யாக மழை ஏமாத்த முடியாதுதானே? – தோழர்.ஹரிஷ் கமுககுடி மாரிமுத்து லண்டன்

திணை: நிலம் – தமிழ் நாடு.

பொழுது – கார்காலம்.

துறை: இயற்கை, பகுத்தறிவு, அறிவியல்

மெல்லிசையாய் வானில் இருந்து நீர்த்துளிகள் துள்ளி துள்ளி நிலத்தில் விழுகின்றன. கார் மேகமெல்லாம் கரைந்து கொண்டிருக்கின்றன. பார்க்கும் இட மெல்லாம் நீர் போர்த்தி இருக்கிறது. சென்னை மாநகருக்கோ, வாராது வந்த மாமணியாய் அமைந்தது இம் மாமழை. தெருவெங்கும் நீர் ஓட்டம். மாலை வேளையில் மெல்லிசை மழை. தேநீர் அருந்தியபடியே திண்ணையில் அமர்ந்து இம் மாமழையை நான்கு கண்கள் ரசித்துக் கொண்டிருக்கின்றன. இரு சிறு கண்களுக்குச் சொந்தக்காரர் சிறுவன் ‘அருள்’. இரு பெருங் கண்களுக்கு சொந்தக்காரர் ‘நடேசன்’; அருளின் அப்பா. அம்மா ‘வெண்பா’ இல்லத்தின் உள்ளே திண்ணையை ஒட்டிய சன்னல் அருகில் அமர்ந்திருக்கிறார்.

சிறுவன் அருள், அப்பாவைப் பார்த்து, “ஏம்ப்பா ரொம்ப மழ பேஞ்சா பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விடறாங்க? மழை எவ்ளோ நல்லாயிருக்கு! இன்னைக்கு பள்ளிக்கூடம் இருந்திருந்தா நண்பர்களோட தண்ணியில குதிச்சு குதிச்சு வௌயாடியிருக்கலாம்ல?”

அப்பா சிரித்துக்கொண்டே, “சரிதான்.. அப்பறம் சளி புடிச்சு, தும்மிகிட்டே சுரத்தோட நாலு நாள் வீட்லயே டேரா போட்றலாம்னா?” என்கிறார்.

இதைக் கேட்டுவிட்டு அருள் களுக்கெனெ சிரித்துக்கொண்டே, “தெரிஞ்சுப் போச்சாஞ்?” என இழுக்கிறார். சன்னலின் பின்னால் இருந்து அம்மாவும் சிரிக்கிறார்.

அப்பா, “மழை கடுமையா பெய்யும் போது, சாலையில் சரிவர நடக்க முடியாது. பல இடங்களில் மின்சாரம் தடைபடும். மின்சாரக் கம்பிகள் சாலையில் கிடக்கக் கூடும். சாலை எங்கும் தேங்கிய அழுக்குகள், கிருமிகள் நீரோடு கலந்து ஊரெங்கும் போகும். இதெல்லாம் உடலுக்கு நல்லது இல்லை. அதனால நம் பாதுகாப்புக்காக விடுமுறை விடறாங்க.” என, அருள் வினவிய வினாவிற்கு விடை சொல்கிறார்.

வினவுதல் அருளுக்கு கை வந்த கலை. அடுத்த வினாவைத் தொடுக்கிறார். “இந்த மழை எங்கே இருந்து வருதுப்பா? எப்டி வருதுப்பா?”

அப்பா, “அதான் உங்க அறிவியல் புத்தகத்தில் இருக்கே. அன்னைக்கி ஒரு நாள் அம்மாவும் நீங்களும் மழையைப் பற்றி விளக்கிப் படிச்சிட்டு இருந்தீங்களே!”

அருள், “ஆமாம்ப்பா, தெரியும். ஆனா மழை எப்படி வருதுன்னு உங்களுக்கு தெரியுமாங்கறதுக்காக கேட்டேன்.”

அப்பா, “ஓ! மழைதான. எனக்கு ஓரளவு தெரியும். நீங்கதான் சொல்லுங்களேன் கேப்போமே, எப்படி வருது? எங்கேந்து வருதுன்னு?” தேநீரை ருசித்துக் கொண்டே தன் தனயனின் விளக்கத்தை ரசிக்கத் தயார் ஆகிறார் தந்தை.

அருள், “இப்ப நீங்க என்னோட கற்பனை குதிரையில் ரெயின் கோட் போட்டுகிட்டு ஏறுங்க கொஞ்ச நேரம்.” என்கிறார்.

அப்பாவும் அருளின் அருகில் நெருங்கி வந்து அமர்ந்து, “வந்தேன். ஏறினேன்” என்கிறார்.

அருள், “இதோ தெருவெல்லாம் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுகிறதே, அந்த மழை நீரையெல்லாம் உம்மால் பார்க்க முடிகிறதா?”.

அப்பா, “பார்க்க முடிகிறது அரசே!”.

அருள், “ம்.. ஆகட்டும்! நிலத்தில் ஓடும் இந்த நீரெல்லாம் கீழே விழுந்த நீர்த் துளிகளின் திரட்சி”.

அப்பா, “சரி பிரபுவே”.

அருள், “ஒவ்வொரு துளியிலும் நம் குதிரை ஏற இயலாது என்பதால், ஒரு கோடித் துளியில் ஒரு சிலத் துளியைப் பற்றி பற்றி, ஏணிப் பிடித்தாற்போல் மேலே ஏறி ஏறி ஏறி ஏறி ஏறி… புவி ஈர்ப்பு விசையின் எதிர் திசையில் சென்றால்”

அப்பா, “சென்றா………ல்” என இழுக்கிறார்.

அருள், “சென்றா…ல் முகிலைக் கண்டு மகிழலாம். கார் மேகக் கூட்டத்தைத் தொடலாம். கார் மேகம்ங்கறது வேற ஒன்னும் இல்ல, அதுவும் தண்ணீர்தான். தண்ணீரின் மற்றொரு வடிவம்; நீராவி வடிவம்.”

அருள் சிறிது நிறுத்தி, “கார் மேகம் – இது அந்தரத்தில் மிதக்கும் இயற்கை மந்திரம்” எனத் தாளத்தோடு சொல்ல.

அப்பா, “பேஷ்.. பேஷ் மகா பிரபு.. கவித! கவித!” என சிலாகிக்கிறார்.

அருள், “இந்த கார்மேகம் இதற்கு முன்னர் வெண் மேகமாய் இருந்தது. குளிர் காற்று பட்டு பட்டு சட்டென கரிய கார் மேகம் ஆயிற்று. இந்த வெண்மேகம் நம்மூர் மேல் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? வாருங்கள் நம் குதிரையில் தேடிப் போவோம். அதோ அங்கே பாருங்கள். பார் எங்கும் விரிந்த ஆழமான ஆழியின், ஒரு சிறு பகுதியான கடல் நம் கண்ணுக்கு தட்டுப் படுகிறது.”

அப்பா, “ஆமா… ஆமாம்… படுகிறது பேரரசே!”.

அருள், “அங்கே அந்த விரி கடலின் மேல் இருந்துதான் வெண்மேகக் கூட்டமானது கரை தாண்டி ஊர் நாடி வந்துள்ளது.”

அப்பா, “ஓ! அப்படியா வேந்தே!”.

அருள் மேலும் எள்ளலுடன், “ஆமாம். அப்ர சண்டியாரே” எனத் தொடர்கிறார். “கடல் மேல் வெண்மேகம் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? பார்ப்போம் வாரும். வெண்மேகம் நோக்கி, கடலின் மேல் பரப்பில் இருந்து நீராவிகள் கிளம்பி மேலே வான் நோக்கி வருகின்றன. இந்த நீராவிகள் ஒன்றாகி பஞ்சு போன்ற வெண் மேகம் ஆகின்றன. இப்போது புவி ஈர்ப்பு விசையின் திசையிலேயே நாமும் நம் குதிரையைச் செலுத்தினால், வெண்மேகத்தில் இருந்து கடலில் வந்து சேர்ந்தால்….”

அப்பா, “சேர்ந்தா….ல்?” என இழுக்கிறார்.

அருள், “சேர்ந்தா…..ல் கடலுக்குள் நரம்பு போல் பல திக்கில் இருந்தும் நிலத்தை அறுத்துக் கொண்டு வழி ஏற்படுத்திக் கொண்டே பல ஆறுகள் வருகின்றன.”

அப்பா, “ஓ!”.

அருள், “கற்பனை குதிரையை, ஏதாவது ஒரு ஆற்றின் வழியாக விரைவுப் படுத்தலாம்.” எனச் சொல்லி, இரு கையையும் இறுக்கி மூடி முறுக்கிக் கொண்டு, “வ்…ரும்… வ்…ரும்” என வேகப்படுத்த தயாராகிறார்.

அப்பா, “தயவு செய்து இதற்கு மேல் ‘படுத்தாமல்’  இன்னும் கொஞ்சம் வேகமாகவே புரவியை விரைவு படுத்தலாம்.” என்கிறார்.

அப்பா செய்யும் எள்ளலைப் புரிந்து கொண்டு, திண்ணையின் பின்னால் அமர்ந்திருந்த அம்மா, சன்னல் வழியே தன் கையை நீட்டி அப்பாவின்  தலையில் நங்கென ஒரு குட்டு வைக்கிறார்.

அப்பாவோ குட்டுப்பட்ட இடத்தில் தலையை தடவிக்கொண்டே, “வ்…ரு…ம். வ்…ரு…ம். வானிலை அறிக்கை சரியில்லை போலும். வேந்தே நீங்கள் எந்த வேகத்தில் வேண்டுமானாலும் போங்கள் வேந்தே!” என்கிறார்.

அருள், “அப்படி வாரும் வழிக்கு. ஆற்று வழியாக ஆற்று ஓட்டத்தின் எதிர் திசையில் சென்றால், எங்கும் பச்சைப் புல்வெளி, பரந்த வயல்வெளி; அதைத் தாண்டிச் சென்றால் எங்கும் கடும் காடுகள்; அதைத் தாண்டிச் சென்றால், மலையின் மேல் இருந்து பேரிரைச்சலில் விழும் நீர் வீழ்ச்சிகள்; அதைத் தாண்டிச் சென்றால் பல பல சிறு சிறு நீர்க் கிளைகள் மலை எங்கும் விரவி உள்ளது.”

அப்பா, “நீர்க்கிளைகளா? இந்த நீர்க் கிளைகள் எப்படி வந்தது?”

அருள், “மழை பெய்ததால்.”

அப்பா, “மழையாலா?”

அருள், “ஆமாம். மழையால். மலையில்.”

“மலைப்பாய் இருக்கிறதா அப்பா? இந்த மழை எங்கேருந்து வந்துச்சு தெரியுமாப்பா?”

அப்பா, “என்னது? மழையா? மறுபடியும் மொதல்லேந்தா…? ரொம்ப நேரமா கற்பனை குதிரையில் பயணம் செஞ்சாச்சு. இதுக்கு மேல ட்ரேவல் பன்னா டயர்ட் ஆகிடும் பாடி. அததான் சொல்றேன் இந்த டாடி” என ரைமிங்கிறார்.

சன்னல் வழியாக அப்பா தலையில் மீண்டும் ஒரு குட்டு. அதே கைகள். அன்னையின் கைகள்.

அருள் வாய் விட்டுச் சிரிக்கிறார்.

அம்மா வெண்பா சன்னலின் பின்னால் இருந்து எழுந்து திண்ணைக்கு வருகிறார். வந்து அருளை வாஞ்சையுடன் அணைத்து, “அறிவுக் கொழந்த. குட்! குட்” எனக் கொஞ்சுகிறார். மேலும், “சரி சரி. எல்லாம் சாப்பிட உள்ள வாங்க” எனச் சொல்ல திண்ணை காலி ஆகிறது. இரவு உணவு உண்டு முடித்தபின், அம்மா, அப்பா, அருள் மூவரும் தொலைக் காட்சியில் ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ செய்திகள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

செய்தியில், “தமிழ் நாடெங்கும் மழை வேண்டி அக்னி ஹோம யாகம் நடத்தவும், பூஜைகள் நடத்தவும், அபிஷேகம் நடத்தவும் தமிழ்நாடு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது” எனத் தொகுப்பாளர் சொல்ல.

அம்மா வெண்பா வெறுப்புடன், “ச்சை. என்ன ஜென்மங்களோ. யாகமாம். பூஜையாம். அபிஷேகமாம் மழைக்கு. கொஞ்சம் கூட கேவலமாவோ வெக்கமாவோ இருக்காதா இவங்களுக்கு?” என தன் கோபத்தை உமிழ்கிறார்.

அருள் அப்பாவைப் பார்த்து, “ஏம்ப்பா, அக்னி யாகம், பூஜை, அபிஷேகம் இதெல்லாம் செஞ்சா மழை பெய்யுமாப்பா?”

அப்பா, “ம்ஹூம். பெய்யாதுப்பா.”

அருள், “அப்ப அதெல்லாம் பொய்யாப்பா?” என அப்பாவைக் கேட்க.

அம்மா வெண்பா இடைமறித்து, “ம்…ஆமாம்ப்பா.”

அருள் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “அக்னி யாகம் செஞ்சாலும் மழை பெய்யாது. பூஜை செஞ்சாலும் மழை பெய்யாது. அபிஷேகம் செஞ்சாலும் மழை பெய்யாது. இதெல்லாம் பொய்ன்னு யாகம் வளர்க்கிறவங்களுக்கு, பூஜை செய்யறவங் களுக்கும் தெரியுமாப்பா?”.

அப்பா, “ஓ! தெரியுமே.”

அருள், “அப்பறம் ஏம்ப்பா தெரிஞ்சுகிட்டே ஏமாத்தறாங்க?”

அப்பா, “ஒன்னு இல்ல, பத்து இல்ல, நூறு இல்ல, பல லட்சம் பேர் தங்களோட காசு, பணம், பொருள், நேரம், உழைப்பை விரயமாக்க ஷ்ணீஸீtமீபீ-ஆ ஏமாறத் தயாரா இருக்காங்க. அதான்.”

அம்மா வெண்பா, “ஏமாற ஆள் தயாரா இருக்கறப்ப, ஏமாத்தறதுக்கா பஞ்சம் இந்த நாட்ல?”

அருள் இதைக் கேட்கிறார்.

சிறிது நேரம் அமைதிக்கு பின், அருள் கேட்கிறார், “ஏமாறாம இருந்தா, யாராலயும் ஏமாத்த முடியாதுதானே?”

அதானே!

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: