முற்போக்குத் தமிழ் மரபை முன்னெடுத்துச் செல்வோம்! மூடமனு தர்மத்தை முறியடித்து வெல்வோம்! – வழக்கறிஞர் அ.அருள்மொழி

மரபு எங்கே எப்படித் தொடங்குகிறது? நான் ஒரு தடையற்ற சிந்தனை மரபை, என்னுடைய தமிழ்ச் சமுதாயத்தின் வேரில் தேடிப்பார்க்கிறேன். ஒரு பெண்ணாக எனக்கு அறிவிருக்கிறதா, எனக்குத் திறமை இருக்கிறதா, என்னுடைய உணர்ச்சிகளைச் சொல்வதற்கு என்னுடைய மொழியில் இடம் இருக்கிறதா, என்னுடைய எண்ணங்களைச் சொல்லக்கூடிய வலிமை என் குரலுக்கு இருக்கிறதா, இதற்கெல்லாம் முன்பாக இந்தச் சமூகத்தில் எனக்கு முன்னோடிகள் இருந்திருக்கிறார்களா? என்கிற மரபையும் நான் தேடிப்பார்க்கிறேன். இன்று பெண்கள் எழுதத் தொடங்கினால், அவர்களுடைய எழுத்துக்கு எத்தனை விதமான கண்ணாடிகளோடு விமர்சனங்கள், ஆய்வுகள், தடைகள், கண்டனங்கள் இன்னமும் அதை விட அதிகமான ஆபாச வர்ணனைகள் அத்தனையும் எதிர்கொள்ளக்கூடிய இந்தக் காலம். தன்னுடைய உணர்வை சொல்கின்ற ஒரு தமிழ்ப் பெண் இந்தச் சூழலில் எந்த மரபில் இருந்து வந்தாள் என்று நான் தேடிப் பார்க்கிறேன்.

என்னுடைய பாட்டி ஒருவர் இருந்தார். அவரை நாங்கள் பாட்டி என்று அழைத்ததில்லை. அம்மாயி என்று  அழைப்போம், அம்மாயி என்றால் அவர் என் தாயைப் பெற்றவர் இல்லை. என் அப்பாவின் அத்தை. ஆனால் என் அம்மாவுக்கு அவர் அம்மாவைப் போன்றவர். ஆகவே அவர் எங்களுக்கு அம்மாயி ஆனார். அந்த அம்மாயி பதிமூன்று வயதில் தன் கணவனை இழந்து, விதவைக் கோலம் பூண்டார். அப்படி விதவையான அந்த அம்மாயி தொண்ணு£ற்று ஐந்து வயது வரை வாழ்ந்தார். இந்த சமூகத்தில் அந்த நிலையில் ஒரு கிராமத்தில் அந்த அம்மாயி தொண்ணு£ற்று ஐந்து வயது வரை வாழ்ந்தது இருக்கிறதே, அதைவிட தண்டனை எதுவும் இருக்க முடியாது. ஆனால் அந்த அம்மாயி தன் வாழ்நாளெல்லாம் தானும் சிரித்துக்கொண்டு, எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டு, தெருவில் நடக்கும் ஆண், பெண் ஒருவர் கூட அவருடைய கிண்டலிலிருந்து தப்பித்துப் போக முடியாது. அப்படித்தான் வாழ்ந்தார். அப்படி வாழ்வதற்கு அந்த அஞ்சலை அம்மாயிக்கு எது துணையாக இருந்தது என்று நானும் தேடிப் பார்த்தேன். எப்பொழுது கேட்டாலும் ஒரு பாட்டு சொல்லு அம்மாயி என்று கேட்டால், அம்மாயிக்கு நினைவில் இருக்கக்கூடிய ஒரே பாட்டு தன் கணவன் இறந்தபோது தான் வைத்த ஒப்பாரிதான். எப்பொழுதும் சொல்வார்,

‘ஆத்துல அலறி வெட்டி

அரங்கு வந்த ராமதுரை

அன்பாவும் பேசலையே

அரவணைச்சும் பேசலையே’

இந்தபாட்டை அவர் சொல்லும்போதுதான், அரங்கு என்றால் என்ன என்று கேட்டேன், ‘ஆத்துல அலறி வெட்டி எடுத்துக்கொண்டு மேடேறுவோமே’ அதுதான் என்பார். ‘அரங்கு என்பது ஒரு திட்டு, ஒரு மேடு’ என்றார். அரங்கு என்று நாம் சொல்கின்ற மேடை அந்த கிராமத்து மொழியிலிருந்துதான் வந்திருக்கிறது. அதுதான் அரங்கமாகியிருக்கிறது என்று அந்த ஒப்பாரிப் பாட்டுதான் எனக்கு சொல்லிக் கொடுத்தது. அப்படியெல்லாம் அன்பாகவும், அரவணைத்தும் பேசாத கணவன் இறந்துபோய், அதற்குக் கூட நேரமில்லாமல் தன் தாலி அறுக்க நேர்ந்த அந்தக் கொடுமையை; வேறு யாரைத் திட்டுவது, அவன் போய் சேர்ந்துவிட்டான். இருக்கிறவர்கள் அந்த வீட்டுப் பெண்கள்தான். அவர்களைத்தான் திட்ட முடியும். அவர் திட்டினார் தன் பாட்டில்,

‘பச்சை புடவை கட்டி

பாசி மணி வளையலிட்டு

பளபளக்க நடந்து வந்தேன்

பச்சை புடவை கட்டி

பாசி மணி வளையலிட்டு

பளபளக்க நடந்து வந்து – நான் பாவிகளே  உங்க வாசலிலே

பாத்தறுக்க சம்மதிச்சேன்

நீல புடவை கட்டி

நெல்லுமணி வளையலிட்டு

நெகு நெகுன்னு வளர்ந்து வந்தேன்

நீல புடவை கட்டி

நெல்லுமணி வளையலிட்டு

நெகு நெகுன்னு வந்த நான்

நீலிகளே உங்க வாசல்ல

நின்னறுக்க சம்மதிச்சேன்’

இப்படி ஒரு அம்மாயி. இன்னொரு பக்கம் ஒரு பெரியம்மா. அந்த பெரியம்மாவும் பதினைந்து வயதில் பாடினார். அவரும் அதே போல் ஒரு கிராமத்து விவசாயக் குடும்பத்தில் கொஞ்சம் பார்ப்பன மரபுகளுக்கு மரியாதை கொடுத்து பசுமாட்டைக் கும்பிடத் தொடங்கிய சூழலில் வளர்ந்தவர். அதனால் அவர் தனக்கு நேர்ந்த இந்தக் கொடுமைக்கு தன் தந்தையைப் பார்த்துப் பாடினார்.

‘அப்பா சாமிப் பசுமாடு

சாஞ்சி படுத்திருக்கும்

அத தட்டி எழுப்பாம

தடியால எழுப்புனீங்களா

கோயில் பசுமாடு

குனிஞ்சி படுத்திருக்கும்

அத கும்பிட்டு எழுப்பாம

கோலால எழுப்புனீங்களா’

என்று கேட்டு தன்னுடைய துயரத்தை அழுது தீர்த்தார்கள். இப்படித் தன் நிலையை, தன் வேதனையைச் சொல்வதற்கும் அழுவதற்கும் ஒப்பாரியாகவோ தாலாட்டாகவோ இந்த மண்ணில் தடையின்றி ஒலித்த பெண்ணின் குரலில்தான் என் மரபை நான் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அந்த பெரியம்மாவுக்கும், அந்த அம்மாயிக்கும் அதற்கு முன்னால் ஒரு மரபு இருந்திருக்க முடியும். அந்த மரபை அவர்கள் பக்திப் பாடல்களைப் பாடிய ஆண்டாளின் காதல் பாட்டிலும் கண்டிருக்கலாம். அதற்கு முன்பு நொந்துபோன தன் மனதிற்கு கவலைப்படாதே அந்த கொடுமைக்காரன் வரமாட்டான். ‘நோமென் நெஞ்சே, நோமென் நெஞ்சே’ என்று ஆறுதல் கூறிய சங்கப்புலவர் நன்முல்லையாரின் மொழியிலும் அவள் தன்னுடைய மரபை கண்டுகொண்டிருக்கலாம். தியாகியாக வாழ்வதற்கு, தொண்டு செய்வதற்கு அன்னை தெரசா என்கிற ஒரு பெண்ணை நாம் இந்த நவீன காலகட்டத்தில் கண்டிருக்கிறோம். ஆனால் வரலாறுகள் எழுதப்படாத காலத்தில் கையில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பிச்சைப் பாத்திரத்தில் கிடைத்ததையெல்லாம் மற்றவர்களுக்கு கொடுத்த மணிமேகலையை இந்தத் தமிழ் மரபு நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறது.

பாணராக ஒரு ஆண் பாடும்பொழுது, பாடிணியாக கூட ஆடிய பெண்ணை நாம் இன்னும் நினைவில் வைத்திருக்கிறோம். விறலன் என்றால் அவனுக்கு விறலி என்று ஒருத்தி இருந்தாள். குறவன் என்றால் இணையாக குறத்தி இருந்தாள். அத்தனை பாட்டுகளுக்கும் எதிர்ப் பாட்டுப் பாடியவர்களாக, அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த மரபுகளையெல்லாம் மாற்றி, பெண்ணுக்கு அறிவில்லை, பெண்ணுக்கு கல்வியில்லை, பெண்ணுக்கு இலக்கியமில்லை, பெண்ணுக்கு முன்னே வர அனுமதியில்லை என்று உருவாக்கிய தடைகளையெல்லாம் தாண்டி, உண்மையான மரபை அடையாளம் காட்டுகிற முயற்சியில், இந்தத் தடைகளையெல்லாம் தகர்த்தெடுத்து பெண்ணை முன்னே கொண்டுவந்து நிறுத்திய தந்தை பெரியார் மீட்ட தமிழ் மரபிலிருந்து நான் தொடங்குகிறேன். தடைகளற்று சிந்திப்பதற்கு கற்றுக்கொடுத்த தந்தை பெரியாரின் சமுதாயப் போராட்ட மரபை நாம் இன்றைக்கு திரும்பவும் மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இன்றைக்கு வரலாற்றில் எத்தனையோ பக்கங்கள் கிழிக்கப்படுகின்றன; அழிக்கப்படுகின்றன. எந்த ஒரு ஆட்சியும் வந்தவுடன் வரலாறுகள் உருவாக்கப்படும். எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டிலே சொல்லிக்கொண்டே இருக்கக்கூடிய ஒரு வரலாறு, இருண்ட காலம் என்பது களப்பிரர் காலம். களப்பிறர் காலத்தைதான் இன்னமும் நாம் இருண்டகாலம் என்று படித்துக்கொண்டிருக்கிறோம். அதற்குக் காரணம் அந்தக் காலத்தில் என்ன நடந்தது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனக்கு இன்னமும் கேள்வி உண்டு, உண்மையிலேயே தன்னுடைய காலத்திலேயே ஆதாரங்களை ஒரு ஆட்சி அழிக்க முடியுமா? அல்லது களப்பிறர்களுக்குப் பிறகு வந்தவர்கள் அவர்களுடைய ஆதாரங்களை அழித்துவிட்டார்களா? களப்பிரர்கள் தாங்களே தங்களுடைய வரலாற்றை அழித்துக்கொண்டிருக்க முடியுமா? என்கின்ற கேள்வியெல்லாம் உண்டு. ஆனால் அந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கிறதோ இல்லையோ, ஒரு ஆட்சி அரசுப் பொறுப்பை ஏற்றவுடன் ஆவணங்களில் இருக்கிற ஃபைல்களையெல்லாம் எரித்த ஆட்சியை நாம் இப்போது பார்க்கிறோம்.  ஆம், பிஜேபி மோடி அரசினுடைய முதல் வேலை ஏறத்தாழ நானூறு ஆவணங்கள், ஃபைல்கள் எரிக்கப்பட்டன. அவற்றில் என்னவெல்லாம் இருந்தன என்பது இன்றுவரை நமக்குத் தெரியாது. அவர்கள் சொன்னார்கள் 400 கோப்புகள் என்று அவ்வளவுதான்.

வரலாற்றை, ஆவணங்களை எரிப்பதற்குத் துணிந்த ஒரு அரசு; தன்னுடைய  சொந்த நாட்டில் மக்களை அச்சுறுத்துவதற்கு ஒரு தத்துவம். தான் வாழும் மண்ணிலிருந்து அகதிகளாகக் குப்பை மேடுகளுக்குத் துரத்தியடிக்கப்படுகிற மக்கள்; இன்னும் சில பேர் கேட்கிறார்கள், காஷ்மீரத்தில் பண்டிட்டுகள் அங்கிருந்து துரத்தியடிக்கப்பட்டார்களே, அவர்களைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படவில்லையே  என்று. தன்னுடைய மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்படுகிற  மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காகக் கவலைப்படுவதுதான் மனிதநேயமே தவிர, அவர்களை விரட்டியடித்த அந்தக் காலத்தைச் சொல்லி அவர்களைத் திரும்பக் கொண்டு வந்து நாங்கள் காஷ்மீரிலே பத்திரமாக வாழ வைக்கிறோம். அதற்குப் பதிலாக ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் வீட்டிலே வாழ்ந்துகொண்டிருக்கிற சிறுபான்மை மக்களை நாங்கள் வீட்டை விட்டு விரட்டியடிப்போம் என்ற வரலாற்றை எழுதுகிறவர்கள்தான் இன்றைக்கு நம்மைப் பார்த்து அச்சப்படுகிறார்கள். தந்தை பெரியார் தொடங்கிய சமுதாய மரபு என்பதை நான் இந்த வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். தமிழ்நாட்டில் இருந்த, இருக்கின்ற மீண்டும் மீண்டும் முளைத்தெழத் துடிக்கிற பார்ப்பன ஆதிக்கம் ஜம்மு காஷ்மீரில் கொடிகட்டிப் பறந்திருக்கிறது. மிக அதிகமாக இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தொடங்கிய சமுதாயப் புரட்சி இயக்கம், பார்ப்பனர்கள் என்கிற தனி மனிதர்களை, குடும்பங்களை இந்த மண்ணைவிட்டு விரட்டவில்லை. மாறாக அவர்களால் நமக்கு மறுக்கப்பட்ட கல்வியை, வேலையை, மரியாதையை பொதுத்தளத்தில் உளவுகிற சமத்துவத்தை மீட்டெடுத்துக்கொடுத்தது. இப்படி ஒரு சமுதாயப் புரட்சியும், சமுதாய மரபும் காஷ்மீரில் இல்லாததால் பார்ப்பனர்களுடைய ஆதிக்கத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக காஷ்மீர் மாநிலத்திலிருந்து பண்டிட்டுகளை வெளியேற்றினார்கள். நாங்கள் மக்களை வெளியேற்றுகிறவர்கள் அல்ல. அது எங்கள் மரபுமல்ல.

தந்தை பெரியாரிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது, ‘நீங்கள் பார்ப்பனர்களை எதிர்த்துப் பேசுகிறீர்கள். அவர்கள் எல்லாம் இன்றைக்கு அரசு வேலைகளில் இல்லை. தனியார் நிறுவனங்களுக்குப் போய்விட்டார்கள்; முதலாளிகளாகிவிட்டார்கள். இப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? இப்பொழுது உங்களால் அவர்களை எதிர்க்க முடியுமா?’ என்று கேட்டார்கள். தந்தை பெரியார் சொன்னார், ‘எந்த ஒரு பார்ப்பனரும் தொழிலதிபராகவோ, விஞ்ஞானியாகவோ, பணக்காரனாகவோ இருக்கக்கூடாது என்பது என் கொள்கை அல்ல; அவர்களை அப்படி ஆக்குவதற்காக நான் இந்த இயக்கத்தை நடத்தவில்லை. நீ பிராமணனாகவும், நான் சூத்திரனாகவும் இருக்கக்கூடாது என்பதற்குத்தான் நான் இந்த இயக்கம் நடத்திக்கொண்டிருக்கிறேன். நீயும் நானும் மனிதர்களாக வாழ்வோம்; மனிதர்களாக சந்திப்போம். உன்னால் பார்க்கக்கூடாதவனாகவும், தொடக்கூடாதவனாகவும், ஒதுக்கப்படுகிறவனாகவும் இழிவை சுமந்துகொண்டு நான் வாழத் தயாராக இல்லை என்பதுதான் என் கொள்கை; என்பதுதான் என் இயக்கமே தவிர, அவர்கள் முன்னேறக்கூடாது, அவர்கள் நன்றாக வாழக்கூடாது என்பதாக என் கொள்கைக்கு நீங்கள் விளக்கம் சொல்லிக்கொள்ளாதீர்கள்’ என்று தந்தை பெரியார் சொன்னார்.

‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ என்று சொல்வதற்கான அந்த மரபு தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தனிதலும் அதைப்போன்றதுதான், பெரியோரை வியத்தல் இல்லை, சிறியோரை இகழ்தல் அதனிலும் இல்லை, நாம் சமமானவர்கள்’ என்று சொல்கின்ற அந்தத் தத்துவ மரபை அங்கிருந்துதான் நாம் அடையாளம் காணுகின்றோம். மனிதர்கள் சமத்துவமாக வாழ்வதற்குத் தடையாக இருக்கின்ற எதையும் உடைத்து எறிவதுதான் தமிழ் மரபு என்று சொன்னால், அதனுடைய மூலம் எங்கேயிருக்கிறது? அதனுடைய அடிப்படை எங்கேயிருக்கிறது? நமக்கு இரண்டு நூல்கள், இரண்டு தத்துவம் எதிரெதிரில் வைக்கப்பட்டிருக்கின்றன.  ஒன்று ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ அதற்கு எதிரானது ‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்’.

கடவுளை மறுப்பதற்கு நாம் புதிதாகக் கற்றுக்கொள்ளவில்லை.

‘கணக்கன் சொல் ஓவியமே கடவுள்

இன்றைக்கு ஒன்று நாளைக்கு ஒன்று என

ஒருவன் குறித்ததை மற்றவன் ஒப்பான்

ஆதலில் தெய்வம் நிலையிலது ஆகும்

தேடத்தக்கது தெய்வமா, எண்ணுக

ஒரு குலத்திற்கு ஒரு நீதி சொல்வதும்

ஒருத்தி ஐவரை மணந்துயிர் வாழ்வதும்

பெருகும் பொய்மையை மெய்யனெ பிதற்றலும்

பிறர் நூல் கொள்கை

அதை ஒப்பிடான் தமிழன்’

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

இதைப் புரிந்துகொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்? பகுத்தறிவைப் பாடிய புரடசிக் கவிஞர் பாரதிதாசன்தான் சொன்னார், ‘அதைப் புரிந்துகொள்வதற்கு பிறர் நூல் கொள்கை எது, தமிழ் நூல் கொள்கை எது? என்று புரிந்துகொள்வதற்கு நீ படிக்க வேண்டும்; தமிழ் படிக்க வேண்டும்.

நூலைப் படி

சங்கத் தமிழ் நூலைப் படி

முறைப்படி நூலைப் படி,

காலையில் படி

கடும்பகல் படி

மாலை, இரவு பொருள்படும்படி

கற்பவை கற்கும்படி

வள்ளுவர் சொன்னபடி

கற்கத்தான் வேண்டும்

அப்படி கல்லாதவர்

வாழ்வதெப்படி – நிலைப்படி

அறம் படி

பொருளைப் படி

அப்படியே இன்பம் படி

இறந்த தமிழ் நான்மறை

பிறந்ததென்று சொல்லும்படி – நூலைப்படி

அகப்பொருள் படி

அதன்படி புறப்பொருள் படி

புகப் புகப் படிப்படியாய்

புலமை வரும் என் சொற்படி – நூலைப்படி

சாதியென்னும் தாழ்ந்தபடி

நமக்கெல்லாம் தள்ளுபடி

சேதி அப்படி தெரிந்து படி

தீமை வந்திடுமே மறுபடி – நூலைப் படி

பொய்யிலே முக்காற்படி

புரட்டிலே காற்படி

வையகம் ஏமாறும்படி

வைத்துள்ள நூற்களை

ஒப்புவது எப்படி – நூலைப் படி

தொடங்கையில் வருந்துபடி

இருப்பினும் ஊன்றிப் படி

அடங்கா இன்பம் மறுபடி

ஆகும் என்ற ஆன்றோர் சொற்படி

நூலைப் படி

சங்கத் தமிழ் நூலைப் படி

முறைப்படி நூலைப் படி,

காலையில் படி

கடும்பகல் படி

மாலை, இரவு பொருள்படும்படி

என்று நம்மைப் படிக்கத் தெரியாதவர்கள், படிக்க முடியாதவர்கள், படிப்பு வராதவர்கள் என்று சொன்னவர்களுடைய முதுகிலும் முகத்திலும் அறைந்து அறைந்து சொன்னார் படி படி படி என்று. அப்படி படித்ததால்தான் நாம் கேள்வி கேட்கத் தொடங்கினோம். அதனால்தான் அவர்களால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. படிப்பு என்பதற்கு ஒரு அளவு கோல் உண்டு. இட ஒதுக்கீடு ஓர் உரிமை. ஆனால் இட ஒதுக்கீடு என்கிற சொல்லையே தகுதி, திறமை என்பதற்கான எதிர்ப்பதமாகக் காட்டினார்கள். இட ஒதுக்கீடு என்பது தேர்ச்சி பெறாதவர்கள் படிப்பது என்கிற ஒரு கணக்கு. தகுதிக்கும் திறமைக்கும் அது எதிரானது என்ற பிரச்சாரம். இதையெல்லாம் முறியடித்து நாம் படித்து வந்திருக்கிறோம். அந்தப் படிப்பு போதாது நண்பர்களே, எதிரிகள் நம்மை அழித்த வரலாற்றைப் படிக்கிற அறிவு நமக்குத் தேவை. அந்த அறிவு விழித்தெழுந்ததால்தான் இன்று அவர்கள் அலறுகிறார்கள். நம்முடைய விழிப்புணர்வைப் பார்த்து அவர்கள் அலறுகிறார்கள்; அஞ்சுகிறார்கள்.

பேராசிரியர் அருணன் அவர்களும், தோழர் குமரேசன் அவர்களும் தொலைக்காட்சி விவாதத்திற்கு வருகிறார்கள் என்று சொன்னால், பல பேர் கழண்டுகொள்கிறார்கள். யார் வருகிறார்கள் என்று கேட்டுவிட்டு பிறகு விலகிக் கொள்கிறார்கள். ஏன், அவர்கள் அவ்வளவு பயங்கரமாகவா இருக்கிறார்கள்? அதிர்ந்துகூட அவர்கள் திட்டுவதில்லை. ஒரே ஒரு வார்த்தை சொன்னார், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைய வேலை  கொடுப்போம் என்று ஒருவர் சொன்னார். அதற்கு  பேராசிரியர் சொன்னார்,  ‘ஆமாம், ஆமாம் நிறைய கடப்பாரை, மண்வெட்டி எல்லாம் செய்வீங்க.. அதுக்கு நெறைய வேலை கொடுப்பீங்க..’ என்று. அவ்வளவுதான் அதில் உங்கள் அரசியலே முடிந்துவிட்டதே! உங்களுடைய வரலாறு அதில் வந்துவிட்டதே என்கிற கோபம், ஆத்திரம். இந்த அறிவை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. ஆகையினால் அதை மறைப்பதற்கு, அவர்கள் சில பூச்சுக்களை முன் வைக்கிறார்கள். அதன் மிக முக்கியமான முத்தாய்ப்புதான், நமக்கு எதிராக அவர்கள் முன் வைக்கிற ‘பகவத் கீதை’.

இந்த பகவத் கீதைக்கு இன்றைக்கு ஏன் புனர்வாழ்வு? எதற்காக இந்த புதுப் பூச்சு? ஏன் அதற்கு இத்தனை விளம்பரம்? அப்படி அதில் என்ன அறிவிருக்கிறது? பகவத்கீதையில்  எல்லாம் இருக்கிறது என்று சொல்கின்ற ஒருவருக்கும் அதில் என்ன இருக்கிறது என்று தெரியாது. இங்கு பாடிய கரிசல் குயில் குழுவினர்களுக்கும், அவர்களுடைய அந்த உணர்ச்சிகரமான பாடல்களை எழுதிய கவிஞர் நவகவி அவர்களுக்கும் எங்களுடைய பாராட்டுதல்களையும் நாங்கள் மனமுவந்து தெரிவித்துக் கொள்கிறோம். இது மக்களின் மொழியிலிருந்து வருகின்ற பாடல்; மக்களிடமிருந்து வருகின்ற இசை. ஆனால் இன்றைக்கு நமக்குப் புரிகிறதோ இல்லையோ வேத ஒலி, சமஸ்கிருதம் அதற்கு ஓர் அதிர்வு உண்டு. அதில் அது இருக்கிறது, அதில் இது இருக்கிறது என்று சொல்கின்ற யாரும் தெரிந்துதான் சொல்கிறார்களா என்று நமக்குத் தெரியாது. நீங்கள் சொற்களின் அரசியலை புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இரண்டே இரண்டு வாதத்தை எடுத்து வைத்தால் போதும். ஒன்று யாராவது உங்களிடம் வாதிடுகிறவர், ‘மொழியில் என்னங்க இருக்கிறது. மொழியில் ஒண்ணும் இல்லீங்க. அறிவுக்காகத்தான் மொழியே’ என்று சொன்னால், நாம் தமிழைப் பற்றி பேசுகிறோம் என்று பொருள். தமிழில் படிக்க வேண்டும்; தாய்மொழி கல்வி வேண்டும் என்று சொல்வதற்கு மறுப்புதான், மொழியில என்ன இருக்கு? அதில் ஒன்றுமில்லை ‘it’s vehicle of communication’ இப்படியெல்லாம் நிறைய வைத்திருக்கிறார்கள். அப்படிப் பேசுகிறவரே ‘sir, language is not an easy joke sir, it’s a science. There is vibration.’ அப்படியென்றால் அவர் சமஸ்கிருதத்தைப் பற்றிப் பேசுகிறார் என்று அர்த்தம். மொழியில் ஒண்ணும் இல்லீங்க என்று ஒருவர் உங்களிடம் சொன்னால், நீங்கள் தமிழைப் பற்றிப் பேசுறீங்க என்று அர்த்தம். Language-ல vibration இருக்குங்க என்று சொன்னால் பேசுகிறவர் சமஸ்கிருதத்தைப் பற்றிப் பேசுகிறார் என்று பொருள். அதைப் படிக்கத் தொடங்கி மறைமலை அடிகளார் ரத்தம் கக்கிய வரலாறெல்லாம் இருக்கிறது. அவ்வளவு vibration. அது இருந்துவிட்டுப் போகட்டும், அது ஒரு மொழி. ஒரு மொழியாக நாம் சமஸ்கிருதத்தைக் கேவலப்படுத்த வேண்டாம். ஏனென்றால் அதுவும் இத்தனை ஆண்டுகாலம் எங்கெங்கயோ உருண்டு, திரண்டு இத்தனை மொழியிலிருந்து சொற்களையெல்லாம் எடுத்து, சமஸ்கிருதம் என்றால் நன்றாகச் சமைக்கப்பட்டது; நன்றாக அமைக்கப்பட்டது; நன்றாக உருவாக்கப்பட்டது என்று அர்த்தம். அப்படி பல மொழிகளிலிருந்து உருவாக்கப்பட்டது. இவ்வளவு கஷ்டப்பட்டு அவர்கள் உருவாக்கிய ஒரு மொழியை நாம் இழிவாகச் சொல்ல வேண்டியதில்லை. அதில் என்னென்னவே இருக்கலாம், இருக்கட்டும்.

அந்த சமஸ்கிருதத்தை நான் வழிபட வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது? எனக்கு ஹுப்ரு மொழி தெரியாது, நான் கிறிஸ்தவர் அல்ல; எனக்கு அரபி தெரியாது, நான் இஸ்லாமியர் அல்ல; எனக்கு சமஸ்கிருதம் தெரியாது, நான் இந்து அல்ல. ஆனால் நான் கிறிஸ்தவர் அல்ல என்றால் ஒரு கிறிஸ்தவர் என்னிடம் சண்டைக்கு வருவதில்லை. நான் இஸ்லாமியர் அல்ல என்றால்  ஒரு இஸ்லாமியர் என்னிடம் வம்படிப்பதில்லை. ஆனால் நாம் இந்துக்கள் அல்ல என்றால், இந்தியாவில் கலவரம் வருகிறது. நாங்கள் இல்லை என்று தானே சொல்கின்றோம். அண்ணல் அம்பேத்கர் ‘hindu code’ கொண்டு வாருங்கள், இந்து சட்டத்தை உருவாக்குங்கள்’ என்று கேட்டதற்கு என்ன காரணம்? இந்துக்கள் யார் என்று அடையாளம் காணுங்கள். எந்தக் கடவுளை வணங்குகிறவர் இந்து? பசுமாட்டை கும்பிடுகிறவரா, சாப்பிடுகிறவரா? யார் இந்துக்கள் என்று முதலில் சொல்லுங்கள் என்று அண்ணல் அம்பேத்கர் கேட்டார். அதை செய்வதற்கு இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இன்றைக்கு வரை இந்த பாராளுமன்றத்திற்கு தைரியம் வரவில்லை, ஏன்?  யார் இந்துக்கள் என்று கணக்கிடும்போது நாம் யார் என்று சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டால், இந்த நாட்டில் இருக்கிற தலித் சமூகம் எல்லாம் நாங்கள் இந்துக்கள் அல்ல என்று அறிவித்து விட்டால், உங்கள் இந்துக்களின் எண்ணிக்கை என்னவாகும்? பசுமாட்டை கும்பிடுகிறவர்கள்தான் இந்துக்கள் என்று அறிவித்துவிடுங்கள், நாங்கள் இந்துக்கள் அல்ல என்று சொல்லிவிடுகிறோம், பிரச்சனை முடிந்துவிட்டது.

நாங்கள் பன்றியை வெட்டி, பன்றிக் கறி சாப்பிடுகிறோம். எங்களுக்கு யாருடனாவது சண்டை வருகிறதா? யாராவது எங்களுக்குப் பன்றியைப் பிடிக்காது, நீங்கள் வெட்டக்கூடாது என்று சொன்னால், விட்டுவிடுவோமா? அவர்கள் வீட்டு முன்னால் போய் வெட்டுவோமா இல்லையா. அது அவர்களுடைய நம்பிக்கை, அவர்களுடைய அருவருப்பு. உங்களை அத்துடன் வைத்துக்கொள்ளுங்கள், எங்களுடைய வீட்டுக்குள் நாங்கள் என்ன சமைப்பது என்று நண்பர்களே நீங்கள் சொல்லாதீர்கள். சரி பசுமாட்டை வெட்டவில்லை, தினம் உங்கள் வீட்டிற்கு ஆட்டு ஈரல் பார்சல் அனுப்புகிறோம் சாப்பிடு கிறீர்களா? இன்றைக்கு கோழிக்கு கோழி என்றே பெயரில்லை, ஏனென்றால் அவாள்லாம் நிறைய சாப்பிட ஆரம்பித்ததனால் அது புரோட்டீன். நாம் அவர்கள் வீட்டு பிரியாணியை சாப்பிடுகிறோம், இவர்கள் வீட்டு கேக்கை சாப்பிடுகிறோம், ஆனால் நம்ம கடவுளுக்குப் படைத்ததை அவர்கள் சாப்பிடுவதில்லை என்று ஒரு பிரச்சாரம்.

நண்பர்களே இந்தப் பிரச்சாரத்தை நம்புகிற தமிழர்களே, சகோதரர்களே உங்களை நாங்கள் கேட்கிறோம், இந்தக் கேள்வி உங்களைப் பாதிக்கலாம். இந்தக் கேள்வி உங்களை சிந்திக்க வைக்கலாம். அவர்கள் சாப்பிடுகிற பிரியாணியை நாம் சாப்பிடுகிறோம், அவர்கள் சாப்பிடுகிற கேக்கை நாம் சாப்பிடுகிறோம், நம்முடைய கடவுளுக்கு படைத்ததைப் பற்றி அவர்கள் மதம் பயப்படுகிறது. அதனால் அவர்கள் சாப்பிடுவதில்லை. இதை ஒரு மதத்தினுடைய அடையாளமாகச் சொல்லுகிறார்களே. இதை நமக்கு சொல்லுகிற சுப்ரமண்ய சுவாமியைக் கேளுங்கள், இதைச் சொல்கின்ற ராமகோபாலனைக் கேளுங்கள், சிவன் கோவிலில் படைத்த பிரசாதத்தை பெருமாள் கோவிலுக்குப் போகின்ற நாமக்காரர் சாப்பிடுவாரா? சாப்பிட மாட்டார். நாமக்காரர்கள் வீட்டில் அரிசி என்ற சொல் ஒலிப்பதில்லை, அதற்குப் பெயர் அமுதுபொடி. ஏனென்றால் அரிசி என்றால் அது சிவா என்று அர்த்தமாம். அரிசி வாங்கு என்றால் அதில் சிவா என்று நடுவில் வார்த்தை வந்துவிடுமாம். ஆகையால் அதற்கு பெயர் அமுது பொடி, நமக்கு சோறு, இவாளுக்கு சாதம், அவாளுக்கு சாத்தமுது, ரசத்தமுது. அதை அமுது என்றுதான் சொல்ல வேண்டும். ஏன்?

இருவருமே இந்துக்கள்தானே. ஏன் சிவனுக்குப் படைத்த பிரசாதத்தை ஏன் பெருமாள் பக்தர் சாப்பிட மாட்டார் என்று ஏன் நாம் கேட்பதில்லை. இந்த வேற்றுமைகளைக் காப்பாற்றுகிற பகவத்கீதையை, அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார் பகவான் கிருஷ்ணர். போர்க்களத்தில் இவ்வளவு பெரிய உபதேசம் செய்ய முடியுமா என்ற கேள்விகளெல்லாம் வேண்டாம். செய்தார் என்றே வைத்துக்கொள்வோம். எழுநூற்று முப்பது பாடல்கள் சொல்லியிருக்கிறார், சரி. ஆனால் இவ்வளவு பெரிய உபதேசத்தை அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் எதற்காகச் சொன்னார்? நாம் சொல்லும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்பது ஒரு பக்கம், அதற்கு எதிராக நிறுத்துகிற இந்த பகவத்கீதையில் அர்ஜுனனுக்கு அப்படி என்ன கவலை வந்தது என்று  சொன்னால், இரண்டு ஸ்லோகங்களை மட்டும் சொல்கிறேன்.

அர்ஜுனர் சொல்கிறார், ‘கொல்ல வேண்டாம் கிருஷ்ணா, இவர்கள் நம் உறவினர்கள்; என்னுடைய உடன்பிறப்புகள்; மாமன் மைத்துனர்கள். இவர்களை நான் கொல்லக்கூடாது.’

கதம் ஜெயயே பஸ்பாமி

பாபாதஸ் மான் நிவர்த்திதம்

குல ஷயக்ருதம் தோஷம்

பிரபச்சியத்திர் ஜனார்த்தனா’

குலம் அழிந்துவிட்டால் ஒன்றும் இல்லை ஜனார்த்தனா,

‘குலக்ஷ்யே பிரச்னந்தி

குலதர்மா சனாதனா

தர்மே நஷ்டே குலம் கிருதஸ்னம்

அதர்மோபம்’

தர்மம் நஷ்டமாகும், குலம் அழிந்துவிடும், அதர்மம் தழைக்கும்.

‘அதர்மாவிவாத் கிருஷ்ணா

ப்ரதிஷ்யந்தி குலஸ்திரிய

ஸ்திரீ துஷ்டாசு வார்ஷ்னேய

ஜாயதே வர்ண சங்கரே,

இந்த சத்ரியர்களையெல்லாம் கொன்று விட்டால், இந்த குலத்தில் பிறந்த பெண்கள் வேறு வர்ணத்தவர்களோடு போய்விடுவார்கள். அவர்கள் அப்படி போய்விட்டால், ‘ஸ்திரீ துஷ்டாசு வார்ஷ்னேய’ பெண்கள் அப்படி துஷ்டத்தனமாக வேறு வர்ணத்தவர்களோடு போய்விட்டால், வர்ண சங்காரம் நடந்துவிடும்.

‘சங்கரஹோ நரகாயை

குலட்நானாம் குலஸ்ய

பிதந்தி பிதரோஷ்யேஷாம்

லுக்த பிண்டோதகக்  க்ரியா’

என்று சொன்னார். என்னவென்றால் அவர்கள் அப்படி போனாலும் பரவாயில்லை, அவர்களுக்குப் பிறக்கிற குழந்தைகள் இந்தப் போரில் செத்துப்போனவனுக்கு எப்படிப் பிண்டம் வைப்பார்கள் என்று கேட்டார். இந்தப் போரி இறந்தவர்கள் நரகத்திற்கு போகும் வழியில் நிற்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் பிண்டம் வைத்தால்தான் சொர்க்கதிற்குள் நுழைய முடியும். இப்படி வர்ண சங்காரத்தில் பிறந்த குழந்தைகள் இந்த தந்தைகளுக்கு எப்படி அவர்கள் பிதுர் காரியம் செய்ய முடியும்? இப்படி வர்ண சங்காரம் நடப்பதற்கு, இந்தப் போர் காரணமாகிவிடுமே என்று அர்ஜுனன் கேட்டதால்தான் நண்பர்களே, கிருஷ்ணர் சொன்னார்.

‘சதுர் வர்ணம் மயாசிருஷ்டம்’ என்று. இதை நான் படைத்தேன் அர்ஜுனா, எப்படி காப்பாற்றுவதுஎன்று எனக்குத் தெரியும். உன்னுடைய வேலை நீ சத்ரிய தர்மமாகிய குல தர்மத்தை செய். குலத்தைப் படைத்தவன் நான், குலத்தை எப்படி காப்பாற்றுவது என்று எனக்குத் தெரியும். ஜாதி தர்மத்தை நீ விட்டுவிடாதே, அதுதான் உனக்கு நான் படைத்திருக்கும் வேலை என்று கிருஷ்ணர் உபதேசம் செய்ததுதான் பகவத்கீதை. நம்முடைய இரண்டு மரபுகளில் ‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ என்பதும், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதும் ஒரு புறமும், இந்த வர்ண சங்காரம் நிகழ்ந்துவிடக்கூடாது, ஜாதி தர்மா, குல தர்மா, சனாதனா காப்பாற்றப்பட வேண்டும் என்கிற கிருஷ்ண தர்மம் இன்னொரு புறமும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு மரபுகளில் நம்முடைய மரபு முற்போக்குத் தமிழ் மரபு. இதற்கிடையில் கலப்புகள் நடந்திருக்கலாம், ஊடுருவல்கள் நடந்திருக்கலாம், பல்வேறு வித மாற்றங்கள், சாயங்கள் நமக்கு ஏற்றப்பட்டிருக்கலாம். அவற்றையெல்லாம் களைந்து நமது முற்போக்கு மரபை நாம், அடையாளம் காண்போம். அந்த முற்போக்கு மரபை முன்னெடுப்போம். வெற்றிபெற உழைப்போம்.

திருப்பூரில் நடைபெற்ற த.மு.எ.க.ச. 6வது மாநில மாநாட்டில் ஆற்றிய உரையிலிருந்து

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s