எம்மண்ணின் குருதி..! – கவிஞர் நா.காமராசன், மண்டகொளத்தூர்.

நாங்களாம் செருப்பு

போட்றதுக்கு முன்னாடி

கோரைத்திட்டு மேல கால

மாத்திமாத்தி வச்சிதான் ஆத்துக்கு

அந்தப்பக்கம் போவோம்;

அடிக்கிற கத்திரி வெயில்ல

மணல்ல காலவச்சா அவ்வளோதான்

தீய்ஞ்சி போயிரும்!

ஆத்தோரத்துல ஓடையாட்டம் ஒடுற தண்ணி

ஆங்காங்கே குட்டையாய்த் தேங்கி

நிற்குது பாசிப்புடிச்சி;

தாகத்துக்கு முட்டிப்போட்டு

அதுலதான் தண்ணி குடிப்போம்,

பக்கத்துல செவலக்கண்ணுக்குட்டியும்

சேர்ந்து குடிக்கும் எங்களோட!

ஆத்தோரத்துல இருக்குற

புங்கமரம்தான் வெயிலுக்கு

ஒதுங்குற எடமா இருந்துச்சு;

அப்பப்போ அடிக்குற லேசான காத்துல

புங்கம்பூ மேல உதிரும்!

மாயாண்டி மாமாதான் சொல்லுவாரு

“டேய் பசங்களா  பன்னெண்டுமணி

உச்சிவெயில் நேரம், யாரும் தனியா

போகாதீங்க,கன்னிமாருங்க ஊர்வலம்

போறநேரம்; குறுக்கால போனா அடிச்சிரும்பாரு”

ஏழெட்டு வருசத்துக்கு முன்னாடி

திருமலையாமூட்டு கெழவி சாணி

பொறுக்கிட்டு இருக்கும்போது

சுருண்டு விழுந்து செத்துப்போச்சாம்;

உச்சிவெயில்ல யாராவது தனியாபோனா

“கன்னிமாரு அடிச்சிடப்போகுது

பார்த்து போப்பா” இப்படித்தான்

ஊருக்குள்ள சொல்லி அனுப்புவாங்க!

அறுவடை முடிஞ்சி கரம்புக்காடா

இருக்குற நேரம்;

ஆடு மாடு மேய்க்குறத தவிர

வேற எந்த வேலையும் இருக்காது

கொஞ்சம்பேரு சொந்த பந்தத்த

பாத்துட்டு வரலாம்னு வெளியூருக்கு

போயிட்டு ஒரு பத்து பதினஞ்சிநாள்

தங்கிட்டு வருவாங்க!

கட்டையாங்க மாமரத்துல ஓட்டு மாங்கா

குலைகுலையா காய்ச்சி தொங்கும்;

பாதிமரம் ஆத்துலதான்

படர்ந்திருக்கும்;

கிளிகொத்துன பழம் ஆங்காங்கே

சிதறி விழுந்திருக்கும்!

சின்னப்பையனதான் அப்பப்போ

அனுப்புவோம்,மாடு மடக்குற

சாக்குல மொத்த பழத்தையும்

லுங்கில போட்டு ஓடி வந்துருவான்;

இருந்தாலும் மறுபடியும் அந்தப்பக்கம்தான்

ஓட்டிவிடுவோம் மாடுகளை!

பொழுதுசாயுற நேரத்துல மேற்கால

பூங்கொல்லமேட்டு தோப்புக்காத்தான்

சூரியன் மறையும்;  மேய்ச்சல முடிக்காத

மாடுகளை ஆத்துல இருக்குற குட்டைல

தண்ணிகாட்டிட்டு வீட்டுக்கு

ஓட்டி வருவோம்!

கோடைக்காற்றில் வகிடெடுத்து

வாரியிருக்கும் ஆற்றுமணல்

கொஞ்ச கொஞ்சமாய் தணிந்திருந்து

சூட்டிலிருந்து; பாதச்சுவடுகளைத்

தடம்பதித்து திரும்புவோம் மாடுகளோடு!

வெள்ளைக்கண்ணு மாமனின்

வெற்றுடம்புத்தோளில்

துண்டில் கட்டியிருந்த முருங்கைக்கீரை

எட்டிப்பார்த்தது; புண்ணாக்கும்

கல்லக்கொட்டையும் போட்டு பொரியல்

பண்ணா அவ்வளோ ருசியா இருக்குமாம்

பாடியாமூட்டு கீரை, எல்லோரும் சொல்வாங்க!

இதோ காலங்கள் கடந்த ஒருநாள்

ஊர்திரும்பிய வேளையில்

வகிடெடுத்த வாரியிருந்த ஆறு

செத்து கிடந்தது வெட்டுப்பட்டு;

ஆங்காங்கே குற்றுயிரும்

குலையுயிருமாய் புதைந்து கிடந்தது ஆறு!

தாகத்துக்குத் தண்ணியில்லாத ஆடு

மாடுகள் காணாமல் போயிருந்தது

நா வறண்டு; வெட்டப்பட்ட மணலோடு

புதைந்து போயிருந்தது

பூத்துக்குலுங்கும் மாமரமும்

புன்னைமர வாசமும்!

மணல் வெறும் மண்ணல்ல

அது நீரின் கருப்பை;

களவாடப்படும் மணலின் லாரியிலிருந்து

வழிந்தோடுவது நீரல்ல

எம்மண்ணின் குருதி!…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s