தி.மு.க. கூட்டணிக்கு தேர்தல் முடிவுகள் தரும் செய்தி என்ன? – தோழர் என்னாரசு பிராட்லா

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நமக்கு ஒரு வகையில் மகிழ்ச்சி அளித்தாலும், மற்றொரு வகையில் ———————- ஏற்படுத்தியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. பொதுவாக தமிழகத்தில் தந்தை பெரியார் போட்டு வைத்த விதைகளின் பலனை இன்றைய தேர்தலிலும் நாம் அனுபவித்திருக்கிறோம்.

நான் சிவகங்கைத் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் எண்ணப்படும் இடத்திற்கு செய்தியாளர் என்ற முறையில் சென்றிருந்தேன். அங்கு எங்களுக்கென தனி அறை ஒதுக்கப்பட்டு பல வசதிகளோடு செய்தி அனுப்பிட மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்திருந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்யில் நேரலையில் நாடு முழுவதும் நடந்த வாக்கு எண்ணிக்கை விவரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். 

அப்போது வடநாட்டில் பா.ஜ.க.வின் முன்னிலை விகிதம் கூடிக் கொண்டே போனாலும் தென்னகத்தில் குறிப்பாக தமிழகத்தில் தி.மு.க.கூட்டணி அனைத்து இடங்களிலும் முன்னிலை என்ற செய்தி வந்து கொண்டிருந்ததைப் பார்த்த சிலர், “என்ன சார் இது? இவ்வளவு பெரிய அலை அடிக்கிறப்ப கூட, தமிழ்நாட்டில் அவங்க பருப்பு வேகலையே! அடேயப்பா! உள்ளபடியே பெரிய விஷயம் தான் சார்” என்றார் ஒருவர். உடனே அவர் அருகே இருந்த மற்றொருவர், “சார் பெரியார் போட்ட விதை அவ்வளவு எளிதில் பட்டுப் போகாது தெரிஞ்சுக்குங்க.. என்னதான் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் காவி கட்சிக்கு இங்க வழியே இல்லை என்பது தான் உண்மை சார்” என்றார்.நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

பிறகு இரவு ஏழு மணி அளவில் அந்த இருவரும் யார் என்று விசாரித்ததில் அவர்கள் இருவரும் மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறை அதிகாரிகள் என்று தெரியவந்தது. இதை நான் குறிப்பிடக் காரணம் மக்களின் நாடி உணர்வுகள் மிக சரியாகவே இருக்கிறது என்பதும் அதை அரசு இயந்திரம் உணர்ந்திருக்கிறது என்பதும் தான்.

அங்கேயே  இன்னொருவர் என்னிடம் சொன்னார். “நீங்க வேணா பாருங்க அடுத்து தமிழ்நாட்டை இரண்டா உடைச்சு, அதுல ஒரு ஸ்டேட்ல பா.ஜ.க.ஆளுவதற்கு முயற்சி செய்வாரு மோடி. நடக்குதா இல்லையானு பாருங்க?”. உடனே நான், “ரொம்ப வசதியா போச்சு! அப்ப ரெண்டு மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சி அமைக்கும். ஒரு வார்டு உறுப்பினரா கூட பா.ஜ.க.வர முடியாதுங்குறது எல்லாருக்கும் தெரிஞ்சது தான். மேலும் மேலும் அது உறுதி செய்யப்படும்” என்று சொன்னேன். அவர் ”சார் நான் இந்த பதில எதிர்பார்க்கல! இப்படி உறுதியா இருக்கீங்களே! என்று சொல்லி ஆச்சர்யப்பட்டார். 

அதெல்லாம் இருக்கட்டும். இப்பொழுது முக்கியமா இரண்டு பொய்யான பரப்புரைகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். 

ஒன்று கடந்த தேர்தல் பரப்புரையின் போது, “கடவுள் கிருஷ்ணனை இழிவு படுத்திய தி.க.தலைவர் வீரமணி ஆதரிக்கும் தி.மு.க.வுக்கு ஓட்டு போடாதீங்கனு” பார்ப்பனர்களும், குறிப்பாக தமிழின விரோத நாளிதழான தினமலரும் கத்து கத்து என்று கத்தினார்கள்!கதறினார்கள்! 
“ஆமா ஆமா! நீங்க சொல்றது சரிதான். தி.க.ஆதரிக்கும் தி.மு.க.வுக்குதான் நாங்க வாக்களிப்போ!” என்று மக்களும் பொட்டிலடித்தது போல் உணர்த்திவிட்டார்கள்!  இதில் என்ன ஒரு வருத்தமான செய்தி என்றால், தி.மு.க.வில் கூட ஒரு சிலர் இதை வழிமொழிவது போல ரொம்பவே வருத்தப்பட்டு பேசியதும், எழுதியதும் நமக்கு தெரியும். அவர்களுக்கும் இது ஒரு பாடம். 

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் சொன்னார்கள். இவர்களது கணக்கு பொய்க்கப் போகிறது. இவர்களுக்கு கடந்த கால வரலாறு தெரிந்திருந்தால், இவ்வாறு பேச மாட்டார்கள். ‘இராமனை செருப்பாலடித்த தி.க.ஆதரிக்கும் தி.மு.க.விற்கா உங்கள் ஓட்டு’ என்று 1971 தேர்தலின் போது பார்ப்பன ஏடான தினமணி எழுதியபோது, ’ஆமாம் தி.மு.க.வுக்குதான் எங்கள் ஓட்டு’ என்று சொல்லி184 இடங்களை தி.மு.க.விற்கு மக்கள் வாரி வழங்கினார்கள்.

அந்த வரலாறையெல்லாம் இவர்கள் படிக்க வேண்டும். குறைந்த பட்சம் படித்தவர்கள் சொல்வதையாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்”

அடுத்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் திராவிட இயக்கப் போர்வாள் என அழைக்கப்படும் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் அருமை அண்ணன் வைகோ அவர்களை பற்றி சிலர் விமர்சித்துப் பேசினர். அதாவது ஆமை புகுந்த வீடுதான் இனிமே தி.மு.க.கதை. எல்லா கட்சியின் கூட்டணியில் இருந்து அவர்களையெல்லாம் ஒரு வழி பண்ணிட்டு இப்ப இங்க வந்துட்டாரா? போச்சு போ! என்று சொன்னார்களே! அவர்களும் ஒருமுறை தங்களை மறு ஆய்வு செய்து கொள்ள வேண்டும். ஆம் இந்த முறை அண்ணன் வைகோ அவர்கள் பரப்புரையில் எவ்வளவு சரியாக இந்துத்துவ எதிர்ப்பு பரப்புரையை செய்தார் தெரியுமா?

அதிலும் பாசிச பா.ஜ.க.வின் கொடிய சித்தாந்தங்களை தோலுரித்துக் காட்டினார். இதிலிருந்து இன்னொரு செய்தியையும் இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது கொள்கையைச் சொல்லி வாக்கு கேட்பதும், அதன் மூலம் வெற்றி கிட்டியதையும் நெஞ்சில் பதிய வைத்து கொண்டு இனிமேலாவது பணியாற்ற வேண்டும். 

இவ்வளவு பெரிய வெற்றி  என்பது சாதாரணமாகவோ, கோயில் கோயிலாக ஏறி இறங்குவதாலோ, அல்லது யாகம் செய்வதாலோ மந்திரத்தாலோ நடந்து விடவில்லை. ஒற்றை மனிதனாக தனது முழு உழைப்பையும் செலுத்தி, பட்டி தொட்டி எல்லாம் சுற்றிச் சுழன்று சூறாவளி போல பரப்புரையில் ஈடுபட்ட தி.மு.கழக தலைவர் மரியாதைக்குரிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்த உழைப்பின் பயனாய் இன்றைக்கு கூட்டணியாக 38 இடங்களை (பாண்டிச்சேரி உள்பட) வென்று, தனிப்பட்ட முறையில் 23 இடங்களுடன் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது தி.மு.க.

முத்தமிழறிஞர் கலைஞர் மறைவிற்கு பிறகு சந்தித்த முதல் தேர்தல். அதுவும் பொதுத் தேர்தல். ”மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான்கொள் எனும் சொல்” என்ற குறளுக்கு ஒப்ப தந்தையின் இடத்தை நிரப்பிவிட்டார் தனயன். அவரும் தனது பரப்புரையில் முழுக்க முழுக்க பிரதமர் மோடி மீதான விமர்சனத்தைத் தான் அதிகம் பேசினார். திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று சொல்லித்தான் கடுமையாக பேசினார். அதன் பலனை இன்று அவர் ரசிக்கிறார்; ருசிக்கிறார். இந்தியாவே திகைப்புடன் திரும்பி பார்க்கிறது தளபதி அவர்களின் உழைப்பை! இன்னும் திராவிட இயக்கத்தின் தேவை பல்லாண்டுகளுக்கு இருக்கிறது என்று மக்கள் கருதுவதைத் தான் இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு காட்டுகின்றன.

அதற்கேற்ப தி.மு.கழகமும் கொள்கைத் தெளிவை இளைஞர்களுக்குத் தர வேண்டும்; அதாவது இயக்கத்தை நோக்கி வரக்கூடிய இளம் தலைமுறையினருக்கு பயிற்சி பாசறைகள் மூலம் வரலாற்றைக் கற்றுத் தர வேண்டும்; ஆங்காங்கே கருத்தரங்குகள் மூலம் பொது மக்களை ஈர்த்திட ஏற்பாடு செய்யவேண்டும்; தொண்டரணி அமைப்பைப் பெயரளவில் இல்லாமல் உண்மையில் ஒரு இராணுவம் போல அமைத்திட வழி வகை செய்யவேண்டும் என்பதெல்லாம் உண்மையான திராவிட இயக்க உணர்வாளர்களான கோடிக் கணக்கான தொண்டர்களின் ஆவலும் வேண்டுகோளும்.

கொள்கை அளவில் சித்தாந்தங்களை சிதைத்து, தமிழகத்தை சீரழிக்க காவிக் கூட்டம் திட்டம் போட்டு பணியாற்றும் காலகட்டத்தில் இந்த எதிர்பார்ப்புகள் இயல்பானவை தானே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s