பெண்ணுக்கு வீடில்லை, ஊரில்லை, நாடில்லை! – அ.அருள்மொழி

17.3.2019 அன்று அரியலூரில் மருத்துவர் வசந்தா அவர்கள் தலைமையேற்று நடத்திய உலக உழைக்கும் மகளிர் தினக் கருத்தரங்கில் அ.அருள்மொழி ஆற்றிய உரை…

சில முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும் என்று நினைக்கும்போது, அந்த நிகழ்ச்சிக்கு வர முடியாமல்கூட போய்விடும். ஆனால் மனதில் அந்த நினைவு இருந்துகொண்டே இருக்கும். இருந்துகொண்டே இருக்குமென்றால் ஏன்? எங்கயோ இருக்கோம். திடீரென்று மழை பெய்கிறது. மழை பெய்வதற்கு முன், நமக்கு எப்படித் தெரியுமென்றால் மண் வாசனை வரும். மழைத்துளி சத்தம் கேட்பதற்கு முன் அந்த மண் வாசனை அடிக்கிறது. அது மண்வாசனை என்று எப்படித் தெரிகிறதென்றால், அந்த மண்வாசனை நம் மனதுக்குள்ளேயே இருக்கிறது. அதை நாம் எப்பொழுது நினைத்தாலும் நமக்குள் அந்த மண் வாசனை வரும்.

அதுபோல இந்த அரியலூர் பக்கத்து மண்வாசனை என்பது எனக்குள்ளே இருக்கிறது. அதனால் நான் இந்த நிகழ்ச்சிக்கு வருவது என்பது பெரிய செய்தி அல்ல.

ஆனால் இன்றைக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தலில் ஈடுபடக்கூடிய கட்சிகள் எல்லாம், அவர்களின் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வேலைகளைத் தீவிரமாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பல்வேறு வேலைகளுக்கு நடுவில், இந்த அரியலூர் நகரத்துப் பெண்களை சந்திப்பதற்காக, இந்த ‘உலக உழைக்கும் மகளிர் தின’த்திற்குப் பேசுவதற்காக, திண்டுக்கல்லிலிருந்து இங்கு வருகை தந்திருக்கும் நம்முடைய சிறப்பு உரையாளர் தோழர் பாலபாரதி அவர்களை உங்களோடு சேர்ந்து நானும் வரவேற்கிறேன்.

இந்த ஊர்ப் பாசம் என்பது எப்படின்னா, நான் குழுமூருக்கு வந்துவிட்டு அரியலூருக்கு வந்தேன். வரும்போது இப்படியே வெள்ளூர் வழியாகப் போகலாமா என்று கேட்டு, கூட வந்தவர்களிடம் இதுதாங்க அப்பா ஊரு என்றேன். அதை அப்பா ஊரு என்று சொல்லுவேன், இல்லேன்னு அப்பறமா சொல்லுவேன். இதுதான் எங்க ஊரு என்று சொன்னால், எங்க அம்மா பிறந்த ஊர் ஒன்னு இருக்கு. அது எங்க ஊரா இல்லையா? யாராவது எங்க ஊரு அப்படின்னு அம்மா பிறந்த ஊரைச் சொல்கிறோமா? அது எப்படி அப்பா பிறந்த ஊரில் மட்டும் உங்களுக்கு நிலம் இருக்கிறதா? அதை எழுதியா கொடுத்திருக்கிறது? ஆனாலும் மனசுக்குள்ள அது தான் இருக்கும். அதனால் எனக்கு இது என் நினைவில் புரிந்ததிலிருந்து நான் இதை எங்க ஊர் என்று சொல்லமாட்டேன். எங்க அப்பா பிறந்த ஊர், எங்க அப்பாவோட ஊர் என்றுதான் சொல்வேன். எனக்கு சொந்தம், அவ்வளவுதான். ஆனால் அந்த ஊரைப் பார்க்கவேண்டும் எனும்போது தம்பிக்கு ஃபோன் பண்ணுகிறேன், தம்பி ஃபோனை எடுக்கவில்லை. இன்னொரு தம்பிக்கு ஃபோன் பண்ணுகிறேன், அவரும் இல்லை. சரி பரவாயில்லை, ஊர் பூரா காமிச்சுட்டு வந்துருவோம் என்று நினைத்தேன்.

நம் ஊரில் மக்கள் ஒருவரை ஒருவர் தங்களை அடையாளம் காண்பதற்கு, “உங்களுக்கு எந்த ஊருங்க குடிசாமி?” என்று கேட்பார்கள். அப்போது ஆண்கள் எல்லாம் சொல்வார்கள், “எங்களுக்கு இந்த ஊர், எங்களுக்கு அந்த ஊர், நாங்க அந்த சாமி கும்பிடுறவங்க” என்று சொல்வார்கள். ஆனால் பெண்கள் மட்டும் என்ன சொல்வார்கள் என்றால், “எங்க அப்பா வீட்டுக்கு அந்த சாமிங்க, எங்க வீட்டுக்காரருக்கு இந்த சாமிங்க” என்பார்கள். “அப்ப உங்களுக்கு எந்த சாமிங்க?” என்று கேட்டால்…. (சிரிப்பு) பெண்களுக்கு கடவுளே இல்லை; பெண்களுக்கு சாமியே இல்லை. அப்பா வீட்டில் இருந்தவரை அப்பா வீட்டில் எந்த சாமியைக் கும்பிட்டார்களோ அது நம்ம சாமி. கல்யாணமாகி போய்விட்டால் கணவருக்கு எந்த சாமியோ, அது நமக்கு சாமி. அப்படியென்றால் பெண்களுக்கென்று சாமியே கிடையாது.

பெண்களுக்கென்று ஊர் இருக்கிறதா? “நீங்க எந்த ஊரு” என்று கேட்டால், நாங்க பிறந்தது என்று, இழுக்கிறோம். என்னமோ நாங்க பிறந்தது ஐரோப்பாவில், வளர்ந்தது ஆஸ்திரேலியாவில் என்பதுபோல, “நாங்க பொறந்தது வடுகப்பட்டிங்க, வாக்கப்பட்டது இந்த ஊருக்குங்க” என்று, சொல்வார்கள். ஏதோ அந்த ஊருக்கே சொந்தம்போல. அதுக்கப்பறம் அப்பா ஊர் என்பது, அம்மா ஊர் என்பது பிறந்த ஊர் அவ்ளோதான். அப்போ நமக்கு என்ன இல்லை? ஊரும் இல்லை. அது பிறந்த ஊர், இது வாழ்ந்த ஊர், போகப்போற ஊர் எதுன்னு யாருக்கும் தெரியாது. பெண்களுக்கு இவர் சிவலோகப் பதவி அடைந்தார் என்று யாராவது போடுகிறார்களா? சிவலோகப்பதவி, வைகுண்டப்பதவி என அதிலும் ஆண்களுக்குத்தான் சீட் போட்டு வைத்திருக்கிறார்கள்.  பெண்களுக்கு என்ன சொல்வார்கள், ‘அவர் இருக்கும்போதே நீ பூவும், பொட்டோட போய்டும்மா’ என்று சொல்வார்கள். ஏன் பூவும் பொட்டும் இல்லாமல் போனால் செக் போஸ்ட்ல நிறுத்திவிடுவானா? இந்தப் பக்கம் சொர்க்கம், அந்தப் பக்கம் நரகம், நடுவில் செக் போஸ்ட். நீ பூவும் பொட்டோடும் வந்தால் சொர்க்கத்துக்குப் போகலாம், இல்லாவிட்டால் நரகத்துக்குத்தான் போக வேண்டும் என்று ஏதாவது செக் போஸ்ட் இருக்கிறதா?

எனக்குத் தெரிந்த ஒரு பாட்டியம்மா அவங்க வீட்டுக்காரரைப் பற்றி ரொம்ப பயந்து போய் சொல்வாங்க. “அவருக்கு தினமும் குளிப்பதற்கு தண்ணீர் விலாவி வைக்க வேண்டுமாம், அது கரெக்டா குளிக்கிற சூடுல வைக்கணுமாம். கொஞ்சம் சூடு அதிகமாக இருந்தால் அப்படியே அந்த சுடு தண்ணியை எடுத்து தலையில் ஊற்றுவாராம், அவ்வளவு நல்லவரு. அதனால் பயந்து பயந்து வைப்பாங்க. அந்த பாட்டியம்மா சொல்லுவாங்க, “அவருக்கு முன்னாடி நான் போயிடணும், அவருக்கு முன்னாடி நான் போயிடணும்னு” சொல்லுவாங்க. அப்போது நான் கேட்பேன், “ஏன் பாட்டி அங்கப் போயி சுடுதண்ணி போட்டு வைக்கணுமா? அவரு வர்றதுக்கு முன்னாடி சுடுதண்ணி போட்டு விலாவி வைக்கிற வேலை இருக்கா? எதுக்கு முன்னாடி போகணும், முன்னாடி போகணும்னு சொல்றீங்க?” என்று கேட்பேன். அப்பறமா சொல்றாங்க, “ஓண்ணும் இல்ல. நான் செத்தாதான் இந்த ஆளுக்குத் தெரியும்.” (சிரிப்பு) என்று சொன்னாங்க. வாழ்ந்து பழிவாங்க  முடியாது. ஏனென்றால் அவர் நன்றாக இருக்கும் வரை மிரட்டியே வேலை வாங்குனாரு. இப்போது உடம்பில் தெம்பு போயிடுச்சி, படுத்துட்டாரு. இப்போது அந்த பாட்டியம்மாவால் மிரட்ட முடியுமா என்றால், “ஏம்மா முடியாத மனுஷனைப்போயி இப்படி மெரட்டுறியே”  என்று கேட்பார்கள். அவர் நல்லா இருந்தாலும் பயந்துகொண்டு செய்ய வேண்டும், நல்லா இல்லாவிட்டாலும் பாவம் என்று செய்ய வேண்டும். ஆக செய்பவர்கள் செய்துகொண்டே இருக்க வேண்டும், அனுபவிப்பவர்கள் அனுபவித்துக்கொண்டே இருப்பது. அந்த பாட்டியம்மாவிற்கு மட்டுமல்ல பல பேருக்கு உள்ள கோபம் “நான் செத்ததுக்கு அப்பறம் நீ சோத்துக்கு சிங்கி அடிக்கணும்” என்பதுதான். கடைசியாக வெற்றிகரமாக வாழ்ந்து, கணவனும் மனைவியுமாக இத்தனை பிள்ளைகளைப் பெற்று, மனசுக்குள்ள என்ன இருக்குன்னா, “நான் செத்து இந்த ஆளு சோத்துக்கு கையேந்தணும்” என்பதுதான்.

அப்படியெல்லாம் வாழ்வதை, நல்லகுடும்பம், அப்படி வாழ்ந்தால் புண்ணியம் என்று சொல்வார்கள். நீங்க சண்டை போட்டுக்கொண்டு தனியாக வந்துவிடக்கூடாது, சண்டை போட்டுக்கொண்டு கௌரவமாக வாழக்கூடாது. நீ இப்படியே அடி உதை பட்டுக்கொண்டு, சாபம் கொடுத்துக்கொண்டு அப்படியாவது நீ வாழ்ந்து செத்துப் போ. ஆனா பரவாயில்லை, நான் டாக்டரம்மா ஆஸ்பத்திரியிலயே வேலை செஞ்சு, ஏதோ ஒரு ரெண்டு வேளைக்கு நான் கௌரவமாக சாப்பிட்டுவிட்டு, செத்துப்போறேங்க என்று சொல்லக்கூடாது. ஏன்? “பெண்கள் தனியாக வாழ்ந்தால் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை”.

பாதுகாப்பு இல்லையென்றால், யாரால் ஆபத்து? கரடி, புலி, சிங்கமெல்லாம் நாட்டுக்குள்ள வந்துவிடுமா? நாம் எப்பேர்பட்ட நாட்டில் வாழ்கிறோம்! பாரத பூமி! பாரதம் பண்பாடு உள்ள நாடு. இங்கே ஒரு பெண் தனியாக வாழ முடியுமா? வாழலாமா, கூடாதா? எவ்வளவோ புண்ணியம் உள்ள நாட்டில் பெண்கள் தனியாக வாழலாம் அல்லவா! ஆனா வாழ முடியுமா? வாழ முடியும். அதுக்கு யார் சோதனை, என்ன பிரச்சனை என்றால், நம் நாட்டில் அவ்வளவு நல்லவர்கள் இருக்கிறார்கள். ஒரு ஊரில் உள்ள யோக்யர்களை கணக்கெடுக்க வேண்டுமென்றால், அந்த ஊரில் இரண்டு பெண்கள் தனியாகக் குடியிருந்தால் போதும். அந்த இரண்டு பெண்கள் தனியாகக் குடியிருந்தால், அந்த ஊரில் உள்ள யோக்யர்கள், நல்லவர்கள் எத்தனை பேரு என்று நாம் கண்டுபிடித்து விடலாம். அத்தனை நல்லவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். இந்த நல்லவர்களிடமிருந்து நம்மை யார் பாதுகாப்பது? நம்ம வீட்ல ஒரு நல்லவரு இருப்பார். அவர் காப்பாற்றுவார். அந்த நல்லவரு என்ன செய்வாரென்றால், கோபம் வந்தால் ஒரு ரெண்டு அடி அடிப்பார். கோபம் அதிகமாக வந்தால் இழுத்துப்போட்டு மிதிப்பார். அவ்வளவு நல்லவர். இந்த நல்லவர் பரவாயில்லையா? இல்ல வெளில உள்ள அந்த நல்லவங்க பரவாயில்லையா? இதுதான் இந்தியாவில் உள்ள பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரே கேள்வி. இந்தக் கேள்வியைக் கேட்டு, இப்படியே வாழ்ந்து, நம் பாட்டி, அம்மாயி, அப்பாயி எல்லாருடைய கதையும் முடிந்து, இன்றைக்கு நம் பிள்ளைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். பிள்ளைகளை வளர்க்கும்போது நாம் என்ன நினைக்கிறோம் என்றால், “அடச்சீ, இது ஒரு ஜென்மமா? இப்படி ஒரு ஜீவனாக வாழ வேண்டுமா நாம்? எதுக்கு இந்த ஆளு கையை நம்பி நாம் வாழ வேண்டும்?” என்று கேட்போமா இல்லையா. எதிர்த்துப் பேசினால் என்ன சொல்கிறார்கள் என்றால், “உனக்கு அடுத்த வேளை சோத்துக்கு வக்கு இல்லாத நாயி. என் வீட்டை விட்டு வெளில போ” என்று சொல்கிறார்கள். நான் “இல்லை” என்று சொன்னதில், மூன்றாவதாக எது பெண்களுக்கு கிடையாது என்றால் வீடு. பெண்களுக்கு சொந்தமாக வீடு இல்லை.

“உங்க வீடு எதுங்க?”

“அது தாங்க…..”

“அந்த வீட்டிலிருந்து வந்தீர்களே, அது உங்கள் வீடா?”

“இல்லங்க, அது எங்க அப்பா வீடு”

“அங்கே இப்போது யார் இருக்கிறார்கள்?”,

“அங்கே இப்போது என் தம்பி இருக்கிறான், அங்கே என் அண்ணன் இருக்கான்”

 “நீங்க எங்கே இருக்கிறீர்கள்?”

 “நான் எங்க வீட்ல இருக்கேன்”,

“சரி இது உங்க வீடா?”

“இல்லை” இது எங்க வீட்டுக்காரர் வீடு, இது என் மாமனார் வீடு” என்பார்கள்.

ஆக பெண்களுக்கு வேறு என்ன இல்லை, சொந்தமாக வீடு இல்லை. என்ன கெரகம் இது? பெண்களுக்கு சாமி இல்லை, சொந்த ஊர் இல்லை, சொந்தமாக வீடு இல்லை, பெண்களுக்கு நாடும் இல்லை. நாடு பூரா ஆண்களுடையது.

இப்படிப்பட்ட ஊரில் வாழும் நம் பெண்கள் என்ன நினைத்தார்கள் என்றால், “ச் சே,  நம்மக்  காலம்தான் இப்படிப் போச்சு, நம்முடையப் பெண் பிள்ளைங்களாவது படிக்கட்டும்” என்று நினைத்தார்கள். நன்றாகப் படித்து, ஒரு நல்ல தொழிலுக்கு வரவேண்டும்; ஒரு டாக்டராகவோ, வக்கீலாகவோ, ஆசிரியராகவோ, ஒரு கிளார்க்காகவோ வர வேண்டும் என்று நினைத்தார்கள். என்ன வேலைக்கு வேண்டுமானாலும் போகட்டும், ஒரு சம்பளம் வாங்கட்டும். நம் பெண் கட்டும் புடவைக்கு, சாப்பிடும் சாப்பாட்டுக்கு யாரையும் எதிர்பார்க்க வேண்டாம். அதுக்கு என்ன படிக்க வேண்டும்? நாலு எழுத்து படிக்க வேண்டும். நம் ஊரில் அதுதான் கரெக்ட். ஏன் அந்த நான்கு எழுத்து என்றால், அப்போது ஷி.ஷி.லி.சி படித்தாலே, அதன்பிறகு டீச்சர் டிரெயினிங் படித்துவிட்டு வேலைக்குப் போய்விடலாம். அதனால் அந்த நாலு எழுத்துப் படித்துவிட்டால், டிரெயினிங் கொடுத்து டீச்சராக்கிவிடுவார்கள். அதுக்குத்தான் அந்த நாலு எழுத்து. அதன்பிறகு ஷி.ஷி.லி.சி, +2 காலேஜ் என்றெல்லாம் மாறிவிட்டது.

ஆக நமக்கு நான்கு எழுத்தாவது இருக்கட்டும் என்று பிள்ளைகள் படிப்பதற்காக வெளியில் போனார்கள். வெளியில் போகிறார்கள், வருகிறார்கள் என்றால், வெளியில் போகும் பிள்ளைகளுக்கு நாம் நல்லவற்றைச் சொல்லிக்கொடுக்க வேண்டும், அறிவைக் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஜாக்ரதையாக இருக்கச் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஏனென்றால் படித்தாலும். படிக்காவிட்டாலும் இயற்கை அவர்களை பல மாதிரி வ்ழி நடத்தும்.

கிராமத்தில் பிள்ளைகள் தெரியாமல் தப்பு பண்ணியிருக்கிறார்களா, இல்லையா? கிராமத்தில் என்ன பாடம் படிக்கச் சொல்லி வெளியூருக்கா அனுப்பினார்கள்? இல்லை. அவர்களின் பெற்றோர்கள் என்ன கட்டுப்பாடு இல்லாமலா விட்டுவிட்டார்கள்? இல்லை. கட்டுப்படுத்தித்தான் வைத்திருந்தார்கள். ஆனாலும் கிராமங்களில் தப்பு நடக்குதுல்ல? ஏன் நடக்கிறது என்றால், அந்த வயதுக் கோளாறு அப்படித்தான் நடக்கும். அதுதான் மனித இயற்கை. அதுதான் வயது. அது கிராமங்களில் இருந்தாலும் நடக்கும், நகரங்களில் இருந்தாலும் நடக்கும். ஆனால் கிராமங்களைவிட நகரங்களில் குறைவாக நடக்கும்.

பிள்ளைகள் வெளியில் போகிறார்கள், வருகிறார்கள். ஆனால், அந்தப் பிள்ளைகளுக்கு நாம் என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும், “நீ பத்திரமாக போய் வா, ஃபோனைக் கையில் எடுத்துகிட்டு போனீன்னா, ஃபோனை பேசுவதற்கு மட்டும் பயன்படுத்து, பேசிக்கொண்டே நடக்காதே, எப்பப் பார்த்தாலும் டைப் பண்ணாதே, தேவைக்கு பயன்படுத்திவிட்டு ஃபோனை உள்ளே வை.” இதைச் சொல்ல வேண்டுமா, இல்லையா? என்ன பிரச்சனையென்றால், சொல்ல வேண்டும்தான். ஆனால் இதை பெண்களுக்கு மட்டும் சொல்லக்கூடாது, பையன்களுக்கும் சேர்த்து சொல்ல  வேண்டும்.

எல்லோரும் என்ன பேசுகிறார்கள் என்றால், இந்தப் பிரச்சனையே ஏன் வந்தது?  செல்ஃபோனால் வந்தது என்கிறார்கள். செல்ஃபோனால் பிரச்சனை வருமா? அது என்ன நம்மை வந்து குடைகிறதா? ரிமோட் கன்ட்ரோலில் இந்த ஜகன் மோகினி பேய் மாதிரி உங்க செல்ஃபோன் எழுந்து டான்ஸ் ஆடுகிறதா? கொஞ்ச நேரம் ஆச்சுன்னா, ஏய் ஃபோன், ஏய் ஃபோன் என்று அது கூப்பிடுமா? ஃபோனை ஆஃப் பண்ணிப் போட்டால் பேசாமல் கிடக்கும். அந்த ஃபோனால என்ன பிரச்சனை? பிரச்சனை ஃபோனால் இல்லை.

வீட்டில் டி.வி. இருக்கு, பல குடும்பங்களில் டி.வி.யால பிரச்சனை. டி.வி.யால என்ன பிரச்சனை? டி.வி. ஷாக் அடிக்குதா? டி.வி. தானாக ஆன் ஆகி மெட்டி ஒலி, மெட்டி ஒலிதான் வந்து உக்காருங்கன்னு கூப்பிடுதா? “ஏ என்ன இன்னும் காஃபி ஆத்திகிட்டு இருக்க, சீரியல் தொடங்கிடுச்சி வா” அப்படின்னு டி.வி. ணீஸீஸீஷீuஸீநீமீ பண்ணுதா? இல்ல. டி.வி. அதுபாட்டுக்கு ஆஃப் பண்ணித்தான் இருக்கு. வீட்ல இருக்க நாம் என்ன பண்ணுகிறோம், ஆறு மணி ஆச்சுன்னா, இந்த ஆம்பளைங்களுக்கு டாஸ்மாக் கடை பூட்டியிருந்தா எப்படி கை, கால் உதறுகிறதோ, அந்த மாதிரி வீட்டில் இருக்கும் பெண்களுக்கு டி.வி. போடலைன்னா கை, கால் உதறுகிறது.

“ஏன்டி நேத்து அவ ஓடிப்போனாளே”,

“யாரு?”

 “அவதான், என்ன ஆனா? போடுடி டி.வி.ய” சண்டை போட்டுக்கொள்ளும் மாமியார், மருமகளைக் கேட்கிறார். மாமியார் வாயை அடக்குவதற்கு இதுதான் வழி என்று மருமகள் டி.வி.யை போட்டுவிட்டு,

“அத்த, அவ ஓடவே இல்லியாம் அத்தை”, 

“ஏன்?”

“அவ காணாமப் போயிட்டாளாம் அத்தை”,

“யார்டி கடத்திக்கிட்டுப் போனா?”

இதுதான் நடக்கிறது வீட்டில். அடுத்த நாள் காலையிலதான் தெரியுது, வீட்ல படுத்திருந்த பெண்ணைக் காணோம். மாமியாரும், மருமகளும் டி.வி.யில் ஓடிப்போனாளா, காணாமல் போனாளா என்று பேசிக்கொண்டு வீட்ல படுத்திருந்த பெண் காணாமல் போனது இவர்களுக்குத் தெரியவில்லை.

பெண்ணைக் காணவில்லை என்று போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனால், பொண்ணு மாலையோட வந்து நிற்கிறாள்.  பெண்ணுக்கு என்ன வயது, பதினேழு வயது. பையனுக்கு என்ன வயது, பத்தொன்பது வயது. கேஸத் தொடுவாங்க…சும்மா சொல்லுங்க, நாங்கல்லாம் காதலுக்கு ஆதரவுதான் நல்லா தெரிஞ்சுக்கோங்க. காதல் கல்யாணம் பண்ணணும்னு சொல்வோம். ஆனால் காதலிக்கிறேன் என்று பிள்ளைகள் வந்தால், இந்தக் கேள்விகளைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். டாக்டர் மருந்து எழுதுவதைப் போல, என்ன செய்தது உனக்கு? காய்ச்சல் அடிக்குதா? பல் வலிக்குதா? என்று மாத்திரை எழுதுவதற்கு முன்னால் கேட்க வேண்டும் அல்லவா, அந்த மாதிரி. 

“என்னம்மா பிரச்சனை?”

“மேடம் நான் ஒருத்தர லவ் பண்றேன்”

“நல்லது”, “நீ என்னப் பண்ற?”

“நான் படிக்கிறேன்”

“என்ன படிக்கிற?”

“நான் பி.எஸ்.ஸி. ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன் மேடம், இவர் பி.எஸ்.ஸி. செகண்ட் இயர் படிக்கிறார் மேடம்”

“ரொம்ப நல்லது, எப்படி படிப்ப முடிக்கிற மாதிரி இருக்கிறீங்களா? இல்ல போய் கல்யாணம் பண்ணிக் கிறீங்களா?”

“எங்க வீட்ல ஒரே எதிர்ப்பு மேடம்”

“எதிர்ப்பு வராமல் என்ன செய்யும். உனக்கு பதினேழு வயது, நீ படிக்க வேண்டும். அந்தப் பையனுக்கு பதினெட்டு, பத்தொன்பது வயது. வீட்ல இருக்கவங்க எதிர்க்காமல் என்ன செய்வாங்கம்மா?”

“நாங்க என்னப் பண்றது? நாங்கப் போய் கல்யாணம் பண்ணிக்கட்டுமா?” அப்படின்னு கேட்கும் அந்தப் பொண்ணு.

“கல்யாணம் பண்ணிக்கலாம்மா, கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன பண்ணப் போறீங்க? ரெண்டு பேரும் சிமெண்ட் ஃபேக்டரிக்கு வேலைக்குப் போகப் போறீங்களா? இல்ல செங்கல் சூளையில் கல்லடுக்கப் போறீங்களா? இல்ல, ரோடு போடுற வேலைக்குப் போறீங்களா? கட்டட வேலைக்குப் போகப் போறீங்களா? என்ன வேலை செஞ்சு சாப்பிடப் போறீங்க, அதைக் கொஞ்சம் சொல்லுங்கய்யா”

என்று கேட்டால், அப்போதுதான் அவர்களுக்குப் புரியும்.

“நீ என்ன படிக்கிற?”

“நான் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படிக்கிறேன்”

“பி.எஸ்.சி. படிச்சிட்டு என்ன படிக்கலாம்?”

“எம்.எஸ்.சி. படிக்கலாம்”

“எம்.எஸ்.சி. படிச்சிட்டு என்ன படிக்கலாம்?”

“எம்.ஃபில். படிக்கலாம்”

“படிச்சின்னா நீ என்னாவாப் போவ? லெக்சரரா போவலாம், டீச்சரா போவலாம். இன்னைக்குப் போயி கல்யாணம் பண்ணிக்கிட்டீன்னா, என்னா ஆவ? அம்மா ஆவ. நீ அம்மா ஆகப்போறியா? பேராசிரியாராகப் போறியா? என்ன வேலை பாக்கப்போற? நர்ஸ் ஆகணுமா? டீச்சராகணுமா? இல்ல மருமகளாகப் போறியா? வீட்டு வேலை செய்யப் போறியா? உன்னை எதுக்குப் படிக்க வச்சாங்க?”  அப்படின்னு கேட்டு, அந்தப் பிள்ளைகளுக்கு கொஞ்சம் அறிவுரை சொல்லி,

“இதெல்லாம் இந்த வயசுல இருக்கும்மா. அதெல்லாம் நீ அந்தப் பையன்கிட்ட சொல்லிடு. நீயும் ஒழுங்காப் படி, படிச்சி முடிச்சிட்டு ஒரு வேலைக்குப் போ. போயி இருபதாயிரம், இருபத்தஞ்சாயிரம் சம்பளம் வாங்கு. அப்பதான் நான் எங்க அப்பா, அம்மாகிட்ட பேச முடியும். அப்படின்னு சொல்லிட்டு, நீயும் ஒழுங்காப் படிப்பப் பாரு.

இது உண்மையிலயே காதலா இருந்தா, நீ வேலைக்கு வர்ற வரைக்கும் காத்திருக்கும். இருக்குமா? இல்லையா? பொறுமையாக இருக்கும். இது காதல் இல்ல, நீ தனியா கூட்டிட்டுப் போயி, வயித்துல இருக்குற கருவைக் கலைச்சி, உன்னைக் கொலை பண்ணப் போறவனா இருந்தா, இது தேராது. அப்ப நீ என்ன  செய்யப் போற?”

இப்படி, நாங்கள் ஒரு மூணாவது ஆளா, ஒரு வக்கீலா, டாக்டரா அவங்ககிட்டப் பேச முடியும். பேசி அவங்களுக்கு சொல்கிறோம். ஆனால், நம்ம பையன் ஒரு மாதிரி இருக்கானே, நம்மப் பொண்ணு ஒரு மாதிரி இருக்காளே என்று பெற்றோர்கள், “ஏய் என்னடா, இங்க வா. என்னப் பிரச்சனை? பொண்ணு சினேகிதமா?” என்று கேட்டு நம் பையனிடமோ, பெண்ணிடமோ நாம் பேசுகிறோமா, என்ன? நாம் அவர்களிடம் பேசி, அவர்களுக்கு நல்லது, கெட்டது சொல்வதற்கு நாம் பொறுமையாக நம் நேரத்தை அவர்களோடு செலவிடுகிறோமா என்றால், இல்லை. நம் நேரம் முழுவதும் சாயங்கால நேரமென்றால் டி.வி.யிலயே போயிடுது.

நாம் டி.வி.யை ஆன் செய்தவுடன், பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், ஃபோனை எடுத்துவிடுகிறார்கள். பிள்ளைகள் மெஸேஜ் பண்ணுகிறார்கள், பையன் வீடியோ எடுக்கிறான். இல்லையென்றால் வீடியோ பார்க்கிறான்.

தொடரும்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s