மறைக்கப்படும் பரதக்கலையின் வரலாறு – வழக்கறிஞர் குயில்மொழி (The Undoing Dance by Srividya Natarajan)

“தி அண்டூய்ங் டான்ஸ்”

வித்யா நடராஜன் எனும் பரத நாட்டியக் கலைஞரால் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தைக் குறித்து ஒரு இணையதளத்தில் படிக்க நேர்ந்தது. அவரின் துணிச்சலான பதில்களும் இந்தப் புத்தகத்தின் கருப் பொருளும் என்னை உடனே ஈர்த்தது. பரதநாட்டியத்தின் வரலாற்றையும், தேவதாசி ஒழிப்பு பற்றியும் அதன் பின் பரதத்தின் இன்றைய நிலையையும் பேசுகிறது ஜகர்னட் பதிப்பம் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம்.

வித்யா அவர்கள் தஞ்சை நால்வர் வழி வந்த சங்கீத கலாநிதி திரு.கே.பி.கிட்டப்பா பிள்ளை அவர்களின் மாணவர். ஒரு நடனக் கலைஞருக்கே உரித்தான பாணியில் அவ்வளவு அழகாக ஆழமாகத் தான் சொல்ல வந்த கருத்தை சொல்லியிருக்கிறார்.

ஒரு வரலாற்றை புனை கதையின் மூலமாகச் சொல்லுவதே ஒரு கலை. தஞ்சாவூர் அருகில் இருக்கும் கல்யாணிக்கரையில் வசிக்கும் ராஜாயி, அவரது மகள் கல்யாணி, கல்யாணியின் மகள் ஹேமா ஆகியோரைச் சுற்றி நகர்கிறது கதை. 1990ல் ஹேமாவின் பார்வையில் தொடங்கி, பல்வேறு காலக்கட்டங்களில் முன்னும் பின்னுமாகப் பயணிக்கிறது.

தேவதாசிகள் ஒரு காலத்தில் கொண்டாடப் பட்டார்கள் என்பதையும், அரசர்கள் தொடங்கி அங்கிருக்கும் மக்கள் வரை அனைவரும் அவர்களை எப்படிக் கொண்டாடினார்கள் என்பதையும், அவர்களது மனைவிகள் இதனை எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்பதையும் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

ஆங்கிலேயர் காலத்தில் எப்படி இந்த முறைக்கு எதிர்ப்பு இருந்தது என்றும், சில கிருத்துவ நிறுவனங்கள் அந்தக் குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைகளை எடுத்துச் சென்று படிக்க வைத்து அவர்களுக்கு எப்படி வேறொரு வாழ்க்கை முறையை அறிமுகப் படுத்தினார்கள் என்பதையும் விரிவாக எழுதியிருக்கிறார். அன்னி பெஸன்ட் அம்மையாரின் பங்கையும் அழகாகத் தொட்டுக் காட்டுகிறது இந்தப் புத்தகம்.

1947இல் கொண்டு வரப் பட்ட தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்திற்கு எதிராக பல தேவதாசிகளே வழக்கு நடத்தியதையும், இந்த முறையை ஒழிப்பதில் டாக்டர்.முத்துலட்சுமி அம்மா மற்றும் தந்தை பெரியாரின் பங்கையும் மறக்காமல் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். தேவதாசி முறை ஒழிப்பு வரை அந்தக் கலையைக் கற்றுக் கொள்ளாத ஒரு சமூகம் எப்படி அதன் பின் இந்தக் கலையை கைப்பற்றியது என்பதை கதையின் போக்கில் இருந்து விலகாமல் சொல்லி, இன்றும் அந்தக் கலையின் நிலை எப்படி இருக்கிறது, அதன் மரபும் வரலாறும் மறைக்கப்பட்டு திரிக்கப்பட்டு இது தமிழர் கலையே இல்லை என்ற பிம்பம் உருவாக்கப்பட்டிருப்பதையும் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார் வித்யா.

ஆனால் அந்தச் சமூகத்தில் பிறந்த பெண்கள் அனைவரும் இந்த வாழ்வியல் முறையை விரும்பி ஏற்றது போல் காட்டியிருப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது. இன்றும் பல பெண் குழந்தைகள் அந்த வாழ்க்கை முறைக்கு தள்ளப் படுகிறார்கள் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்க, அந்த வாழ்வியல் முறையை இப்படிப் பெருமையாக வருணிப்பது சரி இல்லை என்றே தோன்றுதிறது. தேவதாசி ஒழிப்பு பற்றிப் பேசும் பொழுது, அந்தக் குடும்பத்தில் பிறந்து அந்த வாழ்வு முறையால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து வெளியேறி அதற்கு எதிராகப் பல போராட்டங்கள் நடத்திய அன்னை மூவாலூர் இராமாமிருதம் அம்மையார் பற்றி சொல்லியிருக்க வேண்டும். இந்தக் குறைகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த நூல் இன்னும் முழுமையாக இருந்திருக்கும் வித்யாவின் இந்த புத்தகம். இருப்பினும் பரதநாட்டியம் தமிழர் கலையே என்று அழகாக உறுதியாகச் சொல்லும் இந்த நூலை நாம் அனைவரும் ஒரு முறையாவது படிக்க வேண்டும்.    

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: