குடி போதை – மருத்துவர் யாழினி

குடி போதை. இம்மனநிலை ஒருவரின் மொத்த வாழ்வினையே புரட்டிப்போடக்கூடியது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நம் அனைவருக்கும் ஒரு நண்பர் இருப்பார். குடிக்காமல் இருக்கையில் சாதாரணமாக இருப்பவர், குடித்தப்பின் வேறொரு நபராக மாறியிருப்பார். மருத்துவத் துறையில், என்னுடைய மிகக் குறைந்த அனுபவத்திலேயே, குடியால் பல குடும்பங்கள் சிதைந்ததை, பலரின் தொழில் நசிந்ததை, வேலையினைப் பலர் இழப்பதைப் பார்த்திருக்கிறேன். அதோடு பல பிரபலங்கள் தங்களின் நம்பகத்தன்மையினை இழந்ததையும் முக்கியமாக பற்பல குழந்தைகள் பெற்றோரில் ஒருவருடைய குடிப்பழக்கத்தினால் மோசமான வீட்டுச்சூழலில் வளர்வதனையும் கண்டிருக்கிறேன்.

2018 தீபாவளியின் போது நமது தமிழக அரசின் டாஸ்மாக்கின் மது விற்பனை புதிய சாதனைகளை படைத்தது என்ற செய்தி பரவலாகப் பேசப்பட்டது. இது ஏதோ போகிறபோக்கில் கடந்து போகக் கூடிய செய்தியல்ல, இது ஒரு எச்சரிக்கை. நமது மாநிலத்தில் மது எந்த அளவிற்கு நுகரப்படுகின்றது என்பதற்கான அடிப்படை ஆதாரம். நம்மைச் சுற்றி மது அருந்தும் பழக்கம் அதிகமாகும் இவ்வேளையில், குடிப்பழக்கமும் அதனால் ஏற்படும் போதை உணர்வு பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகின்றது. நம் பலருக்குத் தெரியாதது என்னவென்றால், அளவாய் குடிக்கும் பழக்கம் எப்பொழுது பிரச்சனைக்குரியதாகின்றது என்பது தான்.

குடிப்பழக்கத்திற்கு ஆளாகக் கூடியவர்கள் யார்யார்?

1.            குடிப்பழக்கம் சார்ந்த பிரச்சனைகள் பல நேரங்களில் வழி வழியாகக் குடும்பங்களில் காணப்படக்கூடியது. இதற்கு காரணம், குடிப்பழக்கத்தில் ஒருவர் வீழ்வதற்கு மரபணு சார்ந்த காரணங்களும் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆக அத்தகைய குடும்பத்தில் இருந்து வரும் ஒருவர் குடிக்க ஆரம்பித்தால், அவர் குடிப்பழக்கத்தில் வீழ்வதற்கான சாத்தியங்கள் மிக அதிகமாக இருக்கும்.

2.            பெண்களை விட ஆண்களுக்கே குடிப்பழக்கம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றது. முக்கியமாக 18 இல் இருந்து 25 வயதிற்குள் இருப்பவர்களுக்கு. அதே சமயம், குடிப்பழக்கம் சார்ந்த பிரச்சனைகள் என்பது ஆண்களை விட பெண்களுக்கு குறைவான மது அருந்தினாலே ஏற்படும் என்பது கவனத்திற்குரியது. காரணம் என்னவெனில் ஒரு ஆணும் பெண்ணும் ஒரே அளவு மது அருந்தினாலும் இரத்தத்தில் உள்ள மதுவின் அளவென்பது அப்பெண்ணுக்கே அதிகமாக இருக்கும், அதுவே அவளைத் தீங்கிற்கு உள்ளாகும் சூழலிற்கு ஆளாக்கும் என்பதனையும் நாம் மனதிற் கொள்ளல் வேண்டும்.

3.            மனம் சார்ந்த பிரச்சனைகளான தீவிர மன அழுத்தம், பதட்டம் போன்றவை இருக்கும் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானால் அவர் அதில் வீழ்வதற்கு பெரும் சாத்தியங்கள் இருக்கின்றன. ஒரு ஆய்வு தெரிவிப்பது என்னவென்றால் குடிப்பழக்கத்தில் வீழ்ந்த 100 இல் 37 பேருக்கு முன்னதாகவே மனநலம் சார்ந்த பிரச்சனைகள் இருந்தது தான்.

4.            இளம் வயதிலேயே குடிக்க ஆரம்பிப்பவர்கள் குடிப்பழக்கத்தில் முற்றாக வீழ்வதற்கு சாத்தியங்கள் அதிகமாய் இருக்கின்றது. 21 வயதிற்கு பின் குடிக்க ஆரம்பிப்பவர்களைக் காட்டிலும் மிக இளம் வயதிலேயே  குடிக்க ஆரம்பிப்பவர்களுக்கு குடிப்பழக்கத்தில் வீழ்வதற்கான சாத்தியங்கள் என்பது நான்கு மடங்கு அதிகம் என்பதே ஆய்வுகளின் முடிவாக உள்ளது.

மது போதையென்றால் என்ன?

மது போதைக்கு ஆளானவர்களுக்கான பிரச்சனைகள் என்பது பல. இப் பிரச்சனைகள் எந்த அளவிற்கு அதிகமாகின்றதோ அந்த அளவிற்கு அவர்கள் மது போதையில் வீழ்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.

1.            ஒவ்வொரு முறை குடிக்கும் பொழுதும் நினைத்ததை விட அதிகமாகவோ அல்லது நினைத்த நேரத்தினை விட அதிகமாகவோ குடிப்பர்.

2.            மது அருந்துதலை நிறுத்த வேண்டுமென்று எண்ணினாலும் அவர்களால் அது சாத்தியப்படாது.

3.            ஒரு நாளின் பெரும் பகுதியினை மதுவை பெறுவதுக்கும், குடிப்பதிலும் குடி போதையிலிருந்து மீள்வதிலுமே செலவழிப்பர்.

4.            மது அருந்த வேண்டுமென்ற தீவிர உந்துதல் இருக்கும்.

5.            மது அருந்தும் பழக்கத்தினால் அன்றாடக் கடமைகளான வேலைக்கு செல்லுதலும் பள்ளிக்குச் செல்லுதலும் குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்றலும் பாதிக்கப்படும்.

6.            மது பழக்கத்தினால் குடும்ப உறவுகள் சிதைந்தாலும் சமூகத்தில் சரியாய் பணியாற்ற முடியாது போனாலும் அவர்களால் குடியினை நிறுத்த முடியாது போதல்.

7.            அவர்கள் விரும்பி நேரத்தினை செலவழிக்கும் செயல்களைத் தள்ளிவைத்தல்.

8.            ஆபத்து என்று அறிந்திருந்தும் குடிப்பர், குறிப்பாய் குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது.

9.            குடி போதையினால் தான் தங்களுக்கு மனம் சார்ந்தும் உடல் சார்ந்தும் உபத்திரவங்கள் ஏற்படுகின்றது என்பதனை அறிந்திருந்தும் அவர்கள் குடித்துக்கொண்டே இருப்பர்.

10.          குடிக்கு ஒருவர் வீழ வீழ, ஒரு குறிப்பிட்ட அளவு மது, முன்பு அவருக்கு தந்ததை விட படிப்படியாக குறைவாகவே போதையினைத் தர ஆரம்பிக்கும். ஆக, உச்ச போதையினை அடைய அவர் மேலும் மேலும் குடித்துக்கொண்டே இருப்பர்.

11.          குடிப்பதை நிறுத்தினால் அதீத வியர்த்தலும், அதிகப்படியான இதயத்துடிப்பும், பதட்டமும், உடல் நடுக்கமும். தூக்கமின்மையும், குமட்டலும், அதீத கவலை உணர்வும், ஓய்வின்மையும் ஏற்படும்.

அதீத குடிப்பழக்கத்தின் விளைவுகள்

அதீத குடிப்பழக்கம், தவிர்க்கப்படக்கூடிய பல உயிர் பறிக்கும் காரணிகளுக்கு இட்டுச்செல்லும். முக்கியமாக, குடி போதையில் வாகனத்தினை செலுத்தி இறத்தல், தற்கொலை, நீரில் மூழ்கி இறத்தல், குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் சார்ந்த உபாதைகள், குறிப்பிட்ட சில புற்றுநோய் வகைகள், குடும்ப அமைப்புச் சிதைவதால் ஏற்படும் மனநலம் சார்ந்த உபாதைகள், மனச்சோர்வு, இதய நோய்களில் சில போன்றவை.

சிகிச்சை குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களுக்கு மனநலம் ஆலோசனைகள், மருந்துகள் என்று பல சிகிச்சை முறைகள் இருக்கின்றன. இப்பழக்கம் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படவில்லையெனில் மேற்சொன்ன விளைவுகளே ஏற்படும். நாம் கவனிக்கவேண்டியது என்னவெனில், முறையான சிகிச்சையினால் ஒருவர் குடிப்பழக்கத்தில் இருந்து முற்றாய் வெளிவர இயலும். மேற்சொன்ன குடி போதை சார்ந்த பிரச்சனைகளில் இரண்டிற்கு மேற்பட்ட பிரச்சனைகள் தங்களுக்கு இருப்பின் தயவு கூர்ந்து மருத்துவரிடம் செல்லுங்கள். முறையான, காலத்தால் செய்யப்படும் சிகிச்சையே உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உதவும்.                   

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: