திருமணம் ஏன்? – தந்தை பெரியார், (இராஜபாளையத்தில், 6-12-1944-இல் சொற்பொழிவு- விடுதலை 16-12-1944)

தாய்மார்களே! தோழர்களே!

இந்த உலகத்தில் சொத்தைப்பற்றியும், மேல் உலகம் என்பதில் மோட்சம் என்பதைப் பற்றியும் இலட்சியம் இல்லாவிட்டால் திருமணம் என்பதாக வாழ்க்கை ஒப்பந்தம் என்பதாகக் கூட எதுவும் தேவையில்லை. நாம் தேடிய சொத்துக்கு நாம் பெற்ற பிள்ளை வாரிசாக இருக்க வேண்டும் என்பதே திருமணத்தின்  முக்கிய நோக்கமாகும். அதற்கும் அந்தந்த சமுதாயப்படி சொத்தை அனுபவிக்கச் சிலருக்கு ஆண் பிள்ளை வேண்டும். சிலருக்கு பெண் பிள்ளை வேண்டும். தேவதாசிகளும், மருமக்கள் தாயம் உள்ளவர்களும் தங்கள் சொத்துக்கு பின் சந்ததியாக உரிமைக்குப் பெண் குழந்தைகள் பெறவும் இல்லாமல் போனால் பெண் குழந்தையைத் தத்து எடுக்கவும் ஆசைப்படுகிறார்கள். மற்றவர்கள் நம் போன்றவர்கள் ஆண் குழந்தை பெறவும் பிறக்காவிட்டால் ஆண் குழந்தைகளைத் தத்து எடுத்துக்கொள்ளவும் செய்கிறோம். இதற்காகவேதான் திருமணம் பெரிதும் சடங்காக ஒப்பந்தமாக பதிவாக சட்டத்திற்குள் அடங்கியதாகச் செய்யவேண்டியிருக்கிறது. இந்த நிலை மாறிவிட்டால் திருமணம் என்கின்ற வார்த்தையே மறந்து போகும்.

அதனால்தான், நான் இந்த முறைகூட முடிந்த முடிவல்ல என்று அடிக்கடி சொல்லி வருகிறேன். இனி 40, 50 வருடங்களுக்கு பின்பு (1944)- அதாவது இந்த சொத்து முறைகள் மாறி பொது உடமை முறை வந்து தாண்டவமாடும்போது இந்த முறை கூட இருக்காது என்பதோடு இதை ஒரு மூட நம்பிக்கை காட்டுமிராண்டிக் கால முறை என்று சொல்ல வேண்டிவரும் என்பதோடல்லாமல் இன்று உங்களில் பலரால் புரட்சிக்காரன் என்று கூறப்படுகின்ற என்னை ஒரு மூடநம்பிக்கைக்காரனாக வைதிகப் பிடுங்கல் இராமசாமி என்று ஒருவன் இருந்தான் என்று என்னை உங்கள் பிள்ளைகள், பேரன்மார்கள் சொல்லும்படியான நிலைகூட வந்துவிடும் என்று நான் சொல்வதுண்டு.

ஆகையால் திருமணத்திற்கு ஒரு கட்டுப்பாடு தான் இருக்க வேண்டியிருக்கிறதே ஒழிய, முறை ஒன்றும் இன்று தேவை இல்லை. கட்டுப்பாடே வேண்டாத காலம் வருமென்றால் முறை வேண்டிய காலம் எதற்காக வேண்டி இருக்கும்? ஒரு சமயம் கட்டுப்பாடு வேண்டியதில்லை என்கின்ற தன்மை நடைபெறக் கட்டுப்பாடும் முறையும் வேண்டியதாக இருக்கலாம்.

இன்று நாமாகிய திராவிடர்களுக்கு நம்மைப்பற்றிய சரித்திரமும் நம் நாட்டைப் பற்றிய தன்மைகளும் கூடத் தெரியவில்லையானால், நம் திருமணத்திற்கு என்ன முறை சிறந்தது என்று எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? அப்படித்தான் ஒன்று இருந்தாலும் அதைப்பற்றி இன்று பேசுவது எப்படி அறிவுடைமையும் பொருத்தமுடையதும் ஆகும்.

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: