொடுக்க வேண்டும். நாகரிகம் வளர்ந்த சமூகத்தில் இன்னும் பெண்கள் மீதான தாக்குதல்கள் நம் சமூகத்திற்குத் தலைகுனிவே.

6. பேச்சுக் கலைக்கு மிக முக்கியம் வாசிப்பு! எப்படியான புத்தகங்கள் நல்ல மேடைப் பேச்சாளரை உருவாக்கும் என்று கருதுகிறீர்கள்? தாங்கள் பரிந்துரைக்கும் சில புத்தகங்களின் பெயர்கள்?

புத்தக வாசிப்பின் மூலமே ஒரு சிறந்த பேச்சாளராக முடியும். எல்லாம் புத்தகங்களையும் வாசிக்கலாம்.

ஆனால் நாம் எதை சார்ந்து இயங்குகிறோமோ அதை சார்ந்த புத்தகங்களை வாசித்து உள்வாங்கி முக்கிய குறிப்புகளை எழுதி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் முதல் முறையாகப் பேச ஆரம்பிக்கும் பேச்சாளர்கள் அய்யா பெரியாரின் கொள்கைகளை எளிமையாக உள்வாங்கி கொள்ள “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சிறிய வெளியீடுகளை படிக்கலாம். பெண்ணியம் சார்ந்து பேசக்கூடியவர்கள் பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்” என்னும் அரிய செய்திகள் உள்ளடக்கிய புத்தகத்தை வாசிக்க வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை குறுகிய வட்டத்தில் அடைக்காமல் பொது தலைவராக உணர வைக்கும் புத்தகம் “நான் ஏன் பதவி விலகினேன்”என்னும் புத்தகம். ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள் எழுதிய புத்தகங்களை வாசிக்கும்போது எளிய முறையில் வரலாற்றில் அரிய செய்திகளை அறியலாம்.. நிகழ்கால பிரச்சனைகளைப் பற்றி குறிப்பு எடுத்துப் பேசுவது ஒவ்வொரு பேச்சாளர்க்கும் அவசியமான ஒன்று, அந்த வகையில் தினசரி நாளிதழ் வாசிப்பு அவசியம்.நான் விரும்பி வாசிக்கும் தினசரி நாளிதழ் “விடுதலை”. இப்போது போலி தமிழ்த் தேசியவாதிகள் அய்யா பெரியார் மீது வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளை தோலுரிக்கும் புத்தகமாக “தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்”என்னும் சிறந்த புத்தகத்தை அனைத்து தமிழ் விரும்பிகளும் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.. குறிப்பாக இந்தப் புத்தகம்  வாசித்தால் போதும் என்று புத்தக வாசிப்பைக் குறுக்கிவிட முடியாது எனவே எந்த புத்தகம் சமூகம் சார்ந்து செய்திகளைத் தருகிறதோ அதை அவசியம் படிக்க வேண்டும். 

கி.சூரியா நேர்காணல்

1.சமீபத்தில் நடைபெற்ற “கைத்தடி விருதுகள் 2019” நிகழ்ச்சியில் “வளரும் பேச்சாளர் விருது” பெற்று இருக்கிறீர்கள். இந்த விருதை எப்படிப் பார்க்கிறீர்கள்!

முதலில், இப்படியானதொரு அங்கீகாரத்திற்கு கைத்தடி இதழுக்கு நன்றி.

விருதுகளின் அசலான மதிப்பு, அது யாரால் எதன் பொருட்டு ஒருவருக்கு வழங்கப்படுகிறது என்பதில் அடங்கியிருக்கிறது. அடிப்படையில் திராவிட இயக்கம் ஒரு அறிவியக்கம். எழுதத் தெரிந்தவரெல்லாம் எழுத்தாளர், பேசத் தெரிந்தவ ரெல்லாம் பேச் சாளர் என்று சொல்லுமளவுக்கான நிலையை வாசிப்பு இயக்கங்களின் வழியே அவர்கள் சாத்தியப்படுத்தினார்கள். அந்த வாசிப்பு இயக்கத்தின் ஒரு பிரதான கூறான இதழ்கள் நடத்துதலை ஒரு மரபாகவே அவர்கள் உருவாக்கினார்கள். அந்த மரபின் தொடர்ச்சியாக இன்றைக்கு எஞ்சியிருக்கும் திராவிட இயக்க அரசியல் சிற்றிதழ்களில் ஒன்றான “கைத்தடி” இடமிருந்து பெற்ற விருது என்கிற வகையிலும்,

தமிழகத்தின் தற்கால இதழியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத இரண்டு ஆளுமைகளின் கைகளினால் பெற்ற வகையிலும்,

அரசியல் புரிய தொடங்கிய காலத்தில் வியந்து பார்த்த ஆளுமைகளில் ஒருவரால் பரிந்துரைக்கப்பட்டது என்கிற அளவிலும். அந்த விருது பெருமையான அடையாளத்தை பெறுகிறது.

இப்படியான மதிப்பை பெற்ற விருதை பெற்ற அளவில் மகிழ்வாக உணர்கிறேன்

2. கி.சூரியாவுக்கு இன்று பேச்சாளர் சூரியா என்கிற ஒரு அடையாளம் இருக்கிறது. இப்படி பேச்சாளர் என்கிற நிலைக்கு வருவதற்கான பின்னணி என்ன ?

பேச்சாளர் என்கிற அடையாளம் என்பதெல்லாம் இன்னும் நீண்ட தொலைவுக்கு அப்பால் உள்ள ஒன்றெனவே நினைக்கிறேன். இன்றைக்கு நான் படித்தவற்றை தயக்கமோ, அச்சமோ, மேடை நடுக்கமோ இல்லாமல் என்னால் ஒரு கூட்டத்தின் முன்னாள் பேச முடியும். அவ்வளவு தான்

மனிதர்களுக்கு இயல்பிலேயே பேசுவது பிடித்தமானது, தனக்கு தெரிந்தது ஒரு துளி என்றாலும் அது தனக்கு தெரியும் என்பதை மற்றவர்களுக்கு சொல்லுவதில் ஆர்வமுடையவர்களாகவே எல்லா மனிதர்களும் இருக்கிறார்கள். அந்த ஆர்வம் தான் என்னையும் பேசத்தூண்டுகிறது. மேடை நடுக்கமும், தயக்கமும் உடையவர்கள் தங்களின் நண்பர்கள் வட்டத்திற்குள் மட்டுமே பேசிக்கொள்கிறார்கள். சின்ன வயதிலிருந்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பேசிப் பழகியவர்கள் அந்த வட்டத்தைத் தாண்டி வருகிறார்கள். பள்ளிகளிலிருந்தே பேசிப் பழகியதால் நான் இரண்டாம் வகையில் வருகிறேன்.

அநேகமாக ஒன்றாம் வகுப்பாக இருக்கலாம் பள்ளி ஆண்டு விழாவில் மாறுவேடப் போட்டி. அதில் அண்ணா வேடமிட்டு பேசிய ஒன்றரை நிமிட பேச்சை, மாதக்கணக்கில் பயிற்சி எடுத்தேன், சக வயதுடையோரெல்லாம் தடுமாறிய போது, கொஞ்சமும் தடுமாறாமல் நான் பேசியது, மற்றவர்களுக்கு ஏதோ ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும், அதன் விளைவு தான் தொடர்ச்சியாக பேசுவதற்கான வாய்ப்புகள்.. ஏறக்குறைய இன்று வரை. இன்றைக்கும், “என்னை தெரிகிறதா ? நான் தான் சி.என்.அண்ணாதுரை” என்று தொடங்கி, “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு”, என்று முடியும் அந்த பதினைந்து வரிகளும் அப்படியே நினைவிருக்கிறது.

3. உங்கள் பார்வையில் பெரியார், அண்ணா, கலைஞர்

வேறுபாடுகளை கடந்து இனத்தின் பெயரால், மொழியின் பெயரால் தமிழர்களை ஒன்றிணைத்த இயக்கத்தின் அடித்தளம் இந்த மூவரும். சமூக விடுதலைக்கு தடையாக இருந்த எல்லா வற்றையும், கொஞ்சமும் தயக்கமே இல்லாமல், துளிகூட சமரசத்துக்கு இடமளிக்காமல் அடித்து அப்புறப்படுத்திய காட்டாறு பெரியார்.

அதிகாரத்தில் இருந்த தலைவர்களிடம் ஜனநாயக பண்புகள் தேயத்தொடங்கிய காலத்தில், இனி கருத்துக்கு ஆதரவாய் மக்களை திரட்டினால் அதிகாரம் அசைந்து கொடுக்கும் என்கிற நிலை ரொம்ப காலம் தொடராது என்பதை உணர்ந்து, நேரடியாக அதிகாரத்தை கைப்பற்றுவதே கருத்தை செயல்படுத்துவதற்கான வழி என்று நீதிக்கட்சியின் அதிகார அரசியலையும், பெரியாரின் சமூக அரசியலையும் ஒருசேர முன்னெடுத்து, தமிழகர்களுக்கான பொன்னுலகத்தை கனவு கண்ட அமைதி பூகம்பம் அண்ணா. நிலப்பிரபுத்துவ காலம் தொட்டு, இன்றைய பின்நவீனத்துவ காலம் வரை, நடந்த எல்லா மாற்றங்களையும் எதிர்கொண்டு, வரலாற்றில் எந்த ஒரு இயக்கமும் சந்தித்து மீண்டுவிடவே முடியாத அத்தனை நெருக்கடிகளையும் கடந்து, சற்றேறக்குறைய ஐம்பது ஆண்டுகள் ஒரு தத்துவத்தின், நிலத்தின் அரசியல் மையமாக இருந்த, இனத்தின் இயக்கத்தின் அரண் கலைஞர்.

4.மாணவர் பருவத்தில் இருக்கிறீர்கள், தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் மனநிலை என்னவாக உள்ளது? இன்றைக்கு இருக்கும் மாணவர்களுக்கு திராவிட இயக்கம் பற்றியும், திராவிட இயக்கங்களின் கொள்கைகள் பற்றிய புரிதல்கள் உள்ளதாகக் கருதுகிறீர்களா? அவர்களுக்கு கொள்கை புரிதல்கள் பெரிய அளவில் இல்லை என்ற கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்! அதற்கானத் தீர்வாக எதனை முன்வைக்கிறீர்கள்!

காலம் காலமாக கல்வியில் ஏற்றத்தாழ்வுகள் திணிக் கப்பட்டு, கல்வி பெறுவதில் ஆயிரத்தெட்டு சிக்கல்கள் கொண்ட ஒரு நிலத்தில், கல்வி உரிமையை தன்னுடைய பிரதான அரசியலில் ஒன்றாக முன்வைத்து உருவாகி, அந்த இலக்கை சாதித்தும் காட்டிய இயக்கம் திராவிட இயக்கம். அந்த வகையில் மாணவர்களோடு திராவிட இயக்கத்திற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. உடைத்துச் சொன்னால் ஒரு காலம் வரை அந்த இயக்கத்தின் மூல பலமே மாணவர்கள்தான். 1960களில் திராவிட இயக்கத்தின் தாக்கம் இன்றி தங்கள் மாணவர் பருவத்தைக் கடந்தவர்கள் எண்ணிக்கை சொற்பம் என்று கேட்டதுண்டு. ஆனால் இன்றைக்கு நிலைமை வேறு, ஒரு இடைவெளி ஏற்பட்டிருக்கிறது உண்மை தான்.

எங்கோ ஒரு இடத்தில் மாணவர்களுடனான நம்முடைய தொடர் உரையாடலில் ஏற்பட்ட சுணக்கம், இன்றைக்கு நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கான விளைவுகளோடு நிற்கிறது. திராவிட இயக்கத்தின் அரசியல் இருந்த இடத்தில் பிற்போக்கு சக்திகள் நுழையும் காலமாக இது இருக்கிறது. கொஞ்சம் துரிதமாக செயலாற்ற வேண்டும், வரலாறுகளைப் பேச வேண்டும், eco chamber களையும், comfort zoneகளையும் விட்டு வெளியேறி இந்த இயக்கத்தின் இன்றைய தேவையை வரலாற்று சாதனைகளை முன்வைத்து நிறுவி பேச வேண்டும். நவீன ஊடகங்களில் இன்னும் கொஞ்சம் திட்டமிடலோடு ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.

5. பேச்சுக் கலைக்கு மிக முக்கியம் வாசிப்பு! எப்படியான புத்தகங்கள் நல்ல மேடைப் பேச்சாளரை உருவாகும் என்று கருதுகிறீர்கள்? தாங்கள் பரிந்துரைக்கும் சில புத்தகங்களின் பெயர்கள்?

பேசுவதற்கு அடிப்படைகளில் ஒன்று தகவல்கள், அதை எந்த ஊடகத்தின் வழியாகவும் பெறலாம். ஆனால் செவிவழி செய்திகளை விட பதிவு செய்யப் பட்ட தகவல்களுக்கு நம்பகத்தன்மை அதிகம். அதற் காகத்தான் புத்தகங்களை அடிப்படையாக கொண்டு பேசுவது. புத்தகங்கள் பரிந்துரை என்பது பொதுமைப்படுத்த முடியாதது, அது நபருக்கு நபர் மாறுபடக்கூடும். என்னளவில் நான் அதிகம் தலைவர்களின் அந்நாளைய உரைகளின் வழியாகவும், பழைய செய்தித்தாள்கள், இதழ்களின் மூலமாகவும் தகவல்களை பெறுகிறேன். முடிந்தளவு primary evidenceகளை தேடிப்படிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறேன்.

புத்தகங்கள் சுவாரஸ்யமானவை படிக்க தொடங் கினால், அது ஒன்றிலிருந்து இன்னொன்று, அதிலிருந்து பிரிதொன்று என்று சங்கிலித்தொடராய் நம்மை இழுத்துச் செல்லும். ஆகவே பிடித்ததைப் படியுங்கள் என்பதே சரியான பரிந்துரையாக இருக்கும்.

நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s