கோமாதாவ வித்துடுவீங்களா? –ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து, லண்டன்

Multiple question marks on paper

அதிகாலையிலேயே இல்லம் பரபரத்துக் காணப்பட்டது. எப்போதும் சூரியன் கிழக்கே உதித்த பின்னே எழும் சுட்டிப்பையன் ‘பகலவன்’ இன்று மட்டும், மறக்காமல் கடிகாரத்தில் அலாரம் வைத்து எழுந்திருக்கிறார். எல்லாமே காரணமாகத்தான். இன்று ‘பகலவன்’ பள்ளியில் மிருகக்காட்சி சாலைக்குச் செல்ல இருக்கிறார்கள். பகலவனின் குட்டி நாய் அங்கும் இங்கும் ஓடி ஆடி தன் ஆனந்தத்தை இல்லம் முழுதும் தூவிக் கொண்டிருந்தது. பகலவன் தன் வேலைகள் பலவற்றைத் தானே செய்யும் அளவுக்கு பழக்கப்பட்டவர். ஆகையால், பல் விளக்கி, குளித்து, பள்ளிச் சீருடை அணிந்து, புத்தகப் பையை எடுத்து, புத்தகங்களையும், நோட்டுப் புத்தகங்களையும் வெளியே எடுத்து வைத்துவிட்டு, சுற்றுலாவிற்கு தேவையான பொருள்களை, சிற்றுண்டிகளை எடுத்து வைக்கிறார். இதையெல்லாம் பொறுமையாகக் கவனித்து வந்த அம்மா, ”பகலவா! சுற்றுலா போகப்போறீங்க. அதனால சரியான நேரத்துக்கு எழுந்து கெளம்பிட்டீங்க போல” என்கிறார். பகலவன் அம்மா சொன்னதை கேட்டுச் சிரித்துக் கொண்டே, “ஆமாம் அம்மா” என்கிறார்.

அதிகாலை நேரம் என்பதால், சுற்றிலும் ஒலி இல்லாச் சூழல்.அந்த வைகறைப் பொழுதில் கேட்டுக் கொண்டிருந்த ஒலிகள் என்பவை, குயில் கூவும் ஒலி, தோட்டத்தில் எருமை மாடுகளின் ஒலி, இல்லத்தில் தந்தையின் குறட்டை ஒலி, செல்லப் பிராணி நாயின் முனகல் ஒலிகளே. பள்ளி வாகனம் வருகிறதா என்று நிமிடத்திற்கு 60 முறை வெளியே வந்து பார்க்கிறார் பகலவன். சிறிது நேரம் கழித்து, வெகு தூரத்தில் பள்ளி வாகன ஒலிப்பான் ஒலிக்கும் ஒலி கேட்கிறது. இதைக் கேட்டவுடன், பகலவன் தன் பையை எடுத்துக் கொண்டு வாசல் வருகிறார். பள்ளி வாகனமும் இல்லம் வந்து சேர்கிறது. பகலவன் வாகனத்தில் ஏறி, அம்மாவுக்கு டாட்டா காட்டிவிட்டு வாகனம் உள்ளே செல்கிறார். வாகனம் விடைபெறுகிறது. கிழக்கில் உதித்த சூரியனின் ஓளிக்கீற்று இப்போதுதான் மெல்ல பகலவன் வசிக்கும் தெருவை தொட்டுப் பார்க்கிறது.

பள்ளி வாகனத்தில் பல மாணவர்களும் குதூகலமாக பாட்டுப்பாடி, ஆட்டம் ஆடி மகிழ்கின்றனர். பகலவன் அருகே சாய் அமர்ந்து இருக்கிறார். சாய் தான் கொண்டு வந்த, கோக், Fries, மற்ற தின்பண்டங்களை பகலவனிடம் காட்டுகிறார். பகலவன் தான் கொண்டு வந்த, பழங்கள், பழ ரசம், பால், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை சாயிடம் காட்டுகிறார். இருவரும் தம்தம் தின்பண்டங்களை பரிமாறிக்கொள்கின்றனர். பகலவனுக்கு கோக் பிடிக்காது என்றாலும், கண்ணியம் கருதி, நண்பன் தந்ததை அருந்தினார்.

பகலவன் கொடுத்த பால் புட்டியை வாங்கி அருந்திய சாய், “இது என்னடா? டேஸ்ட் வேறமாதிரி இருக்கு? இது ஆட்டுப்பாலா? மாட்டுப்பாலா?” என்று வினவுகிறார்.

பகலவன், “இது ஆடு இல்லை. மாடுதான்” என்கிறார்.

சாய், “மாட்டுப்பாலா? அப்பறம் ஏன் டேஸ்ட் ஒரு மாதிரி இருக்கு?” என்று கேட்கிறார்.

பகலவன், “இது எங்க வீட்டில வளர்க்கிற எருமை மாட்டு பால்டா?” என்கிறார்.

இதைச் சொன்னதுதான் போதும், சாய் முகம் எண்திசையும் திரும்புகிறது; ஒருவித பதற்றம் தெரிகிறது; அருவருப்புடன், கேட்காததை கேட்டதை போல, குடிக்கக் கூடாததை குடித்ததை போல, முகத்தைச் சுளித்துக் கொண்டே, வாயில் கை வைத்துக்கொண்டே வாந்தி எடுக்கிறார் சாய்.

சாய் ஏற்படுத்திய களேபரத்தில் பள்ளி வாகனத்தை நிறுத்தி, சாயையும், வாகனத்தையும் சுத்தம் செய்து, சரி செய்துகொண்டு கிளம்ப, அனைவருக்கும் அரை மணி நேரம் விரயமாயிற்று.

வாகனத்தில் ஏறியதும், சாய் பகலவனைப் பார்த்து, “ஏண்டா, உங்க ஆத்துல கருப்பு பிராணியான எருமை மாட்டையா வளர்க்கறீங்க? அந்த எருமை மாட்டுப் பாலையா குடிக்கறீங்க?” அப்டின்னு முகத்தில் ஒவ்வாமையை ஒளித்து வைத்துக் கொண்டே வினவுகிறார்.

பகலவன், “ஆமாம். எங்க வீட்டில கோழி இருக்கு. அது வெள்ளை, சிகப்பு, பழுப்பு நிறத்தில இருக்கு. ஆடும் இருக்கு. ஆடு வந்து வெள்ளை,கருப்பு, பழுப்பு நிறத்தில இருக்கு.

மாடும் இருக்கு. அது கருப்பு, வெள்ளை நிறத்தில இருக்கு. ஏண்டா கேக்கற?”

இதைக் கேட்ட சாய், “எப்படிடா? கருப்பு எருமை மாட்டு பாலை குடிக்கிற?” என வினவ,

குதூகல உணர்வில் இதைக் கேட்ட பகலவன், தன் பையில் இருந்த, எருமைப்பால் புட்டியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, “பால் புட்டியை இரண்டு கையால் இப்படி பிடிக்கணும். அப்பறம் பால் புட்டியை இப்படி வாயில் வெக்கணும்”

மடக் மடக் மடக் என மூன்று வாய் குடிக்கிறார் பகலவன்,

“இப்படிதான் குடிக்கிறேண்டா” என சிரித்துக்கொண்டே சொல்கிறார்.

அருகில் இருந்த நண்பர்களும் இதைக் கண்டு சிரிக்கின்றனர்.

தொடர்ந்த பகலவன் ,”மாடு கருப்பா? பால் வெள்ளையா? அப்படிங்கறதா முக்கியம்? குடிக்கறது சத்தானதா அப்படிங்கறதுதான முக்கியம்?”

 சாய், “அதுக்காக கருப்பு மாடாஆஆஆஆ…. ” என இழுக்க.

பகலவன், “எருமை மாட்டுப் பாலில் பசும் பாலை விட கொழுப்புச் சத்து அதிகம்டா”

சாய் இதுதான் சமயம் என்று, சிரித்துக் கொண்டே, பகலவனைக் கேலி செய்ய, “அப்ப உனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்லு” என்கிறார்.

பகலவனும் சிரித்துக் கொண்டே, மறுமொழியாக, “எனக்காச்சும் எருமை பால் குடிக்கறதால சத்தான கொழுப்பு அதிகம்டா. மாடு கருப்பா இருக்குன்னு அந்த பாலை குடிக்கக் கூடாதுன்னு களேபரம் பண்ற உனக்கு எவ்ளோ ‘கொழுப்பு’ இருக்கும்?” எனச் சொல்ல வாகனத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் சிரிக்கின்றனர்.

பகலவன் தொடர்ந்து, “அது மட்டும் இல்ல சாய். எருமை மாட்டுக் கறியில் புரதச் சத்து அதிகம் உள்ளது. இதிலயும் பசு மாட்டை காட்டிலும் எருமை மாடு சிறந்தது. அது மட்டுமா? பசுவின் வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் எருமையின் வளர்ச்சி விகிதம் அதிகம்டா. இதெல்லாமே சயின்ஸ்(Science) சாய், சயின்ஸ்(Science)” என்கிறார்.

சாய், “என்னது? பாலே ஓவர்ங்கிறேன். இதில கறி வேறயா? நாங்கள்லாம் ஆச்சாரமான குடும்பம்டா, எங்க ஆத்துலல்லாம் காயிலேயே கீழ் ஜாதிக் காயான இஞ்சி, பூண்டு, வெங்காயம் இப்டி மண்ணுக்கு கீழே வெளயுற அநாகரிகப் பொருளை சமையல்ல சேக்க மாட்டோம்.”

பகலவன், “அப்பறம்”

சாய், “அப்பறம், அநாகரிக உணவான கோழி, மீன், கறி இப்படி எந்த உணவையும் சாப்பிடவே மாட்டோம். அதிலயும் பசு புனிதமானது. தாய் மாதிரி. அத நெனச்சி கூடப் பாக்கக் கூடாது.”

பகலவன், “ஏண்டா, நீ சொன்ன கறி எல்லாமே சத்தான உணவுதானே. உலகத்தில மனுசங்க எண்ணிக்கை அதிகமாயிட்டே இருக்கு. விவசாய நிலம் கொறஞ்சிட்டே இருக்கு. விவசாயம் செய்யற மக்கள் எண்ணிக்கையும் ெகாைறஞ்சிகிட்டே இருக்கு. அப்ப இப்படிப்பட்ட கறிதான மனிதன் உயிர் வாழ ஏதுவா  இருக்கும்? வெறும் காத்தை சாப்பிட்டு உயிர் வாழ முடியுமா?” என வினவுகிறார்.

சாய், “அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆச்சாரம், பழக்க வழக்கம், அய்தீகம் அப்டின்னு எங்க வீட்டில இதெல்லாம் சாப்டறது கெடயாது. ஒரே ஒரு பசு மாட்டை மட்டும் வெச்சு இருக்கோம். பாலுக்காக. அந்த பசுதான் எங்களுக்கு கோமாதா. எல்லாமே!”

பகலவன், “அது சரிடா, ‘கோ’மாதாவோ, ‘கோக்’மாதாவோ, ஏதோ ஒன்று, உங்க பசு மாடு பால் கறக்கறத நிப்பாட்டிட்டா, பசு மாட்ட என்னடா பன்னுவீங்க?”

சாய், “அப்பறம் அந்த பசு மாடு ஈஸ் ஜஸ்ட் வேஸ்ட்தான், யாராவது கறிக்கு வேணும்னு வந்து நல்ல வெலைக்கு கேஷ் கொடுத்து வாங்கிட்டு போயிடுவாங்க. நாங்களும் பசு மாட்ட வித்துடுவோம்.” எள்ளலுடன் பகலவன், “என்னது கோமாதாவ வித்துடுவீங்களா?” என்ற உடன், வாகனத்தில் இருந்த அத்தனை மாணவர்களும் கொல்லென இடைவிடாமல் அலை அலையாய் சிரித்துக் கொண்டு இருக்கின்றனர்.  சாயும் சிரிப்புக் கடலில் மூழ்குகிறார்.            

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: