விடியல் வாசம் – கவிஞர் நா.காமராசன்

அதிகாலைப் பறவைகளின்

அலாரத்தில் விடியும்

எங்கள் கிராமத்து விடியல்!

ஏத்தம் இறைக்கும்

மாடாசாமியின் வெங்கலக்குரல்

செங்காட்டிலிருந்து எதிரொலிக்கும்

வடக்குத்தெருத்தாண்டி ஊருக்குள்!

தெருக்கிணற்றில்

ராட்டினத்திற்கும்

சுவற்றில் மோதி நீர் தளும்பும்

வாளிக்கும் இடையே மிருதங்க

ராகமாகும்

தண்ணீர் இறைக்கும் சத்தம்!

மாம்பட்டிலிருந்து கல்யாணமாகி

வந்திருக்கும் புதுப்பொண்ணுக்கும்

மாமியாருக்கும் ஆரம்பித்திருக்கும்

அதிகாலை முதல் சண்டை

வாசலில் சாணி தெளிப்பதில்!

தோளில் கலப்பையும் கையில்

உழவு மாடுகளோடும் போராடிக்

கொண்டிருப்பார் சின்னக்கண்ணு

கழனிக்கு ஏரோட்டிச் செல்ல!

மாட்டுக்கொட்டகையிலிருந்து

மாடுகளைக் களத்துமேட்டுக்கு விரட்டிக்கொண்டிருப்பார்

அய்யாசாமி!

தூக்குச் சட்டியோடும்

ராணிப்பேட்டை கொடுவாளோடும்

மரம் வெட்ட கிளம்பியிருப்பார்கள்

அண்ணன்மார்கள்

ஒடநகரத்து ஏரிக்கரைக்கு!

காலைல நடவுக்கு கௌம்புற

அவசரத்துல பள்ளிக்கோடம்

போற புள்ளைகளுக்கு

அவசர அவசரமா கூலைக்

கரைச்சி

வச்சிட்டு ஓடுவாங்க அம்மாங்க!

அரசமரத்தாண்ட இருக்குற

ஒத்தை தேநீர்கடைல

வேலைக்கு போகமுடியாத பெருசுங்க

பேசிட்டிருப்பாங்க இந்த முறையும்

எம்ஜிஆர்தான் ஜெயிப்பாருண்ணு

மூணாவது தேநீரை வாயில்

சுவைத்தபடி!

தாமரைக்குளத்துல குளிச்சிமுடிச்ச

பசங்க ஈர கால்சட்டைய

தலைமேல் போட்டுக்கொண்டு

வீட்டிற்கு ஒடிவந்தார்கள்

வேகவேகமாய்ப் பள்ளிக்குக் கிளம்ப!

தித்திப்பு புளியமரத்தில்

கூடுகட்டியிருந்த பறவைகள் கூட

புறப்பட்டு விட்டது இரைதேட

தொலைத்தூர தேசத்திற்கு!

இப்போது கண்ணூறாக் கெழவியும்

தளுக்குக் கெழவியும் தவிர

வேறயாரும் இல்லை அந்த

ஒற்றைத் தெருவில்

காயவைத்த அவிச்ச நெல்லுக்கு

காவலாக!

கருவாட்டுக்கூடையோடு வந்த

கருவாச்சி வெயிலுக்கு இதமாய்

மண்திண்ணையில் அமர்ந்து

கதைபேசத் தொடங்கினாள்

கண்ணூறாக் கெழவியோடு

காலம்போன கதையை!

இப்போதெல்லாம் பகல்பொழுதில்

காணாமல் போன மனிதர்கள்

இரவுப்பொழுதிலும் காணவில்லை

இதோ வாழ்க்கையின் விடியல்தேடி

போயிருக்கிறார்கள்

தொலைந்துபோன பறவைகளாய்

தொலைதூர தேசத்திற்கு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s