போராட்டமே இனி வாழ்க்கை – தோழர் கா.தமிழரசன்

இந்த உலகில் இனி சாதாரண மக்கள் வாழ முடியுமா? அதற்கான இடம் இந்த பூமியில் இருக்கிறதா? என்ற எண்ணம் இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. காரணம், அதிகாரத்தில் உள்ளவர்கள் செயல்படும் விதம்தான். இனி இந்த பூமி அதன் இயற்கைத் தன்மையோடு இயல்பாக, அமைதியாக, அழகாக இருக்குமா? அவ்வாறு இருக்க இந்த அதிகார வர்க்கம் அனுமதிக்குமா? வளர்ச்சி என்கிற பெயரில் இயற்கை வளங்களை எல்லாம் அழிக்கின்ற வேலையைச் செய்யத் தொடங்கி காடு, மலை, ஆற்று  மணல், ஆழ்துளைகள் மூலம் நீர் என இவைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் இவர்களின் நாசகாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் இயற்கையின் இயல்பு நிலையில் பல மாற்றங்கள் அடைந்து அதன் பாதிப்புகள் அந்தந்தப் பகுதி  மக்களிடம் வந்துசேர்வதோடு, ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் இந்தப் பாதிப்புகள் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பூமியில் வாழும் மக்கள் இயற்கையாக ஏற்படும் இன்னல்களுக்கும், பாதிப்பு களுக்கும் ஆளாகின்றார்களோ, இல்லையோ இனி செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளுக்கும், இனி ஏற்படப் போகும் பாதிப்புகளுக்கும்தான் அதிகம் ஆளாகப் போகிறார்கள். அதன் உண்மைத் தன்மை என்னவென்றே அறியாத மக்கள் பெரும் பான்மையாக உள்ளனர். இது ஏதோ இனிமேதான் நடக்கப் போகிறதென்று இல்லை. பலகாலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பாவப்பட்ட இந்த அப்பாவிச் சனத்துக்குத்தான் எதுவும் தெரிவதில்லை. தெரிந்தவர்களும் தெரியப் படுத்துவதில்லை. அதை மக்களுக்குத் தெரியப்படுத்த முயல்பவர்களை அடக்கியும், ஒடுக்கியும் வைக்கிறது அதிகார வர்க்கம். இப்போது நாம் வாழும் இந்த வாழ்க்கைமுறை என்பது இயல்பானதோ, இயற்கை யானதோ இல்லை. இப்பொழுது வாழும் இந்த நுகர்வுக் கலாச்சார வாழ்க்கை முறையில் வாழும் இந்த பெரும்பான்மை மக்களின் இந்த வாழ்க்கை முறையே  ஒரு சிலரால் முடிவு செய்தது என்பது பெரும்பான்மை மக்களுக்குத் தெரியாது. அது தெரியாமலே அதன் போக்கில் ஓடத் தொடங்கி விட்டனர். இன்று அதுதான் சரியென்றும், நல்லதென்றும் ஓடும் கால்நடைகளாகி விட்டனர் பெரும்பான்மையான மக்கள்.

இவர்களுக்கு ஏழை, பணக்காரன் தொழிலாளி, முதலாளி, வறுமை, போராட்டம், ஆதிக்கம், அடக்கு முறை, அழிவு வேலை, பாதிப்பு, உலக மக்களின் நலன், மக்கள் ஒற்றுமை, அவர்களின் உரிமை, எதிர்கால தலைமுறைகளின் வாழ்க்கைக்கு உதவும் வகையிலான நமது இன்றைய செயல்பாடு போன்றவைகள் என என்னென்னவோ இருக்கிறதா? அவைகளைப் பற்றி யெல்லாம் எங்களுக்கு துளியும் அக்கறையில்லை. அதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமும், அவசியமும் இல்லை என்கின்ற மனநிலை கொண்ட வாழ்க்கை முறையில் வாழும் மக்கள் கூட்டம் இன்றைக்கு பெருகி வருகின்றன. அந்த மக்களின் வாழ்க்கை முறை என்பது கடிவாளம் கட்டிய  குதிரையின் நிலைமை தான். எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டார்கள். கேட்டால் நாம் கஷ்டப்பட்டால்தான் நமக்கு எல்லாம் என்பார்கள். மற்றவைகளைப் பற்றின கவலை எனக்கு எதற்கு என்பார்கள். இவர்களுக்குப் பக்கத்து வீட்டில், தெருவில், ஊரில், நாட்டில் என்ன நடந்தால் நமக்கென்ன என்பார்கள்.

இது ஏதோ தானாக நடப்பவைகள் இல்லை. இதுபோன்ற வாழ்க்கை முறைக்கு மக்களைப் பழக்கப்படுத்தி வருகிறார்கள். இதுபோன்று எதையும் கண்டுகொள்ளாத, எதற்கும் ஏன் என்று கேள்வி கேட்காத மக்கள் கூட்டத்தை உருவாக்கிவிட்டால் நாட்டைச் சுரண்டும்  அதிகார வர்க்கத்திற்கு அவர்கள் செய்யும்  அனைத்துச் செயல்களுக்கும் இது வசதியாக இருக்கும். அதோடு இதுபோன்ற நிலை பரவலாக ஏன் உலகம் முழுவதுமாக இருக்கவேண்டுமென விரும்பும் கூட்டம் அதற்கான வேலைகளை அன்றாடும் செய்துகொண்டே இருக்கின்றன.

இன்று நாட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒரு சில கூட்டத்தினரால்தான் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் அதை முறியடிக்கும் வேலையும், இதைப் பரவலாக அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தும் வேலையும் ஒருபுறம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால்,  சதி செய்யும் சதிகாரக் கூட்டத்தின் வலுவுக்கு முன்னால்  சாதாரணமானவர்களால் போட்டி போட முடிவதில்லை. இந்த உலகையும், மக்களையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் தேவையான அனைத்து தில்லுமுல்லு வேலைகளையும் செய்து கொண்டேயிருக்கின்றன இந்த  இரக்க குணமற்ற  நாசகாரக் கூட்டம். இந்த உலகில் சாதாரண  மக்களுக்குப் பாதிப்பு என்றால் அதைத் தடுக்கின்ற, தட்டிக்கேட்கின்ற அதிகாரமுள்ள அமைப்புகளெல்லாம்கூட சர்வாதி காரர்களாய்ச் செயல்பட விரும்புகின்ற இந்தக் கூட்டத்திற்கு அடிமைப்பட்டுப் போய்விட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில் சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்?

உலகில் எந்த மூலையிலும் யாரும் உரிமைக்கான முழக்கமோ, போராட்டமோ நடத்தக்கூடாது. அது போல் எங்காவது, யாராவது நடந்துகொண்டால், அதை ஒடுக்க உலக நாடுகளே ஒன்று சேர்ந்து அதை ஒடுக்கிவிடும். இங்கே அரசமைப்பு, ஆட்சியாளர்கள்  எல்லாம் இனி மக்களுக்கானவர்கள் இல்லை. அதுபோல் துளியும் நடந்து கொள்ளமாட்டார்கள்.  கடந்த காலங்களில் அரசுகள் எவ்வாறு செயல்பட்டன என்பதைச் சற்று நினைத்துப் பாருங்கள் நன்கு புரியும்.

சாதாரண மக்கள் தங்களின் அன்றாடத் தேவைக்கான குடிதண்ணீர் கேட்டு வீதிக்கு வந்து போராடிய மக்களையும் சரி, அரசு கொண்டுவந்த,  கொண்டுவர விரும்புகிற திட்டங்களானாலும், அரசு அனுமதியுடன் தனியார் நிறுவனங்கள் கொண்டுவந்த திட்டங்களானாலும் சரி அதனால் மக்களுக்கு நன்மை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அதனால் அந்தப்பகுதி மக்களுக்குப் பெரும்பாதிப்பை உண்டாக்குகிற திட்டமாக உள்ளது. ஆகவே, இவைகள் எங்கள் பகுதிக்குள் அமைக்க வேண்டாம், அல்லது அமைத்த நிறுவனங்களை இழுத்து மூடுங்கள் என்றால், மக்களுக்கான அரசாக இருந்தால் அந்த அரசு என்ன செய்ய வேண்டும்? மக்கள் பக்கம் அல்லவா நிற்க வேண்டும். ஆனால் இங்குள்ள அரசுகள் அதுபோல் என்றும் நடந்துகொண்டது இல்லை. மக்களுக்கு எதிராக, மக்களை எதிரியாகவே பார்த்து அந்த மக்களைக் கொன்று குவிக்கும் வேலையைத்தான் செய்கிறது.  தவிர மக்கள் பக்கம் என்றுமே நிற்பதில்லை. அந்தந்தத் தனியார் நிறுவனங்களுக்கு, பெ(று)ரும் பணக்கார முதலாளிகளுக்குச் சாதகமாகப் பாதுகாப்பாகவே அனைத்து அரசுகளும் உள்ளன,  வேலை செய்கின்றன. ஆளுகின்ற அரசுகள் இந்த மக்களுக்காக வேலை செய்யப் போவதில்லை. மக்களின் தெளிவும் அதற்கான செயல்பாடும்தான் இப்போதைக்கு தேவை. அதை அன்றாடம் செய்துகொண்டே இருக்கவேண்டும். இல்லையேல் இன்னும் ஒரு சில வருடங்களிலேயே இந்தப் பகுதியில்  மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்ற நிலை உருவாகும். அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டே இருக்கின்றன.

ஒவ்வொரு தனி மனிதனைச்சுற்றி அன்றாடம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாகக் கவனித்து அதற்கேற்றாற்போல் செயல்பட கற்றுக் கொண்டு அதன்படி செயல்பட ஆயத்தமாவோம். எதிர்கால மக்களின் நலனுக்காக மட்டுமல்ல நாளைய பொழுது நமக்கானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான்.             

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s