மூல மொழி முதன் மொழி “தமிழ்” – தோழர் இரா.முல்லைக்கோ

சமுதாய அமைப்பு

மேன்மைமிகு மானுட சமுதாயம் தோன்றி பல இலட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டதாக வரலாற்று ஆய்வாளர் பெருமக்கள் ஆய்ந்து அறிந்து பதிவு செய்துள்ளனர். இவற்றின் மூத்த குடியாக தமிழ் இனத்தைக் கூறுகின்றனர். தெற்கே இலெமூரியா கண்டம் முதல் வடக்கே சிந்து கங்கை சமவெளி வரை விரிந்து பரந்து வாழ்ந்துள்ளனர்.

சிதைந்த தமிழகம்

கடல் கோள் விளையால் பக்ரூனி உள்ளிட்ட வளமை வாய்ந்த நிலப் பரப்பு கடல் கொண்டு கன்னியாகுமரி வரை சுருங்கிக் காணமுடிகிறது. இதுவே இன்றைய நிலை.

நதிக்கரை

நதிக் கரையோரங்களில் தமிழர்கள் வாழ்க்கை நிலை அமையப் பெற்றதை நம்மால் இன்றளவில் கிடைக்கப் பெரும் சான்றுகள் பகருகின்றன. நதிச் சமவெளிகளே நாகரீகத்தின் தொட்டில் என்பர் அறிஞர் பெருமக்கள். இன்று இந்தியா என்று அனுசரிக்கப்படுகின்ற தீபகற்பம் முழுவதும் தமிழர்கள் சிறந்த வாழ்வியல் முறையை மேற்கொண்டனர். நீரின்றியமையாது என்றார் வள்ளுவர் இதை.

காப்பியங்கள்

மதிநிறைந்த மாந்தப் பெருமக்களைக் கொண்டு முற்றங்கள் அமைத்து தமிழ்மொழிக்கு வளமையும் வடிவமும் கொடுத்தனர். இலக்கண இலக்கியங்கள் பல நூறு மொழி ஞாயிறு ஒருங்கிணைத்து ஒன்று கூடி தோற்றுவித்தனர். நீதிநூல் கலகம் ஐம்பெரும் காப்பியங் களுள் பாயிரங்களும் தமிழுக்கு அருங்கொடையாக கிடைக்கப்பெற்றன. தொன்மையின் பிறப்பிடமாய் இலக்கண இலக்கியங்களின் நீதிநூலாய்த் தொல் காப்பியம் சிறந்து விளங்கி செந்தமிழின் புகழ் உலக அளவில் ஒளிவிட்டு இளமைக்குன்றாமல் செழித்து வருகிறது, உலக மொழிகளில் எவற்றிற்கும் இல்லாதத் தனிச் சிறப்பாகும், 1632 மொழிகள் பெறாத கிரீடம் தமிழுக்குச் சூட்டப்பட்டுள்ளது. மறுக்கவியலாத தகவல்.

நீதி நூல் திருக்குறள்

இரு ஆயிரத்து ஐந்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு உலக நீதியை இருவரிகளில் யாத்தளித்த திருவள்ளுவர் ‘திருக்குறள்’ அறநெறிக்கு நிகர் ஏதும் இதுநாள் வரை பிறமொழியில் காணப்படவில்லை. ‘‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்டத் தமிழ்நாடு” என்று பெருமைப் பாராட்டினான் மீசையை முறுக்கிய முண்டாசுக் கவிஞன் பாரதி. ‘‘வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” என்று வாய்மணக்க வைர வரிகளால் பாராட்டினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். நீதிநூலாம் திருக்குறளுக்கு இதுநாள் வரை ஒரு நூற்று மூன்று மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்த பெருமை திருக்குறளைத் தவிர்த்து வேறு நூல்கள் ஏதுமில்லை. இத்தனை இமயச் சிறப்பும் தண்டமிழ் ‘தமிழ் மொழி” அணிகலனாய் பெற்றுள்ளது.

தமிழ் இலக்கண இலக்கியங்கள்

‘‘புராணங்கள்’’, நீதி இலக்கியங்கள், சாத்திரங்கள், தத்துவ நூல்கள், இலக்கண, இலக்கியங்கள் என வட மொழியில் பல்வகையான நூல்கள் உள்ளன. ஆனால் வடமொழியிலுள்ள இவற்றைக் காட்டிலும் அழகியதும், கவியழகும், ஆழ் பொருள் தத்துவ சிறப்பு கொண்ட தமிழ் நூல்கள் வடமொழி நூல்களுக்கு முன்பே எழுந்த முதல் நூல்கள், தமிழ் மொழியில் முன்பே இருந்தன என்பதை இலக்கிய ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்” என மேலை நாட்டு ஆய்வில் அறிஞர் ஜி.யு.போப் அவர்கள் பல்வேறு நூல்களை இந்தியாவில் பயின்று ஆய்ந்து கூறியுள்ளார். தமிழ்த் தாத்தா எனப் போற்றப்பட்ட உ.வே. சாமிநாதர் ஊர் ஊராய்க் கோவில் கோவிலாய்ச் சுற்றித் திரிந்து செல்லுக்கும் கரையானுக்கும் இரையானது போக ஓலைச் சுவடிகளைப் புதுப்பித்து அச்சேற்றினார். அப்போது ஒரு நிகழ்வினை சொல்லுகிறார் கேளுங்கள்.

கரிவலம் வந்த நல்லூருக்குச் சென்று பாண்டிய மன்னன் வரகுண பாண்டியன் எழுதிய ஓலைச் சுவடிகளை தேடினாராம், வரகுண பாண்டியன் மறைவிற்குப் பிறகு அவரது சொத்தெல்லாம்கோவிலுக்கு வந்தனவாம். அந்த வரிசையில் அவர் வைத்திருந்த ஓலைச் சுவடிகளும் கோவிலுக்கு வந்தனவாம்.

அவ்வேடுகளைப் பார்க்க வேண்டும் எனக் கேட்ட போது கோவிலுக்கு அழைத்துச் சென்றபோது அங்கிருந்த அன்பர் கூறினாராம் ‘‘அந்த ஏடுகளையெல்லாம் ஆகம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி செய்து விட்டார்கள். அதாவது குழிவெட்டி அக்கினி வளர்த்து, நெய்யில் தோய்த்து அந்தப் பழைய சுவடிகள் அவ்வளவையும் ஆகுதி செய்து விட்டார்கள்”. இது குறித்து அறிஞர் உ.வே.சா.எழுதுகிற போது ‘இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? அப்படிச் சொல்லியிருந்தால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் ஆகுதி செய்தல் வேண்டும் என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

எத்தனைக் காப்பியங்கள் ஆகமத்தின் பேரால் அழித்தொழிக்கப்பட்டனவோ அறியோம். மன்னனின் சொத்து கோவிலுக்கு வந்து அதனை தின்று கொழுத்தல் கோவில் மேதாவிப் பெருச்சாளிகளின் ‘‘தமிழ்க் காப்பியங்கள்” அழித்தொழிக்கும் அரும் செயலைப் பாருங்கள் இது சான்றுக்கு ஒன்று.

சிந்துவெளிக்கு முந்தைய நாகரிகம்

கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகத்தின் அகல்வாய்வில் பல்வேறு குடியிருப்புகளும் அவைகளின் இன்றைய நாகரிகத்திற்கு ஒப்பாக அமைப்புகளுடன் விளங்குகின்றன. குறிப்பாக கழி வறைகளும் வெளியே செல்லும் கழிவுப் பாதை அமைப்புகள், மண்பாண்டங்கள், சிவப்பு கருப்பு வண்ண ஓடுகள், தரையில் விழுந்தால் உலோகங்களின் ஓசை எழும் முதுமக்கள் தாழிகள், மனித பயன்பாட்டுக் கருவிகள் முதலியன கிடைக்கப்பெற்றுள்ளது.

தொல்லியல் துவக்கம்

இந்திய அரசால் 1861இல் தொல்லியல் துறையை நிறுவி பல்வேறு ஆய்வுகளைச் சிந்து சமவெளியில் தான் பெரும் பகுதி ஆய்வை மேற்கொண்டனர். இது உலகின் கவனம் ஈர்க்கப்பட்டது.

தமிழகத்தில் ஆய்வுப்பணி

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர், நாகை மாவட்டம் பூம்புகார் போன்ற இடங்களில் அகழ் வாய்வுப் பணியை மேற்கொண்டதில் சிந்து சமவெளியை ஒத்தப் பல தரவுகள் கிடைத்தன. இவைகள் அனைத்தும் தொல் தமிழர்களின் கல்வியறிவு, தொழில்நுட்ப அறிவை பகர்வதாய் இருந்தன. ஆனால் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு ஆய்வு தொடராமல் நிறுத்தப்பட்டன.

கீழடி ஆய்வுப் பணி

மதுரை மாவட்டம் கீழடி என்னும் வைகை நதிக்கரையில் 2013 ஆம் ஆண்டு அகழ்வாய்வுப் பணி தொடங்கப்பட்டன. நான்கு இடங்களில் நிகழ்ந்த ஆய்வுகளில் 13.658 பொருள்கள் காணப்பட்டுள்ளன. சிந்துவெளி கண்டுபிடிப்புகளை விட கீழடி ஆய்வில் கண்டறியப்பட்டப் பொருள்கள் அதிகமானதென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகள் சிந்துவெளியை விட அளவில் பெரியவைகள்.

ஆய்வின் பரப்பு

இதுவரை ஆய்வுகளை 138 ஏக்கர் நிலப் பரப்பில் பணி மேற்கொண்டு திட்டமிடப்பட்டதில் கீழடியில் ஒரு ஏக்கர் நிலம் மட்டும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

காலம் கூறும் கீழடி

கீழடி வைகை நதிக்கரை நாகரீகம் கி.மு.300 முதல் 200 வரை நிலவியது எனக் கணித்துள்ளனர்.

அகழ்வில் கிடைத்த பொருள்கள்

ஆதிச்சநல்லூர், பூம்புகார், கீழடி ஆகிய இடங்களில் இதுவரை அகழ்வாய்வில் சுண்ணாம்பு கழிவறைகள், நகைகள், பானைகள், கண்ணாடிகள், வளையல்கள், பொம்மைகள், முத்திரைகள், கிணறுகள், தமிழ்மொழி பதித்த கல்வெட்டு குறிப்புகள், தாழிகள், உலோகப் பொருட்கள்.

காணக்கிடைக்காத பொருட்கள்

பல்வேறு ஆய்வுப் பணிகள் இந்தியாவின் நதிக் கரைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் 13608 பயன்பாட்டுப் பொருள்களை கண்டறிந்துள்ள ஆய்வாளர்கள், இதுவரை யாதொரு சாமி சிலைகளோ, பூசைப் பொருட்களோ, மதக் குறியீட்டுப் பொருட்களோ எதுவும் கண்டறியவில்லை.சிறிய பெரிய கோவில்களோ, அதை சார்ந்த உருவ பொம்மைகளோ, படையல் பொருட்களோ கிடைக்கவில்லை என்பதை அறிய முடிகிறது. இதிலிருந்து தொல் தமிழர்களின் வாழ்வியல் முறையில் எவ்வித மதம், சாதிகள், கடவுள்கள், கீழ் மேல் சாதி அடுக்கு முறைகள் அற்ற வாழ்வினை மேற்கொண்டனர் என்று தெரியவருகிறது.

ஆரிய படையெடுப்பு

தெற்கு ஆசிய நிலப்பரப்பிலிருந்து வாழ்வியல் வசதிக்காகப் புலம்பெயர்ந்த ஆரியப் பார்ப்பனர்கள் இந்தியாவில் நதிக் கரைகளின் செழிப்பைப் புலம் பெயர்ந்து வாழ்விடமாக மாற்றிக் கொண்டு மெல்ல மெல்ல தென் தமிழகம் முழுவதும் பரவினர்.

அரசர்களின் ஆட்சி முறை

சிறந்து விளங்கிய குறு, பெரும் அரசர் களிடம் வேதங்கள், உபநிசத்துகள், கடவுள்கள், மதங்கள், சாதி முறைகளைக் கூறி அரசனின் மிலேச்சர்களாய் இருந்து உழைக்காமல் சோம்பேறி நிலையில் மக்களை ஆட்சி முறைகளால் அடிமையாக்கி வாழத் தலைப்பட்டனர், ஆரியப் பார்ப்பனர்கள். மொழி, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் முறை, உழைப்பு, உணவு பழக்க வழக்கங்கள் முதலியவற்றில் கைவைத்து மக்களிடையே வேற்றுமை எண்ணங்களை விதைகளாய் தூவி, கல்வியறிவு மறுத்து துரோகச் செயலில் வாழ வழிவகைக் கண்டனர்.

வைகை நாகரிகமே முதல்

தமிழக வரலாற்றை, இந்தியாவின் வரலாற்றையே மாற்றி இனி எழுத வேண்டும். வைகை நதிக் கரையிலிருந்து தான் வரலாற்றை அறிந்து ஆய்ந்து எழுத வேண்டும். இதற்குச் சான்றாய் நாம் வாழும் காலத்திலேயே காணக் கிடைத்துள்ள கீழடி அகழ்வாய்வுச் சான்றுகளை முதன்மையாய் ஏற்கலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s