“கருஞ்சட்டைப் பெண்கள்” நூல் விமர்சனம் – தோழர் மான்விழி, ஆத்தூர்

இன்றைய இளைஞர் சமுதாயம் திராவிடத்தின் தேவையையும் அதன் தேடலையும் கையிலெடுத்துள்ள சூழலில் வெளிவந்திருக்கும் நூல்தான் தோழர் ஓவியா அவர்கள் எழுதி, கருஞ்சட்டைப் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘‘கருஞ்சட்டைப் பெண்கள்” நூல்.

பெரியாரின் கொள்கை வழிக் குடும்பத்தில் பிறந்து, பெரியாரியலில் வளர்ந்து, மார்க்சியத்தையும், அம்பேத்கரியம் கூறும் பெண்ணுரிமையையும் கற்றுணர்ந்து, பெண்ணிய விடுதலையின் திறவுகோல் பெரியார் வழியே என்று தன்னுடைய புதிய குரல் மூலம் பல தளங்களிலும் முழங்கி வருபவர் தோழர் ஓவியா அவர்கள். நூல் முழுவதும் கடந்த நூற்றாண்டில் நிலவிய அடிமைத்தனம், அடக்குமுறை, மயக்கப்பட்ட மனிதநேயம், சமூகநீதி, பெண்ணுரிமை, பெண்கல்வி, பெண் விடுதலை எனப் பலக் களங்களிலும் பெரியார் நடத்திய போராட்டங்கள் உயிரோட்டம் போல் இழையோடுகிறது. மக்கள் சமுதாயம் பெண்ணின் தலைமையிலிருந்து ஆணின் தலைமைக்கு மாறியதை ஏங்கல்சின் எழுத்துகள் மூலமும், இந்திய மக்களின் நிலையை எழுதிய மேயோவினுடைய எழுத்தையும், அதற்கு அய்யா முத்து அவர்கள் எழுதிய ‘‘மெய்யோ, பொய்யோ?” என்ற நூலின் மூலமும், விதவை நிலைமைத் தோற்றுவிக்கப்பட்டது சாதியை நிலை நிறுத்தவே, என்பதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கூற்றுக்கள் மூலமும் விளக்கியுள்ளார்.  தோழர் ஓவியா அவர்கள். இன்றைய மரபணு சோதனையின் முன்வடிவமே பெண் ஆணின் உடைமையாக்கப்பட்ட விதம் என்பதை விளக்கியிருப்பது முற்றிலும் புதிய கோணமாகும்.

மனுதர்மம் பார்ப்பனர்கள் ஒழிந்த, மற்ற வர்ண ஆண், பெண் அனைவரையும் அடிமையாக்கி, அவ்வடிமைத் தனத்தை மீறினால், கொன்றொழிக்கப்பட வேண்டும் என்னும் அதர்மநூல் என்பதும், பெண்ணடிமைக்காகவே எழுதப்பட்ட நூல் என்பதையும் விளக்குகிறார். மநுதர்மம் பற்றி பலரும் அறிந்துள்ள நிலையில், பெண்ணடிமைத் தனத்தைத் தொல்காப்பியரே துவக்கிவிட்டார் என்பதைத் தொல்காப்பிய நூற்பாக்களின் வழியே நிறுவியிருப்பது உண்மையாகவும், ஆய்வுக்குரியதாகவும் இருக்கிறது. காந்தியார் அவர்களுக்குப் பலபட்டங்கள் வழங்கப் பட்டிருந்தாலும், ‘‘மகாத்மா” என்ற பட்டம் வழங்கியது, கவிஞர். இரபீந்திரநாத் தாகூரா? நேதாஜி சுபாஷ் சந்திர போஸா? என்ற சர்ச்சையிருப்பது நமக்குத் தெரியும். ஆனால், இந்தப் ‘‘பெண்ணுரிமையின் பிதாமகன்” என்றபட்டம் யாரால் வழங்கப்பட்டிருந்தாலும், காந்தியார் அந்தப் பட்டத்திற்கு உரியவரல்ல என்று காந்தியாருடைய வாக்குமூலங்களின் வழியே, ஆணித்தரமாக உறுதிப்படுத்துகிறார் தோழர். ஓவியா அவர்கள். ஆனாலும், அந்த சொல் வருமிடம் தோறும் உறுத்தலாகவே உள்ளது. மூன்று இணையர்களைப் பெண்ணுரிமைப் போராளிகளாக தோழர் ஓவியா முன்வைக்கிறார். ஜோதி ராவ் புலே-நாராயணகுரு, காந்தியார்-பாரதியார், பெரியார்-டாக்டர் அம்பேத்கர். இந்த அறுவரில் மதம் ஒழித்துப் பெண்ணுரிமை பேசியவர் தந்தை பெரியார் ஒருவரே என்பதை அய்யமின்றி நிறுவியுள்ளார். காந்தியாரோடு-பாரதியாரை இணைக்கும் இடங்களில் எல்லாம் பெரியாரை ஒற்றைப்படுத்துமிடத்தில், பாவேந்தர் பாரதிதாசனை வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. குஞ்சிதம்-குருசாமி இணையரின் பெண்குழந்தைக்குத் தாலாட்டுப் பாடிய இடத்தில் மட்டுமே பாரதிதாசன் குறிப்பிடப்படுகிறார்.

இந்தியாவிற்குள் தொலைந்துபோன தெற்கின் குரல்கள் பகுதியில் கருஞ்சட்டை வீராங்கணைகளின் பட்டியலைக் கொடுத்திருக்கலாம் பெரியார் குடும்பத்திலிருந்தே தன்னுடைய இயக்கத்தையும், சமூக சீர்திருத்தத்தையும் புரட்சியையும் துவங்கினார் என்பதை ஓவியா அவர்கள் அழகாக எடுத்துரைக்கிறார். அன்னை நாகம்மையாரின் தொண்டும், தலைமையும், அவர் பெற்ற சிறைத் தண்டனைகளும் வியக்க வைப்பவை, காங்கிரசின் கதர், கள்ளுக்கடை மறியல், போராட்டங்களில் சிறை சென்றதைத் தன்னுடைய கடமையாக நிலைத்ததைக் காங்கிரசு தன்னுடைய வரலாற்றில் பதிவு செய்யாமையைக் கண்டிக்கிறார் தோழர் ஓவியா அவர்கள். அன்னை நாகம்மையாரின் மறைவிற்குப் பெரியார் எழுதிய இரங்கலுரையை எத்தனை முறை படித்திருந்தாலும், இப்பகுதியில், ‘‘எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? ஓன்றும் விளங்கவில்லையே?” – என்ற வரியை படிக்கும் பொழுது மனம் கலங்குகிறது. காங்கிரசு அரசு எதிர்ப்புப் போராட்டங்களை நடத்திய பொழுது, அதே ஆங்கில அரசு ஒழிய வேண்டும் என்று கட்டுரை எழுதி, சிறை சென்ற முதல் பெண் பத்திரிகை யாளரான கண்ணம்மாள் அவர்களை காங்கிரசு தன் வரலாற்றில் பதியாததையும் சாடுகிறார் தோழர் ஓவியா அவர்கள்.

கருஞ்சட்டைப் பெண்களின் வரலாற்றில் முக்கியமான மைல்கல் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் என்பதை மிக விரிவாகவும், தெளிவாகவும் கூறும்போது, அம்மையாருடைய தேவதாசி முறை ஒழிப்புத் திருமண ஏற்பாடு. அவர் எழுதிய ‘‘தாசிகளின் மோசவலை” நூல், அவருடைய நாடகங்கள் எல்லாம் பெண்ணிய வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டதையும் விளக்கியுள்ளார் தோழர் ஓவியா அவர்கள். அம்மையாருடைய இந்தி எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை போராட்டங்கள் மட்டுமின்றி, ஆண்களுக்காக அவர் நடத்திய ‘‘கோவணப் போராட்டம்” ஆதிக்கவர்க்கத்தின் மூக்கறுத்ததோடு, அறிவுப் பூர்வமான, சுவையான போராட்டமுமாகும். கருஞ்சட்டைப் பெண்களின் பட்டியலில், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையாரை வைத்தது சற்று முரணாகத் தோன்றினாலும், அது பெரியார் கற்றுக்கொடுத்த அறமும், நேர்மையும் என்பதை தோழர் ஓவியா அவர்கள் தன்னுடைய பங்காக மெய்ப்பித்திருக்கிறார். பெண்களின் வேதகாலப் பெருமையையும், லேடி சதாசிவ அய்யரின் தலைமையையும், காந்தியாரையும் மட்டுமே தனக்கு வாய்ப்பு கிடைக்கும் உள்நாடு, வெளிநாடு, தன்னுடைய வாழ்நாள் நூல் ஆகியவற்றில் குறிப்பிடும் முத்துலட்சுமி அம்மையார், பெரியாரைப் பற்றி எங்குமே எதுவுமே குறிப்பிடாததும், டாக்டர்.அம்பேத்கரை வகுப்புதுவேஷியாக சித்தரித் ததையும் விளக்கிய ஓவியா அவர்கள் டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார் அடிப்படையில் முற்ற முழுதான சனாதனி என்பதைப் பதிவிடுகிறார்.

சுயமரியாதை இயக்க, திராவிட இயக்க வீராங்கணைகளாய் விளங்கிய மீனாம்பாள் சிவராஜ், டாக்டர் தருமாம்பாள் உட்பட மிக நீண்டப் பெண்களின் பட்டியலையும், உள்ளடக்கிய தோழர் ஓவியா அவர்களின் ‘‘கருஞ்சட்டைப் பெண்கள்” நூல்.இதிகாச கால, புராண கால கதாபாத்திரங்களிலிருந்து இன்று வந்த இறைவி படம் வரை பெண்ணுரிமையின் நிலைப்பாடுகளைக் கொண்டவர்களை ஆய்வு செய்து தரப்பட்டிருக்கும் ரூ.130.00 விலையிலான இந்த நூல், இளைஞர்கள், பாலின பேதமின்றிப் படிக்க வேண்டிய நூலாகும். நூலின் முத்தாய்ப்பாக அன்னை மணியம்மையாரின் வாழ்க்கை வரலாறு தரப்பட்டிருக்கிறது. உலகிலேயே நாத்திக இயக்கத்தின் தலைவராக விளங்கிய ஒரே பெண்மணிஅன்னை மணியம்மையார் என்பதையும், ஆட்சிக்கு வராத, வரவிரும்பாத இயக்கத்தை தலைமையேற்று நடத்தி, ஆட்சியாளர்களையும் ஆளுநரையும் கேள்வி கேட்டு நியாயத்தையும், சமூக நீதியையும் நிலைநிறுத்த அம்மையார் பட்ட துன்பங்களையும், அவமானச் சொற்களையும் வெற்றிக்கே வித்தாக்கிய, நெருப்பாற்றில் நீந்திய வரலாறு தோழர் ஓவியா அவர்களின் எழுத்தில் வெளிவந்திருப்பது ஒவ்வொரு பெண்ணும் அறிய வேண்டிய உண்மை செய்திகளாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s