நிர்வாகம் – சிறுகதை – நாகை பாலு

‘‘மேம், உங்கள கூப்பிடுறாரு”

‘‘யாரு… அருண் சாரா?”

‘‘இல்ல மேம், பெரியவரு. . .”

‘‘பவுண்டரா?…”

‘‘எஸ் மேம்…”

ரீட்டா டீச்சர் பரபரப்போடு இருக்கையை விட்டு எழுந்தார். பிரின்ஸிபல் ரூமை விட்டு நிறுவனர் அறை நோக்கி நடந்தார்.

கண்ணாடிக் கதவை தள்ளியபடி உள்ளே நுழைந்த பொழுது… நிறுவனர் இருக்கைக்கு எதிரே ஆடம்பரமான அகன்ற தேக்கு மேஜைக்கு இருபுறமும் கிடந்த நாற்காலி நிரம்பியிருந்தன. வலது புற இருக்கைகளில் அருணும் கவிதாவும் அவர்களை அடுத்து மேனிலைப்பள்ளி முதல்வர் சுதாகர் ‘ப’ வடிவில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் நிறுவனருக்கு நேர் எதிரே A.O. தாட்சா இடதுபுறம் பொறுப்பாசிரியர்கள் மூவர். அலுவலக உதவியாளர் கந்தா என்றழைக்கப்படும் கந்தசாமி தட்டில் டீ குவளைகளை ஒவ்வொருவர் முன்னும் வைத்தபடி நகர்ந்து கொண்டிருந்தார்.

அறை முழுதும் நிசப்தம்.

ரீட்டா டீச்சரின் மனம் இப்போது கொஞ்சம் கனத்தது. தன் மூலமாகத்தான் நிர்வாகக் குழு கூட்டப்படும். இந்த முறை அப்படியில்லாமல் தான் ஆகக் கடைசியாக அழைக்கப் பட்டிருப்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நிறுவனருக்கு, அவருக்கு அருகில் இருந்த அருண், கவிதா, துணை முதல்வருக்கும் ஒட்டு மொத்தமாக ஒரு கும்பிடைப் போட்டுவிட்டு நிறுவனருக்கு நேரெதிரே A.O.-வுக்கு அருகில் இடது புறத்தில் இருந்த கடைசி சேரை நோக்கி நடந்த போது…

‘‘மேம், இங்க வாங்க…’’ என்ற நிறுவனரின் குரல் அவரை அங்கேயே நிற்க வைத்தது.

நிறுவனர் தயாவின் மகன் அருணுக்கும் முன்னராக, ஒரு நாற்காலி காலியாய் இருந்ததை ரீட்டா டீச்சர் அப்போது தான் கவனித்தார்.

நிறுவனர் – தாளாளர் – நிறுவனச் செயலாளர் அருணின் மனைவி – இந்த வரிசையில்…

என்னதான் முதல்வரானாலும், ஒருபோதும் அவர் நிறுவனருக்கும் தாளாளருக்கும் இடையில் அமர்ந்ததில்லை. இப்போது நிறுவனரால் சுட்டிக்காட்டப்பட்ட அந்த இருக்கை கூட நிறுவனரின் தம்பி அற்புதம் அமரக் கூடியது. பெரும்பாலான நிர்வாகக் குழுக் கூட்டங்களில் நிறுவனருக்கு இடதுபுறமிருக்கும் அந்த இருக்கையில் அற்புதம் தான் அமர்ந்திருப்பார்.

எப்போதுமே நாற்காலிகள் பிரதிநிதிகளின் பிம்பமாகிவிடுகின்றன. ரீட்டா டீச்சர் தயக்கமும் அதனால்தான். அது அவருக்குரியதாய் இதற்கு முன் இருந்ததில்லை.

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அடுத்த நாளே இந்தப் பள்ளியின் முதல்வராகப் பொறுப்பேற்று 10 ஆண்டுகள்… ஒன்பது பொதுத் தேர்வுகள். ரீட்டா டீச்சர் இப்பள்ளி முதல்வராக அவசர அவசரமாக அழைத்துவரப்பட்டதற்குக் காரணங்கள் ஏராளம்…

அத்தனைக் காரணங்களின் ஊடாகவும் ஒரு மெல்லிய இழை, அவரது உழைப்பு, கடுமை என்று கருதாத கடும் உழைப்பு.

எட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. முதல்வர் ரீட்டா ஒரு போதும் நிர்வாகத்தின் நிதி சார்ந்த கோப்புகளைப் பார்த்ததில்லை.

இந்தப் பள்ளிக்குள் முதல்வராகத்தான் நுழைந்தார். நுழைவதற்கு முன் ஒரே ஒரு நிபந்தனை ‘சார், நா அகாடமிக் சைட் மட்டும் பாத்துக்குறேன்… ஆபீஸ் நிர்வாகத்த யார்கிட்டயாவது ஒப்படைச்சிடுங்க, நா முழுசா பசங்கள மட்டும் பாத்துக்கறேன்”.

அவர் குறிப்பிட்ட ‘‘பசங்க” அந்தப் பள்ளியின் மாணவர்கள்.

அதைக் கூட அவர் ‘நிபந்தனையாக’ இல்லாமல் ‘வேண்டுகோளின்’ மெல்லிய தொணியில்தான் கேட்டுக்கொண்டார்.

மெட்ரிக் பள்ளிக்குள் நுழைந்த இரண்டாம் ஆண்டே பள்ளி மேனிலைப் பள்ளியானது. நகரின் பெயர் பெற்ற மூன்று பள்ளிகளுக்கு மத்தியில் இதன் தரம் நான்காவது இடத்தில் தான் இருந்தது. ஆண்டுக்கு ஒரு முதல்வர். வெளியேற்றப்படுவதும் வெளியேறிவிடுவதுமாக நிலையற்ற பதவி. அதில் ரீட்டா டீச்சர் ஒன்பது ஆண்டுகளாக நிர்வாகம் தந்த சம்பளத்துக்கு மேல் கொஞ்சம் கூட்டிக் கேட்கலாமே என்ற நப்பாசையோ, கொடுக்கலையே என்ற குறைபாடோ, நிராசையோ இல்லாத ஒன்பது ஆண்டுகள்.

பள்ளி விட்டு 4.30 மணிக்கே வீடு திரும்பியதாக ஒருபோதும் இருந்ததில்லை. வழக்கமாக 6.30 வரை மாணவர்களுடன் பொதுத் தேர்வு நெருங்க நெருங்க அந்த நேரம் இரவு பத்தையும் தொடும். ‘டாப்பர்ஸ்க்கு” இவற்றை ‘உலகப் போட்டியை” சந்திக்கத் தயாராகும் ஒரு கள வீரனின் உணர்வோடுதான் அவர் கடந்திருக்கிறார்.

அவரது உழைப்பை அத்தனை பேரும் ‘கடும்ம்ம் உழைப்பு’ என்பார்கள். அவருக்கோ அது ஒரு சுகமான ‘குழந்தை வளர்ப்பு’ அவ்வளவே.

‘அர்ப்பணிப்பு’ ‘அறப்பணி’ என்பதெல்லாம் ஒரு போதும் அவர் மனத்தடத்தில் பதிந்ததே இல்லை. ஒரு பெரும்பள்ளியின் பெருமையும் சிறுமையும் நம் கையில் என்ற பயம் மட்டுமே அவருக்குள் நிறைந்து கிடந்தது…

ஒவ்வொரு ஆண்டும் மற்ற பள்ளிகளின் உச்சத்தை மூன்றே ஆண்டுகளில் மூன்று பள்ளிகளின் உச்சத்தைத் தாண்டி முதல் பள்ளியானபோது தயா சொன்னது ‘டீச்சர் இந்த பெருமை நூத்துக்கு நூறு உங்களோடது…  ஒங்க உழைப்புக்கு கெடைச்ச அங்கீகாரம், என்னோடது ஒண்ணுமில்ல… மனமார்ந்த பாராட்டுகள்…”

நிறுவனரின் அந்த வார்த்தைகள் சடங்கோ சம்பிரதாயமோ அல்ல. ஒரு முதலாளியின் நோட்டையற்ற வெளிப்பாடு.

அந்த உழைப்பு ஆண்டுக்காண்டு கூடியதே தவிர குறைந்ததே இல்லை. பயனும் தான்.

திடீரென ஒரு நெருடல்.

கடந்த பத்தாண்டுகளில் இது போல் ஒருபோதும் தான் நிர்வாகக் குழுவின் கூட்டத்திற்கு கடைசியாக அழைக்கப்பட்டதில்லை…

மனம் இந்த குழப்பத்தில் மிதந்து கொண்டிருந்த பொழுதுதான் நிறுவனரின் குரல்.

‘‘சும்மா ஒக்காருங்க டீச்சர்…”

தயங்கியபடி அமர்ந்தார்.

அறையில் முழு நிசப்தம்.

எல்லோர் கண்களும் நிறுவனரின் மேல்.

‘‘மேம், நேற்று சம்பளம் வாங்கினீங்கில்ல…’’

‘‘ஆமா, சார்” அவர் கேள்வி ரீட்டா டீச்சருக்கு பிடிபடவில்லை.

ரிடையராகி, அடுத்த நாளே இந்தப் பள்ளியின் முதல்வராக அழைத்துவரப்பட்டு 10 ஆண்டுகள்… ஒரு நாளும் இப்படியொரு கேள்வியை அவர் எதிர்கொண்டதில்லை. நிறுவனர் தயாவின் குரலில் எந்தவிதக் கடுமையும் இல்லை. ஆனால், இந்தக் கேள்வி அவருக்குள் இதை தெரியாத நெருடலாய் இறங்கியது.

‘‘எண்ணிப் பாத்தீங்களா…”

‘‘ஆமா, சார். சரியாகத் தான் இருந்தது”.

‘‘குறையிலீயா. . .”

‘‘இல்ல, சார். சரியாகத்தா இருந்தது… நாற்பத்து நாலாயிரத்து இருநூற்று ஐம்பது… எண்ணிப் பார்த்தேன் சார்… சரியாத்தா இருந்தது…”

தான் ஏதோ தவறு செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்வின் அதிர்வுகள் அவர் மனத்துள் குவிந்து முகமெங்கும் படர்ந்தது…  உடலெங்கும் லேசான படபடப்பும், வியர்வையும் கட்ட…

இப்போது தயா அதிர்ந்து விட்டார்… முதல்வரை ரொம்பவும் கலவரப்படுத்திவிட்டோமோ என்ற பதைபதைப்பு…

‘‘மேடம், ஒண்ணுமில்ல. . . இப்பத்தான் சம்பளப்பட்டியல வாங்கிப் பார்த்தேன். ஒங்க சம்பளம் நாற்பத்து அஞ்சாச்சே, ஏன் 750 கொறைச்சாங்கன்னு தெரியல…  அதா உங்கள கேட்டேன்…’’

அப்பாடா. டீச்சர் சமநிலைக்கு வந்தார்.

படபடப்பு குறைந்தது.

‘‘சார், ட்வெண்டி நைன்த் மார்னிங் ஒன் அவர் பெர்மிஷன் போட்டிருந்தேன் சார்… வர்ரதுக்கு லேட்டாயிடுச்சு, சிஸ்டர் பேமிலி வந்திருந்தது, அவங்கள அனுப்பறதுல லேட்டாயிடுச்சு சார்.  பத்தே முக்காலுக்குதா ஸ்கூலுக்கு வந்தேன்… C.L. கொடுத்துட்டேன் சார். . . ‘கரஸ்’ ஸாருக்கு லீவ் மெஸேஜ் அனுப்பிட்டேன் சார். . .” வேகவேகமாக விளக்கமளித்தார்.

அவர் வார்த்தைகள் – அந்தப் படபடப்பு – அதில் வேரோடிக் கிடந்த வெகுமதிக்குரிய உணர்வோட்டம் தயாவை என்னவோ செய்தது. எந்த நிறுவனத்தில் வளர்ச்சியும் இத்தகைய உணர்ச்சிகளின் அடித்தளத்தில் தான் உரம் பெற்றுக் கிடக்கிறது… அங்கிருந்த அனைவரையும் பார்த்து சொன்னார்.

‘‘எல்லா டீச்சர்ஸும் காலையில் எட்டரைக்கு வந்து – மாலைல நாலரைக்கு வீட்டுக்குப் போகணும். இதுதா உங்களோட ஒர்க்கிங் அவர்ஸ். பிரின்ஸிபல் 8 மணிக்கு வந்து ஈவினிங் 5 மணி வரை இருந்து போகணும்… நா எத்தனையோ முறை பார்த்திருக்கேன் ரீட்டா மேடம் காலைல எட்டு மணிக்கு வந்தாங்கண்ணா ஈவினிங் ஆறரை மணிக்கு முந்தி போனதே இல்ல. இத நா பார்த்தது மட்டுமில்ல கேட்டும் உறுதிப்படுத்திட்டுதா சொல்றேன்… பிப்ரவரி வந்துட்டா தேர்வு முடியுற வரைக்கும் 8 மணி வரைக்கும் இருந்துட்டுதா போயிருக்காங்க… தேர்வுக்கு 20 நாளுக்கு முந்திலேர்ந்து பத்து மணி வரைக்கும் பப்ளிக் போற மாணவர்களோடதா அவங்க வேல….

நிர்வாகம் கொடுக்குற சம்பளத்துக்கு காலைல 8க்கு வந்து ஈவினிங் அஞ்சுக்கெல்லா போயிருக்கலாம். போனதா தெரியல. தெரியல என்ன போனதே இல்ல… இவுங்க கூடுதல் உழைப்புக்கு இந்த நிர்வாகம் என்னத்த கூடுதலா கொடுத்திருச்சு. ஒண்ணுமில்ல… கணக்கில்லாத உழைப்பு. ஆனா கணக்கா ஒரு மணி நேர தாமதத்துக்கு ஒரு நாள் சம்பளப் பிடிப்பு. கணக்குப்படி சரிதான், ஆனா நியாயப்படி?”

பேசிக் கொண்டிருந்தவர் மேஜை டிராயரை இழுத்தார்.

ஒரு வெள்ளை கவர். ரீட்டா மேடத்திடம் நீட்டியபடி…

‘‘மேம், ஒரு நாள் சம்பளம் உங்களுக்கோ நிர்வாகத்துக்கோ ஒண்ணும் பெரிசில்ல… ஆனா கணக்கில்லாம உழைக்கிற உங்க சம்பளத்துல காலணா பிடிச்சாகூட அது நிர்வாகத்துக்கு நியாயமா?’’ 

அவர் நீட்டிய கவரை எழுந்து நின்று வாங்கிய பொது ரீட்டா டீச்சரின் கண்கள் பனித்தன. அறை முழுதும் அமைதி.

சில கண மௌனத்தைக் கலைத்தது நிறுவனரின் குரல். ‘‘இது ஒண்ணும் பெரிய விஷயமில்ல… ஆனா, நியாயத்துக்கும் நிர்வாகத்துக்கும் இதவிடப் பெரிய விஷயம் எதுவுமில்ல… ரைட் மீட்டிங் முடிஞ்சுடுச்சு… லஞ்ச் அவர்… போய் சாப்பிடுங்க… தேங்க்ஸ்…” குணா எழுந்து அறைக்கு வெளியே நடந்தார். மௌனத்தின் அடர்த்தி இன்னும் குறையவில்லை, யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. ஒவ்வொருவர் மனமும் ஏதோ ஒரு கணத்தில் நெளிந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s