தமிழர் விளையாட்டுகள் “உப்புக்கல்” பேராசிரியர் – கு.முருகேசன்

கோடை விடுமுறைகளை முடித்துவிட்டு குழந்தைகள் எல்லாம் பள்ளியை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். படையெடுக்கிறார்கள் என்று சொல்வதற்கு காரணம், அங்கு அவர்கள் வீட்டுப்பாடம், வகுப்புப் பாடம், தேர்வுக்குத் தயாராவது, போட்டித் தேர்வுக்குத் தயாராவது, நுழைவுத்தேர்வுக்கு தயாராவது என இன்று அவர்கள் கல்வியோடு ஒரு பெரிய போரையே நடத்த வேண்டியுள்ளது. ஆனால் அதே விளையாட்டு என்று வரும் பொழுது நமது பிள்ளைகள் பட்டாம்பூச்சி என சிறகடித்துப் பறக்கிறார்கள். ஏனெனில் அது மனதையும் உடலையும் ஒருங்கிணைத்து மனதிற்கு மகிழ்ச்சியையும் உடல் ஆரோக்கியத்தையும் தருகிறது. அதுமட்டுமல்ல அது நமக்கு  சொல்லிக்கொடுக்க வேண்டிய பாடத்தையும் மலருக்கு வலிக்காமலேயே மலரிலிருந்து தேன் எடுக்கும் தேனீ போல அவர்களுக்கு வலிக்காமல் சொல்லிக்கொடுக்கிறது. அப்படிப்பட்ட விளையாட்டுகளில் ஒன்றான உப்புக்கல் என்னும் விளையாட்டை எப்படி விளையாடுவது என்று பார்ப்போம்.

உப்புக்கல் என்னும் விளையாட்டு ஆண், பெண் என இருபாலரும் சேர்ந்து திறந்த வெளியில் விளையாடும் வெளிப்புற குழு விளையாட்டாகும். இதை எத்தனைபேர் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடலாம். ஆனால் விளையாடுவோர்களின் மொத்த எண்ணிக்கை இரட்டைப் படையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இரண்டு அணிகளுக்கும் சமமான எண்ணிக்கையில் ஆட்கள் இருப்பார்கள்.

விளையாட்டில் கலந்துகொள்ளும் அனைவரையும் இரண்டு அணிகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். இரண்டு சம எண்ணிகையிலான அணியாகப் பிரிப்பதற்கு அனைவரையும் வரிசையில் நிற்க வைத்து ஒன்று இரண்டு என சொல்லச் சொல்லி ஒற்றை எண்கள் சொன்னவர்கள் ஒருபக்கமும் இரட்டை எண்கள் சொன்னவர்கள் மற்றொரு பக்கமும் அணியாக பிரிக்கலாம். அல்லது உத்தி பிரிதல் என்ற முறையிலும் இரு சம அணிகளாக கலந்துகொள்பவர்களைப் பிரிக்கலாம். அதன்படி இரண்டு அணித்தலைவர்கள் அடையாளம் காணப்படுவர் அவர்கள் ஓரிடத்தில் இருக்க மற்றவர்கள் எல்லாம் இரண்டு இரண்டு பேராகத் தனியாகச் சென்று யாருக்கும் தெரியாமல் அவர்களுக்கு ஒரு பெயரை வைத்துக்கொள்வார்கள். பின்பு அணித்தலைவர்களிடம் வந்து யார் வேண்டுமெனக் கேட்பார்கள் அவர்கள் எந்த பேர் வைத்த ஆளை கேட்கிறார்களோ அவர்கள் அந்த அணியில் சேர்ந்துகொள்வார்கள். உதாரணமாக இரண்டு பேர் தனியாகச் சென்று அவர்களில் ஒருவரின் பெயரை சந்திரன் என்றும் இன்னொருவரின் பெயரை சூரியன் என்றும் வைத்துக்கொண்டு அணித்தலைவர்களிடம் சென்று உங்களுக்கு சந்திரன் வேணுமா சூரியன் வேணுமா என கேட்பார்கள். அந்த அணித்தலைவர்களில் ஒருவர் சந்திரன் வேண்டும் என்றால் அவர்பக்கம் அந்த பெயர் வைத்துக்கொண்ட நபர் சென்றுவிடுவார். அடுத்த நபர் அடுத்த அணிக்கு சென்றுவிடுவார். இவ்வாறாக இரண்டு அணியிலும் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் சமமாக சேர்ந்துகொள்ளலாம். இவ்வாறு அவர்கள்  விளையாட்டைத் தொடங்கும் முன், இரு அணிகளாகப் பிரிந்துகொண்டு விளையாடத் தொடங்குவார்கள்.

கிராமப்புறங்களில் காணப்படும் பரந்துவிரிந்த திறந்த வெளி இடம்தான் இந்த விளையாட்டுக்கு விளையாட்டு களம். பரந்துவிரிந்த விளையாடும் இடத்தை காலாலேயே கோடுபோட்டு இரு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு அதை ஆளுக்கு ஒரு பகுதியாக இரு அணிகளும் எடுத்துக்கொள்வார்கள். இதில் ஒரு அணியின் பெயர் ‘உப்பு’ என்றும் மற்றொரு அணியின் பெயரை ‘கல்’ என்றும் வைத்துக்கொள்வார்கள்.அதாவது உப்பு அணிக்கு ஒரு பகுதியும் கல் அணிக்கு ஒரு பகுதியும் எடுத்துக்கொள்வர். “மழை வருது, மழை வருது… உப்புக்கல்லை எடுத்துனுபோயி உள்ளே வையுங்க” என்று சொல்லியபடியே, இரு அணியைச் சேர்ந்தவர்களும் அவரவர் பகுதிகளுக்குள் ஓடுவார்கள். அப்பொழுது உப்பு அணியைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கான பகுதியில் யாரும் பார்க்காதபடி மறைவான இடங்களில் மணலைச் சிறுசிறு குவியலாகக் குவித்து வைப்பார்கள். அதேபோல், கல் அணியைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்கான பகுதியில் சிறு சிறு  கல்லை வைத்து, அதன்மேல் மணலைச் சிறுசிறு குவியலாகக் குவித்து வைப்பார்கள்.

சற்று நேரம் ஆனதும் “மழை விட்டாச்சு. மழை விட்டாச்சு… எல்லாரும் வெளியே வாங்க..!” என்று ஒரு அணியினர் சொல்வார்கள், “வெய்யிலடிக்குது, வெய்யிலடிக்குது. வெளியே வாங்க..!” என்று மற்றொரு அணியினர் சொல்வார்கள். இப்பொழுது இரு அணிகளும் தாங்கள் இருந்த பகுதியை விட்டு வெளியேறி, அப்படியே எதிரணியினர் இருந்த பகுதிக்கு மாறிக் கொள்ளுவார்கள். ஒன்று இரண்டு என சரியாக 100 எண்ணுவதற்குள், எதிர் அணியினர் குவித்து வைத்திருக்கும் மண் குவியலையோ அல்லது கல் குவியலையோ கண்டுபிடித்து ஒவ்வொரு குழுவும் அழித்துவிடுவார்கள். நேரம் முடிந்த பிறகு, இரு அணியினரும் அவரவர்கள் பகுதிகளுக்குச் சென்று பார்ப்பார்கள். எந்தப் பகுதியில் எதிரணியினரால் அழிக்கப்படாத அதிக மண் குவியல்கள் இருக்கிறதோ, அந்த அணியே வெற்றி பெற்ற அணியாகும்.

இந்த விளையாட்டைப்பற்றி படிக்கும்போதே எதோ மர்மக்கதைகளில் மர்மமுடிச்சுகளை அவிழ்ப்பது போன்ற உணர்வைத்தருகிற இந்த விளையாட்டை விளையாடினால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இனி இந்த விளையாட்டு நமக்கு என்ன வாழ்வியல் திறனைச் சொல்லிக்கொடுக்கிறது என பார்ப்போம். பொதுவாகவே குழந்தைகள் வீதிகளில் சென்று விளையாடினால்தான் அவர்களுக்கு சூரிய ஒளியிலிருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின்-டி கிடைக்கும். வீதிகளில் சென்று விளையாடாமல் பின்பு என் வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது என்று மனம் நொந்து கொள்வதில் எந்தப் பயனும் இல்லை. இந்த விளையாட்டு நமக்கு இராணுவ ரகசியத்தை, இராணுவத்தினர் எதிரியை அழிக்கும் நுணுக்கத்தையும் எதிரியிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ளும் நுட்பத்தையும் சிறிய வயதிலேயே விளையாட்டாகச் சொல்லிக்கொடுக்கிறது இந்த விளையாட்டு. இன்று இராணுவத்தினர் எதிராளி வைத்த கன்னி வெடியில் சிக்கிக்கொள்வதும் பகைவர்கள் எங்கெல்லாம் எப்படியெல்லாம் கன்னி வெடி வைப்பார்கள் என யோசித்து அதை அகற்றுகிறார்கள் என்றால் அதற்கு இந்த விளையாட்டும் தன் பங்கிற்கு ஒரு சிறு பயிற்சியைக் கொடுத்துள்ளது எனலாம்.

உடல் திறன், அறிவுத் திறன், வீரப் பண்பு ஆகிய மூன்று கூறுகளில் ஏதேனும் ஒன்றை அடிப்படையாகக் கொண்டுதான் நமது விளையாட்டுகள் விளையாடப் படுகின்றன.பிள்ளைகளை முதுமையானவர்களாக மாற்றுவதற்கு முன் அவர்களை முதிர்சியானவர்களாக மாற்றவேண்டும். முதுமை என்பது நாட்கள் நகர்ந்தால் வருவது, முதிர்ச்சி என்பது அனுபவத்தால் வருவது. ஒவ்வொரு விளையாட்டும் குழந்தைகளுக்கு ஒரு அனுபவத்தைத் தருகிறது. அந்த அனுபவம்தான் நமது பிள்ளைகளைத் தனித்து இயங்குவதற்கும், சுயமாக எது நல்லது? எது கெட்டது? என தெரிந்து முடிவெடுப்பதற்கும் போதுமான அனுபவத்தையும் முதிர்ச்சியையும் தருகிறது.  எனவே நமது பிள்ளைகள் நன்றாக விளையாடட்டும் நல்ல திறமைசாலிகளாக, அனுபவசாலிகளாக முதிர்ச்சியடையட்டும்.

(தொடரும்)

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: