மாற்றமா? ஏமாற்றமா? – தோழர் கா.தமிழரசன்

1947-ல் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய ஒன்றியம் விடுதலைப் பெற்றதைவிட, இப்போது ஆட்சி அதிகாரத்திலுள்ள இந்த ஆரிய சித்தாந்தத்தின்படி ஆட்சி செய்யும், இந்த அன்னியர்களிடமிருந்து இந்த நாடு இப்போதைக்கு விடுதலைபெறுவதென்பது ரொம்ப முக்கியமானது. ஒட்டுமொத்தமாக அனைத்திலும் ஆரிய சிந்தனையிலிருந்து அனைத்து சமூக மக்களும் விடுதலைப்பெற வேண்டுமென்பது நமது எண்ணம், விருப்பம் எல்லாம். ஆனால் அது அவ்வளவு எளிதில், விரைவில் நடக்காது. அதற்கான முயற்சி, மற்றும் போராட்டம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது. ஆது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் கடந்த 5-ஆண்டு இந்த நாட்டு மக்கள் இவர்கள் கையில் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு அதனால் நாடும், நாட்டு மக்களும் பட்ட துன்பங்களும், பாதிப்புகளும் போதும், போதும். மீண்டும் அடுத்த 5-ஆண்டும் இவர்கள் கையில் நாட்டைக் கொடுத்தால் நம்மைவிட முட்டாள்கள் வேறு யவரும் இருக்கமாட்டார்கள். ஆகவே  முதலில் இன்றைய  ஆட்சியாளர்களிடமிருந்து இந்த நாடு விடுதலையைப் பெறட்டும்.

இந்த மாத இறுதியில், இப்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் முடிவு தெரிய வரும். அப்போதே தெரிந்துவிடும் மக்கள் ஆபத்திலிருந்து விடுதலை பெற்றார்களா? இல்லை பேராபத்தில் சிக்கிக் கொண்டார்களா என்பது. அதோடு பல ஆயிரம் கோடி ரூபாய் இந்திய மக்களின் வரிப்பணத்தின்  செலவில் நடைபெற்ற இந்த இந்திய தேர்தல் உண்மையிலேயே அனைவரும் சொல்கிறபடி, அரசியல் சட்டத்தில் உள்ளபடி, ஜனநாயக முறைப்படித்தான் தேர்தல் நடந்ததா என்பதும் தெரிந்துவிடும். நமக்கு என்ன கவலை என்றால். முறைப்படிதான் இங்கே எல்லாம் நடக்கின்றதா என்பதிலே பெருத்த சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. காரணம் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த பின்பு வாக்குப்பதிவிற்கு ஒருசில நாட்களே இருந்த  நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் உள்ளபோது,  எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களில் மட்டும், மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் செயல்படும் துறைகளான மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவைகளால் சோதனை நடை பெறுகின்றன. அது அவர்களின் மேல் தப்பான அபிப் பிராயத்தை உருவாக்கி அதன்மூலம் அவர்களுக்கு ஓட்டு விழாமல் செய்து அவர்களை தோற்கடிக்க முயற்சி செய்வது அல்லது மத்தியில் இப்போதுள்ள ஆளும் கட்சி, தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் பெறப்போகும் வெற்றியை நியாயப்படுத்த செய்கின்ற காரியங்களா என்கின்ற சந்தேகமும் வருகின்றது. 

காரணம் கடந்த 5-ஆண்டுகால ஆட்சியில் இவர்கள் பொதுமக்களுக்கு செய்தது ஏராளம். அந்த செயலுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலுள்ள அனைத்து தரப்பட்ட மக்களும் இந்த ஆட்சியாளர்களை நீங்கள் செய்தது போதும். இனி, நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை என்பதை அவர்களின் நெஞ்சில் குத்தி வெளியேறுங்கள் என்று துரத்துவார்கள். அந்த நிலை உள்ளபோது. இவர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வாய்ப்பு என்பது இல்லாத சூழ்நிலையில் தாங்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வரவேண்டுமானால் குறுக்கு வழியில்தான் வரவேண்டும். அவ்வாறு வந்தாலும் எந்த அடிப்படையில் வந்தீர்கள் நாங்கள்தான் உங்களை தேர்ந்தெடுக்கவே இல்லையே. பிறகு எப்படி ஆளும் அதிகாரத்திற்கு வந்தீர்கள் என்று மக்கள் கேட்டால் அவர்களுக்குச் சொல்ல ஏதாவது ஒரு நொண்டிச்சாக்கு வேண்டுமல்லவா அதற்காகத்தான்.

இந்தத் தேர்தல் முறைப்படி நடந்து, அவர்கள் வாக்களித்தது அப்படியே முடிவாக அறிவிக்கப்பட்டு அதன்மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு ஒருவர் வருவாரேயானால் அது நிச்சயம் பாஜகவும் அந்த கட்சியைச் சேர்ந்தவர்களும் மீண்டும் வர துளியளவும் வாய்ப்பில்லை. அதையும் தாண்டி அவர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், அது நிச்சயம் அவர்கள் இ‌வி‌எம் இயந்திரத்தின் துணையோடு பின்வாசல் வழியாக வந்தவர்கள் என்று பொருள். அவ்வாறு நடந்தால், இங்கே தேர்தல் என்பது பெரும் கேலிக்கூத்தாகிவிடும். அதை சரி செய்வதற்குப் பதிலாக இந்தப் பாசிச அரசு அடுத்தடுத்து வரும் காலங்களில் இதுபோன்ற தேர்தலே இல்லாத நிலையை உருவாக்கும். அதற்கான வேலையை கடந்த 5-ஆண்டுகளில் ஏராளமாகச் செய்து வைத்துள்ளார்கள். தன்னிச்சையாக செயல்படும் அதிகாரம் கொண்ட அனைத்துத் துறைகளையும் பிரதமரின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்துள்ளார்கள்.

குறிப்பாக மக்களவைக்கும், மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்கிறார்கள். சரி அவ்வாறே நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு மாநிலத்தில் ஆட்சியை நடத்தும் அரசு கவிழ்கிறது. மற்றும் யாரும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. அங்கே என்ன நடக்கும். அடுத்த மக்களவைத் தேர்தல் வரும்வரை ஆளுநர் ஆட்சி இருக்கும். இல்லையேல் நேரடியாக மத்தியில் ஆளும் அரசு அந்த மாநிலத்தின் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும். இதேபோல் ஒவ்வொரு மாநிலமாகத் தொடர்ந்து இறுதியில் மாநிலம் என்றும், அதற்கு தனியாகத் தேர்தல் என்ற ஒன்றும் இருக்காதபடி செய்து அனைத்தும் மத்தியில் ஆளும் அரசு மட்டும்தான், அது அதிபர் ஆட்சிமுறை என்ற நிலையில் அதுவும் சர்வாதிகாரி ஆட்சிமுறையை இவர்கள் நிச்சயம் கொண்டுவந்து விடுவார்கள்.

அவ்வாறு நடந்தால் அந்த ஆட்சிமுறை  எவ்வாறு இருக்கும்? உலகில் கொடுங்கோல் ஆட்சிக்கு உதாரணமாக இட்லர், முசோலினியைச் சொல்வார்கள். இந்த இருவருக்கும் சற்றும் சளைத்தவர்கள் இல்லை இந்த பாஜகவும், அவர்களின் சித்தாந்தமும். பிறகு நாட்டில் சுதந்திரமென்றால் என்ன விலை என்கின்ற நிலை வந்துவிடும். ஒருவேளை தனிப்பெரும்பான்மையோடு மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், (வரும்படியான கைக்காரியங்களை தாங்களாகவே  செய்துகொண்டால்)  சுடுகாடும், பாலைவனமும் நமக்கு அருகருகே தென்படும். அவர்களின் செயல்கள் அவ்வாறுதான் இருக்கும். சரி அவ்வாறு செயல்பட்டால் கடந்த ஐந்து ஆண்டைப்போல மக்களும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அமைதியாகவே இருந்துவிடுவார்களா? பதிலுக்கு எதுவும் செய்ய மாட்டார்களா? என்றால் பார்ப்போம்! ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள்? மக்கள் என்ன செய்வார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம். சரி பாஜக ஆட்சிக்கு வராமல், மற்றவர் ஆட்சிக்கு வந்தால் முதலில் செய்யவேண்டியது தேர்தலில் சீர்திருத்தம் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தேர்தல் முறையை புதியதாக வரும் அரசு உடனே செய்ய வேண்டும். அதை புதியதாக  வரும் அரசு செய்யுமா? இந்த முறையைக் கொண்டுவந்தால் மட்டுமே இந்த நாட்டில் நடைபெறும் தேர்தலுக்குப் பெயர் ஜனநாயகத் தேர்தல் என்று அதை சொல்ல முடியும்.

அது அனைத்து மக்களுக்கும், கட்சிகளுக்குமான இடம் அளிப்பதாக இருக்கும். அதை எந்த அரசுகள் செய்யும், எப்போது செய்யும் என்பது பெரும் கேள்வியாக நீண்டகாலமாக உள்ளது. இதைப் பல கட்சிகள், பல காலமாக அதற்கான முழக்கங்களை வைத்துக்கொண்டே வருகின்றன. நடைமுறைக்குத்தான் வந்தபாடில்லை.

ஆகவே முதலில் தேர்தல் முடிவுகள் வரட்டும். அதை வைத்து முடிவு செய்வோம். அடுத்த தலைமுறைகளுக்கான இடம் இந்த ஜனநாயக நாட்டில் இருக்கிறதா, முதலில் இந்த நாடு  ஜனநாயக நாடாக இருக்கப்போகிறதா? நாட்டு மக்கள் இதுநாள்வரை வாழ்ந்த வாழ்க்கையை இனியும் வாழ முடியுமா, அதற்கான இடமளிக்கும் நாடாக இந்த இந்திய ஒன்றியம் இருக்கப்போகிறதா என்று பார்ப்போம்.  இல்லை, தேர்தல் ஆணையம் தனி அதிகாரத்தோடு, யாரோட தலையீடும் இல்லாமல் சரியாகச் செயல்பட்டு மக்கள் வாக்களித்தபடி முடிவுகள் வந்தால், அதன் வழியாக ஆட்சி மாற்றம் நடந்தால் முதலில் மக்கள் அனைவரும் உண்மையான சுதந்திரம் பெற்றோமென்று கொண்டாடுவோம்.

ஏனெனில் இது ரொம்ப முக்கியமான தேர்தல் இப்போது நடந்து முடிந்த இந்தத் தேர்தல். பிறகு புதியதாக வந்த அரசு செய்ய வேண்டிய பல முக்கிய, அவசர, அவசிய தேவைகள் நிறைய உள்ளன. அவைகளைச் செய்யச் சொல்லி அரசுக்கு கோரிக்கை வைப்போம். இல்லை இதே பாசிச அரசே மீண்டும் வந்தால், ஒருவேளை வரும்படி நடந்தால், கடந்த காலங்களைப் போல் மக்கள் அமைதியாக அனைத்தையும் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கும்படியான செயலை ஆட்சியாளர்கள் செய்யமாட்டார்கள் என எண்ணுகிறேன், நம்புகிறேன் பார்ப்போம். எது நடந்தாலும் சந்தித்துத்தானே ஆகவேண்டும் இந்த நாடும், இந்த நாட்டு மக்களும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s