ஒரு ஏரியின் கதை – தோழர் இளஞ்செழியன்.

இந்த நீர்க்கோள பூமியில் 97.5 விழுக்காடு நீர் கடல் நீராக உள்ளது. அதாவது உப்பு நீராக உள்ளது. மீதம் உள்ள நீர் பனிப்பாறைகளாக உலகம் முழுவதும் பரந்து கிடக்கிறது. 0.26 விழுக்காடு நீர் மட்டுமே நாம் எளிதில் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. இதுவும் கூட இவ்வுயிர் கோளத்தில் உள்ள மொத்த நன்னீரில் 0.007 விழுக்காடு மட்டுமே.

நம்முடைய விவசாயத்திற்கு உண்டான பாசன நீர், பெரும் தொழிற்சாலைக்குண்டான நீரின் பயன்பாடு மற்றும் பிற தேவைகளுக்கு, நாம் ஏரிகள், குளங்கள், கிணறு மற்றும் நிலத்தடி நீரினைத் தான் நம்பி இருக்கிறோம். ஆண்டுதோறும் மழைப்பொழிவின் மூலமாகக் கிடைக்கும் 11,000 கன சதுர அடி கிலோ மீட்டர் நீர்தான் நமக்கு, உலக மக்கள், பிற உயிர்கள் என அனைத்திற்கும் உண்டான தூய்மையான நீர். இந்த மழை நீர் மட்டும் இல்லையெனில் எந்த ஒரு நீர் பரப்பும் ஒரு நாள் வறண்டு காய்ந்துவிடும் என்பது தான் உண்மை நிலை. நம் நாட்டில் மழைக்காலம் என்பது ஜுன் மாதம் இறுதியில் துவங்கி செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நிறைவடைகிறது. இக்காலங்களில் நமக்கு கிடைக்கும் மழைநீரினைக் கொண்டுதான் நாம் நம் அன்றாடத் தேவைகளிலிருந்து அதாவது வீட்டு உபயோகம், தொழிற்சாலையின் பயன்பாடு, விவசாயத்திற்கு உண்டான பாசனம் நகரத்திற்கு குடிநீர் வழங்கல் என அனைத்து விதமான செயல்களுக்கும் இப்பருவத்தில் பெய்யும் மழைநீரை நம்பிதான் செயலாற்றிக்கொண்டிருக்கிறோம். இப்பருவ மழையின் அளவு குறைந்துப்போனாலோ, அல்லது பருவமழை பொய்த்துப் போய்விட்டாலோ நம் செயற்பாடு அன்றாட வாழ்க்கைக்கே பெரும் திண்டாட்டமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடுகிறது.

இதையெல்லாம் எண்ணிதானோ என்னவோ ‘‘நீரின்றி அமையா உலகு” என்பதன் அடிப்படையில் நம் முன்னோர்கள் நம் நாட்டின் பற்பல பகுதிகளில் குறிப்பாக வறண்ட நிலப் பகுதிகளில் எல்லாம், நீரினைத் தேக்கி வைக்க பற்பல அளவுகளில், எண்ணிலடங்கா நீர் கொள்கலன்களை வெட்டி வைத்தார்கள், அப்படி வெட்டி வைக்கப்பட்ட நீர்நிலைகளில் ஏரிகள் எனப்படும் மிகப் பரந்த நீர்த்தேக்கங்கள் முக்கியமானவை. இந்த ஏரிகள் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தைத் தவிர்க்கும் வடிகாலாகவும் சுற்றுவட்டார மக்களின் விவசாயம், மீன்பிடித்தல், சுற்றுலா போன்ற வளர்ச்சிக்கு உண்டான வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. அதுமட்டுமல்லாது, இவ்வேரிகளின் மூலமாக நிலத்தின் அடியில் ஊறும் நீர் நமக்கு ஓர் நீராதாரமாக கிடைக்கிறது. ஏறக்குறைய 39,000 ஏரிகள் உள்ளதாகச் சொல்லப்படும் நம் தமிழகத்தில் ‘‘ஏரி மாவட்டம்” என்றே சொல்லக்கூடிய அளவிற்கு, ஏராளமான ஏரிகளை உடையது, செங்கல்பட்டு மாவட்டம் என்ற தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம் அந்த அளவிற்கு சிறியதும் பெரியதுமான இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஏரிகள் இம்மாவட்டத்தில் நிறைந்திருந்தன.

அதில் ஒன்றுதான் செங்கழுநீர்பட்டு என்ற செங்கல்பட்டு நகரத்தின் கிழக்கே அமைந்துள்ள கொளவாய் ஏரி என அழைக்கப்படும் குவளை ஏரி. முற்காலத்தில் குவளை மலர்கள் நிறைந்திருந்ததால் குவளை ஏரி என்று அழைக்கப்பட்டு பின்பு அச்சொல்லே பேச்சு வழக்கில் குளவாய் என்றாகி தற்போது கொளவாய் ஏரி என்றே அழைக்கிறார்கள். சென்னையிலிருந்து ஏறக்குறைய 60 கி.மீ. தூரத்தில் சாலை மார்க்கமாகவோ (NH45) இரயில் மார்க்கமாகவோ தெற்கு நோக்கி திருச்சி மார்க்கமாக பயணிப்பவர்கள் சிங்கபெருமாள் கோவில், பரனூர் எனும் இரண்டு ஊர்களைத் தாண்டினால் இவ்வேரியின் அழகிய மிகப்பரந்த தோற்றத்தைக் காணலாம்.

இதன் அமைப்பையும், இவ்வேரி அமைந்துள்ள பூகோள நிலப்பரப்பையும் உற்று ஆராய்வோமேயானால் இது  இயற்கையாக அமைந்த நீர்ப்பரப்பு என்பது நன்கு புலனாகும். அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சிகளாலோ, அமைப்புகளாலோ இவ்வேரிக்கு அதன் போக்கிலேயே கரைகள் அமைக்கப்பட்டிருக்கலாம். செங்கல்பட்டு நகரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களின் நிலத்தடி நீரின் ஆதாரமாக விளங்கிக்கொண்டிருக்கும், இக் குவளை ஏரியானது கடல் மட்டத்திலிருந்து 37.565 மீட்டர்கள் உயரமுடையது 11 கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ள இக்குவளை ஏரி 894 எக்டேர் அளவிற்கு பரந்து விரிந்துள்ளது. செங்கல்பட்டு நகரத்தின் சுற்றுவட்டாரங்களில் அமைந்துள்ள அம்மணம்பாக்கம், தேனூர், பட்டரை வாக்கம், இளந்தோப்பு, ஈச்சங்கரணை, குண்ணவாக்கம், தெற்குப்பட்டு, அனுமந்தை, அஞ்சூர், வல்லம், மேலமையூர், குண்டூர், பரணூர், திருவடிச்சூலம் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள ஏறக்குறைய 25 சிறிய ஏரிகளிலிருந்து, இவ்வேரிக்கு மழைக்காலங்களில் பெய்யக்கூடிய நீர் வருகிறது. இந்த நீர் வரத்தின் பரப்பளவு 52.72 சதுர கி.மீ. என்றாலும் தற்காலத்தில் இது மிகவும் சுருங்கிப்போய் உள்ளது.

இதன் மொத்த கொள்ளளவு 476.61 மில்லியன் கன அடி, உச்சமட்ட நீரின் அளவு 38.525 மீட்டர்கள் இந்த ஏரிக்கரையின் நீளம் 1500 மீட்டர்கள். இதில் நான்கு (4) மதகுகள் உள்ளதாகச் (?) சொல்லப்படுகிறது, கலிங்கல் மதகு ஒன்று உள்ளது.

தற்போது அதிகப்பட்ச ஆழம் 15 அடிகள், வெள்ள காலங்களில் அதிகபட்சமாக 730 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மரக் கதவுகளைக் கொண்ட, திருகு அமைப்புகளையுடைய மதகுகளின் வழியாக, வெளியேற்றப்படும் இவ்வேரியின் உபரி நீரானது, ஏரியின் மேற்கே அமைந்திருக்கும் புலிப்பாக்கம் கிராமத்தை ஒட்டினாற் போல் புதியதாக அமைக்கப்பட்டிருக்கும் கால்வாய் வழியாகப் பாய்ந்து, நிஞ்சல் மடு என்று சொல்லக்கூடிய வாய்க்காலில் பாய்ந்து, அவ்வாய்க்கால் பாலாற்றோடு கலக்கிறது.

ஏரிப்பாசனம் என்று முறைப்படுத்தப்பட்டு, இதன் சுற்றுவட்டார கிராமங்களில், பதிவு பெற்ற பாசன பரப்பு என்றுச் சொல்லி 254 எக்டேர் அளவிற்கு விவசாயம் நடந்திருந்தாலும் கூட, தற்போது இவ்வேரி நீரினைக்கொண்டு விவசாயம் நடைபெறுவது பெருமளவு குறைந்து விட்டது என்று சொல்வதை விட நடைபெறவில்லை என்பதே உண்மை நிலை. இச்சுற்றுவட்டார மக்களின் மீன் பிடித் தொழிலுக்கான ஆதாரமாக விளங்கிக்கொண்டிருக்கும் இவ்வேரியில் அரசு மீன்பிடி துறையின் மூலமாக Fish Staking என்று சொல்லக்கூடிய மீன் வளர்ப்பு நடைபெற்றிருந்தாலும், இவ்வேரி நீர் மாசடைந்து வருவதன் காரணமாக அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த நீரினிடையே பாத்திகள் அமைத்து இறால்கள் வளர்ப்பு சிறிய பகுதியில் நடைபெற்று வருகிறது.

மீன்கள் வளர்வதற்குண்டான கால இடைவெளி விடாமல் வருடம் முழுவதும் தொடர்ச்சியாக மீன்கள் பிடிக்கப்படுவதாலும் கழிவுநீர் கலப்பதாலும் இவ்வேரியில் மீன்கள் குறைந்தே காணப்படுகிறது.  கட்டுமரங்கள், பைபர் படகுகள் மூலமாக வலை விரித்து மீன்கள் பிடிக்கப்படுகிறது. தமிழக அரசின் சுற்றுலாத்துறையின் மூலமாக செயல்பட்டு வந்த படகு குழாம் (Boat Club) சரியான பராமரிப்பு இல்லாமையால் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் அருகே அமைந்துள்ள Mahendra World City-க்கு .6 mgl (புள்ளி ஆறு மெகா காலன்கள்) அளவு நீரானது அந்நகரின் பயன்பாட்டிற்கு மின் மோட்டார் பம்புகளின் மூலமாக ஏரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து கொண்டு செல்லப்படுகின்றது. 1950களில் இவ்வேரி இரண்டாகப் பிரிக்கப்பட்டு இதன் இடையே சாலை (மண்ணாலான) அமைக்கப்பட்டு ஏரியின் கிழக்கில் அமைந்திருக்கும் கிராமங்கள் செங்கற்பட்டு நகரத்தோடு இணைக்கப்பட்டது.

இதன் தெற்கு பகுதி சிறு கொளவாய் ஏரி என்று அழைக்கப்பட்டு, இன்றைய நிலையில் அதுவும் ஆக்கிரமிக்கப்பட்டு சிறு சிறு நகர்கள் உருவாக்கப்பட்டு விட்டன. எஞ்சிய பகுதிகளில் கழிவு நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. இச்சாலையின் இடை இடையே அமைக்கப்பட்டிருக்கும் (கிழக்கு மற்றும் தெற்கு) சிறு சிறு பாலங்களின் (4 பாலங்கள்) வழியாகத்தான் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், மலைகளின் மீதும் பெய்யக்கூடிய மழை நீர் ஓடி வந்து இவ்வேரியில் கலக்கிறது. ஆனால் இதனையும் தூர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் 2 சிறிய பாலங்கள் தூர்க்கப்பட்டு இதன் ஒரு பகுதி மூடப்பட்டு விட்டன. இவ்வேரிக்கு நீர் வரத்தே இப்பகுதியிலிருந்துதான் ஆதிகமாக வருகிறது.  இதையும் தூர்த்துவிட்டதால் இவ்வேரிக்கு வரும் பெருமளவு நீர் குறைந்து விட்டதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

ஆந்த அளவிற்கு இப்பகுதிகளில் பாதுகாப்பற்ற நிலையில், இவ்வேரிக்கு நீர் வரும் வழிகள் வாய்க்கால்கள் தனியார்களாலும், பொதுமக்களாலும், எந்தவித விழிப்புணர்வுமின்றி அடைக்கப்பட்டும், தூர்க்கப்பட்டு மூடப்பட்டும் கிடப்பது இவ்வேரியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது. அதுமட்டுமல்லாமல், செங்கை நகரத்தின் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் கழிவு நீரும் மருத்துவமனை சம்பந்தப்பட்ட கழிவுப் பொருட்களும் இதில் கலப்பதால் இவ்வேரி எதற்கும் பயன்படுத்த முடியாமல் பெருமளவு மாசடைந்து விட்டது என்றே சொல்லலாம். வளர்ந்து வரும் Mahendra World City -யின் கழிவுகளும், கிழக்கு மேற்கு பகுதிகளில் விளைநிலங்களாக இருந்து, தற்போது வீடுகளாகவும், வியாபாரத் தளங்களாகவும் தொழிற்சாலைகளாகவும் மாறிக் கொண்டிருப்பதால் அதன் கழிவுகளும், எதிர் காலத்தில் இவ்வேரியில் கலந்து இவ்வேரி மாசுபட்டு, இதில் உயிரினங்களே வாழத் தகுதியற்றதாகிவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

இவ்வேரியை பல்வேறு வகையான உயிரினங்கள் தமது வசிப்பிடமாகக் கொண்டுள்ளன. மீன்கள், ஆமைகள், தவளைகள், நண்டுகள், நீர்ப்பாம்புகள், நத்தைகள், சிறுசிறு பூச்சியினங்கள், என இவ்வேரி

பல்லுயிர்களின் பெருக்கமாகத் திகழ்கிறது. புறவையினங்களில் முக்குளிப்பான் இங்கு மிகுதியாகக் காணப் படுகிறது. இதன் குஞ்சுகள் கரிய நிறத்தில் நூற்றுக் கணக்கான அளவில், ஒரே சமயத்தில் ஒன்றாக நீந்திச் செல்வது, ஏதோ ஒரு வகை மின்சாதனம் நீரில் செல்வது போல் தோன்றும்.

அதே போல் வெண்கொக்குகள் (Large, Middle, Little and Cattle Egret) இங்கு மிகுதியாகக் காணலாம். அருகில் உள்ள கிராமங்களிடையே வளர்ந்திருக்கும் மரக்கிளைகளில் இவைகள் கூடுகட்டி வாழ்கின்றன. இக்கிராம மக்கள் உணவிற்காகவும், சரியான விழிப்புணர்வின்மையாலும் இப்பறவைகளைப் பிடித்து அழித்து வருகின்றனர்.

கரிய நிற நீர்க்காகங்கள் (Little Cormorant) தன் இறக்கைகளை விரித்து வெய்யில் உலர்த்திக் கொண் டிருப்பது நாள்தோறும் காணக்கூடிய காட்சி. Night Hewn  எனப்படும் இராக்கொக்குகளும் (வக்கா) இந்நீர்நிலையின் கரைகளில் உணவிற்காகக் காத்துக்கொண்டு நிற்பதை நாள்தோறும் காணலாம்.

நீர்க்கோழிகள் எனப்படும் ஆற்று மயில் (Purple Swamphen [or] Purple Moor Hen), நாமக்கோழி (Coot), குளக்கோழி (Common Moor Hen), கானாங்கோழி, சம்பங்கோழி,  இவ்வகை நீர்ப்பறவைகள் இவ்வேரியின் ஊடாக வளரும் தாவர இலைகளின் மேல் (பெரும்பாலும் வெங்காயத்தாமரை) இரை தேடி அலையும் காட்சி இயற்கை ஆர்வலர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு. இவ்வேரியில் காணப்படும் மற்றொரு கவர்ச்சியான நீர்ப்பறவை ஜசானா (Jacana) இனப்பெருக்கம் காலத்தில் நீரின் மேல் தாவரங்களில் (Pheasnt Tailed Jacana) Jacana -கள் சட்டென்று பறந்து அமர்வது நம்மை ஈர்க்கக் கூடிய காட்சிகள்.

அதன் உணர்விற்கான தேடல் நமது பொழுது போக்காகவும், ஆராய்ச்சிக்குரியதாகவும் ஆகிவிடுகிறது.எவ்வாண்டும் இல்லாத கடந்த கடைசி பெருமழைப் பொழிவின்போது அரியவகை வாத்து வகையான Pin Tail Duck  எனும் ஊரிவால் வாத்துகளின் வருகை என்னை மிகவும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது மட்டுமின்றி பெரும் மனமகிழ்வையும் எனக்குள் ஏற்படுத்தியது.

இதோடு மட்டுமல்லாது இரை தேடியும் பல்வேறு வகையான பறவையினங்கள், குறிப்பாக Pelican எனப்படும் கூழைக்கடாக்கள் இங்கு வருகின்றன, வேடந் தாங்கல் பறவைகள் சரணாலயத்திலிருந்தும் பறவைகள் இவ்வேரிக்கு இரை தேடி வருகின்றன. இவ்வாண்டின் புதிய வருகை (2014) Painted Stroke எனப்படும் வர்ண நாரைகள், இரண்டு நாரைகளை ஏரியின் மேற்கு கரையில் பார்க்க முடிந்தது, உள்ளான் வகைகளையும் பெருமளவு இவ்வாண்டு காண முடிந்தது.

ஆனால், பெருத்த சோகம் என்னவென்றால், இப்பறவைகளை தம் சுயநலத்திற்காகவும், தனது அன்றாட செலவுகளுக்கு தேவைப்படும் பணத்திற்காகவும் (மது அருந்துவதற்கு) இவற்றிற்கு மருந்து வைத்தும், வலை விரித்தும் நூற்றுக் கணக்கான அளவில், ஒரே நேரத்தில் பிடிக்கப்பட்டு நகரத்தின் உணவகங்களில் விற்றுவிடுகிறார்கள். தமிழகத்தில் பருவ மழை பொய்த்து வறட்சி ஏற்பட்ட பொழுது பெரும்பாலான நீர்நிலைகள் வற்றி வறண்டுவிட்ட நிலையிலும், இவ்வேரியில் மட்டும் 60% நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல நீரியலாளர்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய ஒன்று.

இவ்வேரி நீரை குடிநீராக்கும் அளவிற்கான திட்டங்கள் தீட்டப்பெற்று பல ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டாலும் ஏனோ 128 கோடியில் தீட்டப்பட்ட அத்திட்டம் நடைமுறைக்கு வராமலே நின்றுவிட்டது. ஏரி நீர் வறண்ட நிலையில் விளைநிலைங்களாக இருந்து தனியார் நிறுவனங்களால் பெருமளவு விலை கொடுத்து வாங்கப்பட்ட நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் எழும்பிக் கொண்டிருக்கின்றன.

இவர்களின் பயன்பாட்டிற்கான நீர் எங்கிருந்து பெறப்படும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் எங்கு கொண்டு சென்று விடப்படும் என்பது நம்முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி.

இம்மக்களின் கழிவுப் பொருட்களை (Wastage) வெளியேற்றுவதற்கு முறையான திட்டங்கள் உள்ளதா? அதனை சரியான முறையில் செயல்படுத்துவார்களா?  நிலத்தடியில் நீர் ஊறும் பொழுது ஏரியின் நீர் மாசடையாதா? அப்படி மாசடைந்தால் ஏரியை நம்பி அதனையே தன்னுடைய வசிப்பிட வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள உயிரினங்கள் செத்து மடியாதா? அதோடு அவ்வுயிரினங்களையே உண்டு வாழும் மற்ற ஜீவராசிகள் அழிவுப் பாதைக்குச் செல்லாதா?

ஜல்லிக்கட்டில் மாடுகளும், மற்ற இடங்களில் இன்ன பிற உயிரிகளும் துன்புறுத்தப்படுவதாக அலரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஏரிகள், குளங்கள் போன்ற பல்லுயிர் பெருக்கத்தின் உயிர் சூழல்களும் உயிர்களும் அழிக்கப்படும்போது மட்டும் ஏன் குரல் கொடுக்க மறுக்கின்றன? அல்லது குரல் கொடுப்பதில்லை? இவையும் ஓர் உயிர் கொலைதானே? துன்புறுத்தல்தானே?

இப்பேரியையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள பலநூறு மீனவ குடும்பங்களின் கதி என்ன?

இந்நிலையில்தான் இக்கொளவாய் ஏரியை NLCP (National Lake Conservation Plan)  திட்டத்தின் மூலம் புனரமைக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தினூடாக செயல்படும் அமைப்பு. சென்னை மண்டலத்திலேயே முதல் ஏரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இக்குவளை ஏரியை ரூபாய் 125.19 கோடி மதிப்புடைய திட்டத்தின் மூலம் 11 அரசு சார்ந்த துறைகள் பல்வேறு பணிகளை செயல்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எந்த திட்டங்களை செயற்படுத்தினாலும், ஏரி நீர் மாசாவதற்குண்டான காரணிகளை தடுப்பது என்பது ஒருபுறம் என்றாலும். . .

இக்கொளவாய் ஏரி எனப்படும் குவளை ஏரிக்கு நீர் வரும் வழிகளான பாலங்கள், வாய்க்கால்கள், ஏரியின் வருவாய்கால் (ஏரி நிரம்பி வழியும் போது நீர் வெளியேறும் கால்வாய்) மற்றும் மலையினின்று நீர்வரக்கூடிய நிலப்பகுதிகள், அனைத்தும் தூர்க்கப்பட்டும், மூடப்பட்டும், அடைக்கப்பட்டும், மரிக்கப்பட்டும் கிடப்பவைகளை மீட்டு, அவைகளைச் செப்பனிட்டு ஒழுங்குப்படுத்தினாலொழிய, அரசு என்னதான் திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்தினாலும் அவை அனைத்தும் பயனற்றதாகிவிடக்கூடும்.

ஏனெனில் இவ்வேரியை மீட்டுருவாக்கம் செய்கிறோம் என்றுச் சொல்லி, கழிவுநீர்க் கலப்பதையும், குப்பைகள் கொட்டுவதையும் தடுத்து, கரைகளை அளந்தெடுத்து செப்பனிட்டு விட்டால், ஒரு சில ஏரிகளைப் போல மழைக்காலங்களில் மட்டும் நீர் நிரம்பி, மற்ற காலங்களில் வறண்ட ஏரியாக மாறி விடக்கூடிய சூழல் உள்ளது… மற்ற ஏரிகளைப் போல.

அது மட்டுமல்ல, இதனால் ஏரிக்கு வரும் நீரின் அளவும் குறைந்துவிடும்… ஏரியின் பரப்பளவும் பெருமளவு சுருங்கி விடும் அபாயம் உள்ளது. ஆதலால், ஏரியை செப்பனிடுவதற்குண்டான முதற்பணியே இதன் கிழக்கு, தெற்கு திசைகளில் அமைந்திருக்கும் நீர்வரத்து அதிகம் வரக்கூடிய பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளவைகளை மிகக்குறைந்த அளவே ஆக்கிரமிப்பாளர்கள் உள்ளதால் ஆரம்பகட்டத்திலேயே முனைந்து செயல்பட்டால் சுலபமாக முடியும். மீட்டெடுத்து விடலாம்.

‘‘இது அரசு சொத்து: இதனை ஆக்கிரமிக்கவோ சேதப்படுத்தவோ கூடாது: மீறினால் கடும் தண்டனைக் குள்ளாவீர்” – என்பது பொன்ற எச்சரிக்கை பலகைகளை வைத்தும், அதோடு இப்பகுதி மக்களிடையே முறையான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு, இதன் சுற்று வட்டாரங்களிலும் அதன் மேட்டுப்புறங்களிலும் பெய்யும் மழைநீர் தங்குதடையின்றி ஏரியில் வந்தடைவதற்கு உண்டான வழிகளை ஏற்படுத்த வேண்டும். இதுதான் இத்திட்டத்தின் முதற்பணியாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற திட்டங்கள் வெற்றியடைய வேண்டுமானால், நீடித்து நிலைக்க வேண்டுமானால் அரசாங்கம் இவ்வேரியைச் செப்பனிட்டு, செம்மைப் படுத்தும் போது, இவ்வேரியின் சுற்றுவட்டார மக்களையும், அத்திட்டங்களின் ஓர் அங்கமாக்கி அவர்களுடன் இணைந்து ஒரு கூட்டுப் பொறுப்பாக இத்திட்டங்களை செயற்படுத்த முன்வரவேண்டும். இதனால் ஏற்கனவே புதிய தொழிற்சாலைகளின் வரவால் தங்களின் வாழ்வாதாரமான விவசாய விளை நிலங்களை, அந்நியரிடம் இழந்து, நிரந்தரமான வேலையில்லாது, நகரத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள், கிராம பெருங்குடி மக்கள் அனைவரும் உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும் நிலை ஏற்படும்.

அரசு சார்ந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் அத்திட்டம் தன்னைச் சார்ந்தது என்ற முனைப்புடன் (தனியார்களிடம்) அளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டாலும், செயல்படுத்த பொது மக்களின் பங்களிப்பு முக்கியமானது.

