ஆட்சியாளர்களே! அண்ணாவிற்குப் பதில் சொல்வீர்! – தோழர் கி.தளபதிராஜ்

பருவமழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கோயில்களில் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை ஆணையர், கோயில் செயல்  அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வரும் 2019-2020 ஆம் ஆண்டு விகாரி வருடத்தில்  நல்ல பருவமழை பெய்து நாடு செழிக்க இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முக்கிய கோயில்களில் மழை வேண்டி யாகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளை தத்தம்  பிரிவில் உள்ள கோயில்களில், அந்தந்த கோயில்களின் பழக்க வழக்கத்திற்கு உட்பட்டு நடத்திட அனைத்து செயல் அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். பர்ஜன்ய சாந்தி வருண ஜெபம், வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல், அருள்மிகு நந்திப் பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்தல், ஓதுவார்களை கொண்டு சுந்தர மூர்த்தி  நாயனார் இயற்றிய ஏழாம் திருமுறை ஓதுதல்,திருஞான சம்பந்தர் இயற்றிய 12ஆம் திருமுறையில் தேவார மழை பதிகத்தை கேரா குறிஞ்சி என்ற பண்ணில் பாடி வேண்டுதல். நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை  வாத்தி யங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி, ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபாடு செய்தல். சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கு சீதள கும்பம் எனப்படும் தாரா பாத்திர நீர்  விட்டு செய்தல், சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தல், மகா விஷ்ணுவிற்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தல், மழை வேண்டி பதிகங்கள் ஓதுதல், மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்தல்,  நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருப்புன்கூர் சிவன் கோயிலில் உள்ள மகா நந்திக்கு மகாபிஷேகம் செய்தல், வருண சூக்த வேதமந்திர பாராயணம் செய்தல், வருண காயத்ரி மந்திரம் பாராயணம் செய்தல், – மேற்கண்டவாறு அந்தந்த கோயில்களின் பழக்க வழக்கத்திற்கு உட்பட்டு சிறப்பாக நடத்திட, இந்த நிகழ்வு தொடர்பான கற்றறிந்தவர்களைத் தேர்வு செய்து மழை வேண்டி யாகம் செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கோயில்  அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், தங்கள் மண்டலத்தில் எந்தெந்த கோயில்களில் எந்த தேதியில் மழை வேண்டி யாகம் செய்யப்பட உள்ளது என்பதற்கான விவரத்தை பட்டியலிட்டு தொகுத்து உடன் மே 2 ஆம் தேதிக்குள் அற நிலையத் துறை தலைமை  அலுவலகத்தில் தெரிவிக்கவும், அவ்வாறு யாகம் நடத்தப்பட்ட விவரத்தையும் யாகம் முடிந்தவுடன் தனியே தெரிவிக்கவும் அனைத்து மண்டல இணை ஆணையர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.’’ இவ்வாறு இந்து அறநிலையத் துறை ஆணையர் ஆணை பிறப்பித்துள்ளார்.

இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள், இந்து அறநிலையத் துறை தணிக்கைத் துறையே தவிர, புரோகிதத் துறை அல்ல! என்றும் மழை பெய்வது எப்படி? மழை பொய்ப்பது எதனால்? என்பதெல்லாம் மூன்றாம் வகுப்பு மாணவியைக் கேட்டாலே படபடவென சொல்லுவார். ஆனால் அய்.ஏ.எஸ். அதிகாரிகளுக்குத் தெரிய வில்லை என்றால் அவர்கள் படித்த படிப்பைவிட அவர்களின் மூளையில் குடி கொண்டுள்ள மூடத்தனத் தின் குப்பைதான் இதற்குக் காரணமாக இருக்க முடியும். யாகத்தாலும், பூஜைகளாலும் காரியம் ஆகும் என்றால், ஆட்சியே தேவையில்லையே! அலுவலகங்களையெல்லாம் கோவில்களாக்கி, அலுவலர்களைப் பூசாரிகளாக்கி விடலாமே! யாகம், பூஜை புனஷ்காரங்களை நடத்துவது அறநிலையத் துறையின் வேலையல்ல!

அறநிலையத்துறை என்பது வரவு, செலவுகளைப் பார்க்க வேண்டிய துறையே; நிர்வாகம் சம்பந்தப் பட்டது; யாகம், பூஜை புனஷ்காரங்களை நடத்துவது அதன் வேலையல்ல!இந்து அறநிலையத் துறை ஆணையரின் ஆணை மதச் சார்பற்ற தன்மை கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் – ஒவ்வொரு குடிமகனின் கடமை என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு 51-கி(லீ) எதிரானது இது. சட்டத்தை மீறும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். மதச் சார்பின்மையை சின்னா பின்னமாக்கியுள்ளனர். என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். தலைவரின் அந்தக் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியா தவர்கள் வீரமணிக்குப் பிடிக்காவிட்டால் அமைதியாக இருக்கட்டும் என்றும், வீரமணி போன்றோர் இருப்பதால் தான் தமிழ்நாட்டில் மழையே பெய்வதில்லை என்றும் பேசி வருகின்றனர்.

அகிலத்தையும் ஆட்டிப்படைக்கும் ஆண்டவன் சக்திக்கு முன்னால், வீரமணி போன்றோர் இருப்பதால் தான் நாட்டில், மழை பெய்ய இல்லை என்று சொல்லும்போது வாயால் சிரிக்க முடியவில்லை. அது ஒரு புறம் இருக்க, அணணா பெயரில் கட்சி வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துவோர் மழை வேண்டி இப்படி யாகம் நடத்துவது குறித்து, அண்ணா என்ன சொல்கிறார் என்பது குறித்து சற்று யோசித்துப் பார்க்கட்டும். “மழை பொழியவில்லை என்றால், கொடும்பாவி கட்டி இழுப்போமா, கோபால பஜனை செய்வோமா? என்றுதான் புத்தி போகிறது. இது வெறும் ஏமாளிப் புத்தி. இதிலேயே எத்தரின் புத்தியும் வேலை செய்ய ஆரம்பித்தால், மழை பெய்வதற்கு வருண ஜெபம் செய்வது என்று ஆரம்பிக்கிறார்கள். இப்படிப்பட்ட விதமாகத்தான் நம்மவர்களின் சிந்தனை சென்று கொண்டிருக்கிறதே யொழிய, மேநாட்டு விஞ்ஞானிகள் போலவோ, மழை இயற்கை தான் என்றாலும் அதையே ஏதேனும் செயற்கை முறையால் நாம் உண்டாக்க முடியாதா? என்றா செல்கிறது? அவர்களின் சிந்தனை அந்தத் துறையிலேயும் சென்று இப்போது மழையை உண்டாக்கும் முறையையும் விஞ்ஞான ரீதியாகக்  கண்டு பிடித்திருக்கிறார்கள். இனி இத் துறையில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் நடத்திய வண்ணம் உள்ளனர்

இங்கு,

வான மழை போலே

மேனி வண்ணம் கொண்டான்

என்று பாடிக்கொண்டே காலந் தள்ளுகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பே வடக்கே ஒரு ஊரில் மழை இல்லாமல் போகவே, அவ்வூர் புத்திசாலிகள், சூரியன் மீது கல்லை விட்டெறிந்தார்கள் மழை வேண்டும் என்று. பயிர் வளரவில்லை எதிர்பார்த்தபடி, என்றால் விதையால் வந்த தவறா? உழவு முறையால் வந்த தவறா? ஏதேனும் பூச்சி புழு அரிக்கிறதா? அல்லது மண்ணின் சத்தே கெட்டுவிட்டதா? என்பன போன்றவைகளில் நம்மவர்களின் எண்ணம் போவதில்லை. பச்சையம்மனுக்குப் பொங்கலிடுவது, அரச மரத்திற்கு மஞ்சள் பூசுவது, என்று இப்படி ஏதாவதொரு அர்த்தமற்ற விஷயத்தின் மீதுதான் எண்ணம் போகிறது.

தமிழ்நாட்டில் பிற்கால மன்னர்கள் பலர், மழை காலா காலத்தில் பொழியாமற் போனால் என்ன செய்வதென்று பயந்து, மழையைப் பொழியச் செய்ய வருண ஜெபம் செய்வதற்காக பார்ப்பனர்களை, ஆஸ்தானத்தின் செலவிலேயே நியமித்தனர். வருண ஜெபம் செய்வதற்காகவே அவர்களுக்கு மானியங்கள் இனாம்கள் தரப்பட்டன. தஞ்சை மாவட்டத்திலேயே, அப்படி வருண ஜெபம் செய்வதற்காக அளிக்கப்பட்ட இனாம்கள், இன்றும் இந்தப் பரம்பரையினரிடம் உள்ளன. இயற்கை முறையிலே, ஏதேனும் கோளாறு காணப் பட்டால், அதாவது மழையே பெய்யாமலிருப்பது அல்லது அளவுக்கு மீறிப் பெய்வது முதலிய ஏதேனும் நேரிட்டால், கடவுளின் கோபமே அதற்கு காரணம் என்றுதான் பற்பல நாடுகளிலேயும் ஆதி நாட்களில் எண்ணம் இருந்தது. பயங்கரமான இடியை பகவானின் கோபச்சிரிப்பு என்றும், விழியைப் பழுதாக்கும் மின்னலை அவருடைய கை வேலின் வீச்சென்றும்தான் அக்கால மன்னர்கள் நம்பினர். எனவே ஏதேனும் பூஜை செய்து கடவுளின் கோபத்தைப் போக்கினால், அவர் மனம் மகிழ்ந்து, இயற்கையை முறைப்படி நடந்து கொள்ளச் செய்வார் என்று நம்பினர். அதற்கேற்றபடியே நடந்து கொண்டனர். ஆனால் அறிவுத் தெளிவு அங்கெல்லாம் ஏற்பட்டு, கற்பனைகள், கட்டுக்கதைகள் ஆகியவற்றை மறந்து காரண விளக்கத்தில் கவலை செலுத்தி ஆராய்ச்சி மனப்போக்கினராயினர். இங்கு மட்டும்தான் இன்றும் அந்தப் பழைய நம்பிக்கை பழுதுபடாது இருக்கிறது. காரணம் அந்தப் பழைய நம்பிக்கையை அப்படியே வைத்துப் பாதுகாப்பதால் லாபமடையும் சூதுமதியினர் இங்கு இருப்பதால்தான். பஞ்ச பூதங்களாம் அப்பு, பிருதுவி, தேயு, வாயு, ஆகாயம் என்பவற்றைப்பற்றி… என்று ஆரம்பித்து பஜனை பாடுவதே போதும் என்று நாம் இருந்து விட்டோம். மற்றவர்களோ அவைகளை ஆராயத் தொடங்கி, பல அரிய காரியங்களைச் சாதித்தனர். இன்றும் சாதித்த வண்ணம் உள்ளனர்.”

-அண்ணா, நூல்: புராண மதங்கள்

“இன்று நமது நிலையும் நினைப்பும் எப்படி இருக்கிறது? என்று பாருங்கள். இந்தச் செய்தியை கேட்கும் உங்களுக்கு அறியாமையையும் மூட நம்பிக்கையையும் போக்கத் திட்டம் இருக்க வேண்டிய இந்திய சர்க்காரிடம் எத்தனைத் திட்டம் இருக்கிறது என்பது தெரியும். மகாபாரதத்திலுள்ள சாந்தி பருவத்தை நேபாள மகாராஜனிடம் சென்று அங்குள்ள சில ஆதார ஏடுகளைப் பார்த்து ஆராய்ச்சி செய்து புதிய சாந்தி பருவத்தை இந்தியாக்காரர் வெளியிடப் போகிறார்களாம். எப்படி இருக்கிறது ஆராய்ச்சி பார்த்தீர்களா?

வெளிநாடுகளில் அமெரிக்காவில் மேகத்தை மழை பெய்விக்க வைப்பதற்கு, மேகங்கள் ஆகாயத்தில் உலவிகொண்டிருக்கும் பொழுது விமானத்தின் மூலம் அவைகளின் மீது பனிக்கட்டிகளை வீசினால் மேகம் குளிர்ச்சியில் மழைத்துளிகளைத் தரும். இந்த நாட்டிலோ மழையை எப்படி பெய்யச் செய்வது என்று ஆராய்ச்சி செய்வது பற்றி அரசாங்கத்தாருக்கு கவலை யில்லை. மகாபாரதத்தில் சாந்தி பருவத்தை ஆராய்ச்சி செய்கிறார்கள். அமெரிக்காவில் பருவ மழை தவறினால் பருவ மழையை தேவைப்பட்டபோது உண்டாக்க ஆராய்ச்சி செய்கிறார்கள். இரண்டு நாடுகளைப் பற்றியும் உங்களுக்கு என்ன நினைப்புத் தோன்றும்? மக்கள் மழை இல்லாமல் பட்டினியால் சாகும்போது மழையைப்பற்றி ஆராய்ச்சி செய்யாமல் சாந்தி பருவத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் சர்க்காரைப் பற்றி பிற நாட்டார் என்ன நினைப்பார்கள்? நம் நிலையைக் கண்டு எள்ளி நகையாட மாட்டார்களா?”

– அண்ணா, நூல்: நிலையும் நினைப்பும்

தோழர்களே! அண்ணா எந்த பர்ஜன்ய ‘சாந்தி வருண ஜெபம்’ பற்றி அன்றைக்கு எழுதினாரோ அதைத்தான் இந்து அறநிலையத்துறை தற்போது செய்யச்சொல்லி கட்டளையிட்டிருக்கிறது. இச்செயலைப்பார்த்து பிறர் எள்ளி நகையாட மாட்டார்களா? என்று கேட்கிறார் அண்ணா!

இங்கு மட்டும் இன்றும் அந்தப் பழைய நம்பிக்கை பழுதுபடாது இருக்கக் காரணம் அந்தப் பழைய நம்பிக்கையை அப்படியே வைத்துப் பாதுகாப்பதால் லாபமடையும் சூதுமதியினர் இங்கு இருப்பதால் தான் என்று அறிவுறுத்துகிறார் அண்ணா. அண்ணா சுட்டிக்காட்டும் சூது மதியினர் யார் என்பது ஆட்சி யாளர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். அல்லது புரிந்தும் புரியாததுபோல் நடிக்கலாம். காலம் அவர்களுக்குப் புரிய வைக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s