ஒரு குடம் தண்ணி ஊத்தி – தமிழர் விளையாட்டுகள் – பேராசிரியர் கு.முருகேசன்

கோடை காலத்தில் வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். அந்தக் கொடுமைகளை விட பெரிய கொடுமை என்னவென்றால் ஊரெங்கும் தண்ணீர் இல்லாமல் மக்கள் தொலை தூரத்திலிருந்து தண்ணீர் சுமந்துவருவதுதான் அதைவிடவும் கொடுமையாக இருக்கும். மனிதர்களுக்கே இந்த நிலைமை என்றால் இன்னும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தாவரங்களுக்கும் என்ன கதி?  மனிதன், தண்ணீர் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிவிடும் குளிர்பானத்தைப் போல ஆழ்துளை (போர்) போட்டு உறிஞ்சிவிடத் தயாராக இருக்கிறான், ஆனால் பூமியில் தண்ணீர்தான் இருப்பதில்லை. காரணம் மழை நீர் கிடைக்கும்போது அதை சேமிக்க தவறியதுதான். இன்று நாம் செய்கிற நல்ல செயல்கள்தான் நாளைய தலைமுறையை தண்ணீர் பஞ்சம், உணவுப் பஞ்சம், உறவுப் பஞ்சம் என்று பல பஞ்சங்களில் இருந்து காப்பாற்ற முடியும். தண்ணீர் என்பது மனிதனின் தனியுடைமையன்று அது மரம், செடி, கொடி, பறவைகள் மற்றும் விலங்குகள் என எல்லா உயிரினத்தின் பொது உடைமையாகும். நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவன் பாடியது நீரின் மகத்துவத்தை அறிந்ததாலும் அதை உலகிற்கு பறைசாற்றவும் தான். நாம் எதை சொன்னாலும் இந்த காலத்துப் பிள்ளைங்க விளையாட்ட எடுத்துகிறாங்க என்பது தான் இன்றைக்கு பல பெரியவர்களுடைய கவலையாக இருக்கிறது. நம் அடுத்த தலைமுறைக்கு நீரின் மகத்துவத்தை அவர்கள் பாணியிலேயே விளையாட்டாக எடுத்துச் சொல்வோம், ஒரு விளையாட்டின் மூலமும் எடுத்துச் சொல்வோம்.

இன்று ஒரு குடம் தண்ணி ஊத்தி என்னும் விளையாட்டை எப்படி விளையாடுவது என்று பார்ப்போம். இந்த விளையாட்டு விளையாட ஆறு வயதிலிருந்து பத்து வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள் குறைந்தது மூன்று பேர் தேவை. அதிகமான பிள்ளைகள் இருந்தால் விளையாட்டு இன்னும் களைகட்டும்.இந்த விளையாட்டை பெரும்பாலும் பெண் பிள்ளைகள் விளையாடுவார்கள், கால மாற்றத்தின் காரணமாக எங்கள் ஊர் பகுதிகளில் பாலின பேதம் அறியாத சின்ன வயதில் ஆண் பிள்ளைகளும் சேர்ந்தே விளையாடி இருக்கிறோம். இதை உள்ளேயும் விளையாடலாம் அல்லது திறந்த வெளியில் வெளியிலேயும் விளையாடலாம்.

இந்த விளையாட்டை விளையாட வரும் பிள்ளைகளில் சாட் பூட் திரி அல்லது இங்கி பிங்கி பாங்கி என்று ஏதோவொரு முறையில் முதலில் இருவரைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். அந்த இருவரும், எதிர் எதிரே நின்று கைகளை உயரத் தூக்கிக் கோர்த்துக் கொண்டு நிற்பர். அது பார்ப்பதற்கு வீட்டுக்கூரை அல்லது  V யை தலைகீழாகப் பிடித்த மாதிரி இருக்கும்.

விளையாட்டில் உள்ள மற்ற எல்லாச் சிறுவர்களும் ஒருவர் பின் ஒருவராக, முன்னிருப்பவரின் சட்டையைப் பிடித்துக்கொண்டு, ஒரு சங்கிலி தொடர்போல வரிசையாக நின்றுகொள்வார்கள். பின்பு இவர்கள் அனைவரும் இரண்டு கைகளை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருப்பவரின் கைகளுக்கு இடையில் நுழைந்து 8 போல் வளைந்து எல்லாரும் சேர்ந்து  கீழ்க்காணும் பாடலைப்பாடிக்கொண்டே வெளியில் வருவர்.

“ஒரு குடம் தண்ணி ஊத்தி, ஒரே பூ பூத்துச்சாம்…

ரெண்டு குடம் தண்ணி ஊத்தி, ரெண்டே பூ பூத்துச்சாம்…

மூணு குடம் தண்ணி ஊத்தி, மூணே பூ பூத்துச்சாம்…

நாலு குடம் தண்ணி ஊத்தி, நாலே பூ பூத்துச்சாம்…”

-இப்படி எல்லோரும் பாடிக்கொண்டே, இருவர் கைகளுக்கு நடுவில் புகுந்து வெளியில் வருவார்கள். அப்பொழுது பாடலில், “பத்துக் குடம் தண்ணி ஊத்தி, பத்தே பூ பூத்துச்சாம்” என்று பாடி முடிச்சதும், அந்த நேரத்தில் கைகளைக் கோர்த்தபடி நின்றிருக்கும் இருவரும் சட்டெனத் தமது கைகளைக் கீழே இறக்கி பாடிக்கொண்டு வரும் பிள்ளைகளில் ஒருவரை அவர்களின் கைக்கு நடுவில் சிறைபிடித்துக் கொள்வார்கள்.

அப்படி மாட்டிக்கொண்ட சிறுவனையோ அல்லது சிறுமியையோ விடுவிக்க, எல்லாக் குழந்தைகளும் கீழ்க்காணும் பாடலை பாடிக்கொண்டு போய்க் கேட்பார்கள்.

இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா (சிறிய அளவு கையால் காட்டப்படும்) பின்பு சிறைபிடித்த பிள்ளைகள், “விட மாட்டேன் மலுக்கா” என்பார்கள்.

இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (சற்றுப் பெரிய அளவு கையால் காட்டப்படும்) இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (இன்னும் பெரிய அளவு கையால் காட்டப்படும்) இப்படியாக அளவை அதிகரித்துக்கொண்டே சென்று ஒரு பெரிய அளவாக வரும்பொழுது, பிடித்திருப்பவர்கள், பிடிபட்டவன் சிறுவனாயிருந்தால், உன் பெண்டாட்டி பெயர் என்ன என்பார்கள். அவன் அங்குள்ள சிறுமிகளின் பெயர்களில் ஒன்றைச் சொல்லவேண்டும். எல்லோரும் சிரிப்பர். அப்பொழுது அகப்பட்டவனை விட்டுவிடுவர். அதேபோல, பிடிபட்டவர் சிறுமியாயிருந்தால்,உன் புருசன் பெயர் என்ன என்பர்கள். அவள், அங்குள்ள சிறுவர்களின் பெயர்களில் ஒருவன் பெயரைச் சொன்னதும் அனைவரும் சிரிப்பார்கள். அந்த நேரத்தில் பிடிபட்டவர் விடுவிக்கப்படுவார். இந்த விளையாட்டை விளையாடினால் விளையாடுபவர்களின் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். அதுதான் விளையாட்டின் முக்கிய பயன். இந்த விளையாட்டின் வெற்றி என்பது பெரியவர்கள் படித்து சிறியவர்களை இந்த விளையாட்டை விளையாடச் சொல்லிக்கொடுப்பதிலும் அவர்களை விளையாட அனுமதிப்பதிலும்தான் அடங்கியிருக்கிறது.

பொதுவாகச் சிறுவர்கள் ஒரு விளையாட்டை பாட்டு பாடி விளையாடும் பொழுது அவர்கள் பாடும் பாடலின் லயம் தாளத்தோடு சேர்ந்திருக்கும்படி அமைந்திருக்கும். இது கிராமப்புற சிறுவர்கள் தம்மை அறியாமலேயே இசையை கற்றுக்கொள்ள வழிவகுக்கும்.

இன்றைய குழந்தைகளுக்கு விளையாட்டுனு சொன்னதும், சட்டுனு ஞாபகத்துக்கு வருவது வீடியோ/செல்போன் கேம்ஸ்தான். மைதானங்களிலும் தெருக்களிலும் ஓடியாடி விளையாடும்  விளையாட்டுகள் அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த வீடியோ கேம்ஸ்கள் எல்லாம்  கோபம்,சுயநலம் ,வன்மம் தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் போன்றவற்றை கற்றுகொடுப்பதே இல்லை. ஆனால் நமது பராம்பரிய விளையாட்டுகளான,ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சாம் என்னும் விளையாட்டு பல்லாங்குழியைப் போல  கணித அறிவை வளர்க்கும்.அதனால் இன்னிக்கும் பெரியவர்கள் மனக்கணக்கில் புலியாக இருப்பதை காண முடிகிறது.

இது போன்ற நமது பாரம்பரிய விளையாட்டுகள் இயற்கையோடு ஒன்றியிருப்பதால், நம் உடலை வியர்க்க வைத்து ஆரோக்கியம் அளிப்பதுடன் அது குழந்தைகளின் அறிவு,திறமை,தைரியம்,உடல் வலிமை,மனவலிமை, சுயமுயற்சி, தன்னம்பிக்கை,குழு ஒற்றுமை போன்ற பல்வேறு நற்பண்புகளை வளர்க்கிறது. நமது பாரம்பரிய விளையாட்டுகளை நம் குழந்தைகள் தெரிந்து கொண்டால்,  அவர்கள் அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடும் போது நல்ல நட்பு உருவாகும். அது நமது பிள்ளைகளை நல்வழிப்படுத்தும்.

குறிப்பாக இந்த ஒரு குடம் தண்ணி ஊத்தி விளையாட்டின் பயன் என்னவென்றால்? கடைசிப் பையன் சிறையில் இருப்பது போல் இருப்பான். மற்றபிள்ளைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவர்களின் சார்பாக ஒரு தலைவன் சென்று, சிறைபிடித்து வைத்த சிறுவர்களிடம் சென்று  மீட்பதற்கு முயற்சி செய்வான். இது ஒரு தலைவனை உருவாக்குகிறது. தலைவன் என்பவன் மக்களில் இருந்தே தோன்றுகிறான், மக்களுக்காகவே தோன்றுகிறான் தலைவனின் இலக்கணத்தை பிள்ளைப் பருவத்திலேயே சொல்லிக்கொடுக்கும் இந்த விளையாட்டு. தலைவன் சிறைப்பிடித்திருப்பவரை பார்த்து, “இம்புட்டு பணம் தரோம் விடுடா துலுக்கா” என்று காலிலிருந்து தலைவரை சிறிது சிறிதாகக் காட்டுவான் தலைவன். சிறைப்படுத்தியவர்கள் “விடமாட்டோம் மலுக்கா” என்று பாடுவார்கள். பணத்திற்குப் பதில் “இம்புட்டு நகை தரோம் விடுடா துலுக்கா” என்பர். சிறைப்படுத்தியவர்கள் “விடமாட்டோம் மலுக்கா” என்பார்கள். கடைசியாக “ராஜா மகளைக் கட்டித் தரோம் விடுடா துலுக்கா” என்று பாடியதும் “விட்டுடறோம் மலுக்கா” என்று விடுவித்து விடுவார்கள். இதேமாதிரி இந்த விளையாட்டு தொடர்ந்து நடைபெறும். இது ஒருகாலத்தில் அதிகார பலம் கொண்ட முகம்மதியர்கள் வன்முறை மூலம் தாம் விரும்பிய பெண்ணைச் சிறைப்படுத்தியதையும், அவர்களை விடுவிக்கப் பெரியோர்கள் பணம், நகை முதலியவற்றைக் கொடுத்ததை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று முகம்மதியர் காலத்தில் நடைபெற்ற போராட்டத்தை விளக்குவதாகவே, இப்பாடல்கள் அமைந்துள்ளன. இந்த விளையாட்டில் வரும் நிலைமை இன்றும் ஒரு நாட்டின் விமானப்பயணிகளை கடத்தி தீவிரவாதிகள் சிறைபிடித்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு வேண்டியவர்களை அரசாங்கச் சிறையில் இருந்து மீட்டுச்செல்லும் பேரத்தைப் போன்று உள்ளது. இந்த விளையாட்டு நிஜத்தை பிள்ளைகளுக்கு விளையாட்டாகவே சொல்லித் தருகிறது.

தன்னோடு இருப்பவன் ஒரு சிக்கலில் சிக்கிக்கொண்டால் அவனை அதிலிருந்து மீட்கச் சொல்வதும், ஒவ்வொரு குடமாக நாம் தண்ணீர் ஊத்துவதற்கேற்ப பூக்களின் எண்ணிக்கை இருக்கும் என்பது நமது உழைப்புக்கு ஏற்றாற்போலத்தான் நமக்கு பயன்கிடைக்கும் என்ற புரிதலையும் உண்டாக்குகிறது. இந்த விளையாட்டில் பாடும் பாட்டு தாவரத்திற்கும் மனிதர்களைப்போல தண்ணீர் அவசியம் என்பதையும் லாவகமாகச் சொல்லிகொடுக்கும் இந்த விளையாட்டு பிள்ளைகளின் பாடும் திறமையையும் வளர்க்கிறது. இன்றைக்குத் தமிழக கல்வி அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் அறிவித்திருக்கிறபடி பள்ளி மாணவர்கள் ஒரு செடியை வைத்து வளர்த்தால் அதற்கு அவர்களுக்கு ஐந்து மதிப்பெண்கள் கொடுக்கப்படும் என்பதைப் போலவே நமது பாரம்பரிய விளையாட்டுக்களையும் பள்ளிகளில் விளையாட ஊக்குவிக்கும் விதமாக ஏதேனும் நடவடிக்கை மேற்கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

பெற்றோர்களே, நாடும் வீடும் சேர்ந்து விளையாட்டை பிள்ளைகளின் வாழ்வில் ஒரு அங்கமாக்குவோம். அதனால் அவர்களுக்கு உடல் நலத்தையும் மன நலத்தையும் ஆரோக்கியத்தையும் சொந்தமாக்குவோம். 

– இன்னும் விளையாடலாம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s