நிகழ மறுத்த அற்புதம் டாஸ்மாக் மருத்துவர் யாழினி . M.B.B.S.,

ப்ளட்ஸ்பிட்ஸ் பூங்கா. சுவிற்சர்லாந்தில் உள்ள இந்த பூங்கா (Platspitz Park), 1980 களில் ஆயிரக் கணக்கான ஹெராயின் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களாலேயும் போதைப்பொருளை கைமாற்றி விடுபவர்களாலேயும் நிறைந்திருக்குமாம். அன்றைய அப்பூங்காவின் காட்சிகள் தான் சுவிற்சர் லாந்தின் கட்டற்ற போதை கலாச்சாரத்தின் நினைவுகளாக இன்றும் பேசப்படுகின்றது. கட்டற்ற போதை கலாச்சாரத்தின் விளைவாய், அப்பூங்கா, போதை ஊசிப் பூங்கா என்ற செல்லப்பெயரினை தாங்க ஆரம்பித்தது. ஒவ்வொரு நாளும் 1000திற்கும் மேற்பட்டவர்களின் உடம்பில் ஹெராயினும் பற்பல போதை மருந்துகளும் உடம்புக்குள் செலுத்தப்படும் இடமாக ப்ளட்ஸ்பிட்ஸ் பூங்கா ஆனது.

இதன் அன்று அறியப்படாத பின்விளைவாய், ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் வழியே அன்று உயிர்கொல்லித்தொற்றாக அறியப்பட்ட ஹெச்.ஐ.வி வைரஸ் தொற்று, போதையில் காணும் காட்சிகளையும் எண்ணங்களையும் விஞ்சும் வகையில் மிகத் தீவிரமாகப் போதைப்பொருளை ஊசி வழியாக உடம்பில் ஏற்றும் குழுக்களில் பரவியது. அதோடு, போதைப்பொருளினை மனிதனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கும் மேல் உடம்பினுள் செலுத்தி அதனால் இறந்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது. பிரச்சனை போதைப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அதன் காரணிகளாக போதைப்பொருளை நுகர்வோருக்கு கைமாற்றித் தருபவர்களை அரசாங்கம் தேட ஆரம்பித்தது. இது ஆரம்பித்த சில காலத்தில், போதைப்பொருளுக்கான கருப்பு நிழல் சந்தை உச்சத்தினைத் தொட ஆரம்பித்தது.

பெருகிவந்த ஹெச்.ஐ.வி வைரஸ் தொற்று, போதைப் பொருளினை அளவுக்கதிகமான நுகர்ந்ததனால் ஏற்படும் இறப்புகள் மற்றும் போதை பொருட்கள் பொது சமூகத்தில் உண்டாக்கும் விளைவுகளை சுவிஸ் அரசாங்கம் கணக்கில் கொண்டு, தடைசெய்யப்பட்டப் போதைப் பொருட்களினை அவர்கள் எதிர்கொண்ட கண்ணோட்டத்தினை மாற்றிக்கொண்டு மக்களுக்கு அப்பழக்கத்தினில் இருந்து மீட்பதற்கானச் சிகிச்சைகளைக் கொடுக்க ஆரம்பித்தது. 1994 இல், சுவிஸ், போதைப்பொருட்களினைப் பொறுத்தவரை உலகத்திலேயே மிக முன்னோக்கு கொண்ட கொள்கையாகவும்  இன்றும் சர்ச்சைக்குரிய ஒரு கொள்கை முடிவாகவும் பார்க்கப்படும் அக்கொள்கையினை சட்டமாக ஏற்றுக்கொண்டது. அதன் படி, ஹெராயினை நீங்கள் மறைந்து மறைந்து வாங்கவேண்டிய அவசியம் இருக்காது, ஒரு அனுமதிக்கப்பட்ட முறை வழியே வேண்டுபவர்களுக்கு கொடுக்கப்படும். ஆக, உலகத்தின் ஒரு பகுதியில் போதைப்பொருட்களினை வளர்ந்த நாடுகளுக்கு அனுப்பும் மாபியா கும்பல்களுக்கும் அரசுகளுக்கும் தொடர் வன்முறை நிகழ்வுகள் நிகழ்ந்த அதே நேரத்தில், சுவிஸ் அரசு போதைப்பொருட்களினைப் பயன்படுத்துபவர்களுக்கு உறுதுணையாக இருந்து, அவர்கள் தங்களின் போதைப்பழக்கத்தில் இருந்து மீண்டெழ புது மருத்துவ முறைகளின் வழிகளையும் அளிக்க ஆரம்பித்தது.  சுவிஸ்சில் அன்று இருந்த பிரச்சனையினை எதிர்கொள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும், மக்கள் குழுக்களின் பிரதிநிதி களும், சட்டம் ஒழுங்கு குறித்த புரிதல்-அறிதல்  கொண்டவர்களும் மற்றும் மருத்துவ ஆளுமைகளும் “நான்கு தூண்களினால் ஆன போதைப்பொருட்கள் குறித்த கொள்கையினை”, உருவாக்கியது. அதன் தூண்களாக இருப்பது, தீங்கினை மட்டுப்படுத்துதல், சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டத்தினை அமலாக்குவது.