‘‘எங்களது என்ற உணர்வுடன் வெகு மக்கள் பங்கேற்காத எந்த ஒரு திட்டமும் நீடித்த பயனைத் தந்ததில்லை” – என்பது நம் வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

ஏனெனில், இச்சுற்று வட்டார மக்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல தலைமுறைகளாக, இவ்வேரியுடன் வாழ்ந்து, வளர்ந்து, பழகி வருபவர்கள்.

அதோடு மட்டுமல்ல, ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல மக்கள் மட்டுமல்ல, இவ்வேரியையே வசிப்பிடமாக, வாழ்விடமாக கொண்டுள்ள பல்வேறு வகையான பறவை உள்ளிட்ட ஜீவராசிகளுக்கும் இத்திட்டங்களினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், அதன் இயல்பு தன்மை கெடாமல் அதன் வாழ்வாதாரம் பறிபோகாமல் அரசு திட்டங்களைம் தீட்ட வேண்டும் என்பது இச்சுற்று வட்டார மக்களின் விருப்பம் மட்டுமல்ல, நாட்டின் நிலையான வளர்ச்சிக்கும், வளத்திற்கும் உண்டான சரியான வழியுமாகும்.

உயிர் என்பது மனித உயிர்கள் மட்டுமல்ல, இயற்கையில் உருவான அனைத்து ஜீவராசிகளும் உயிருடையவைதான். அவைகளுக்கும் வாழ்க்கை உண்டு: அவ்வாழ்க்கைக்கு பொருள் உண்டு, இப்பூவுலகில், அப்பொருள் எக்காலத்திலும் மனித வாழ்க்கை சார்ந்து இருந்தது கிடையாது. மாறாக மனிதர்கள்தான் அவ்வுயிர்களை அந்த ஜீவராசிகளைச் சார்ந்து வாழ்கிறார்கள். பறவையியலாளர் சலீம் அலி அவர்கள் குறிப்பிட்டதைப் போல,

‘‘பறவைகள் இன்றி மனித இனம் வாழ இயலாது:

ஆனால் மனித இனம் அழிந்துபோய்விட்டாலும்

பறவைகள் தன்னிச்சையாகத் தம் வாழ்க்கையை

வாழ முடியும்”

– இது பறவைகளுக்கு மட்டுமல்ல அனைத்து உலக ஜீவராசிகளுக்கும் பொருந்தும், மனிதனைத் தவிர.

ஆனால்,  இம்மனித இனம் மற்ற எந்த உயிரினங்களையும் விட தம் உயிர் மட்டுமே மதிப்பு வாய்ந்த ஒன்று என்ற மமதையில் இன்று செயலாற்றிக்கொண்டிருப்பது தற்கொலைக்கு ஒப்பானது என்பதை நினைவில் கொண்டு நம் அனைவரின் செயற்பாடுகளும் அமைய வேண்டும்.

One comment

  1. மிகவும் அருமையான பதிவு . கட்டுரையாளர் மிக தெளிந்த சிந்தனையோடு , குவளை ஏரியின் வரலாறு , பாதிப்படைந்த விதம் , தற்போதைய நிலை , உடனடியாக செய்யப்படவேண்டிய செயல்கள் பணிகள் என்ன என்று விவரமாக அலசி ஆராய்ந்து கூறிவிட்டார் . இது அவரது தொலைநோக்கு பார்வையை தெளிவாக காட்டுகிறது .
    குவலை ஏரியில் வரும் பறவை இனங்களை அடையாளம் காட்டும்போது அவரது பறவை ஆராய்ச்சி அறிவு , அனுபவம் , வியக்க வைக்கிறது .
    கடவுள் அருளால் அனைத்தும் நன்றாக நடந்து , குவலை ஏரி சீர் செய்யப்பட்டு செங்கை மாநகரம் சீர் பெறவும் பறவை இனங்கள் பாதுகாக்கப்படவும் , அதை சுற்றி உள்ள மக்கள் வளம்பெறவும் பிரார்த்திக்கின்றோம் . தாங்கள் இதுபோல இன்னும் நிறைய கட்டுரைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி பல விருதுகள் பெற்று இமேதினில் வாழ்வாங்கு வாழ கடவுள் அருள் புரிவாராக . எம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் , வணக்கங்கள் . வாழ்க …! வளமுடன் …! நன்றி .

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s