கொக்கு பற பற… பேராசிரியர்-கு.முருகேசன் “தமிழர் விளையாட்டுக்கள் “

கோடை காலம் வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தாலும் குடும்பத்தை நடத்த வேண்டுமே, பிள்ளைகளைப் படிக்கவைக்கப் பணம்கட்ட வேண்டுமே என்பதற்காக விவசாயிகளும், கட்டடம் கட்டும் கூலித் தொழிலாளர்களும், அலுவலகத்தில் பணிபுரியும் கடைநிலை ஊழியரில் இருந்து மேலதிகாரி வரை அனைவரும் தொடர்ந்து வேலைக்குச் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். இதில் உடல் வருத்தி வேலை செய்யும் விவசாயிகளும் கூலித்தொழிலாளர்களும் நாம்தான் போதுமான படிப்பறிவு இல்லாமல் வெய்யிலில் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கிறோம், நம்ம பிள்ளைகளாவது நன்றாகப் படித்துவிட்டு அலுவலகத்தில் மின்விசிறிக்கு அல்லது குளிர்சாதனப் பெட்டிக்கு அடியிலிருந்து கணக்கு வழக்குப் பார்த்துச் சந்தோசமாக வாழட்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் அவர்கள் கடுமையாக வெயிலிலும் மழையிலும் ஓய்வின்றி உழைத்த அவர்களின் ஒட்டுமொத்தச் சம்பாத்தியத்தையும் செலுத்தி எப்படியாவது தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிப்பள்ளியில் சேர்த்துவிடத் துடிக்கிறார்கள். இதில் சிலர் சம்பாத்தியத்தையும் மீறிக் கடன் வாங்கியும் சேர்க்கிறார்கள். அவ்வாறு சேர்ந்த பிள்ளைகள் “ரெயின் ரெயின் கோ அவே, கம் அகைன் அனதர் டே” என்று தங்களின் பெற்றோருக்கும் பொதுமக்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கும் மழையை வர வேண்டாம் என்று பாட்டுப் படிக்கிறார்கள். மேலும் அவர்கள் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும், அவர்களின் கவனத்தைச் சிதறடிக்கக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு தெரிந்த வேலையைக் கூட தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்பதில்லை, தெருவில் ஓடியாடி விளையாடவும் அனுமதிப்பதில்லை.

மனிதன் ஒரு சமூக விலங்கு என்கிறோம். ஒரு குழந்தையைச் சமூகத்தின் உறுப்பினராக மாற்றுவது பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள்தான். பள்ளிகளும் கல்லூரிகளும் மட்டுமே ஒருவருக்குத் தேவையான அனைத்தையும் கற்றுக்கொடுத்துவிட முடியாது என்ற காரணத்தினால், விளையாட்டும் அதில் பங்கெடுத்துக் கொள்கிறது. அதிலும் குறிப்பாகத் தமிழர் விளையாட்டுகள் வாழ்வியலோடு பிணைந்து, வாழ்க்கையையும் வாழ்க்கையில் நல்லது, கெட்டதையும் சொல்லித் தருகின்றன. விளையாட்டு என்பது உடலுக்கு மட்டும் பலம் சேர்க்கும் செயல் அல்ல, அது சக மனிதர்களுடன் நம் குழந்தைகள் தயக்கம் இல்லாமல் பழகவும், வெற்றி-தோல்விகளைச் சகஜமாக எடுத்துக்கொள்ளவும், வாழ்வியல் பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் உதவும் ஒரு வழி. பிள்ளைகளுக்கு அந்த வழியைத் தடை செய்யலாமா?

ஒரே ஒரு குழந்தை இருக்கும் வீடுகளில் அதீத அக்கறை என்ற பெயரில் குழந்தைகளின் சுதந்திரம் மென்மேலும் நசுக்கப்படுகிறது. பல பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைப் பக்கத்துக்கு வீட்டுக் குழந்தைகளுடன்கூட விளையாட அனுமதிப்பதில்லை. அப்படியே அனுமதித்தாலும் விளையாடும்போது, ஏதேனும் சிறு காயம் ஏற்பட்டால், அதன் பிறகு எப்போதும் விளையாட அனுமதிப்பதில்லை. சின்னச் சின்னக் காயங்கள், வீக்கங்கள், தோல்விகள், அழுகைகள் போன்றவை இல்லாத குழந்தைப் பருவம் குழந்தைப் பருவமே அல்ல. கீழே விழாமல், குழந்தைகள் எப்படி எழுவதற்குக் கற்றுக்கொள்வார்கள்? ஆகவே கல்வியைப் போலவே உடல் ஆரோக்கியமும் குழந்தைகளுக்குக் கிடைக்கும்படி செய்வதே பெற்றோரின் கடமையாகும். என்னதான் சத்துள்ள உணவுகளைத் தேடிப் பிடித்துக் குழந்தைகளுக்கு அக்கறையுடன் வாங்கிக்கொடுத்தாலும், அதன் முழுப்பயனும் உடலுக்குக் கிடைக்க வேண்டுமானால் போதுமான அளவுக்கு அவர்கள் விளையாட வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் மறந்துவிடக் கூடாது. சில விளையாட்டுகள் குழந்தைகளுக்கு உடல், மன வலிமையைத் தருவதோடு மட்டுமன்றி, அது குழந்தைகளுக்கு நல்ல படிப்பினையும் சில விளையாட்டுகள் சொல்லித் தருகின்றன. அப்படிப்பட்ட விளையாட்டுகளில் ஒன்றான கொக்கு பற… பற… கோழி பற… பற… என்ற விளையாட்டை எப்படி விளை யாடுவது என்று பார்ப்போம்.

கொக்கு பற… பற… கோழி பற… பற… என விளையாட்டின் பெயரைக் கேட்டவுடன், என்னடா இதை எங்கேயோ கேள்விப்பட்டதாக இருக்கே என்று நீங்கள் நினைக்கலாம். ஆம். இது ஒரு சினிமா பாட்டின் பல்லவி மட்டுமல்ல, அதுவும் ஒரு விளையாட்டுத்தான். வயதானவர்கள் தங்கள் சின்ன வயதில் விளையாடி மகிழ்ந்த ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டை உள்ளே வெளியே என எத்தனை பேர் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடலாம். இப்பொழுது வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், இந்த விளையாட்டை சிறிய குழந்தைகள்,பெரிய குழந்தைகள் என்று பேதமின்றி, எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து விட்டுக்குள்ளேயே விளையாடலாம். விளையாட்டில் கலந்துகொள்ளக்கூடிய எல்லாக் குழந்தைகளும் ஒரே இடத்தில் உட்கார்ந்தே விளையாடக்கூடிய விளையாட்டு இது. விளையாட விரும்பும் பிள்ளைகள் வயது வித்தியாசமின்றி எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து உட்கார்ந்துகொள்ள வேண்டும். அவர்களில் இருந்து ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த ஒருவரை ‘உத்தி பிரித்தல்’ மூலமாகவோ ‘சாட் பூ திரி’ மூலமாகவோ அல்லது ‘பூவா தலையா’ மூலமாகவோ அல்லது வேறு ஏதோவொரு முறையைக் கொண்டோ தேர்வு செய்துகொள்ளலாம். போட்டிக்கான தலைவரைத் தேர்ந்தெடுத்த பின் அவர்தான் விளையாட்டை வழிநடத்துவார்.

இந்த விளையாட்டில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் முதலில் வட்டமாக உட்கார்ந்துகொண்டு அவர்களின் கைகள் இரண்டையும் தரையில் படுக்க வைத்துக்கொள்ள வேண்டும். இந்த விளையாட்டின் தொடக்கத்தில் தேர்வு செய்யப்பட்ட தலைவர் வட்டத்திற்கு நடுவில் இருந்து அனைவரையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே வழிநடத்த வேண்டும். பிறகு, வட்டத்திற்கு நடுவில் இருக்கும் தலைவர், திடீரென உட்கார்ந்திருப்பவர்களில் யாரேனும் ஒருவர் முன்பு கையை நீட்டி, “கோழி பற… பற…” என்று சொல்ல வேண்டும். தலைவர் கையை நீட்டிய இடத்தில் இருப்பவரும், “கோழி பற… பற…” என்று உடனடியாகத் திரும்பச் சொல்லிக் கொண்டே அவரின் இரண்டு கைகளையும் பறவைகள் சிறகை விரித்துப் பறப்பது போல அசைக்க வேண்டும். பிறகு, உட்கார்ந்திருக்கும் எல்லோரும் ஒருமுறை “கோழி பற… பற…” என்று சொல்லிக் கொண்டே தங்களின் கைகளைப் பறவைகள் சிறகை விரித்துப் பறப்பது போல அசைக்க வேண்டும். பிறகு தலைவர் வெவ்வேறு பொருள்களைச் சொல்லிப் பற பற என்று சொல்லுவார், அவை பறப்பவையாக இருந்தால் கையை அசைத்துக்கொண்டே பற…பற… என்று சொல்ல வேண்டும்.

உதாரணமாக,

தலைவர் : வாத்து பற… பற… என்றால்.

அனைவரும் : வாத்து பற… பற… என்று சொல்லிக் கொண்டே கையை அசைக்க வேண்டும்.

தலைவர் : மைனா பற… பற…

அனைவரும் : மைனா பற… பற… என்று சொல்லிக் கொண்டே கையை அசைக்க வேண்டும்.

இப்படிப் பறவைகளின் பெயர்களைச் சொல்லி, “பற… பற….” என்று சொல்ல, அனைவரும் திரும்பச் சொல்லிக்கொண்டே கையைப் பறப்பது போல அசைக்க வேண்டும். இப்படி வேகமாக விளையாடிக் கொண்டிருக்கும்பொழுது, திடீரெனத் தலைவர் யாரிடமாவது, பறக்காத ஒன்றைச் சொல்லி பற… பற… என்று சொன்னால் கேட்டவர் பற… பற… என்று சொல்லக்கூடாது. ஏனெனில் அது பறக்காது. உதாரணமாக தலைவர்; “நாய் பற… பற…” அல்லது “நரி பற… பற…”என்று சொல்ல, கேட்டவரும் “நாய் பற…. பற…” அல்லது நரி பற… பற… என்று சொல்லி விட்டால்,சொன்னவர் ‘அவுட்’. நாயும் நரியும் பறக்குமா, என்ன? இப்படி அவுட் ஆனவர் ஆட்டத்தி லிருந்து வெளியேற்றப்படுவார். கடைசிவரை யார் அவுட்டாகாமல் இருக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவர் ஆவர்.

இப்பொழுது, வெற்றி பெற்றவர் தலைவராக நின்று, மற்றவர்களிடம் இந்த விளையாட்டை வழிநடத்துவார்.

இதில், பறவையின் பெயரைச் சொல்லும்போது “பற…பற…” என்றும், விலங்குகளின் பெயரைச் சொல்லும்போது “வர… வர…” என்றும் சொல்லி விளையாடலாம். இந்த விளையாட்டில் பறக்காத ஒரு பொருளின் பெயரைச் சொல்லி, “பற… பற…” என்றாலோ அல்லது நடக்காத ஒரு பொருளின் பெயரைச் சொல்லி “வர… வர…” என்றாலோ, உதாரணமாக “மரம் வர…வர…” என்று சொன்னால் உடனே சுதாரித்துக்கொண்டு, அதைச் சொல்லாமலிருக்க வேண்டும். மீறிச் சொல்லிவிட்டால் சொன்னவர் ‘அவுட்’தான்.

உட்கார்ந்த இடத்திலேயே விளையாடும் இந்த விளையாட்டை விளையாடினால் நேரம்போவதே தெரியாது. மேலும் எது பறப்பன எது நடப்பன என்று விளையாட்டிலேயே தெரிந்துகொள்ளலாம்.  குழந்தைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு, வசதி போன்றவற்றில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு அவர்கள் உடல் மற்றும் மன அளவில் பலவீனம் ஆன பிறகு மருத்துவர்களிடம் சென்று புலம்புவதில் எந்தப் பயனும் இல்லை. எனவே, பெற்றோர்கள் இதுபற்றிய விழிப்புணர்வு கொள்வது அவசியம். இந்த விளையாட்டு, குழந்தைகளுக்கு எது பறக்கும், எது பறக்காது என்பது பற்றிய விரிவான அறிவைக் கொடுக்கிறது. இந்த விளையாட்டு குழந்தைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் ஆர்வமாகக் கவனிக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்கிறது. இந்த விளையாட்டு குழந்தைகளின் உற்றுக் கவனிக்கும் திறனையும் அதற்குத் தகுந்தாற்போல் விரைவாகச் செயல்படும் திறனையும் மேம்படுத்துகிறது. இன்று பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பே விளையாட்டுப் பள்ளிக்கு அனுப்பும் கலாச்சாரம் பெருகிவரும் இன்றைய சூழலில், இதுபோன்ற விளையாட்டுக்களைச் சொல்லிக் கொடுத்தால் குழந்தைகளிடத்தில் நன்கு கவனிக்கும் திறன் வளரும். அது அவர்கள் பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது உற்றுக் கவனிக்கப் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே நமது பிள்ளைகள் நன்றாக விளையாடட்டும். நல்ல திறமைகளை வளர்த்துக்கொள்ளட்டும். பிள்ளைகளை ஆரோக்கியமான திறமைசாலியாக வளர்த்தெடுப்போம். 

(இன்னும் விளையாடலாம்…)

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: