அன்பார்ந்த வாக்காள பெருமக்களே தோழர் கா.தமிழரசன்

அன்பார்ந்த பெரியோர்களே! தாய்மார்களே! உழைக்கும் பாட்டாளி மக்களே! காலமெல்லாம் உழைத்தும் உங்கள் உடம்பில் இடுப்புக்குக் கீழே கந்தலாகத் தொங்கும் கோவணத்தைப் போல், உங்கள் மனம் ஆகிவிடக்கூடாது என்று, உங்கள் மனதை உற்சாகப்படுத்த, சந்தோசப்படுத்த, கொஞ்ச நேரம் உங்களின் துக்கத்தை மறந்து, மனம் மகிழ்ச்சி கொள்ள இதோ உங்களைத்தேடி நாங்களே வந்துள்ளோம். உங்களுக்குச் சிறப்பானதொரு (தெருக்கூத்தை) நாடகத்தை நடத்த உள்ளோம். உங்களுக்காக ஒருமாத காலம் இங்கு நாடகம் நடைபெறும். அந்த காலம் முழுமைக்கும் உங்கள் மகிழ்ச்சிக்கு நாங்கள் உத்தரவாதம் தருகின்றோம்.  இது நிச்சயம் உங்களை மகிழ்விக்கும் என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. என்று கூறி வரும் ‘’கூத்தாடி’’ களைப்போல்!  (தெருக்கூத்து கலைஞர்களைப்போல்) ஒரு கூட்டம் நம்மை நோக்கி  இனி படையெடுக்கும். ஏனென்றால் இது தேர்தல் நேரம்.

கட்சிகள், வேட்பாளர்கள் நமது பகுதிக்கு வரும்போது அவர்கள் கூறும் வார்த்தைகளை நன்றாகக் கவனித்துப் பாருங்கள் இதே பாணியில்தான் இருக்கும். கூத்தாடிகள் முகாம் உள்ளவரை நிச்சயம் அன்றாட இரவுகள் ஏதோ ஒருவகையில் நமது மனம் மகிழ்ச்சிக் கொள்ளும். துன்பம் நீங்கியிருக்காது. ஆனால் அந்த நேரத்தில் அதை சற்று மறந்திருப்போம். இதுபோல் ஊர் ஊராகச் சென்று பகலெல்லாம் ஓடாய் உழைத்த மக்களுக்கு உறங்குமுன் சற்று மன அமைதியையும் ஆறுதலையும் சந்தோசத்தையும் தரும். அந்தக் கலைஞர்களின் கூத்தில்,  அவர்களின் உழைப்பும், அதன்மூலம்  பொதுமக்களிடமிருந்து அவர்களுக்கு கிடைக்கும் ஏதோ சொற்ப வருமானத்தில் இந்தக் குழுவிலுள்ள பல கலைஞர்களின் குடும்பம் தினம் ஒரு வேளையாவது தங்களின் வயிற்று பசியைப் போக்கும். 

இந்தக் கலைஞர்களின் சொல்லிலும், செயலிலும் நேர்மை இருக்கும், வஞ்சகம் இருக்காது. நம்பிய மக்களை ஏமாற்றத் தெரியாது. இவர்களின் உழைப்புக்கு ஏற்ற வருமானம் எந்தக்காலத்திலும் கிடைத்ததில்லை. இவர்கள் சாப்பிடுவது ஒருவேளை உணவேயேனாலும் தங்களின் உழைப்பால் அது அவர்களுக்குக் கிடைத்ததாக இருக்கும். ஆனால் இதுபோன்ற நேர்மையான மனிதர்களுக்கு, கலைஞர்களுக்கு இங்கே மரியாதையெல்லாம் துளியளவும் இல்லை.   

ஆனால் இங்கே அரசியல் கூத்தாடிகள் இருக்கிறார்கள். இந்தக் கூத்தாடிகள் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் நாள்வரை இவர்கள் ஆடும் கூத்து பெரிய அளவில் இருக்கும். தினம் ஒரு ஊர், சில வேளையில் ஒரே நாளில் பல ஊர், பல மேடைகளில் இவர்களின் கூத்து இருக்கும். இவர்கள் நடத்தும் இந்தக் கூத்தைப் பார்க்க வரும் மக்களுக்கு, அரசின் மதுவும், பிரியாணியும், பணமும் தருவார்கள். சில இடங்களில் பெரிய அளவில் கூட்டம் சேர்க்க (காட்ட) வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏற்படும்.  அப்பொழுது வெளியூர்களில் இருந்து  அதிக பணம் கொடுத்து ஆட்களைக் கூட்டிக்கொண்டு வருவார்கள்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் பகல் நேரங்களில் கூட்டம் நடக்கும். வெயில் சுட்டெரிக்கும். தலைவர்கள் குளிர்சாதன வசதியுடன் கூடிய மேடையில், அனல் பறக்கும் வார்த்தைகளில் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் மக்கள்! வெட்ட வெளியில், நிழல் எதுவும் இல்லாமல், சுற்றிலும் பாதுகாப்பு  வளையம். அது மக்களின் நலனுக்கான பாதுகாப்பு வளையம் அல்ல. அது! தலைவர்கள் பேசி முடிக்கும்வரை  யாரும் கூட்டத்தை விட்டு வெளியே சென்று விடக்கூடாதென்று அமைக்கப்பட்டுள்ள வளையம். இதுபோன்ற கட்டமைப்புள்ள இடத்தில் வைத்து அடைத்து வைத்திருப்பார்கள். குடிக்க தண்ணீர்கூட இல்லாமல், வெளியே எழுந்து செல்லவும் வழியில்லாமல் தாகத்தில் தொண்டை வறண்டு பல பேர் இறந்து போன சம்பவங்களும் இங்கே  நடந்துள்ளன. இவ்வளவுக்கு இடையிலும், அடுத்தடுத்து நடைபெறும் இதுபோன்ற கூட்டத்திற்கு மக்கள் வருகிறார்கள் என்றால்! அது அரசியல் கட்சியின் கொள்கைகளின் மேல்கோண்ட பற்றுதலால் என்று சொல்லி விட முடியாது. விதிவிலக்காக அல்லது அரசியலில் ஏதாவது ஆதாயம் தேடி எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் வேண்டுமானால் சிலபேர் இருக்கலாம். ஒரு சிலர் வேறு வழியில்லாமல் இதுபோன்றவர்களை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை.

ஆனால் பெரும்பான்மை மக்கள் பணம் கொடுத்து அழைத்து வரப்படுபவர்களே. இதுபோன்ற நெருக்கடியிலும் மக்கள் வருவதற்குக் காரணம், இன்னும் பெரும்பான்மை மக்களை வறுமையில், அனைத்திற்கும் கையேந்தும் நிலையிலேயே ஆட்சியாளர்கள்  விரும்பி வைத்துள்ளதே!  ‘அவர்களுக்கு அன்றைய தினம் கிடைக்கும் சிலநூறு ரூபாய் பணத்திற்காகவும், பெரும்பான்மை மக்களை சிறந்த (குடி)மக்களாக உருவாக்கி வைத்திருக்கின்றோமே! அந்த குடிமக்களுக்கு இவர்கள் தரும் மதுவுக்காகவும் தான் இந்த மக்கள் கூட்டம் கூட்டமாக (அழைத்து வரப்படுகிறார்கள்) வருகிறார்கள்.

இங்கே தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் தேர்தல் முடியும்வரை, மக்கள் கூட்டத்திற்கு வரும்போதும் பணம் தருவார்கள். ஓட்டுக்கும் பணம் தருவார்கள். அவர்கள் தரும் அந்த பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களித்தவர்களுக்கும் சரி, தேர்தலில் வாக்கை பணத்திற்காக விற்காமல் வாக்களித்த பொதுமக்கள் என யாராக இருந்தாலும் சரி, எல்லாம் தேர்தல் முடிவு வரும்வரைதான் அதன்பிறகு மக்களின் கதை அதோடு முடிந்துவிட்டது.

அதன் பிறகுதான் இவர்களின் உண்மை முகம் தெரியவரும். இதற்கு முன்புவரை இவர்கள் செய்த வேலைகள் எல்லாம் நடிப்பு என்பதும், இவர்கள் எவ்வளவு பெரிய நடிகர்கள் என்பதும் தெரியவரும். இந்த மகா நடிகர்கள் ஆட்சி அதிகாரம் தங்களின் கைக்கு வந்தபிறகு, இந்த நாட்டை மக்கள் ஓட்டு மொத்தமாக தங்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டதாக நினைத்து இவர்களின் விருப்பப்படி செயல்படுவார்கள். நேர்மையாக நடந்துக்கொள்ள வேண்டும், நாம் மக்களுக்கானவர்கள் என்ற எண்ணமெல்லாம் துளியும் இவர்களிடம்  இருக்காது. நாட்டை கூறுபோட்டு விற்கவும், சூறையாடவும் இந்த மக்கள் பெரும் தடையாக இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தில் பல நேரங்களில் இந்த அப்பாவி மக்கள் மீது கொடூரமான கொலைவெறி தாக்குதல்களை அரசுகளே அரங்கேற்றி உள்ளன.

ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை, இன்றைய தேதிக்கு மக்கள் என்று யாருமே இல்லாத நிலையிருந்தால், இவர்கள் மிகப்பெரிய அளவிற்கு சந்தோசமடைவார்கள்.

இந்த நாட்டில் மக்களின் வாழ்க்கை நிலையோ பரிதாபமான நிலையில் உள்ளது. மக்களுக்காகப் போராடும் மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டு போராடும் அமைப்புகளிலுள்ள தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் ஆபத்துக்குள்ளாக்கப்படுகிறார்கள். சிறை, சித்தரவதை என்று பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இந்த செயலை செய்வது மக்களுக்கு சேவை செய்யவே ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளதாக சொல்லி ஆட்சிக்கு வந்த உத்தமர்கள்.

ஆனால் இங்கே ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகளின் நிலையை மட்டும் கவனித்து பாருங்கள். நல்ல வளர்ச்சி அவர்களிடம் செழித்து வளர்ந்திருக்கும். நிலம், வீடு கார் என அனைத்தும் இவர்களுக்கு எப்படி வந்தது தேர்தலுக்கு முன்பு ஓட்டைப் பிச்சையாகக் கேட்டு வரும்போது இவர்களிடம் இதுபோல் எதுவுமே இல்லையே, பிறகு இப்போது  இதெல்லாம் எப்படி வந்தது? என்று எண்ணி! நாம் காண்பது  என்ன கனவா? என நம்மால் நம்ப முடியாது.  அவ்வளவு உயரத்திற்கு நம்ம அரசியல்வாதிகளின் வளர்ச்சி ஓங்கி நிற்கும். ஏனென்றால் மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்களாயிற்றே. இரவு பகல் என்று பாராமல் இவர்கள் ஆற்று ஆற்று என்று ஆற்றிய சேவையின் பயனாகக் கிடைத்தவைகளாக இருக்கும் இவைகள் எல்லாம்.  

இங்கே நடைபெறும் தேர்தல் சனநாயக முறைப்படியான தேர்தலும் இல்லை. சனநாயக முறைப்படி  தலைவர்களை தேர்ந்தெடுப்பதும் இல்லை. எல்லாமே ஏமாற்று வேலைதான். ஆனாலும் ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்போது இது எதுவும் தெரியாத  உத்தமர்கள்போல்  இவர்கள் வருவார்கள். மக்களும் ஒன்றும் தெரியாதவர்கள் போல் அமைதியாகவே இருந்துவிடுவார்கள். அல்லது தெரிந்திருந்தாலும் இங்கே எல்லாம் இப்படித்தான் நடக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்துவிடுகிறார்கள். அல்லது இந்த அரசியல்வாதிகள், அதிகாரத்தில் உள்ளவர்கள் தாங்கள் செய்த நல்ல காரியங்களையெல்லாம் மக்கள் அப்படியே நினைவில் வைத்திருந்தால், ஒருவரும் நமக்கு ஓட்டு போட மாட்டார்கள்.  ஆகவே, மக்கள் அதை மறக்க, மறைக்க வேண்டிய காரியம் எது வேண்டுமானாலும், செய்வார்கள். கலவரத்தை உருவாக்கி மக்களைச் சாதி வெறியர்களாகவும் மாற்றுவார்கள், வன்முறையாளர்களாகவும் மக்களை மாற்றி, அதன்மூலம் தேவைப்பட்டால் ஒரு சிலரை, ஏன் பலரை  கொலையும் செய்வார்கள் அரசியலுக்காக, அல்லது அந்த சாவை வைத்து பெரிய அரசியல் செய்யவும் தயங்க மாட்டார்கள் இவர்கள். அந்த அளவிற்கு நல்லவர்கள் நமது நாட்டிலுள்ள அரசியல் தலைவர்கள். அரசியல், அரசு என்பதே பொதுமக்களுக்கானது என்ற சிந்தனை கொண்ட ஆட்சியாளர்கள் எங்கே உள்ளார்கள்.  அதிகாரத்தைக் கைக்குள் வைத்திருந்த யாரும் முழுமையாக அவர்களால் மக்களுக்காகச்  சிந்தித்துச் செயல்பட முடியவில்லை. அதுவும் இப்போது உள்ளவர்களை அதுபோல் எல்லாம் எண்ணிவிட முடியாது. அவர்களுக்கு மக்களைப்பற்றின சிந்தனையெல்லாம் துளியளவும் கிடையாது. ஆனால் ‘‘மக்கள் மீது பற்று கொண்ட தலைவர்கள், போராளிகள் அதிகாரத்தை நெருங்க முடியாமல், அதற்கு வெகு தூரத்தில் இருக்கின்ற காரணத்தினால்!  அவர்கள் எழுப்பும் கூக்குரல், அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்களுக்கு, வேலையில்லாமல் கத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று ஏளனமாகப் பேசுகிறார்கள். 

காரணம், அதிகாரத்தில் உள்ள திமிர். அதை எல்லாம் அடக்கும், அல்லது அந்த அதிகாரத்திலிருந்து இதுபோன்றவர்களை நிரந்தரமாகத் தூக்கி தூர எறிந்தால் அப்போது புத்திவரும் இதுபோன்ற அதிகாரத் திமிரில் ஆணவத்தில் ஆடுபவர்களுக்கு. அது இப்போதைக்கு அவ்வளவு எளிதாக நடந்துவிடாது. அவ்வாறு நடக்க அதிகாரத்தைச் சுவைத்து சுக வாழ்வு வாழ்ந்த சுகவாசிகள் அவ்வாறு நடக்க அவ்வளவு எளிதில் அனுமதிக்கமாட்டார்கள். ‘‘இதை இவர்கள் என்ன அனுமதிப்பது’’ இது, நமது உரிமை,  எது வேண்டும்,  எது வேண்டாம் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து, நமக்கான உரிமை என்ன? நம்மிடம் உள்ள அதிகாரம் என்ன என்பதை மக்கள் முழுமையாக அறிந்து அதன்படி தெளிவாக, உறுதியாக ஒருமித்தக் குரலில் ஒன்றாக ஓங்கி ஒலித்தால், இங்கே உள்ள பதர்களெல்லாம் இருக்கின்ற இடம் தெரியாமல் அப்புறப்படுத்தப்பட்டு அந்த இடம் சுத்தமாகிவிடும். அதன்பிறகு அனைத்தும் நன்றாக நல்ல முறையில் நடக்கும் அந்த நாள் எப்போது வரும் உடனே நடக்குமா? அதற்கான வேலையை எந்த அரசியல் கட்சியும் செய்யாது. மக்கள் நல அமைப்புகள் மட்டுமே அந்த வேலையை செய்யும். மக்கள் அனைவரும் அந்த அமைப்புகள் பின்னே செல்வோம். நிச்சயம் அது நமது எதிர்காலத்திற்கான நல்வழிப் பாதையாக இருக்கும். அந்தப்பாதையை நோக்கியதாக இருக்கட்டும். நமது அடுத்த பயணம்.                                           

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: