தமிழகத்தில் திராவிடத்தின் எழுச்சியும், வங்கத்தில் பொதுவுடைமையின் தளர்ச்சியும் ! உணர்த்துவது என்ன? – தோழர் பூங்குழலி

இந்தியா முழுவதும் சுழன்றடித்த மதவாதம் மற்றும் போலித் தேசியவாதச் சுழல், தென்னகத்து மாநிலங்களில் சற்றே பலம் குறைந்து, குறைவான சேதத்தை ஏற்படுத்திய போதும், தமிழக எல்லைக்குள் நுழையா வண்ணம் தடுத்தது எது? பிற மாநிலங்களுக்கில்லாதச் சிறப்பியல்பை இம்மாநிலம் மட்டும் பெற்றது எப்படி? இவ்வாறாக நாடாளுமன்றத் தேர்தலில் வென்றவர்களும், தோற்றவர்களும், நடுநிலையாளர்களும் இம்மாநில மக்களை உற்று நோக்கிப் பல கேள்விகள் எழுப்பக் கேட்டேன், பார்த்தேன். இக்கேள்விகளுக்கான விடையைப் புரட்சியின் உருவமான அம்மக்களிடம் பேசப் பேச, அவர்களுக்குள் இருக்கும் சித்தாந்தத் தெளிவை விடையாகப் புரிந்துகொண்டேன்.

தமிழக மக்கள் மனதில் சாதியத் தடைகள் இருந்த போதிலும், சாதிப் பெருமை பேசுவதும், தன் சாதிப் பெயரை வெளியே சொல்வதும், வெளிப்படையாகச் சாதியத் தீண்டாமை பற்றி நியாயப்படுத்திப் பேசுவது நாகரிகம் இல்லை என்பதை உணர்ந்திருந்தார்கள். மத வேற்றுமை குறித்த கேள்விகளை நான் கேட்ட போது, என்னை மடமையின் உருவாகப் பார்த்தனர். சாமானிய மக்கள் எளிய மொழியில் பகுத்தறிவுப் பேசினர். பொதுவுடைமைச் சித்தாந்தத்தை அவர்களுக்கே உரித்தான இயல்பான தமிழில் கூறினர்.

ராமர் கோயில் கட்டுவது குறித்து நான் கேள்வி கேட்ட போது, ராமருக்கு பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் கட்டினால், எங்களின் வறுமைதீர்ந்துவிடுமா? என்று தெருவோரம் பூக்கள் விற்கும் பெண்மணி, என்னை நோக்கி எதிர்க் கேள்வி கேட்டு ஒரு நிமிடம் என்னை பிரமிக்கச் செய்தார். பிரதமர் மோடி தன்னால் மட்டுமே இந்தியாவைப் பாதுகாக்க முடியும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் கூறியது பற்றிக் கேள்வி கேட்ட போது,  இந்தத் தேர்தல் நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்லும் பிரதமரைத் தேர்ந்தெடுக்க என்று தானே நாங்கள் எண்ணினோம்! இல்லையா? இது இராணுவப் படைத் தளபதி தேர்வுக்கானத் தேர்தல் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்த பிரதமரைத் தேர்ந்தெடுத்துவிட்டால், முப்படை வீரர்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவாரா? என்று எதிர்க் கேள்விகள் பல கேட்ட அந்த ஆட்டோ ஓட்டும் நண்பர், என்னைப் பலமாக பகடி செய்துவிட்டார். ஆட்சிப் பொறுப்பேற்றப் பின் அவர்கள் இந்தி பேசாத மாநில மக்கள் மீது திணிக்க நினைக்கும் இந்தி மொழி பற்றிய மும்மொழி கொள்கை குறித்து  கணினிப் பொறியாளர் ஒருவரிடம் கேள்வி கேட்ட போது, இந்தித் தெரியாத, தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த தமிழர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் உயர் பதவிகளில் வெற்றிக் கொடி நாட்டுகின்றனர். இந்தியைத் தாய் மொழியாக கொண்ட நம் வடமாநில சகோதரர்களோ நம் மாநிலத்தில் வந்து பல அடிப்படை வேலைகளைப் பார்த்துக் கொண்டு, அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வதைபடுகின்றனர். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியைப் பேசும் மொழியாக கொண்ட குறைந்த எண்ணிக்கையிலான சில வடநாட்டு நண்பர்கள் கூட ஆங்கிலப் புலமை குறைவால் பதவி உயர்வு கூடப் பெற முடியாமல் தவித்து வாழ்கின்றனர்.உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது எங்களுக்கு இந்தி  எதற்கு? என்று அந்த நண்பரும் எதிர்க் கேள்வி கேட்டு என்னை யோசிக்கச் செய்தார். இவ்வாறாகப் பலரிடம் பேசியதில் தமிழரிடம் பரவிக்கிடக்கும் பகுத்தறிவையும், மொழி உணர்வையும்,தேர்தல் முடிவுகளுக்கான விடையாக அறிந்தேன்.

இந்தப் பக்குவம் இந்த மண்ணில் பரவி இருப்பதன் காரணம் தேடிப் பயணப்பட்ட எனக்கு நீதிக்கட்சித் தொடங்கி திராவிட இயக்கங்கள் வரை செய்த அளப்பரியப் பணிகள் விடையாய் நின்றது. ஒரு சில மனிதர்களுக்கு மட்டுமே காலத்தைக் கடந்து சிந்திக்கும் மேதைமை வாய்த்திருக்கும்.உதாரணத்திற்க்கு காரல் மார்க்ஸ் தந்த பொதுவுடைமைத் தத்துவம், இந்த உலகில் வர்க்க வேற்றுமை இருக்கும் வரை, உயிர்ப்புடன் இருந்து இந்த உலகை நல்வழிப் படுத்தும். அவரைப் போன்று தமிழ்மண் கண்ட மாமேதை தந்தை பெரியார். அவரின் தத்துவம் இவ்வுலகில் மனிதர்களிடம் எதன்பாலும் வேற்றுமையும், ஏற்றத் தாழ்வும் நிலவுமெனில், அவ்வேற்றுமையை விரட்டிடும் கைத்தடியாய் வீறுகொண்டு வாழ்ந்திடும்.

மேற்குவங்கம் மற்றும் திரிபுராவின் நிலை தமிழகத்தை நெருங்காமல் இருக்க தந்தை பெரியார் போட்ட வேலியே திராவிடர் கழகம். மக்களை மனதளவில் பகுத்தறிவு மிக்கவர்களாகவும், மதவாதம் கவர்ச்சிகர மாற்று வேடமிட்டு வந்தாலும் ஏமாறாத அறிவு மிக்கவர்களாகவும் தயார் செய்ய வேண்டியதன் அவசியத்தை பெரியார் அன்றே உணர்ந்தமையால், அவர் கையில் எடுத்த அறிவு ஆயுதமே இயக்க அரசியல். தேர்தல் கட்சியாக மட்டும் இருந்தால், பல தருணங்களில் வாக்குகள் மனதில் வந்து செல்லும், ஆகையால் மக்களிடம் உள்ள மூடப் பழக்கங்களையும், சாதிய தீய எண்ணங்களையும் தவறென்று எடுத்துச் சொல்லி மக்களைத் திருத்த தவறிவிடுவோம். ஆகையால் எந்த தயக்கமும் இல்லாமல் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் தவறு செய்தால் ஓடிச் சென்று திருத்துவது போல ஒரு இயக்கம் இருந்தால் மட்டுமே, மக்களைப் பகுத்தறிவு மிக்க சிறந்த மனிதர்களாக மாற்ற முடியும் என்பதைப் பலமாக நம்பினார். அவர் நம்பிக்கையை நன்கு பற்றிக் கொண்ட திராவிட இயக்கத் தோழர்கள், அப்பணியை அற்புதமாகச் செய்துள்ளார்கள் என்பதற்கு இந்தத் தேர்தலில் தமிழ் நாட்டு மக்கள் அளித்த தேர்தல் தீர்ப்பே, உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவான விடையாய் நிற்கிறது.

வங்கத்திலும், திரிபுராவிலும் ஏனையப் பிற மாநிலங்களிலும் இயங்கும் முற்போக்குச் சக்திகள் பெரியாரைப் பின்பற்றி இயக்க அரசியலை கையிலெடுக்க வேண்டும். மக்களை வாக்குகளாக மட்டும் பார்த்தால் மதவாத பூதம் எளிதில் அந்த கட்சிகளைத் தின்று செரிமானித்து விட்டு, மக்களைப் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுத்து சென்றுவிடும். பெண்களையும், சூத்திரர்களையும் பிறவிப் பிரமிடின் அடியில் வைத்து இழிவு செய்யும் இந்துத்துவத்தை உயர்த்தி பிடிக்கும் இந்த மதவாத ஆட்சி தொடர்ந்தால், பொள்ளாச்சி பயங்கரம் போலவும், காஷ்மீர் ஆசிபா போலவும், மாட்டுக்காக மனிதனைக் கொல்லும் மடமை போலவும், எம்.எம்.கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றோரின் கொலைகள் போலவும், நாடு முழுவதும் பல அழிவுகள் நடப்பதை யாராலும் தவிர்க்க முடியாது. நாம் இப்பொழுது விழித்துக் கொள்ளாவிடில் நாடு மற்றுமொரு விடுதலைப் போரைச் சந்திக்கும் அவல நிலையைத் தவிர்க்க முடியாது. மனிதனை எதன்பாலும் பிரித்து உயர்வு தாழ்வு கற்பிக்காத, முதலாளிகள் மட்டுமே செல்வ செழிப்பை தனியுடைமை ஆக்கிக்கொள்ளாத, மாற்று பாலினத்தை நுகர்வு பொருளாக மட்டுமே பார்க்காத, சனாதனத்திற்க்கு எதிரான இடது அரசுகள் புதுப் பொலிவுடன் நம் இந்திய தேசத்தை கூட்டாக ஆட்சி செய்யும் பொற்காலத்தை பெரியார் வழி நின்று இந்தியாவில் உள்ள அனைத்து முற்போக்குச் சக்திகளும் சாதித்திட வேண்டும்.

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு. இந்திய மக்கள் அனைவரையும் அழகாக மாற்றுவோம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s