நூல் அறிமுகம் – அண்மையில் படித்த புத்தகம் – கோட்சேயின் துப்பாக்கி பத்திரமாயிருக்கிறது…

நூலின் ஆசிரியர்    :               இரா.உமா

பதிப்பகம்       :               கருஞ்சட்டைப் பதிப்பகம்.சென்னை-87

முதல் பதிப்பு              :               நவம்பர் 2018, மொத்த பக்கங்கள் 152

மொத்தம் 24 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ஒரு அருமையான முன்னுரையை ‘பாதுகாப்புக்கான துப்பாக்கி’ எனத் தலைப்பிட்டு மேனாள் மத்திய அமைச்சர், தொலைபேசியையும் அலைபேசியையும் அனைத்து மக்களுக்குமாக ஆக்கிய அண்ணன் ஆ.இராசா அவர்கள் அளித்திருக்கின்றார். ‘‘இந்நூலில் உள்ள கட்டுரைகள் பகுத்தறிவு இல்லாததால் விளையும் தீமைகளையும் பகுத்தறிவினால் ஏற்பட்ட நன்மைகளையும் பல்வேறு கோணங்களில், பல்வேறு பாத்திரங்களாகவும் பரிமாணங்களாகவும் படம் பிடித்து காட்டுகின்றன’’ என ஒற்றை வரிச்சித்திரமாக இந்த நூலைப்படம் பிடித்துக்காட்டியுள்ளார்.

‘‘கோட்சேகளுக்கு வேண்டுமானால் துப்பாக்கி முனையில் நம்பிக்கை இருக்கலாம்…எம் போன்றவர்களுக்குக் கருத்துக்களே ஆயுதங்கள்… கருத்துக்களே கேடயங்கள்’’ என ‘என்னுரை’யில் சொல்லும் நூலின் ஆசிரியர் நூல் முழுவதும் கருத்து ஆயுதங்களை மிகவலிமையாக விதைத்திருப்பதைக் காண இயலுகிறது.

‘தமிழக அரசியலின் பாட்டுடைத் தலைவன்… தலைவர் கலைஞரின் நினைவுகளோடு…’எனக்குறிப்பிடப்பட்டு கலைஞரின் புகைப்படம் புன்முறுவலோடு கட்டுரைகளுக்குள் புகும்முன் நம்மை வரவேற்கின்றது.ஹிந்தி மொழிக்கு எதிராகக் கேரளாவில், கர்நாடகத்தில் நடைபெற்ற போராட்டங்களை இணைத்து ‘நெடிய திராவிடம் எங்களின் உடமை’ எனும் புரட்சிக்கவிஞரின் பாடலையே தலைப்பாக இட்டு அடுத்த கட்டுரை போராட்டத்திற்குக் கட்டியம் கூறுகிறது.

‘தமிழன் பேர் சொல்லி மிகுத் தமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட்டாலும் பார்ப்பனர்கள் மாறுவதில்லை என்பதையும் ‘நானும் சாதியும்’ என்னும் பெருமாள் முருகன் தொகுத்த நூலின் ஒரு கட்டுரை போல தன் ஊரில் நிலவும் சாதிய மனப்பான்மையைத் தோலினை உரித்து தொங்க விட்டுள்ளார் நூலின் ஆசிரியர். அடுத்தடுத்தக் கட்டுரைகளில் ‘‘எங்கள் ஊரின் முதல் நாத்திகவாதி, பகுத்தறிவுவாதியாக, சாதி மறுப்பாளராக நான்தான் உருவாகியிருக்கிறேன்’’ என்று தன்னைப்பற்றியும் ‘‘குலசேகரபுரம் என்கிற பெருமாள்பட்டி என்னும் என் கிராமம் சுயசாதிப் பெருமையில்தான் மூழ்கிக்கிடக்கிறது’’ என்று தன் கிராமம் பற்றியும் குறிப்பிட்டு ‘‘சாதி மட்டும் இல்லையென்றால்… என் கிராமம் அழகானதுதான்’’ என்று முடிப்பது அருமை.

திராவிட இயக்கம் சாதித்ததைப் பெருமையோடும் மற்றும் ‘‘பெண் விடுதலை என்று வந்தபோது சவம் எழ பேசும் ஆற்றலுடைய சுப்பிரமணிய சிவா’’ போன்றவர்கள் எல்லாம் அமைதியாக இருந்ததையும் இன்றைய தோழர் மணியரசனைப் பற்றி ‘‘என்ன செய்வது,அவர் எப்போதும் தனக்குத் தேவையான, சாதகமான செங்கல்லை மட்டுமே உருவிக்கொண்டு வந்து காட்டுவதைத் திட்டமாக வைத்திருக்கிறார்’’ என நக்கலோடும் பட்டியலிடும் ‘‘திராவிட இயக்கம் என்னும் பெருவெடிப்பு!’’ கட்டுரையில் கரிசல்காட்டு எழுத்தாளர்களை நினைவுபடுத்துகிறார்.

இந்துமத அடிப்படைவாத இயக்கங்களின் அத்துமீறல்களைப் பட்டியலிடும் இந்த நூலுக்குத் தலைப்பாக இருக்கும் ‘‘கோட்சேயின் துப்பாக்கி பத்திரமாயிருக்கிறது’’ எனும் கட்டுரை விரிவான கட்டுரை,வீரிய மிக்க கட்டுரை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி தளபதி ஸ்டாலின் ஆகியோரின் பங்களிப்பைச் சொல்லும் ‘காவிரி போற்றுதும்’ எனும் கட்டுரை அய்யா

சுப.வீ அவர்களின் ‘மொழியும் வாழ்வும்’ எனும் நூலைப் பற்றிச் சொல்லும் ‘மொழிகளுக்குள் பகையில்லை’ என்னும் கட்டுரை ஒவ்வொன்றும் தனித்தன்மையான கட்டுரைகள்.

‘‘தங்களுக்கென ஒரு நாடில்லாத, தங்களுக்கென சொந்த வரலாறு இல்லாத ஒரு கூட்டம்’’ கீழடி அகழ்வாராய்ச்சியை மறைக்கச் செய்யும் நரித்தனங்களை விளக்கும் ‘‘வரலாற்றைப் புரட்டிப் போடும் கீழடி’’ என்னும் கட்டுரை, ‘‘மகிழ்ச்சியான மன நிலையில் கூட மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்காத மனிதர்களுக்கு நடுவில் தன் துன்பங்களுக்கு இடையிலும் மக்களைப் பற்றி சிந்தித்த அரசியலின் அற்புதம் தோழர் நல்லகண்ணு, அன்பிற்கினிய அண்ணன் எனத் தலைப்பிட்டு விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களைப் பற்றிய கட்டுரைகள் என சமகால தலைவர்களைப் பற்றிய கட்டுரைகளும் இந்த நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன.

பெண்ணுரிமை சார்ந்த ‘‘அடடா பெண்கள் மீதுதான் எத்தனைப் பரிவு’’,‘‘வேண்டாம்’’ என்றால் ‘‘வேண்டாம்’’தான் ,‘‘தீட்டுமில்லை…!புதிருமில்லை…!’’ ‘‘குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளர விடுங்கள்’’ எனும் கட்டுரைகள் பற்றி மிக விரிவாக எழுதலாம்.

இறுதிக் கட்டுரையான ‘‘உடையட்டும் மனச்சிறை!’’ எனும் கட்டுரை புதிய நோக்கில் பெண் விடுதலைக்குத் தடையாக இருக்கக் கூடிய அத்தனை செய்திகளையும் பேசுகிறது. ‘‘குடும்பம்,மதம்,சாதி,சமூகம் என அனைத்துமே ஆணுக்கானதாக இருக்கிறது’’ என்னும் குரல் ‘‘உனது கடவுள், உனது மதம், உனது இலக்கியம் என அனைத்தும் சாதியைக் காப்பாற்றுவதாக இருக்கிறது’’ எனச் சொன்ன பெரியாரின் குரலை நினைவுபடுத்துகிறது.

‘‘குழந்தைகளுக்குக் கலைஞர் தாத்தா’’ என்னும் கட்டுரை இன்றைய குழந்தைகள்,இளைஞர்கள், மாணவ மாணவிகள் மனதில் எவ்வாறு கலைஞர் அவர்கள் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் என்பதை உணர்ச்சியோடும் நெகிழ்ச்சியோடும் பகிர்ந்திருக்கும் கட்டுரை.

தமிழில் கவிதை, கதை நூல்களை விட அதிகமாக கட்டுரை நூல்கள் விற்பனையாகின்றன என்று சொல்கிறார்கள். நடப்பு அரசியலைப் பற்றியும்  நாட்டில் நிகழும் நிகழ்வுகள் பற்றியும் இளைஞர்கள் அறிந்து கொள்ள விரும்புவதும் உண்மையான வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்புவதும் அதற்கு ஒரு காரணம் எனலாம். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்த புத்தகம் இரா.உமாவின் ‘கோட்சேயின் துப்பாக்கி பத்திரமாயிருக்கிறது’ எனலாம்.

 படிக்க வேண்டிய, ஒவ்வொரு கட்டுரையாய் உள்வாங்க வேண்டிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த ‘‘கோட்சேயின் துப்பாக்கி பத்திரமாயிருக்கிறது’’ எனும் நூலாகும். படிப்போம்! பகிர்வோம்!

– முனைவர் வா.நேரு,

தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: