கடவுள் சக்தி அல்ல; மனித சக்தியே! – மு.சி.அறிவழகன்

எதிர்வினை

“ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை உண்டு” என்பதனை நம்பக்குடியவர்கள் நாம்; காரணம் அறிவியல் பூர்வமாக பல சோதனைகளைச் செய்து ஏற்றுக்கொள்ள கூடிய மன நிலையில் உள்ளவர்கள் நாம். இப்படி இருக்கும் போது இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பி அதனை கடவுள் என்றும், நம்மை விட புனிதமானவை என்றும், சக்தி படைத்தவை என்றும் பல நூறு ஆண்டுகளாக மக்களை நம்பவைத்து பிரார்த்தனை பரிகாரம் என்ற பெயரில் (நேர்த்திக்கடன்) அழகு குத்துதல், தீ மிதித்தல், ஆணி செருப்பில் நடத்தல், கத்தி மீது நிற்பது, காவடி எடுத்தல் என்றெல்லாம் தன்னை வருத்திக்கொண்டு செய்வது எவ்வளவு முட்டாள்தனமான செயல்; கடவுள் பக்தி உள்ளவர்கள்தான் இதை செய்ய முடியும் பக்தி இல்லாமல் செய்தால் கடவுள் தண்டித்து விடுவார் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள கூடிய செயலா..! இதோ பக்தி இல்லை..! விரதம் இல்லை..! உங்களின் அத்துணை நேர்த்திக்கடன்களும் கடவுள் சக்தி அல்ல அனைத்தும் மனித சக்தியே என்று செய்து காட்டுகிறோம்…

அலகு_குத்துதல் :

“கடவுள் இல்லை கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் 
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் 
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி“ 
என்ற முழக்கத்தோடு பக்தி இல்லாமல் விரதம் இல்லாமல் அலகு குத்தி கார் இழுக்கும் தோழர்களின் முதுகில் இரண்டு கம்பிகள் குத்தப்படுகின்றன, அந்த இரண்டு கம்பிகளிலும் தனிதனியே இரண்டு கயிறுகள் கட்டப்படுகின்றன, அந்த கயிறுகள் இரண்டும் இழுக்க இருக்கும் காரில் கட்டப்படுகின்றன அதாவது, இவர்கள் மனித சக்தியே என்று நிரூபிப்பதற்காக காரில் கட்டி இருக்கிறார்கள். அதுவே பக்தர்கள் பக்தியின் பெயரால் இழுக்கிறார்கள் என்றால் அவர்கள் 20 கிலோவில் ஒரு தேரை வடிவமைத்து அதனில் அந்தக் கயிறைக் கட்டி இருப்பார்கள்; மனித சக்திக்கும் கடவுள் சக்திக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாரீர். கடவுள் நம்பிக்கை உள்ள பக்தன் 20 கிலோவில் ஒரு தேரை இழுக்கிறான். கடவுள் நம்பிக்கை இல்லாத மனித சக்தியை நம்புகிறேன் என்று தன்னம்பிக்கையோடு செயல்படக்கூடிய நாத்திகன் 1.5 டன் எடை கொண்ட காரை இழுக்கிறான். இதனால் தான் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரத்தின் போது அலகு குத்தி கார் இழுக்கும் தோழமைகள் “முதுகில் அலகு குத்தும் பக்தனே அடிவயிறில் ஓரலகு குத்திவா பார்க்கலாம்’’ என்ற வாசகத்தை வீதி வீதியாக விண்ணை முட்டும் அளவில் தன்னுடைய பலத்த குரலால் சொல்லி வருவான்

அறிவியல்_உண்மை :

மனிதனிடைய தோல்பகுதி குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் முதுகுப்புறம் உள்ள தோல் சற்று தடிமனான பகுதி; அந்த பகுதியில் சதையோடு அழகை குத்தும்போது அவை அந்த அழகை இறுக்கமாகப் பிடித்துக்கொள்கிறது, இதனால் தான் கொடுக்கும் விசையை தாங்கிகொள்கிறது. இதனாலேயே இவை சாத்தியமாகிறது.முதுகில் குத்தப்படும் அழகை அடிவயிற்றிலோ நெற்றியிலோ செய்ய முடியாது என்பதே அறிவியல்…

தீ_மீதித்தல் :

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே இந்த மூட நம்பிக்கையால் பாதிக்கப்பட்டவர்களே என்று சொல்லக்கூடிய நிலையில் தான் இருந்துகொண்டு வருகிறோம், காரணம் பெற்றோர்கள் நம்பிக்கை என்ற பெயரால் தான் மட்டும் அடிமைப்பட்டு இருப்பது போதாது என்று தன் பிள்ளைகளையும் அதே நிலைக்கு கொண்டு செல்கிறார்கள், அப்படி நம்பிக்கை என்ற பெயரால் நேர்த்திக்கடன் என்ற பெயரால் தீ மிதிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள் பக்தர்கள்; இதை பக்தியோடு மட்டும்தான் செய்ய முடியுமா என்றால் இல்லை என்பதே பதில். காரணம் அறிவியல் பூர்வமாக பல பதில்கள் உள்ளது. கருப்புச்சட்டை அணிந்துகொண்டு கையில் மாமிசத்தை கையில் ஏந்திக்கொண்டு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கடவுள் இல்லை கடவுள் இல்லை – இவை அனைத்தும் மனித சக்தியே என்று சுடும் நெருப்பின் மீது நடத்து காட்டினாள் கடவுள் சக்தி அல்ல இவை மனித சக்தி தானே என்று பொருள்…

அறிவியல்_உண்மை :

மனிதனுடைய பாதப்பகுதி என்பது சற்று தடிமனான பகுதி. குறிப்பிட்ட வெப்பத்தைத் தாங்கக்கூடிய பகுதி இதனால் தொடர்ந்து குறிப்பிட்ட நேரம் பயணிக்க முடியும் என்பதே அறிவியல் உண்மை; மாறாக குறிப்பிட்ட நேரம் நெருப்பின் மீது நிற்க முடியுமா என்றால் முடியாது என்பதே அறிவியல். சமமாக நெருப்பு பரப்பப்படாமல் இருந்தால் அதில் தொடர்ந்து நடக்க முடியாது. அதே போல முழுமையாக எரிக்கப்படாத நெருப்பிலும் நடக்க முடியாது என்பதே அறிவியல் கூறும் விளக்கம். இதனால் தான் தீ மிதித்தலின் போது பகுத்தறிவு தோழர்கள்“ நெருப்பின் மீது நடத்திடும் தோழா படுத்து எழுந்து வா பார்க்கலாம்’’ என்ற முழக்கத்தோடு மூடநம்பிக்கைகளை முறியடித்துக் காட்டுகிறார்கள்.

ஆணி_செருப்பில்_நடத்தல் /
கத்தி_மீது_நிற்பது :

இந்த ஆண்டு எனக்கு இந்த காரியம் (செயல்) நடந்தே ஆக வேண்டும் என்று பக்தியோடு ஆணி செருப்பை அணிந்துகொண்டு கோவிலைச் சுற்றி வருவார்கள். என்னவென்று கேட்டால் நேர்த்திக்கடன். அதனால் சுத்தபத்தமாக இருந்து வேண்டுதலை நிறைவேற்றுவதாகச் சொல்வார்கள். இதனை பக்தியோடு மட்டும் தான் செய்ய முடியுமா என்றால் இல்லை என்பதே உண்மை. காரணம் ஆணி செருப்பில் நடத்தல், கத்தியின் மீது ஏறி நிற்பது இவைகள் அனைத்தும் அறிவியல் பூர்வமாக சாத்தியமே. இவற்றிற்கு பக்தியும் தேவை இல்லை விரதமும் தேவையில்லை நம்பிக்கை மட்டுமே போதும் அறிவியல் மனப்பான்மை மட்டுமே போதுமானது. பெரியார் பிஞ்சுகளே உங்களின் நம்பிக்கைகளை முறியடித்து காட்டும்போது கடவுள் சக்தி என்று ஒன்று இல்லை என்று நிரூபிக்கப்படுகிறது.

அறிவியல்_உண்மை :

சமமாக அடிக்கப்பட்ட ஆணியின் மீது நிற்க முடியுமே தவிர ஒற்றை ஆணியில் நிற்க முடியாது என்பது அறிவியல் உண்மை; அதாவது ஒற்றை ஆணியில் நிற்கும் போது நம்முடைய முழு எடையும் அதனின் மீது செலுத்தப்படும் இதனால் கீழே உள்ள அணி நம்முடைய பாதத்தில் ஏறுவதற்கு வாய்ப்பு உள்ளது. மாறாக சமமாக அடிக்கப்பட்ட ஆணியில் நிற்கும் போது நம் உடலின் மொத்த எடையும் சரி சமமாக பிரிக்கப்பட்டு அந்த ஆணியின் விசைக்கு எதிர் விசையை உடல் கொடுக்கிறது. இதனால் நாம் ஆணியின் மீது நிற்பது என்ன படுக்கலாம் உருளலாம், அதே போல தான் கண்ணாடி துண்டுகள் மீது நிற்பது கத்தியின்மீது நிற்பது எல்லாம் இவைகள்அனைத்துமே மனித சக்தியே தவிர கடவுள் சக்தி என்று ஒன்றும் கிடையாது.
அறிவியல் சொல்கிறது அனைத்தையும் சோதனை செய் என்று ஆனால் கடவுள் நம்பிக்கை சொல்கிறது நான் சொல்வதை அப்படியே கேள் என்று; இயற்கைக்கு மிஞ்சிய சக்தி ஒன்றும் இல்லை என்பதனை பக்தர்கள் மறுக்க வாய்ப்பு இல்லை என்று நம்புகிறேன், சுனாமி வெள்ளம் புயல் இவைகள் எல்லாம் இயற்கையின் சக்தி என்னும்போது கடவுள் சக்தி புனிதமானது என்றால் இதனை தடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.இயற்கையின் சக்தியும் மனிதன் சக்தியுமே இயல்பானது மற்றவை அனைத்துமே செயற்கையானவையே!

ஒழியட்டும்_மூடநம்பிக்கை ! 
மலரட்டும்_மனித_நேயம் !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s