தீங்கினை மட்டுப்படுத்தும் வியூக நடவடிக்கைகளின் அடிப்படை நோக்கம், போதைப்பொருள் பயன்படுத்து வதன் வழி ஒருவருக்கு ஏற்படும் தீங்கினை மட்டுப் படுத்துதல். அதன் ஒரு வியூகம், போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் மத்தியில் புது ஊசிகளை அதை சார்ந்த உபகரணங்களையும் தருவது. அதன் வழி, ஒரு ஊசி பல முறை பயன்படுத்துவது குறைந்து, ஹெச். ஐ. வி மற்றும் ஹெப்டைட்டிஸ் சி யின் நோய் தொற்று பரவுவதற்கான இவ்வழி முடக்கப்பட்டது.

போதைப் பழக்கத்தில் இருந்து மீளவேண்டும், முக்கியமாக ஹெராயின் பயன்பாட்டினை நிறுத்தி அதற்குப் பதிலாய் வேறு ஒரு போதைப்பொருளை பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்பவர்களுக்காக Opiod Substitution Therapy  உள்ளது. இதன்படி, சுவிஸ் நாட்டில் போதைப்பொருட்களை மக்களிடம் விற்கும் கும்பலுக்குப் போட்டியாக அரசாங்கத்தின் சுகாதாரத் துறையே உருவானது. இது இப்போதைப் பொருட்களுக்கான கருப்பு நிழற் சந்தையினை உடைத்து விட்டது. ஆக, அரசாங்கம் சந்தையில் இவ்வடிவத்தில் நுழைந்ததனால் சந்தையின் சூழலே மாற்றம் பெற்று அது நுகர்வோருக்கு சாதகமாய் முடிந்திருக்கிறது.

இந்த நான்கு தூண் கொள்கையின் படி சட்ட அமல்படுத்துதலின் பங்கு முற்றிலுமாக மாறியது. போதைப் பொருட்கள் பயன்படுத்துபவர்களில் பெரும் பான்மையானவர்கள் சிகிச்சைக்குச் செல்லச் செல்ல, கருப்பு நிழற் சந்தை நொறுங்க ஆரம்பித்தது , அதோடு சந்தையில் கிடைக்கும் போதைப்பொருளின் தரமும் சரிய ஆரம்பித்தது. போலீஸ், போதைப்பொருள் பயன்படுத்துபவர்களை விட போதைப்பொருளை கை மாற்றி விடுபவர்களில் பெரும் புள்ளிகளை தங்களுடைய கண்ணோட்டத்தில் வைத்திருக்க ஆரம்பித்தது, நுகர்வோருக்கு நன்மையாகவும், சட்ட அமலாக்கத்தில் ஒரு தெளிவு உருவாகவும் வழி செய்தது.

முக்கியமாய் சுவிஸில் ஹெராயினை புதியதாய் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததோடு மட்டுமல்லாமல் அதீத போதைமருந்து உட்கொள்ளலால் ஏற்படும் இறப்புகள் 64 சதவிகிதமும் போதை ஊசிகளைப் பகிர்ந்து கொள்ளலாம் ஏற்படும் ஹெச்.ஐ.வி வைரஸ் தொற்று 84 சதவிகிதமும், வீடுகளில் நடக்கும் திருட்டுகள் 98 சதவிகிதமும் குறைந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. மேலும் புது கொள்கையின் செயல்பாட்டினால் போதை பொருட்கள் சம்பந்தப் பட்ட கேஸ்கள் வருடாவருடம் குறைந்து கொண்டே வருகின்றதாகச் சொல்லப்படுகின்றது.

ஆக, ஒரு கொள்கையாக ‘விலக்கு’ (prohibition)  என்பது இருக்கும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்குப் பதிலாக நிலைமையினை மேலும் சிக்கலாக மாற்றிவிடும் என்பது தான் நிதர்சனம். விலக்கு என்பது அரசாங்கத்தினால் அமல்படுத்தப்படும் போதெல்லாம் கருப்பு நிழற் சந்தை உருவாவதை தடுப்பது வெகு கடினம். அதற்குப் பதிலாக அரசாங்கம் ஒரு பொருளுக்கான சந்தையினை ஒழுங்கு படுத்தும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளும் போது, அதில் நுகர்வோர் பெரிதும் பயன் அடைகிறார்கள். நம் தமிழ்நாட்டில், மது விற்பனை மொத்தமாக டாஸ்மாக்கின் கீழ் வந்ததில் இருந்து, கள்ளச் சாராய இறப்புகள் என்பது மிகவும் அருகிவிட்டது. கள்ளசாராயத்தால் ஏற்படும் பெரும் உயிரிழப்புகள், டாஸ்மாக்கின் மீது அரசு கவனம்கொள்ள வழி வகுத்து, அதன் படி விலை குறைவான மதுவினை அரசே டாஸ்மாக்கின் வழி விற்பனை செய்ய ஆரம்பித்தது. அதன் காரணமாக அதற்கு இருந்த கள்ளச்சந்தை என்பது முற்றாய் அழிந்துபோனது. ஆயினும், இதில் நுகர்வோரின் நிலை என்பது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது. அதிலும் மது விலக்கு கோருபவர்கள், தங்கள் முன் இருக்கும் பிரச்சனை எது என்பதை கவனம் கொள்ள வேண்டியிருக்கின்றது. மது பிரச்சனையா அல்லது அதீத மது அருந்துதலும் அதற்கு அடிமையாதல் பிரச்சனையா என்று. மது அடிமை ஆனவர்களை மீட்டெடுப்பதற்கு நம்மிடம் கட்டமைப்பு இருக்கின்றதா என்ற கேள்விக்கு நாம் பதில் அளிக்கவேண்டியிருக்கின்றது.

அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 1920 முதல் 1933 வரை நடைமுறையில் இருந்த மதுவிலக்கே சாட்சி. ஒரு கூராய்வின் படி, மதுவிலக்கு அமெரிக்கர்களின் உடல் நலத்தை உயர்த்தவில்லை என்றும், மது அருந்துதலின் அளவினை பெரிதாக பாதிக்கவில்லை என்றும், குற்றச் செயல்கள் செய்வதற்கு தூண்டும் சூழலை ஏற்படுத்தியது என்றும் முக்கியமாக ஊழலினை சமூகத்தின் அனைத்து தளத்திற்கும் விரிவு படுத்தியதில் மதுவிலக்கு கொள்கையின் தாக்கம் பெரிது என்று சொல்லப்படுகின்றது. டாஸ்மாக், பொது சுகாதாரத்தினை மேம்படுத்துவதில் அரசால் முன்னெடுக்கப்பட்ட ஆகச்சிறந்த சந்தைத் தலையீடாய் உருவாவதற்கு பதிலாக அரசின் பல தொழில்களில் இதுவும் ஒன்றாக மாறியது, நிகழ மறுத்த அற்புதம் என்ற வகையினில் பார்க்க வேண்டியுள்ளதாவே தோன்றுகின்றது. சுவிஸின் கொள்கையினை பின்பற்றுவதற்கான காலத்தில் தான் நாம் இருக்கின்றோம் – காத்திருக்கவும் பெரிதும் நமக்கு நேரமில்லை.

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: