துள்ளித்திரிந்த காலங்கள் – கவிஞர் நா.காமராசன், மண்டகொளத்தூர்.

ஒத்தையடிப்பாதை

தோரணமாய் முள்வேலி

வழியெங்கும் கோவப்பழம்

கைபிடித்து அழைத்துச்செல்ல

தோழியாய் அக்காமார்கள்

இதோ எங்கள் பால்வாடி

வகுப்பறை!

சிதிலமடைந்த செங்கல்சுவர்

ஒடுகள் வேய்ந்த சிவந்தகூரை

சிலந்திகள் நெய்த வலைக்கூடு

குழந்தைகள் கிறுக்கிய ஓவியக்காடு

சிட்டுக்குருவியின் வைக்கோல்கூடு

எங்கள் புத்தம்புதிய கனவுக்காடு!

ரங்கசாமி களத்துமேடு

அய்யர்தெரு பெருமாள்கோவில்

அரசமர பஜனைக்கோயில்

மணியக்கார முள்வேலித்தோட்டம்

எங்கள் வகுப்பறைத் தாண்டிய

விளையாட்டுத் திடல்!

மல்லிப்பூ கொண்டுவந்த நிலா

நரியிடம் ஏமாந்து நின்ற காக்கை

அம்மாவிடம் வாங்கிய ஆசைமுத்தம்

மேகவீதியில் மழையின் சாரல்

ஒவ்வொரு நாளும் அள்ளித்தந்தார்

பாடல் வழியே பால்வாடி டீச்சர்!

மத்தியான கோதுமைச்சோறு

பசிபோக்க மணமணக்கும்

மரம்வெட்டி வீடுதிரும்பும்

அண்ணணுக்காக வாங்கிவருவோம்

தலையில் சுமந்த சோற்றுத்தட்டை

எட்டிப்பிடித்து தட்டிப்பறிக்கும்

எலும்புத் தோலுமாய்  தெருநாய்கள்!

தெருவைத் தாண்டிய முதல்நட்பு

காக்காக்கடி கடித்த ஆரஞ்சு மிட்டாய்

தோள்சாய்ந்த உறக்கங்கள்

தலைகலைந்த கோலங்கள்

சின்ன சின்ன சண்டைகள்

காயா பழமா சமாதானங்கள்!

கண்ணாமூச்சி ஆட்டங்கள்

கால்கடுத்த ஓட்டங்கள்

கூட்டாஞ்சோறு விளையாட்டு

ராஜா ராணி ஒத்திகைகள்

வகுப்பறை தாண்டிய மாலைநாட்கள்!

புங்கைமர குரங்காட்டம்

புளியமர ஊஞ்சலாட்டம்

அரசமர மேடைகள்தோறும்

அருவியாய் பாய்ந்துவரும்

ஆயிரமாய் கதைகள் நாளும்!

ஒணான் பிடிக்க கணக்கன்தோட்டம்

தும்பி பிடிக்க களத்துமேடு

நீச்சல் பழக புல்லாக்குட்டை

காராமணி பறிக்க கொல்லைமேடு

கதைகள்பேச காளிம்மா கோயில்!

கண்ணுறங்கும் நேரம்வரும்

வாசலெங்கும் கூட்டம்சேரும்

வாய்மொழி கதைகள் கேட்க

பிள்ளைக் கூட்டம் ஒன்றாய்க்கூடும்

புதிய உலகில் பயணம்போவோம்!

விண்மீன்கள் கண்சிமிட்டும்

நிலவு வந்து சோறூட்டும்

புழுதிக்காற்று சுமந்துவரும்

மண்வாசக் கதகதப்பை

மனசுக்குள்ளே ஏகாந்தமாய்!

இதோ பொழுது விடிஞ்சிருச்சு

பொதிமூட்டை சுமந்துருச்சு

பால்மணமும் மாறவில்லை

பாதித்தூக்கம் கலையவில்லை

பள்ளிக்கூடம் போகும்பிள்ளை

தொலைதூரம் போகுதம்மா!

தாலாட்டுப்பாட்டு பாட

தாய்மொழிக் கல்வியில்லை

அடிமைக் கல்வி கற்க

ஆயிரமாய்க் கொட்டுறாங்க

அரசுப் பள்ளியெல்லாம் இழுத்துதானே

மூடுறாங்க!

தாய்மொழியும் மறந்துபோச்சு

தாய்நாடும் சிதைஞ்சிபோச்சி

மழலைமொழி நாக்குக்கூட

அம்மாவை மறந்துபோச்சி

செத்துப்போன மம்மிதானே தாலாட்டாய் ஒலிக்குதம்மா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s