வர்க்கம் – புலவர் நாகை பாலு

நிறைமாத கர்ப்பிணியாய் புறப்பட்ட பஸ் பென்னா கரத்தில் நின்று பிதுக்கித் தள்ளியது. . .

இடித்துத்தள்ளியபடி இறங்கிய கூட்டம் சிதைந்து கலைந்தது

இரவு ஒன்பது

பஸ்ஸில் பாதி காலி. . .

டிரைவர் கந்தசாமிக் டீ குடிக்க ஆசை. . . நேரமில்லை

நாள் முழுவதும் தருமபுரிக்கும் ஒகேனக்கல்லுக்கும் இடையே உருமி நகரும் ஒரு பஸ்ஸோடு மல்லுக்கட்டிய மனம் விடுதலை பெற்றால் போதுமென்று தவித்தது. . .

‘‘தருமபுரி பஸ் ஸ்டேண்ட். . . பாரதிபுரம் ஷெட். . . தோல் பையைத் தூக்கிக் கொண்டு வீடு. . . சோறு. . . விழுந்துவிட்டால் போதும்… நாளை காலை எட்டு மணி வரை கவலையில்லை.”

கண்டக்டர் பரஞ்சோதியின் மனமும் இப்படித்தான் தவித்தது…

பின்வழியில் தொற்றும்போதே பரஞ்சோதியின் விசில் சத்தம் முழுவீச்சில் ஒலித்தது. . .

பஸ் ஸ்டாண்டை விட்டுப் புறப்பட்ட அந்த கிழட்டுக் கழுதை ஈ.பி. ஸ்டாப்பில் நின்றது. . .

பேண்டும் சர்ட்டுமாக நாலைந்து பேர்

ரெகுலர் டிக்கட்ஸ்

பஸ் உருமிக் கொண்டிருந்தது. . . எந்த கீரிலும் அதன் வேகம் எருமை மாடுதான். . . உருமாலைப் பார்த்தால் ஒலிம்பிக் தங்கம் கிளீன் போல்ட்டைப் போல. . .

ஏறிய நாலைந்து பேருக்குப் பின்னால்அந்தக் கிழவி மூங்கில் கூடையுடன்… அறுபதை மீறிய வயது. . . அவசர அவசரமாக ஏறினாலும் அவர்களைப் போல் ஏற முடியவில்லை. . . கூடையைப் படியில் வைத்து, ஏறுவழியில் இருக்கும் பக்கக் கம்பியைப் பிடித்து. . . முக்கி முனகி. . . பெரும்பாடு. . .

முதல் படியில் காலும் மூன்றாம் படியில் கூடையுமாய் தள்ளாடி நின்றவளின் கூடைளைப் பரஞ்சோதி தூக்கி வெளியில் எறிந்தபடி கத்தினான். . .

‘சனியனே, எத்தனை தடவ சொல்றது. . .

எறங்கு கெழவி. . .

எறங்கித் தொல”

போட்ட சத்தத்தில் அவள் இறங்கி விட்டாள். விசில் அவசர கதியில் ஊதப்பட்டது. . .

ஏறுவாசலில் கடைசி சீட்டில் அரைத் தூக்கத்தில் இருந்த கேசவனின் மனம் பதைத்தது. .

இந்தக் கண்டக்டருக்கு ஏன் இவள் மேல் இத்தனை வெறி. . .

குதறிய காரணம் அவளது மூப்பா? வறுமையா?

எப்படியானால் என்ன. . . அவளொரு பயணி. . .

ஏறிய ஐந்தாறு பேரைப் போல இவளும் ஒருத்தி. ஏனிந்த உதாசீனம். . . எதற்காக இத்தனை அலட்சியம். . .

கண்டக்டரின் கழுத்துப் பட்டையைப் பிடித்து கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும்போல் மனசுக்குள் ஒரு வெடிப்பு. . . பெரு வெடிப்பு. . .

ஏறியவர்களிடம் டிக்கட் போட்டு சடுதியில் முடித்து. . .

டிக்கட் விற்று முதல் கணக்கைச் சன்னமான மேல்விளக்கின் வெளிச்சத்தில் பதிவு செய்துவிட்டு கடைசி சீட்டில் தனது சிம்மாசனத்தில் அமர்ந்தான். . .

கேசவன் கொதிநிலை இன்னும் குறையவில்லை. . .

ஏதோ கேட்கத் துடித்த மனதை அடக்கிக் கொண்டான். . .

அந்தக் கிழவியின் முகம் மனத்திரையில் பிசிறின்றிப் பதிந்து விட்டது. . .

பஸ் படியில் கூடையை வைத்தது, தள்ளாடி ஏறியது. . . ஏறிய வேகத்தில் இறக்கப்பட்டது. . .

அதிகாரம் இத்தனை குரூரமானதா?

இவன் மட்டுமென்ன குபேரனா? கண்டக்டர் என்ற எழுத்துக்குக் கீழே இருக்கும் வயர் பின்னல் இருக்கை குபேர சம்பத்தா என்ன?

அவன் மீது நாள் முழுவதும் ஏறிய வியர்வை நாற்றம் அருகிலிருக்கும் எனது குடலைப் புரட்டுகிறதே, கசங்கிய சட்டையும், கலைந்த தலையும் எழுதும்போது இடுங்கிப் பார்க்கும் பழுதுபட்ட பார்வையும். . . கண்டக்டரின் சட்டைப் பையில் குத்தியிருந்த பெயர்ப்பட்டியைப் பார்த்தான்.

‘‘பரஞ்சோதி. நடத்துனர்”. . .

சீட்டில் வந்தமர்ந்த பரஞ்சோதியை உற்றுப் பார்த்தான். . .

‘‘நீயெல்லாம் ஒரு மனுசன்”.

‘‘எரும. . . எரும. . . மனசுக்குள் உமிழத் துடிக்கும் வார்த்தைகள். . .”

பரஞ்சோதி என்ன நினைத்தானோ. . .

தானாகப் பேச ஆரம்பித்தான், பணப்பையை மடியில் படுக்க வைத்தபடி, டிக்கட் புத்தகமெல்லாம் உள்ளே வைத்தாயிற்று.

இனி உத்யோகப் பணிகள் எவையும் இல்லை.

இந்த ஜென்மங்களுக்கு எத்தனை தடவ சொன்னாலும் புரிவதில்லை சார். . . அதகப்பாடி இன்னும் அஞ்சு கிலோமீட்டர் கூட இல்ல. . . டிக்கட் ஏழு ரூபா. . . கூடைக்கு லக்கேஜ் ஏழு ரூபா. . .

. . . பின்னாடியே டவுன் பஸ் சார், மூணு ரூபாயில் வேல முடிஞ்சிடும். . . எத்தன மொற சொன்னாலும் இந்தக் கெழவிக்கு ஒறக்கிறதில்லை சார். . .

என்ன மாச சம்பளமா? காசு என்ன மம்மாணியாவா கெடக்குது. . . நாய்ப் பொழப்பு சார். . .

கெழங்கு வாங்கித் தோலுரிச்சி, அவுச்சி, அப்படியே பூவாட்டம் செஞ்சிடுவா சார். . .

அஞ்சு ரூபாய்க்கு கெழங்கு வாங்கி சாப்பிட்டா நாலு இட்லி சாப்பிட்ட கணக்கு. . . உப்பெல்லாம் அவ்ளோ பக்குவமா சேத்து பூவாட்டமா தருவா. . .

காலை அஞ்சு மணிக்கே எந்திரிச்சி,

அடுப்பு மூட்டி, அவிச்சு, சரியா எட்டு மணிக்கெல்லாம் ரோட்டுக்கு வந்துடுவா சார். . . கெழவி. . . பயங்கரமான சுறுசுறுப்பு. . .

டவுன் பஸ்ஸ புடுச்சி பென்னாகரம் வந்து ஒகேனக்கல் போய் சேர்ந்தா ஒரு கூட சொமைய நாள் பூரா சொமந்து. . .

ராவோட இப்படிதா சார் திரும்புவா. . .

செம கெழவி, சலிக்கமாட்டா. . .

நூறு ரூபாய்க்கு கெழங்கு வாங்குனா, எறநூறு எறநூத்துப்பத்து இப்படித்தானே சார் கெடைக்கும். . .

ரத்தஞ்சுண்ட இவ சம்பாதிச்சத உறிஞ்சுக் குடிக்க குடிகாரப்பய. . . இவ மகன் . . .

எப்பப் பாத்தாலும் சாராயக் கட, ஆடுபுலி ஆட்டம். . .

பஸ் ஸ்டாப் பெஞ்சிலேயே கெடப்பான். . .

குளிக்க மாட்டான். . . பல் வௌக்க மாட்டான். . .

இவளுக்காக அப்படியே வெறிநாய் மாதிரி காத்திட்டுக் கிடப்பான். . .

ரத்தஞ்சுண்ட சம்பாதிச்சத அடிச்சி ஒதச்சி புடுங்கிட்டுப் போய்டுவான். . . நாள் பூரா சாராயக் கட . . .

பாவம் சார் இந்தக் கெழவி. . .

நல்லா ஒழைப்பா அவ்வளவு தான். . . வெவரங் கெடயாது. . . கூறுகெட்டவ. . . நாக்குக்கு ருசியா நாலு இட்லியோ, பரோட்டாவோ தனக்குண்ணு கெடையாது. . . ஆனா நாள் பூரா செமந்து திரிவா. . .”

கேசவனின் மனம் குழம்பியது. . .

கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக பஸ்ஸிலிருந்து இறக்கி விட்டு. . . இவ்வளவு உருகுகிறானே இந்த மனிதன். . . இவன். . .?

கேசவன் குழப்பம் உச்சிக்கு நகர்ந்தது. . .

‘ஆமா, ஏ அந்தம்மாவை அவ்வோ கடுமையா எறக் கிட்டீங்க?

கோபத்தை அமுக்கி வார்த்தைகள். . .

‘என்ன சார் நீங்க. . . கழுத் தொடிய சொமந்து சேர்த்த காசு சார். . . இந்த வயசுல இவளுக்கு சல்லிக்காசு கொடுக்க ஆளில்ல சார். . .

இந்த பஸ்ல போனா பதினாலு ரூவா, ரெண்டே நிமிஷத்துல டவுன் பஸ் பின்னாடியே மூணு ரூபாய்ல போய் சேர்நதிடலாம். . . பதினாலு ரூபா ஏன் சார் தரணும். . .

எத்தனை மொற சார் சொல்றது. . . எரிச்சல் வருதில்ல. . . அதா சார். . . அந்தக் கெழவி, எந்தெருவுக்கு அடுத்தத் தெருதா சார். . . நாளைக்கு குடுக்கறேன் பாருங்க. . .

கேசவனின் மனம் கரைந்தது. . . கனத்தது. . .

கண்களில் நீர் முட்டியது. . .

வர்க்கத்தின் பாசம்.

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: