கல்விநிலையமா? கொலைக்களமா? – தோழர் திராவிடராசன்

ஆதிவாசிகள் இனி நடனமாட மாட்டார்கள் என்ற புத்தகத்தை எழுதிய ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் அந்தப் புத்தகத்தில், ஜார்க்கண்ட் மாநில சாந்தால் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை பற்றி எழுதியிருப்பார். அதிலே ஒரு கட்டுரையில், தங்களின் வாழ்வாதாரமான காடுகள், வீடு, நிலம் உள்ளிட்ட இருப்பிடங்கள் அனைத்தையும் காலி செய்து, ஊரையே அப்புறப்படுத்திவிட்டு அந்த இடங்களிலே இருக்கும் நிலக்கரியை சுரண்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கு பழங்குடிகளின் நிலங்களை தாரைவார்க்க நடத்தப்படும் கோலாகல நிகழ்ச்சிக்கு வருகைதரும், குடியரசுத்தலைவருக்கு வரவேற்பளிக்க, எந்த பழங்குடிகள் தங்களது நிலத்தை இழந்து நாடோடிகளாகத் திரிய காத்திருக்கிறார்களோ, அவர்களை வைத்தே ஆதிவாசிகளின் பாரம்பரிய நடனம் மூலம் குடியரசுத் தலைவருக்கான வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பார்கள் அங்கு பணிபுரியும் அரசு அதிகாரிகள். இதனையறிந்த ஆதிவாசி பழங்குடி மக்கள் “நாங்கள் ஆடிக்கொண்டிருக்கும்போதே எங்கள் காலடி நிலம் பறிக்கப்படுவதை எங்களால் அனுமதிக்க முடியாது’’ என தங்களின் மறுப்பைத் தெரிவித்து, நடனமாட மறுத்துவிடுவார்கள்.

ஆதிவாசிகளான பழங்குடிகள் இனி நடனமும் ஆட முடியாது படித்து பட்டம் பெறவும் முடியாது. ஒருபுறம் உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை அரசு மற்றும் தனியார் துறையில் கொடுத்துக்கொண்டே மற்றொருபுறம், இட ஒதுக்கீட்டிற்கு எதிரான முழக்கத்தை வீசி, கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவ மாணவியர்கள் தற்கொலைக்குத் தூண்டப்படுகிறார்கள். இட ஒதுக்கீட்டை வேறோடு பிடுங்க, இட ஒதுக்கீடு மூலம் படிப்பவர்களையே கொன்றொழிக்கும் சதிகாரச் செயலை ஆதிவாசி பழங்குடி மக்கள் நிலத்தை ஆடிக்கொண்டிருக்கும்போதே பிடுங்கும் செயலுக்கும் இதற்கும் ஒற்றுமையுண்டு.

ரோஹித் வெமுலா தொடங்கி மருத்துவர் பாயல் தாட்வி என இன்னும் எவ்வளவு பேர் தற்கொலை செய்துகொண்டோர் பட்டியலில் எண்ணிக்கையாக அதிகரிக்கப் போகிறார்களோ! என்கிற அச்சம் நிலவுகிறது. படித்தவர்களிடத்தில்தான் சாதி, மதம், பாலினம் என இவைகளின் மீதான பாகுபாடு மிகக் கொடுமையான வன்மமாக வேரூன்றியுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் நல்ல படிக்கும் ஆற்றல் உடையவர்கள். நிதானத்துடன் யோசித்து முடிவெடுக்கும் சிந்தனை கொண்டவர்களே ஆனாலும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஏன்? சக மாணவர்கள் தங்களைத் தாழ்வாக நடத்தினால் கூட சகித்துக்கெள்ளும் மாணவர்களால் சமூகநீதி பற்றி அடிப்படை கூட அறியாத, ஆனால் அதே சமயத்தில் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி உயரே வந்து பணியாற்றும் பேராசிரியர்களே மாணவர்களைப் பார்த்து, ஏய்.. கோட்டா ஸ்டூடண்ட் என்றழைக்கிறார்கள், இட ஒதுக்கீடு மாணவர்களை இழிவாகப் பேசுவது என இந்தக் கொடுமையைச் செய்யும் பேராசிரியர்களின் அறியாமையை என்னவென்று விவரிப்பது?

எந்த தருணத்தில் ஒரு பேராசிரியரே இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களை ஏளனம் செய்கிறார்களோ, அதன்பிறகு சக மாணவர்கள் எல்லைமீறி நடந்துகொண்டு தாங்கள் படிக்க வந்திருக்கின்ற மாணவர்கள் என்பதையே மறந்து சாதி சங்கத் தலைவர்களை விட மோசமாக நடந்து கொள்கிறார்கள்.மும்பை பி. எல். ஒய். நாயர் மருத்துவ மனையில் மருத்துவ மேற்படிப்பு படித்த மாணவி மருத்துவர் பாயல் தாட்வி என்கிற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரை,  பக்தி மெஹ்ரா, ஹேமா அகுஜா, அங்கிதா கண்டேல்வால் என்கிற மூன்று சக பெண் மருத்துவர்கள் சாதிரீதியான ஒடுக்குதலுக்கு உள்ளாக்கி யிருக்கிறார்கள். கழிப்பறைக்குச் சென்றுவிட்டு பாயல் தாட்வியின் போர்வையில் கால் துடைப்பது, கழிவறைக்குச் சென்றுவிட்டு கால்துடைக்க ஒருவருடைய போர்வையைப் பயன்படுத்தினால் அந்தப் போர்வையை மீண்டும் போர்த்திக்கொள்ள பயன்படுத்துபவரின் மனநிலை எப்படி இருக்கும்? படுக்கையில் எச்சில் துப்புவது, இதை எதிர்த்து கேட்க முயன்றால் வார்த்தைகளால் அசிங்கப்படுத்துவது, இன்னும் விவரித்துச் சொல்லக் கூசும் பல அநாகரிகமான செயல்களில் இறங்கியிருக்கிறார்கள் அந்த மூன்று பெண் மருத்துவர்கள். ‘இடஒதுக்கீட்டில் வந்தவளையெல்லாம்’  பிரசவம் பார்ப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்றெல் லாமும் வாட்ஸ்அப்பில் குழுவில் பிரச்சாரம் செய்திருக் கிறார்கள்.

இவ்வளவு கொடுமைகளையும் அரங்கேற்றம் செய்த மருத்துவர்கள் யார்? நன்கு படித்த அறிவாளிகள் என்று சொல்லப்படுபவர்களாயிற்றே! படித்தவர்கள் சாதிபாகுபாடு பார்க்க மாட்டார்கள் என்று பேசும் போலி வசனங்களை இனி சொல்லிவிட முடியுமா?

மனிதர்களின் உடலுக்கு சாதி, மதம், இனம் என பாகுபாடு பார்த்து மருத்துவம் அளிக்கும் மருத்துவர்களை உருவாக்கிவிடுவதற்காகவா இட ஒதுக்கீடு வேண்டாமென பேசி இட ஒதுக்கீட்டை எதிர்த்துக்கொண்டே கொலைகளை நிகழ்த்துகிறார்கள்?

ஊராகவும் ,சேரியாகவும் பிரித்துவைத்து ஒரு வகுப்பார் மீது பிறப்பு முதல் இறப்பு வரை வன்முறைகளை நிகழ்த்தி வன்கொடுமைக்கு ஆளாக்குகின்ற நிலைமையில், கல்வி கற்க உயர்கல்வி நிறுவனங்களில் போனாலும் அங்கேயும் தொடர்கதையாக தொடர்கிறதே!

பள்ளி கல்விக்கு முட்டுக்கட்டையாக புதிய கல்விக் கொள்கையும், உயர்கல்வி அனைத்திற்கும் முட்டுக் கட்டையாக தேசிய தகுதித் தேர்வுகளும் இவை யெல்லாவற்றையும் மீறி படிக்கச் சென்றால் அந்த கல்வி நிலையங்களே கொலைக்களங்களாக மாறி நிற்கிறது. இவற்றைப் பற்றி பொதுச்சமூகம் பேச வேண்டிய அவசியத்தை எல்லோருக்கும் உணர்த்த வேண்டிய கடமை எல்லோருக்குமானது.

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: