எழுத்தெனப்படுவது… தடைகள் உடைபடவே – நாகை பாலு

மறைப்பது – அதைப் பார்க்கும் வேட்கையை அதிகப்படுத்துகிறது.

தடுப்பது –- மீறும் வேகத்தைப் பன்மடங்காக்குகிறது.

போராட்டங்கள் – அதிகாரத்தின் தடுப்புகளைத் தகர்த்தெறியும் உள்மன வேட்கையின் வெளிப்பாடே; சமூகக் குற்றமல்ல.

தேவதாசிமுறையும், பால்ய விவாகமும், சதியும் வேத விதிகளின் மீறக்கூடாத ஒழுக்கமுறையாய் கட்டமைக்கப்பட்டிருந்த காலத்தில்தான் அந்தக் கட்டமைப்பைத் தகர்த்தெறியும் மீறல்களும் வலுப்பட்டு தம்மை வடிவமைத்துக் கொண்டன. அந்த மீறல்களே மறுமலர்ச்சியாய் வடிவெடுத்தன.

ஒவ்வொரு காலத்திலுமே உடைத்தெறியப்பட்ட தடைகளின் ஊடாகவே புத்துலகு சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது. சொர்க்கத்தின் (?) ஒவ்வொரு வாசலும் தடைகளின் தகர்ப்பால் மட்டுமே திறக்கப்பட்டிருக்கின்றன.

அரசும் மதங்களும் தத்தமது வசதிகளுக்காகவே விதிகளைக் கட்டமைக்கின்றன. அந்த விதிமுறைகள் இன்னொரு பெருங்கூட்டத்தின் உடலை – உரிமையை – உணர்வுகளை – சுயமரியாதையை ஒட்டுமொத்தமாக உதாசீனப்படுத்தும்போது, அந்த பெருங்கூட்டம் விதிகளின் நிந்தனையை – நிராகரிப்பை – மறுப்பை நிறைவேற்ற முயற்சிக்கிறது; வெற்றி பெறுகிறது அல்லது தடைமீறும் இந்தச் செயற்பாடுகளை நிந்திப்பதும் – நியாயப்படுத்துவதும் – விதித்தவர்க்கும் தகர்ப்பவர்க்குமான மனவெளி சார்ந்ததே ஆயினும் நீதி தன்னளவில் நெடிதோங்கி நிற்கவே செய்கிறது.

சபரிமலை சார்ந்த நிகழ்வுகள் கூட நேற்றைய தெளிப்பின் இன்றைய முளைப்பல்ல. நெடுங்கால உணர்வுகளே.

ஆறுலட்சம் தலைகளுக்கெதிராக அறுபதுலட்சம் உடல்கள் 620 கிலோமீட்டர் அளவுக்கு சீனச்சுவராய் கரம்கோர்த்து நின்றதென்றால் அது தடைக்கும் தகர்ப்புக்குமான நேரெதிர் உணர்வுகளின் உந்துதலே. இது நடக்கும்! இப்படித்தான் நடக்கும் இத்தகைய தகர்ப்பு முயற்சிகளுக்குப்பின்னால்தான் மறுமலர்ச்சியின் உதயம் சாத்தியமாகிறது.

ஏதேன் தோட்டத்து விதியை ஏவாள் தகர்த்ததால் தான் உலகில் மானுடக் கனிகளின் விளைச்சல் ஏகத்துக்கும் பெருகியது. பாவமும் சாபமுமாகிய கற்பனைகள் தகர்க்கப்பட்டக் கணங்களில் தான் சந்ததிப்பெருக்கம் எனும் அற்புதத்துக்கான அடித்தளம் சாத்தியமாயிற்று.

“நட்டகல்லும் பேசுமோ?” என்ற சித்த(ர்) வினாதான் பேசாது என்கிற போதத்துக்கும் வித்திட்டது. அந்த வினா இன்னொரு பெருவெளியின் வாயிலுக்குத் திறவுகோலானது.

“இறைச்சி, தோல், எலும்பிலும் இலக்கமிட்டிருக்குதோ? என்பதான கேள்விகள் வெறும் சாதிக்கானதல்ல; இன்னொரு நீதிக்கான கோரிக்கை என்பதே காலத்தின் குரல்.

காலத்தின் சுழற்சியில் முன்னது பின்னதாகிறது. பின்னது இன்னும் பேரொளியாகிறது. இதுநடக்கும்! இது தான் வளர்ச்சி! இருப்பை மறுப்பதும் வளர்ச்சியின் கூறுதான். சட்டமறுப்பும் ஒத்துழையாமையும் அகிம்சாவின் அடையாளங்கள் மட்டுமல்ல. காலமும் சூழலும் கண்டுபிடித்த புதுவகைப் போராயுதங்கள். அவையும் காலனியுகத்தைப் புறங்கண்டன. தடைகள் உடைபடும். உடைபடத்தான் தடைகள். “மாற்றம் மட்டுமே மாறாதது”              

Published by kaithadimonthly

சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: