ஒழுக்கம் – தந்தை பெரியார்

தோழர்களே,

வாழ்க்கையில் ஒழுக்கத்தில், புருஷனுக்கு வேறு சட்டம், பெண்ணுக்கு வேறு சட்டம் வைத்திருக்கிறோம். ஆனால்,  ஒழுக்கத்தைப்பற்றி சதாகாலமும் பேசுகிறோம்; ஒழுக்கம் என்பதை எழுத்தில், சப்தத்தில் பார்க்கின்றோமே ஒழிய காரியத்தில் பார்ப்பதே இல்லை. விபச்சாரித் தனம் என்பதை எவ்வளவோ கண்டிக்கிறோம். அதற்கு எவ்வளவோ நிபந்தனைகள், நிர்ப் பந்தங்கள் சட்ட மூலமாய், சமூக மூலமாய், சாஸ்திர மூலமாய், இயற்கை மூலமாய் எல்லாம் வைத்திருக்கிறோம். அப்படி எல்லாம் இருந்தும், அதை இருவருக்கும் சமமாய் வைக்கவில்லை. ஆண் விபச்சாரத்தைப்பற்றிப் பேசுவோரே கிடையாது. அப்படி இருந்தாலும் அதற்குப் பெயர் பலக் குறைவு (Weakness) என்று சொல்லி விடுகிறோம். பெண் விபச்சாரத்தை நாணயக் குறைவு, ஒழுக்கக் குறைவு, கெட்டகுணம், இகழத்தக்கது, கண்டிக்கத்தக்கது, வெறுக்கத்தக்கது என்றெல்லாம் சொல்லுகிறோம். ஆணும் பெண்ணும் சேர்ந்தால்தான் விபச்சாரமாகுமே தவிர ஒரு பெண்ணும் மற்றொரு பெண்ணும் சேர்ந்து விபச்சாரம் செய்துவிட முடியாது, இதை யாரும் விபச்சாரம் என்று சொல்லவும் மாட்டார்கள்.

ஒருவருக்கொரு நீதி என்கின்ற முறையாலேதான் உலகில் பெரிதும் விபச்சாரம் இருந்து வருகிறதே தவிர, பெண்களின் கெட்ட குணங்களால் இருந்து வருவதாகச் சொல்லிவிட முடியாது. அன்றியும், இவ்வளவு தூரம் மதத்தாலும், சட்டத்தாலும், சமூகத்தாலும், நிபந்தனையாலும், வெறுக்கப்பட்ட விபச்சாரம் என்பது ஏன் இன்று உலகில் சர்வ சாதாரணமாய் இருந்துவருகின்றது, இதற்கு என்ன காரணம் என்பதை யாராவது யோசிக்கிறார்களா?

ஒவ்வொருவரும் விபச்சார தோஷத்திற்கு ஆளாகிவிட்டே மற்றவர்களைக் குறை கூறுகிறார்கள் என்பது அவரவர்கள் நெஞ்சில் கையை வைத்து – குழந்தைப் பருவமுதல் தாங்கள் நினைத்தது, செய்தது ஆகிய காரியங்களை ஞாபகப்படுத்திப் பார்த்தால் தங்களுக்கு விளங்கும். நம்முடைய கடவுள்கள் என்று சொல்லப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவன் முதலியவைகள்கூட விபச்சார தோஷத்திலிருந்து விலக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை, அவர்களுடைய பெண்சாதிமார்களைக் கூட விபச்சார தோஷத்திலிருந்து விலக்கவில்லை. ஏன் இப்படி இருக்கவேண்டும்? விபச்சாரம் மக்களுக்கு இயற்கையா என்று பாருங்கள், ஒரு நாளும் அல்லவே அல்ல, செயற்கை குணங்களாலேயே விபச்சாரம் நடக்கின்றது, அதாவது, கலியாணங்களே பெரிதும் விபச் சாரத்திற்குச் சமானமானவையாகும். தனக்கு இஷ்டமில்லாமல், காதல் இல்லாமல், பணம், காசு, சொத்து, வேறுவித நிர்ப்பந்தம் ஆகியவைகளுக்காக இணங்குவதே விபச்சாரம் ஆகும்.

நமது மணமக்கள் பெரும்பாலோர் தாய் தகப்பன்மார்கள் தங்களை ஜோடி சேர்த்துவிட்டார்களே என்பதற்காகவே இணங்கி இருக்கிறார்கள். மற்றும் பலர் தங்களுக்குள் வேற்றுமை உணர்ச்சியும் (அன்பு) ஆசை இன்மையும் ஏற்பட்டும் பிரிந்துகொள்ள முடியவில்லையே என்பதற்கு ஆகவே இணங்கி இருப்பதுபோல் இருக்கிறார்கள். இதுபோன்றவைகள் எல்லாம் நிர்ப்பந்த விபச்சாரங்களேயாகும். மற்றும் பலர் செல்வத்தையே பிரதானமாய்க் கருதி, இன்ப உணர்ச்சியைப் பறிகொடுத்து இணங்கி இருக்கிறார்கள். இது போன்றவை காசு, பணம், சொத்துக்களுக்காகச் செய்கின்ற விபச்சாரங்களேயாகும். இவை ஒருபுறமிருக்க, இன்று உலக வழக்கில் இருக்கின்ற விபச்சாரத் தன்மைகள் தாம் ஆகட்டும் ஏன் ஏற்பட வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். பால்ய மணங்களை ஒழித்து காதல் மணம், கல்யாண ரத்து, விதவை மணம், சமஉரிமை ஆகியவைகள் ஒரு சமூகத்தில் இருக்குமானால், இன்றுள்ள விபச்சாரங்களில் 100-க்கு 90 பாகம் மறைந்துபோகும் என்றே சொல்லுவேன். அதோடு, பெண்மக்களை நன்றாகப் படிக்கவைத்து, அவர்களுக்குச் சுதந்திர உணர்ச்சியை ஊட்டி, சொத்து உரிமையையும் வழங்கிவிடுவோமானால் விபச்சாரம் என்பது எப்படி நேரும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

(கீழையூர், திருபுவன், திருச்சி ஆகிய இடங்களில் 9-6-1935 முதல் 13-6-1935 முடிய சொற்பொழிவுகள் – குடி அரசு 16-6-1935)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s