கோ கோ குச்சிக்கோ – பேராசிரியர் கு.முருகேசன்

சித்திரை மாதத்தில் வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும், ஆடுமாடுகள் மேய்ச்சல் இன்றியும் தண்ணீர் இன்றியும் தவிக்கும், ஏன் காட்டில் உள்ள பறவைகளும் விலங்குகளும் கூட தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் படையெடுக்கும். இப்படி ஊரே தவித்தாலும் ஊரில் உள்ள குழந்தைகளும் பள்ளிச் செல்லும் பிள்ளைகளும் தெருக்களில் எதையும் பொருட்படுத்தாமல் விளையாடி மகிழ்வதைக் காணலாம். அதுவும் இந்த மாதத்தில் பள்ளிகளுக்கெல்லாம் விடுமுறை என்பதால் அவர்கள் விளையாட்டில் பள்ளிப்பாடங்களும் வீட்டுப்பாடங்களும் தொல்லை செய்யவே செய்யாது. அணையில் தேக்கிவைத்த தண்ணீரைத் திறந்தாள் ஆற்றல் அதிகரித்து வேகமாக ஓடும் தண்ணீர் போல, பள்ளியிலும் வீடுகளிலும் அடைத்து வைத்த பிள்ளைகளும், இப்பொழுது அதிக ஆற்றலோடு கிராமத்து தெருக்களில் விளையாடும் பிள்ளைகளின் அழகே தனிதான்.

உலகமயம் ஆக்கல் என்னும் மந்திர வார்த்தையைச் சொல்லி சொல்லி அரசியல்வாதிகள் ஒரு நாட்டின் அந்த மக்களின் பண்பாடுகளின் மீது தாக்குதல் நடத்தினாலும், சிறுவர்களின் விளையாட்டில் அதன் தாக்குதல் இல்லாமல் பார்த்துக்கொண்டால் போதும் கொஞ்சமாவது பண்பாட்டை நமது பிள்ளைகளுக்கு விளையாட்டு சொல்லிக் கொடுத்துவிடும். நமது விளையாட்டுதான் நமது பிள்ளைகளின் படைப்பாற்றலை வளர்த்தெடுக்கிறது. குழு ஒற்றுமையை வளர்த்தெடுக்கிறது, தன்னைச் சுற்றியுள்ள பொருள்களைக் கொண்டு பிள்ளைகளுக்கு விளையாட்டை கட்டமைத்துக்கொள்ள கற்றுக்கொடுக்கிறது. அப்படிப்பட்ட விளையாட்டுகளில் ஒன்றுதான் தமிழர்களின் விளையாட்டான ‘கோ கோ குச்சிக்கோ’ என்னும் விளையாட்டாகும். இனி அந்த விளையாட்டை எவ்வாறு விளையாடுவது என காண்போம்.

இந்த விளையாட்டு ஒரு வெளிப்புற விளையாட்டாகும். இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடலாம். விளையாட விரும்பும் பிள்ளைகள் ஏழு அல்லது எட்டு வயது முதல் பதினைந்து வயதுவரை உள்ள எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து, அவர்களில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த ஒருவரை ‘உத்தி பிரித்தல்’ மூலமாகவோ ‘சாட் பூ திரி’ மூலமாகவோ அல்லது வேறு ஏதோவொரு முறையைக் கொண்டோ தேர்வு செய்து கொள்ளலாம். இந்த ஒருவரைத் தவிர விளையாட்டில் கலந்துகொள்ளும் அனைவரும் தனது கையிலும் நான்கு அல்லது ஐந்து அடி மரக்குச்சியைக் கொண்டு வரவேண்டும். அப்படி இல்லை என்றாலும் அவர்களே பக்கத்திலிருக்கும் மரத்திலிருந்து தேவையான மரக்குச்சியை வெட்டி எடுத்துக்கொள்வார்கள். இதற்காக எந்தக் கடையிலேயும் ஏறி இறங்க வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த விளையாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போட்டியாளர் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு நிற்க வேண்டும். அவரின் இரண்டு கை விரல்களுக்கும் இடையில் அந்த நீளமான குச்சியை வைக்க வேண்டும். இந்த விளையாட்டில் கலந்துகொள்ளும் மற்றவர்கள் எல்லோரும், அவருக்குப் பின்னால் கையில் குச்சியோடு தயாராக நின்றுகொண்டிருக்க வேண்டும். யாராவது ஒருவர் தன் கையிலுள்ள குச்சியால், முதல் போட்டியாளரின் கையிலுள்ள குச்சியை வேகமாகப் பின் பக்கத்தில் தட்டிவிடுவார். அவரைத் தொடர்ந்து பின்னால் நிற்கும் விளையாடுபவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கையிலுள்ள குச்சியால், அந்தக் குச்சியைத் தூரமாகத் தள்ளிக்கொண்டே செல்ல வேண்டும். இவ்வாறு தள்ளிக்கொண்டு செல்லும்போது முதல் போட்டியாளர், குச்சியைத் தள்ளுபவரை வேகமாக ஓடிவந்து தொட்டுவிட்டால் தள்ளியவர் தோற்றவராவார். அவர் கைவிரல் மேல் அந்த குச்சியை வைத்து பின்னால் தள்ளி விளையாட்டு தொடரும். அவ்வாறு இல்லாமல் முதல் போட்டியாளர் வேகமாக ஓடிவந்து தொடுவதற்குள், தன் கையிலுள்ள குச்சியின் நுனியை ஏதாவது ஒரு சிறு கல்லின் மீது வைத்து விட்டால் அவரை அவுட் ஆக்க முடியாது. குச்சியின் நுனி கல்லின் மீது இல்லாத பொழுது, முதல் போட்டியாளர் தொட்டு விட்டால் அவர் ‘அவுட்.’ அதற்கு மேல் அவர் அந்த விளையாட்டில் தொடர முடியாது.

முதல் போட்டியாளரின் கவனத்தைத் திசை திருப்பியும், அவர் எதிர்பாராத நேரத்தில் வேகவேக மாகக் குச்சியைத் தூரமாகத் தள்ளிக்கொண்டும் போக வேண்டும். ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் குச்சியைத் தள்ளிக்கொண்டு சென்றுவிட்டால், முதல் போட்டியாளர் குச்சியைக் கையிலெடுத்துக்கொண்டு, அங்கிருந்து நொண்டியடித்துக்கொண்டோ அல்லது கூவிக்கொண்டோ போட்டி தொடங்கிய இடத்துக்கு திரும்பி வர வேண்டும். அடுத்தது, மீண்டும் வேறொரு போட்டியாளரைத் தேர்வு செய்த பிறகு, மறுபடியும் இந்த விளையாட்டை எல்லோரும் சேர்ந்து விளையாடலாம். இந்த விளையாட்டைத் தமிழகத்தின் கிராமப்புறத் தெருக்களில் ‘கோ… கோ… குச்சிக்கோ’ அல்லது ‘அம்பால்’ விளையாட்டு என்ற பெயரில் விளையாடப்படுகிறது. ஒரு இனிப்பு பண்டத்தின் சுவையை அந்த பண்டத்தை உண்ட பின்புதான் அதன் உண்மையான சுவையை அங்கீகரிக்க முடியும், அதேபோலத்தான் இந்த விளையாட்டின் மூலம் பெரும் மகிழ்ச்சியும் விளையாடிப் பார்த்தால்தான் பெறமுடியும். இப்பொழுது கோடைகாலம் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறைதானே, விளையாடிப் பாருங்களேன். அப்புறம் நீங்களே  இந்த விளையாட்டின் பெருமையையும் மகிழ்ச்சியையும் உணருவீர்கள்.

இந்த விளையாட்டு விளையாடத் தேவையானவை குச்சி சாதாரணமாக கிராமங்களில் கிடைக்கக் கூடியது. பிள்ளைகளே சுயமாக உருவாக்கிக் கொள்ளக் கூடியது. பிள்ளைகளின் படைப்பாற்றலை வளர்க்கும் விளையாட்டு இது. மேலும் தனது அனைத்து புலன்களைக் கொண்டும் கவனமாக ஒரு நபரை கண்காணிக்கச் சொல்லிக்கொடுக்கும் விளையாட்டு. இது நாட்டு வீரர்கள் மற்றும் காவல் பணியில் உள்ளவர்க்கு தேவையான மிக முக்கிய பண்பாகும். இந்த பண்பை விளையாட்டு இயல்பாக வளர்த்தெடுக்கிறது. எனவே நமது பிள்ளைகள் விளையாடட்டும் நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ளட்டும். இந்த விளையாட்டில் நன்றாக ஓடி தொடவேண்டியுள்ளதால்,   நல்ல உடல் நலத்தையும் மன நலத்தையும் பெறமுடியும். பிள்ளைகள் நன்றாக விளையாடட்டும் ஆரோக்கியமான தலைமுறையாக வளரட்டும். 

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s