ஆன்லைன் வதந்தி – மு.சி.அறிவழகன்

மக்களிடம் அறிவியல் மனப்பான்மை வளர வேண்டுமென்றால் அறிவியல் தகவல்களும், அறிவியல் விழிப்புணர்வும் மக்களைச் சென்றடைய வேண்டும். மக்களிடம் அறிவியல் மனப்பான்மை வளர வேண்டும் என்கிற நோக்கில் தான் சமூக வலைதளங்கள் உருவாக்கப்பட்டதாக நான் பொருள் கொள்வேன்.

ஆனால்,

இன்றோ, அப்படி சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுகிறது என்று சொன்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் நான் இல்லை. காரணம், சமூக வலைதளங்களில் பெரும்பாலும் பயனுள்ள தகவல்களைத் தவிர்த்தே பதிவுகள் வருவதை நாம் அறிவோம். இதனுடைய பயன்பாட்டாளர்கள் அதிகரித்தே வந்தாலும், அவற்றின் பயன்பாடு நல்ல வழியில்  சென்று கொண்டு வருவதை மறுக்க இயலாது. அதுமட்டுமல்ல  மக்கள் மத்தியில் ஒரு வதந்தியை ஏற்படுத்தக்கூடிய ஓர் செயலாகவே இன்று நடந்து வருகிறது.

நம்முடைய பாட்டிக் காலத்தில் எல்லாம் நான்கு ஐந்து கிழவிகள் ஒன்று சேர்ந்து விட்டால் ஊர்க் கதை, உலகக் கதை எல்லாம் பேசுவார்கள் என்று கேள்விப்பட்டு இருப்போம். அவர்கள் பேசும் போது அவர்கள் கேட்ட செய்தியை அப்படியே சொல்லாமல் சில செய்திகளைச் சேர்த்து சின்ன செயலை பெரியதாக நடந்த செயல் போல் சொல்வார்கள்.

“ஊர் வாயை மூடினாலும் ஊர்க் கிழவி வாயை மூட முடியாது” என்பது போல இன்று சமூக வலைதளங்களில் பரப்பும் செயல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உண்மையான நிகழ்வுகளை உரிய நேரத்தில் தந்தால் அவை சிறப்பு. அதைவிடுத்து சில செய்தி ஒரே ஆண்டில் பல முறை வருவதைக் கண்டிருப்போம்.

என்னுடைய நண்பர் ஒருவருக்கு O+ve இரத்தம் தேவை என்று தொடர்பு எண் போட்ட செய்தி வரும், அதை பார்க்கிற ஒவ்வொருவரும் ஒரு பகிர்வைப் போடுவார்கள். காரணம், அந்த இடத்திலே அவர்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று மட்டுமே நினைப்பார்கள்.

ஆனால், அந்தச் செய்தியோ வருடக் கணக்கில் மக்கள் மத்தியில் சென்று கொண்டிருக்கும். இதனால், ஒரே செய்தி பல முறை வருவதைக் காணும் பலர் அதை ஒரு பொருட்டாகவே பார்ப்பது இல்லை. இதனால், சரியான நேரத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கும் தகவல் (Message) ஆனது சென்றடைவது இல்லை. அதுபோலவே தான், ஒரு பள்ளி வாகனம் இந்தப் பகுதியில் விபத்தில் சிக்கியது.

அதில் உள்ள குழந்தைகளுக்குக் காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஏற்ற இரத்தம் தேவை என்று ஒரு செய்தி, பல முறை வருவதையும் காண்போம். அதைப் பார்க்கும் சிலர் பதறிய நெஞ்சத்துடன் சென்று பார்ப்பதும் உண்டு. அப்படிப் பதறி அடித்துகொண்டு பார்த்தால் அங்கு அப்படி ஒரு நிகழ்வே நடந்திருக்காது. இது போன்ற நிகழ்வுகள், தேதி, நேரம் குறிப்பிடாமல் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

இரத்தம் தேவை, விபத்து ஏற்பட்டது என்று குறிப்பிடுபவர்கள் தயவு செய்து தேதி, நேரம் போன்றவற்றை போட்டு வெளியிட்டால் இது போன்ற வதந்திகள் வெளிவருவது குறையும். இரத்தம் தேவைப்படுவோர் இரத்தம் தேவைப்படுவோரின் பெயரையும் அவரின் முகவரியையும், அவர் இந்த மருத்துவமனையில் உள்ளார், அவருக்கு இந்தப் பிரிவு இரத்தம் இந்நாளில் தேவை என குறிப்பிட்டுப் போட்டால் அவை நிச்சயம் அவர்களுக்குப் பயனுள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.

அதுமட்டுமல்லாமல் இதுபோலவே, பல செய்திகளையும் காண்போம். அது என்னவென்றால் இந்தச் செய்தியை நீங்கள் பத்து பேருக்கு பகிர்ந்தால் உங்களுக்கு நல்ல காரியம் நடக்கும் என்னும் சேதியையும் கண்டிருப்போம்.

அதுபோல ஒரு செயல் நடக்கும் என்றால் உடல் உழைப்பும், மன உழைப்பும் படிப்பும், கல்வியும் ஏன்..? இன்றைய அறிவியல் உலகில் அறிவியலையும் இப்படிப் பயன்படுத்தினால் நாம் படித்து என்ன பயன்.? அதுமட்டுமா.? இந்த செய்தியைப் பத்து பேருக்குப் பகிர்ந்தால் உங்கள் போனுக்கு பணம் வரும் என்றெல்லாம் செய்தி வரும்.

சற்று யோசித்துப் பாருங்கள், நாம் பேசக்கூடிய அழைப்புகளுக்கே ரேட்கட்டர் போட்டு பேசிக்கொண்டு இருக்கும் காலகட்டத்தில் இலவசமாக 300 ரூபாய் பணம் என்று சொல்லி, அதை அனைவர் மத்தியிலும் பகிர்ந்து மற்றவர் நேரங்களை வீணாக்கலாமா என்று சற்று யோசிக்க வேண்டாமா..?

சில இணையதள விற்பனை நிலையங்கள் “இந்தப் பொருளை வாங்க, இதனுள் சென்று முன்பதிவு செய்தால் குறைந்த விலையில் இந்தப் பொருளானது உங்களுக்குக் கிடைக்கும்” என்று செய்தி வரும். நாம் அனைவரும் குறைந்த விலைக்கு ஒரு பொருள் கிடைக்கும் போது, அதை ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.? என்று எண்ணி அதனுள் சென்று முன்பதிவு செய்வோம். அது மட்டுமல்லாமல் அதனை நம்முடைய நட்பு வட்டாரத்தில் பகிரவும் செய்வோம்.

அவர்களும் அதனைப் பகிர்வார்கள்; முன்பதிவு செய்வார்கள்; அவ்வாறு செய்யப்பட்ட பதிவுகளானது இறுதியில் பல வருடங்களாக சுழன்று வரும், திடீரென பார்க்கும் ஒருவர் பதிவு செய்வார்.ஆனால், அது சலுகையில் கிடைக்காது. காரணம், சலுகை காலம் முடிந்தது என்ற செய்தி வரும்.

இது போன்ற செய்திகளை வெளியீடு செய்யும் போது, இதுவரை மட்டும் தான் இதனுள் முன்பதிவு செய்ய முடியும் என்று குறிப்பிட்டு பதிவுகள் போட்டால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வாக அமையும். அத்துடன் அந்த செய்தி மற்றவர்களைச் சென்றடையாமல் இருக்கும்.

இதையும் தாண்டி ஓர் கடவுள் படம் போட்டு, இதை நீங்கள் பார்த்தால் நிச்சயம் பலருக்கு அனுப்ப வேண்டும்.இல்லையெனில், உங்களுக்கு கெட்ட காரியங்கள் தேடி வரும் என்று பதிவுகள் வரும்.

இது போன்ற செய்தியைப் பார்க்கும் ஒருவர் பயந்து அவர் அந்த செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து வருவார். இதனால் அவருடைய நேரமும் பணமும்தான் வீண். அவ்வாறு ஒரு செயல் எப்படி நடக்க முடியும்.?

வளர்ந்து வரும் 21-ஆம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய நாம், இன்று இதுபோன்ற போலியான வதந்திகளை நம்பி அதற்காக நேரத்தைச் செலவு செய்து கொண்டு வருவதென்பது, நாம் இன்னும் எவ்வளவு அறியாமையில் இருந்து வருகிறோம் என்பதனைக் காட்டுகிறதல்லவா.?

இந்த நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் அதிகம். அதுமட்டுமல்லாமல் நம்முடைய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களைப் படித்த நாம், மூடநம்பிக்கையை வேர் அறுத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் மண்ணில் வாழும் நாம் இது போன்ற செயலில் ஈடுபடலாமா.? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா.?

இதுபோன்ற வதந்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதால் அவர்களுக்கு என்ன நன்மை என்று யோசிக்க வேண்டாமா.?  நம்முடைய பணம் வீணடிக்கப்படுவதை எண்ணி கவலை கொள்ள வேண்டாமா.?

இனியாவது இந்த சமூக வலைதளங்களைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவோம். தாமஸ் ஆல்வா.எடிசன் போன்ற அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவோம்.

“போலியான உலகை மாற்றி அறிவியல் உலகைப் படைப்போம்”

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: