‘‘ஐஸ்..! ஐஸ்..! பால் ஐஸ்..! கப் ஐஸ்..!

ஐஸ்..! ஐஸ்..! பால் ஐஸ் கப் ஐஸ் வெயிலுக்கு இதமான குளிர்ச்சியான சேமியா ஐஸ்..!

ஐஸ்..! ஐஸ்..! பால் ஐஸ்..!  கப் ஐஸ்..! ’’

ஐஸ்..!  வாங்கலையோ ஐஸ்..!’’ என்றபடி ஐஸ் வண்டிக்காரர் சத்தம் போட்டுக்கொண்டே ஊருக்குள் நுழைந்தார்; ஐஸ் வண்டியின் சத்தம் கேட்டதும் ஊரில் உள்ள வாண்டுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஐஸ் வாங்க தயார் நிலையில் இருந்தனர்.

பாட்டியைத் தொல்லை செய்து பாட்டியின் பையில் இருந்த அஞ்சு, பத்து  ரூபாய்களை பிடிங்கிக்கொண்டு பெயரன்மார்கள் சாலை ஓரம் ஓடி வந்த வண்ணம் இருந்தனர். நாட்டின் குடிமகன்கள் சிலர் தான் நாட்டிற்கு கட்டிய வரிப்பணத்தின் ரசீதான மதுபாட்டில்களை எடுக்க, அவர்களின் மனைவிமார்கள் “பாழாப் போனவனே குடிச்சிட்டு தா வரணு பார்த்தா, அந்த பாட்டிலையும் வைக்க மாட்டியா..! அதையும் வித்து குடிச்சி மூத்திரம் பேஞ்சிட்டு போலாம்ன்னு இருக்கியா’’ன்னு கேட்க…

‘‘அடிப் போடி,  நா குடிச்சா என்ன நடிச்சா என்ன..! நா மட்டுமா குடிக்குறேன் நாடே குடிக்குது’’ன்னு வீரமா பேச… ‘‘போனா வராது பொழுது போனா கிடைக்காது வாங்க… வாங்க… னு’’ ‘பாம் பாம்’னு ஐஸ் வண்டிக்காரர் ஹாரனை அழுத்த… எல்லோரும் பணத்தை உருட்டி பெரட்டி மரத்தின் அடியில் ஒன்று சேர்ந்தனர்.

‘‘பால் ஐஸ்..! அஞ்சுரூபாய் சேமியா ஐஸ்..! ஏழுரூபாய்  கோன் ஐஸ்..! பதினஞ்சு ரூபாய்’’ என்ற விலைப்பட்டியலை வாசிக்க வாசிக்க ‘‘அண்ணா அஞ்சுகோட்டர் பாட்டில் இருக்கு இதற்கு என்ன ஐஸ் குடுப்பிங்க’’ன்னு கேட்க…. ‘‘பால் ஐஸ் தரேன்’’னு ஐஸ்க்காரர் சொல்ல, பையன் ‘‘அண்ணா சேமியா ஐஸ் தாங்க’’ன்னு கேட்க… ஐஸ்க்காரரும் சரின்னு கொடுக்க சிரிச்சிக்கிட்டே மூக்குக்கும் வாய்க்கும் இழுப்பியப்படி சுவைத்துக்கொண்டே ஓடினான் சிறுவன்.

‘‘அண்ணா எனக்கு பால் ஐஸ்..’’ ‘‘எனக்கு சேமியா ஐஸ்…’’ ‘‘எனக்கு கோன் ஐஸ்’’னு ஐஸ் பிரியர்களின் எண்ணிக்கை வயது வரம்பு இன்றி கூடியது. ஒருத்தர் ஒருத்தரயா சமாளித்து கொண்டே ஐஸ்களை எடுத்துக் கொடுத்த வண்ணம் இருக்க… இந்தியாவின் தலைசிறந்த குடிமகன் ஒருத்தன் ‘‘இது என்ன பொட்டி’’ன்னு கேட்க ‘‘ஐஸ் பொட்டி’’ன்னு ஐஸ்க்காரர் சொல்ல… ‘‘ஐஸ் பொட்டியை தொட்டமாரி என்ன ஜில்லுனு இல்ல’’ன்னு சொல்ல… ‘‘என்ன டா இது வம்பா போச்சே காலையிலையே ஏழரையை கூட்டுரானே’’னு புலம்பிக்கொண்டே ‘‘ஐஸ் தா ஜில்லுன்னு இருக்கும் ஐஸ் பொட்டி ஜில்லுனு இருக்காது’’ன்னு சொல்ல…

‘‘ஐஸ் லாம் எனக்கு இல்லையா’’னு கேட்க… ‘‘என்ன ஐஸ் வேணும்’’ னு கேட்க; ‘‘எந்த ஐஸ் எவ்வளவு’’ னு குடிமகன்கேட்டு அவரே ‘‘வெள்ள ஐஸ் எவ்வளவு..! சிவப்பு ஐஸ் எவ்வளவு..! முக்கோண ஐஸ் எவ்வளவு..!’’ புலம்ப… அதை புரிந்து கொண்ட ஐஸ்க்காரர் ‘‘பால் ஐஸ் அஞ்சு ரூபாய் சேமியா ஐஸ் ஏழுரூபாய்கோன் ஐஸ் பதினஞ்சு ரூபாய்’’ சொல்ல சொல்ல…

‘‘சரி சரி போதும் போதும் பால் ஐஸ்யே கொடு’’னு நூறுரூபாய் எடுத்து கொடுக்க; நூறு வாங்கினு  பால் ஐஸ்ஐ எடுத்துக் கொடுத்தார் வண்டிக்காரர்… ஐஸ்ஐ வாங்கி வாயில வச்ச குடிமகன் ‘‘என்ன பால் ஐஸ்ல பாலையே காணும்’’னு கேட்க… விழிப்பிதுங்கிபோன ஐஸ் வண்டிக்காரர் ‘‘டேய், நா இன்னும் நாளு ஊர சுத்தணும் பொழப்ப பாக்கணும்… இந்தா மீதி 95 ரூபா’’ன்னு நீட்ட… ‘‘இதுல எவ்வளவு இருக்கு’’னு மீண்டும் மீண்டும் கேட்டுகொண்டே இருக்க ‘‘50 ரூ – 1, 20 ரூ – 1, 10 ரூ- 2, 5 ரூ – 1மொத்தம் 95 ரூபாய்’’ னு விவாதிக்க… ‘‘நா 200 ரூபாய் கொடுத்தேன்’’னு அந்தர் பல்ட்டி அடித்தார் குடிமகன்.

‘‘என்னப்பா சொல்லுற’’னு பயந்துபோய் போய் வியப்பில் ஐஸ் வண்டிக்காரர் கேட்க… ‘‘ஆமா ணா 200 ரூபாய் தா குடுத்தேன்; நா குடுச்சி இருக்கேன்னு என்ன ஏமாத்தலாம்னு பாக்குறியா’’னு குடிமகன் சொல்ல… ‘‘என்னது 200 ரூபா நோட்டை நா பார்த்ததே இல்ல’’ன்னு மீண்டும் மீண்டும் சொல்லச் சொல்ல… ‘‘ஆமா மோடி 200 ரூபா நோட்ட உட்டுனு இருக்காருன்னு சொல்ல; மோடி உட்டானோ.

-மு.சி.அறிவழகன்

பசி

அந்தப்பூனை வழக்கம்போல் அதிகாலை ஐந்தரை மணிக்கே வாசலில் வந்து நின்று கரைந்தது. ஒரு சின்ன குழந்தையின் கெஞ்சுதல் அந்தக்குரலில்.

ஸ்டெஃபி நேற்றே அவள் பாட்டி வீட்டிற்குச் சென்றது அதற்குத் தெரியாது.

கதவைத் திறந்து வெளியே தலைநீட்டிய பாட்டியின் முகம் நோக்கி அதே கெஞ்சுதல்; பாலுக்குக் கேவும் சின்னஞ்சிறு குழந்தைகயின் உடைந்த குரலில்.

பூனையைப் பார்க்காமல், தொலைவிலிருந்து அந்த குரலைக் கேட்டால் நிச்சயமாக அது ஒரு குழந்தையின் கெஞ்சும் குரல்தான்.

‘ம்யாவ்…ம்யாவ்… மியா…வ்…வ்…”

ஒரே மொழி! ஓவ்வொரு முறையும் வெவ்வேறு தொனி! பொருள் ஒன்று தான்…

‘பசிக்குது தாயே…சீக்கிரமா

பாலூத்த மாட்டியா…”

பாட்டிக்குப்புகுந்ததாதெரியவில்லை, வாசல்படியில் நின்று தலைநீட்டிப்பார்த்த பாட்டியின் முகம் அதற்குப் பொருட்டல்ல.

குரல்கேட்ட மறுநொடியே, ஒரு சின்னஞ்சிறு கிண்ணத்தில் பாலோடு வாசலைத் தாண்டிவரும் ஸ்டெஃபியின் முகமல்ல இது..!

ஸ்டெஃபி ஒரு போதும் வெறும் கையுடன் வந்து இப்படிப் பார்த்ததில்லை…

கலைந்து கிடக்கும் தலையோடு, கண்களில் ததும்பும் தூக்கக் கலக்கம் மாறாமல், கையில் ஒரு கிண்ணப் பாலுடன் மெள்ள நடந்து வரும் அந்தப் பாப்பா – எட்டு வயது ஸ்டெஃபி – எங்கே காணோம்…

பூனைக்குத் தெரிகிறது இது ஸ்டெஃபி இல்லையென்று.

எப்போதாவது ஸ்டெஃபியோடு கூடவந்து,

“பாப்பு வச்சிட்டு இந்த ண்டவா,

அது பசீல கடிச்சுடும்” என்று

சத்தம் போடும் இந்த முகமும் இந்தக் குரலும் அதற்குப் பரிச்சயமானதே தவிர மனதில் அழுத்தப்பதிந்ததில்லை.

இப்போது பூனையின் பிரச்சினை அதுவல்ல. பாப்பாவைக் காணோம்! பாலோடு வருவாள் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து குழைந்தகுரலில் கரைந்து கொண்டிருந்தது. பாட்டியைத் தாண்டி உள்ளே நுழைந்து பாப்பா பாலோடு வருகிறாளா என்று பார்க்க ரொம்ப ஆசைதான். வாசலைத் தாண்டி உள்ளே நுழைய துணிச்சல் வரவில்லை. கரைந்து கொண்டிருந்தது.

காரில் தாத்தாவீட்டுக்குப் புறப்படும் அந்தக் கணங்களில், டோருக்கு வெளியே தலைநீட்டி

“பாட்டி… பூனைக்கி பால் வைக்கணும் பாட்டி…  மறந்துடக் கூடாது! பாவம், பசியோட வந்து கத்தும்…  தூங்கிட்டே இருந்துடாதீங்க பாட்டி…”

கார்; புறப்படும் வரை அவள் திரும்பத்திரும்பச் சொன்னது, இப்போது பாட்டியின் நினைவில் எழுந்தது.

பாட்டி மனசோடு பேசிக் கொண்டே உள்நோக்கித் திரும்பினாள்.

“பாவம் ஸ்டெஃபி…  ஊருக்குப் புறப்படும் போது எத்தனை முறை சொன்னா…  கெஞ்சிக் கெஞ்சி… வேற எதப்பத்தியும் பேசலியே! பூனைய மறந்துடாதீங்க பாட்டி!… பூனைய மறந்துடாதீங்கா…” யோசித்தபடியே நடந்த பாட்டி அடுக்களைப்பக்கம் இருந்த ஃபிரிட்ஜை திறந்து பால் இருந்த பாத்திரத்தை வெளியே எடுத்தாள். பூனைக்கும் பொறுமையில்லை…  அதே கரைச்சல் குரலோடு வாசற்படியைத் தாண்டி பாட்டிக்குப் பின்னே மெள்ள நடந்துவந்தது.

உள்ளிருந்து கேட்ட “பூனையின் குரல், இன்னும் எழாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த தாத்தாவுக்கு எரிச்சலூட்டியது. ஏகப்பட்ட எரிச்சல். அடுக்களையில் மனைவி இருப்பது அவருக்குத் தெரியாது. திருட்டுப்பூனை எதிலாவது வாய்வைத்துவிடுமோ என்ற பயம்…  கோபம்… . வேகமாக எழுந்து வெளியே வந்தவள் நடுமுற்றம் வரை முன்னேறிக் கரையும் பூனையை நோக்கி “ச்சீ சனியனே…  போ வெளியெ” என்ற கூச்சலுடன் பூனையை நோக்கி நடந்தாள். எரிச்சல், கோபம் எல்லாமும் சேர மறுபடியும் கத்தினாள்” “சனியனே… போ வெளிய… .”

பூனை விரைவாக வெளியேறி வாசற் படிக்கு வெளியே நின்று, மறுபடியும் குரல் கொடுத்தது. தன்னைவிரட்ட கையை ஓங்கிய அவள் முகத்துக்கு நேரே அதன் பார்வை உயர்ந்தது இருபுறமும் அடர்ந்த மீசை அதிர்ந்தது. குழைந்த குரல் மறைந்தது. விரிந்த வாய் வழியே “ஸ்… ஸ்… ஸ்… ” என்ற ஓசை. பெருங்காற்றின் ஓலத்தைப்போல்! “ஸ்… ஸ்… ஸ்… ”வாய் மட்டுமல்ல கண்களும் விரிந்தன. ஓரடி பின்னோக்கி நகர்ந்து – நின்று – ஆக்ரோஷத்துடன் பார்த்தது. சீற்றத்தின் குரல், ஒரு குட்டிப் புலியின் தோற்றத்தை நினைவூட்டிக் கொண்டிருந்தது.

தாத்தாவுக்குக் கோபம் தலைக்கேறியது ‘கேவலம் பூனை! என்ன திமிர்!,  வாசலுக்கு வெளியே கால்வைக்க நினைத்தவரை பாட்டியின் குரல் நிறுத்தியது.

“இருங்க… .இருங்க… .வெரட்டாதீங்க அது ஸ்டெஃபியோட பூனை. இந்தப்பாலவச்சிடலாம்… .”

வாசலில் நின்றவரைத் தாண்டிவந்த பாட்டியைப் பார்த்து “ம்யாவ்” என்றது “செல்லம்”.

“அந்த மனப்புயல்? அது எங்கே மறைந்தது”? அதிர்வுடன் பின்னோக்கி நடந்து சோஃபாவில் அமர்ந்ததும். மனம் காரணம் தேடி அலைந்தது.

குனிந்து ஓரமாயிருந்த கிண்ணத்தில் மெள்ள பாலூற்றிக்கொண்டிருந்த பாட்டியின் முகத்தைக் கூட பார்க்காமல் கிண்ணத்தில் வாய் பதித்தது “செல்லம்”

புலவர் நாகை பாலு

பகுத்தறிவாளர் கழக பொன்விழாத் தொடக்க மாநாடு

பகுத்தறிவாளர் கழகத்தினை தொடங்கிவைத்து உரையாற்றிய தந்தை பெரியார் ‘இன்றுதான் மனிதர்களின் கழகத்தினை தொடங்கி வைக்கிறேன்’ என்றார். தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்து பகுத்தறிவாளர் கழகத்தின் பொன்விழாத் தொடக்க விழா மாநாடு விருதுநகரில் 16.11.2019 அன்று காலை முதல் இரவுவரை நடைபெற்றது. விருதுநகர் எங்கும் திராவிடர் கழகக் கொடிகள் பட்டொளி வீசி பறக்க, அணி அணியாய் காலைமுதலே தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பகுத்தறிவாளர்கள் வந்து குவிய ஆரம்பித்தனர்.

காலை 9 மணிக்கு, பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர்களாக இருந்து அண்மையில் மறைந்த வடசேரி.வ.இளங்கோவன்,புதுச்சேரி மு.ந.நடராசன் மற்றும் தூத்துக்குடி பொறியாளர் சி.மனோகரன்,விருதுநகர் ஆ.வெங்கடாசலபதி நினைவு அரங்கத்தில்  தாமிரபரணி கலைக்குழுவினரின் பகுத்தறிவு கலை நிகழ்ச்சியோடு மாநாட்டின் நிகழ்ச்சிகள் தொடங்கியது. பகுத்தறிவாளர் கழகத்தின் பொன் விழா மாநாட்டிற்கு பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் மா.அழகர்சாமி தலைமை ஏற்க, இந்த மாநாட்டின் அடித்தளமாய் நின்று நிகழ்த்திக்காட்டிய விருதுநகர் க.நல்லதம்பி அனைவரையும் வரவேற்றார்.மாநாட்டின் தலைவரைப் பகுத்தறிவாளர் கழகத்தின்  மா நிலத்துணைத்தலைவர் கோபு.பழனிவேல் முன்மொழிய, பல மாவட்டப்பொறுப்பாளர்கள அவரை வழிமொழிந்தனர்.

மாநாட்டினைத் திறந்துவைத்து திராவிடர் கழக்த்தின் துணைத்தலைவர், மின்சாரமாய் எதிரிகளுக்கு ஷாக் கொடுக்கும் கவிஞர் கலி.பூங்குன்றன் பகுத்தறிவாளர் கழகத்தின் தொடக்கக் கால வரலாறு, பொறுப்பாளர்களாய் பதவி வகித்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், உறுப்பினர்களாய் தங்களைப் பதிவுசெய்து கொண்ட தமிழக மந்திரிகள் எனப்பட்டியலிட்டு இன்றைய நிலையில் பகுத்தறிவாளர் கழகத்தின் தேவையினை வலியுறுத்தி உரையாற்றினார்.

பகுத்தறிவுப்போராளிகள் படங்களைத் திறந்து வைத்து திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் சு.அறிவுக்கரசு உரையாற்றினார். மறைந்த பகுத்தறிவுப்போராளிகளை மட்டுமல்ல, இன்றும் போராளிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும்

தனுவச்சபுரம் சுகுமாரன்,மங்களூர் நரேந்திர நாயக் ஆகியோரையும் குறிப்பிட்டு இந்துமதம்,கிறித்துவமதம், இஸ்லாமிய மதங்களை எதிர்த்துப் போரிட்ட பகுத்தறிவாளர் களை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.

பொதுவுடைமை இயக்கத்தைச்சார்ந்த பேராசிரியர் அருணன் தந்தை பெரியாரின் படத்தை திறந்துவைத்து மூட நம்பிக்கையின் முடை நாற்றம் எப்படி எல்லாம் மத்திய,மாநில அரசின் மூலமாக வீசுகின்றது,சமூகத்தில் அறிவியல் ஊடகங்கள் மூலமாகப் பரப்பப்படுகின்றது, தந்தை பெரியார் அந்தக் காலத்தில் எப்படி எல்லாம் போரடினார், வாதாடினார் என

விலாவாரியாக எடுத்துரைத்தார்.அறிவியல் கண்காட்சியைத் திறந்துவைத்து, அறிவியல் மனப்பான்மை ஏன் தேவைப் படுகின்றது,அதற்கு இந்தக் கண்காட்சி எப்படிப் பயன்படும் என்பதனை தனது உரையில் சுட்டிக்காட்டினார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்.

பிற்பகல் 11.30 மணியளவில் ‘புதியதோர் உலகம் செய்வோம்’  என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கத்திற்கு தலைமை வகித்து  பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு உரையாற்றினார்.அந்த நேரத்தில் அமெரிக்க மனித நேய இயக்கத்தால் ‘மனித நேய வாழ்நாள் சாதனையாளர்’ விருதுபெற்ற

பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர்,திராவிடர் கழகத்தலைவர்

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அரங்கினுள் நுழைய, தோழர்களின் உணர்ச்சிமிக்க  முழக்கத்தால் வரவேற்கப் பட்டார்.

கருத்தரங்கத்தின் தொடக்க உரையை ஊடகவியலாளர், எழுத்தாளர் ப.திருமாவேலன் ஆற்றினார். சுயமரியாதை இயக்கத்திற்கும் விருதுநகருக்கும் உள்ள தொடர்பினை, பகுத்தறிவாளர் கழகத்தின் பணியினைப் பாராட்டி தேர்ந்தெடுத்த சொற்களால் செறிவான உரையைப்

ப.திருமாவேலன் ஆற்றினார். தொடர்ந்து ‘பெரியாரை உலகமயமாக்குவோம்’ என்னும் தலைப்பில் பேரா.ப.காளி முத்து’ ‘ஜாதி ஒழிப்பு’ என்னும் தலைப்பில் எழுத்தாளர் மஞ்சை வசந்தன், ‘முறியடிப்போம் மூட நம்பிக்கைகளை’ என்னும் தலைப்பில் தகடூர் தமிழ்ச்செல்வி, ‘மதவெறி மாய்ப்போம்’ என்னும் தலைப்பில் அண்ணா சரவணன், ‘பெண் விடுதலை நோக்கில் பாலியல் சமத்துவம்’ என்னும் தலைப்பில் பேரா.மு.சு. கண்மணி ஆகியோர் உரையாற்றினர்.

விருதுநகரில் பேராசிரியராகப் பணியாற்றி, தான் பகுத்தறிவாளராக இருந்தது மட்டுமல்ல தன்னிடம் படித்த

பல மாணவர்களைப் பகுத்தறிவாளர்களாக மாற்றிய பகுத்தறிவுப் பேராசிரியர், இனமானப்பேராசிரியர் க.அன்பழகன்

அவர்களின் இளவல் பேரா.திருமாறன் அவர்களுக்கும் அவரது

இணையர் செந்தாமரை அவர்களுக்கும் மாநாட்டு மேடையில் பொன்னாடை போர்த்தி பாராட்டி மகிழ்ந்தார் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தொடர்ந்து வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இந்திய நாத்திகக் கூட்டமைப்பின் (திமிஸிகி) தலைவர் கர்நாடக மாநில பேராசிரியர். நரேந்திர நாயக்,துணைத்தலைவர் கேரளா யுக்திவாதி சங்கத்தின் பொறுப்பாளர்- தனுவாச்சபுரம் சுகுமாறன்,மும்பை பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் அ.இரவிச்சந்திரன் ஆகியோர் மாநாட்டினை வாழ்த்தி உரையாற்றினர். தொடர்ந்து திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கல்வி வள்ளல் காமராசர், அண்ணல் அம்பேத்கர் படங்களைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். அ.தா.சண்முகசுந்தரம் அவர்களின் நன்றியுரையோடு காலை அமர்வு முடிவுபெற்றது..

மதிய உணவு திருமண மண்டபத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதிய உணவுக்குப்பின் நடைபெற்ற தீர்மான அரங்கத்திற்கு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில துணைத்தலைவர் கோ.ஒளிவண்ணன் தலைமையேற்று,கடந்த காலங்களில் நமது மேடைகளில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் இன்றைய சட்டங்கள்..அதைப்போல இன்று நிறைவேற்றப்படும் பல தீர்மானங்கள் நாளைய சட்டங்களாகும் எனக்குறிப்பிட்டார். முத்தான,

‘‘நீட்’’ ‘‘டெட்’’ போன்ற தேர்வுகளை நீக்குக, புதிய தேசியக் கல்வி கொள்கையை முற்றிலும் கைவிடுக’’ போன்ற கருத்துக்களின் அடிப்படையில் அமைந்த 21 தீர்மானங்கள்  பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்கள் முன் மொழிய  மாநாட்டில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து பகுத்தறிவாளர் கழகப்பொருளாளர் சி.தமிழ்ச் செல்வன் தலைமையில் ‘பகுத்தறிவுப் பிரச்சாரம் உடனடி தேவை’ என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. அறிவார்ந்த பட்டிமன்றத்தின் நடுவராக ஊடகவியலாளர் நக்கீரன் கோவி.லெனின் அவர்கள் பொறுப்பு ஏற்க, ஆண்களிடமே  என்னும் தலைப்பில், வழக்குரைஞர் பா.மணியம்மை,இறைவி,ச.இன்பக்கனி, தெ.அ.ஓவியா ஆகியோர் அனல் தெறிக்க உரையாற்றினர். ‘‘பெண்களிடமே ‘என்னும் தலைப்பில் முனைவர் அதிரடி அன்பழகன்,இரா.பெரியார்செல்வன்,கோபி.வெ.குமாரராசா,தேவகோட்டை அரவரசன் ஆகியோர் சொற்போர் புரிந்தனர். முடிவில் நகைச்சுவையும்,நயமிக்க கருத்துக்களும் நிரம்பிய தனது முடிவுரையாக பகுத்தறிவுப்பிரச்சாரம் உடனடித்தேவை ஆண்களிடமே எனத்தீர்ப்பளித்தார். தொடர்ந்து பேரா.நரேந்திர நாயக்  அவர்களின் மந்திரமா?தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது.காவல்துறையின் அனுமதி மறுப்பால்  பகுத்தறிவாளர் பேரணி நடைபெறாமல் தடைபட்டது. 

மாலை 6 மணிக்கு சுயமரியாதைச் சுடரொளி  பேராசிரியர்

பு.இராசதுரை  நினைவரங்கத்தில் பொதுக்கூட்டம் தொடங்கியது.

அனைத்துக்கட்சிப் பிரமுகர்களால், பொதுமக்களால், பகுத்தறி வாளர்களால், போடப்பட்டிருந்த நாற்காலி இருக்கைகள் நிறைந்து மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. சில தந்திரங்களை கற்றுக்கொண்டு, மந்திரம் என்னும் பெயரால் மக்களை எப்படி கார்ப்பரேட் சாமியார்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதனை

ஈட்டி கணேசன் அவர்கள் தனது மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி மூலம் தோலுரித்துக் காட்டினார். விருது நகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் இல.திருப்பதி அவர்கள் வரவேற்புரை ஆற்ற,பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையேற்று உரையாற்றினார். திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன், பத்து ஆண்டுகளுக்கு மேலாக பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளராகப் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு பகுத்தறிவாளர் கழகத்தின் சிறப்புக்களைப் பட்டியலிட்டார். திராவிடர் கழகத்துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன அவர்களின் உரையைத்  தொடர்ந்து உளவியல் மருத்துவர் ஷாலினி அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் ஆரியர்கள் எப்படி நம்மை முட்டாளாக்கினார்கள் என்பதனை உவமைகளால் குறிப்பிட்டு விழிப்புணர்வு ஒன்றே நமக்கு விடியல் என்று உரையாற்றினார்.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர், மந்திரி பதவி என்றாலும் பழி சுமத்தப்பட்டு அடைக்கப்பட்ட சிறைச்சாலை என்றாலும் புடம் போட்ட தங்கமாய் ஒளிவிடும் ,உண்மைதனை உரக்கச்சொல்லும் ஆ.இராசா எம்.பி.அவர்கள் சிறப்பாக நாட்டில், நாடாளுமன்றத்தில் நிகழும் நிகழ்வுகளைக் குறிப்பிட்டு அண்ணல் அம்பேத்கர்,தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் எனப் பகுத்தறிவுப் பாதைக்கு அடித்தளம் அமைத்தவர்களை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.

தொடர்ந்து எழுச்சித்தமிழர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தந்தை பெரியாரின் தொலை நோக்கு சிந்தனைகளைக் குறிப்பிட்டு,

சாதி எப்படி எல்லாம் இந்திய அரசியலை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது, சனாதன சக்திகளை எதிர்கொள்ள நாம் ஒன்றிணைய வேண்டும். இது பகுத்தறிவாளர் கழகத்தின் பொன்விழாத் தொடக்க விழா மாநாடு, அடுத்த ஆண்டு நடைபெறும் பொன்விழா நிறைவு விழா மாநாட்டிலும் நான் கலந்து கொள்வேன் என்று உரையாற்றினார்.

நிறைவாக பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் திராவிடர்

கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார். விருதுநகர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளர் சு.பாண்டி அவர்கள் நன்றி கூற பகுத்தறிவாளர் கழகத்தின் பொன்விழாத் தொடக்க மாநாடு நிறைவு பெற்றது.

அரசு ஊழியர்கள் தங்கள் கடவுள் நம்பிக்கையை கடைப் பிடிப்பதும், பரப்புவதும் எப்படி அவர்களது உரிமையோ

அதனைப்போல அரசு ஊழியர்களாக இருக்கும் பகுத்தறிவா ளர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் தங்கள் கொள்கையை கடைப்பிடிப்பதும் பரப்புவதும் அவர்களின் அடிப்படை உரிமை என்ற அடிப்படையில் முகிழ்ந்ததுதான் பகுத்தறிவாளர் கழகம். பகுத்தறிவு ஆசிரியர் அணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் என விரியும் பொன்விழாக் காணும் பகுத்தறிவாளர் கழகத்தின் கிளைகள் ஊர் தோறும் தோன்ற வேண்டும்.

இந்தியாவில் அல்லது உலகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு உறுப்பினர்களையும் தொடர் செயல்பாடுகளையும் கொண்ட பகுத்தறிவாளர் கழகம்  இன்னும் விரிவடைய வேண்டும்.

மக்களின் மனதில் மீண்டும் மீண்டும் மூட நம்பிக்கைகளை விதைப்பதற்காக அரசும் ஊடகங்களும் போட்டி போட்டுச் செயல்படும் இந்தக் காலகட்டத்தில் பகுத்தறிவாளர்களின் தேவை,வேலை இன்னும் கூடுதலாகின்றது.

இந்தியாவில் நாம் இழந்த பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், கல்புர்க்கி, கௌரி லங்கேஷ் ஆகியோர் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அஞ்சாமையையும் உண்மையையும் உள்ளத்திலே தேக்கி வைத்து ஊர் ஊராய்ச் சுற்றி உண்மை சொல்லும் பயணத்தையே தனது வாழ்க்கைப்பயணமாய் ஆக்கிக்கொண்ட தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட, பகுத்தறிவாளர் கழகம்- தோற்றுவிக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை அதன் புரவலராய் இருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில், வழிகாட்டுதலில் பொன்விழாக் கொண்டாடும் வாய்ப்பு ஒரு பொன்னான வாய்ப்பு.அதனை மிகச்சரியாக தொடங்கி வைத்திருக்கிறார்கள் அதன் பொறுப்பாளர்கள். வாழ்த்துவோம், மகிழ்ச்சியடைவோம், பகுத்தறிவாளர் கழகத்தின் பயணத்தில் நம்மையும் நாம் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம்.

-வ.நேரு

புதிய விடியல்!

புதிய விடியல்!

எனக்கு மழை

பிடிக்காது

என்றாள் அம்மா!

பொத்தல்களின்

தூறலைப் பொத்திவைக்க

பாத்திரம் இல்லையென்றாள்!

ஈசான மூலையின்

பரணுக்கடியில்

அம்மாவும் நானும்

அன்றொருநாள்

அடைமழைப்பொழுதில்!

கொட்டும் மழைத்தூறலில்

வெளிச்சத்திற்கு வந்தது

வறுமையின் சுவடுகள்!

ஈர விறகின் புகைமூட்டத்தில்

வெந்து தணிந்திருந்தது

எங்கள் வயிற்றைப்போலவே

அந்த அடுப்பும்!

உயிர் பிரியும்

தருணத்திற்காகக் காத்திருந்தது

மண்ணென்ணெய் தீர்ந்த

சிம்னி விளக்கு!

ஐந்தாறு வரிசையாய்

அடுக்கி வைத்திருந்த

அடுக்குப்பானையில் விழும்

மழைத்துளியின் சத்தம்

வறுமையின் ஒப்பாரிச்சத்தமாய்

எதிரொலித்தது!

ரெட்டைத்திண்ணையில்

வெள்ளாடுக்குட்டிகள்

ஒண்டிக்கிடந்தது

சாரல்களின் குளிரைப்போக்க!

சாத்தி வைத்த பனங்கழி

கதவின் இடுக்குகள் வழியே

ஊதக்காத்து குளிராய்த்

துளைத்தது!

விதைநெல் பானையில்

சாக்குப்போர்த்தி

ஓரமாய் சாய்ந்திருந்தாள்

அம்மா!

மழையும் விடவில்லை

பொழுதும் விடியவில்லை

வறுமைக்கு வாக்கப்பட்ட

நாங்கள் இன்னமும்

காத்திருக்கிறோம்

புதிய விடியலுக்காய்!

-நா.காமராசன், மண்டகொளத்தூர்

பெங்களூரு இரண்டாம் தமிழ்நாடு

இயற்கை வளமும் மணங்குளிரும் எழிழும் நிறைந்த  கருநாடக மாநிலத்தின் தலைநகராக சரித்திரப் புகழ் வாய்ந்ததாக மைசூர¢ சிறந்து விளங்கியுள்ளது. இப்போது பூங்கா நகரம் என்றும் சிலிகான் சிட்டி என்றும் அழைக்கப்படுகின்ற பெங்களூர் தலைநகரம் இயங்கி வருகிறது.

கருநாடக மாநிலம் 1,91,791 சதுர கிலோ மீட்டர¢ பரப்பிலும் பெங்களூரு மற்றும் கிராமப் புறப் பகுதிகள் ஒருங்கிணைந்து 7,915 சதுர கிலோ மீட்டர¢ பரப்பில் சமவெளியும் காடுகள் சூழ்ந்த குறிஞ்சி நிலமாய் திகழ்கின்றது.

கருநாடக வளர¢ச்சியில் முழு பங்களித்து ஒழுங்குபடுத்தி வளர¢ச்சி கண்டவர¢ பொறியாளர¢ விஸ்வேஸ்வராயா.  அதே போல கெம்பகவுடா  என்னும் குறுநில மன்னரின் தொலைநோக்குப் பார¢வையால் பெங்களூரு சீரமைக்கப் பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றிய விடுதலைக் கொடியை நினைவு கூறுகின்ற வகையில் வீரதீர செயலைக் குறிக்கும் செம்மண் நிறைந்தும், மலைகளும், பள்ளத்தாக்குகளும் காடுகளும் பசுமைப் போர¢வையால் பச்சையாகவும், அதில் வாழும் மக்கள் வெண்மையோடு விளங்குகிறது, அனைத்து விதமான பயிர¢ சாகுபடிக்கும் ஏற்ற ஈரப்பதம் நிறைந்து வளமை கொஞ்சிடும் பூமியாகும்.

தென்னகத்திலேயே பொன் விளையும் பூமியாம் தங்கவயல் இருந்துள்ளது, மிகப் பெரிய தங்கச் சுரங்கம் நிர¢வாகக் காரணங்களால் தற்போது மூடங்கிக் கிடக்கிறது, பல லட்சம் உழைக்கும் தொழிலாளர¢களும் வாழ்க்கை கேள்விக்குறியோடு தவிக்கின்றனர¢, இரும்பு போன்ற கனிமங்களும், கிரைணட் கற்களும் அரசுக்கு பெரும் வருவாயை ஈட்டித் தருகின்றன.

சங்க இலக்கியக் காலம் தொட்டு மக்களின் வளமான வாழ்வுக்கு பெரும் துணை நின்ற, நிற்கின்ற காவிரி ஆறு, குடகு மாவட்டத்தில், பொங்கும் புனலாய் மலையில் தோன்றி, 474 கிலோ மீட்டர¢ தொடர¢ பயணத்தை தமிழகத்தின் நாகை மாவட்டம் காவிரிப் பூம்பட்டிணத்தில் குணக்கடலாம் வங்காள விரிகுடாக் கடலில், பயணத்தை நிறைவு செய்கிறது, தமிழகத்தின் டெல்டா மாவட்டம் என்று அழைக்கப் படுகின்ற திருச்சி, தஞ்சாவூர¢, திருவாரூர¢ நாகை மற்றும் கடலூர¢ மாவட்டத்தின் நெல், கரும்பு, பருத்தி சாகுபடிக்கு பெரும் அளவில் உதவியாய் அமைந்துள்ளது காவிரி ஆறு.

தமிழர¢களின் கைவண்ணத்தில் கலையழகும் கம்பீரத் தோற்றத்தின் எழில் வழவமாய் ‘விதான சவுதா” என்னும் சட்டப் பேரவைக் கட்டிடமும், அதன் எதிரே செவ்வண்ணப் போர¢வை போர¢த்தி காட்சியளிக்கும் உயர¢நீதிமன்ற கட்டிடமும் சட்டமியற்றும் மாளிகையும், நீதியை நிலைநாட்டும் மாளிகையும் கைகோர¢த்துக் காண்போரை கவர¢ந்து காட்சியளிக்கிறது, இது போன்ற பொலிவினை எந்த மாநிலத்திலும் ஒரு சேர காணவியலாது, நீதிமன்றத்தின் தென்பகுதியில் 600 ஏக்கர¢ சதுரப் பரப்பில் கண்கவர¢ பூந்தோட்டமாய் ‘‘கப்பன் பூங்கா” பரந்து விரிந்து மக்களின் மகிழ்விடமாய், சிறார்¢களின் பொழுதுபோக்கும் பூமியாய் அமைந்துள்ளது, பல்வேறு தனியார¢ சிறார்¢, மகிழ்விடங்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் சிறந்து விளங்குகின்றது, அரசு அருங்காட்சியகமும் விளையாட்டு பேரரங்கப் பகுதியில் அமைந்துள்ளது.

எழிலார்ந்த கண்கவர¢ கண்ணாடி மாளிகையுடன் கூடிய ‘லால்பாக்”கும் நகரின் மையப் பகுதியில் மனமகிழ்வு பூங்காவாக அமைந்துள்ளது, பருவ காலத்தில் மாம்பழக் கண்காட்சி மிகச் சிறப்பாய் அமைப்பது, தோட்டக்கலைத் துறையின் செயல்பாடுகளில் தேவையானதாகும், அதே போல மலர¢க் கண்காட்சியும் நிகழ்த்துவர¢, பெங்களூருவைச் சுற்றி-லும் எண்ணிக்கையிலா பெரிய ஏரிகள் சூழ்ந்துள்ளன. மாந–கரின் தென் பகுதியில் ‘‘பன்னரு கட்டா”  எனும் பகுதி–யில் பல ஏக்கர¢ சுற்றளவில் உயர¢தரமிக்க உயிரியல் பூங்கா, ஏற்றமிகு சுற்றுலா மக்களின் மகிழ்விடமாய்த் திகழ்-கிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் அவுரா நதியின் குறுக்கே பெரிய தொங்கு பாலம் வழிவமைத்துள்ளது போல் கிருஷ்ணராஜபுரம் தொடர¢ வண்டி நிலையத்தின் அருகில் ஒரு தொங்கு பாலமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்பான தோற்றப் பொலிவுடன் மக்களால் மகிழ்வுடன் உற்று நோக்கும் இடமாய் விளங்குகிறது.

ஐ.டி. தொழில் வளர¢ச்சியில் 6830 பெரு நிறுவனங்களைப் பெற்று சிறப்பான நிலையில் விளங்குகிறது, இந்திய ஒன்றியத்திலுள்ள அனைத்துப் பகுதி மக்களும் வாழ்வாதாரமளிக்கும் பூமியாய் பெங்களூரு விளங்குகிறது.

கருநாடகத்தில் மேலே மக்களும் கீழே சிவப்பிலும் கொடியை வடிவமைத்து கன்னட கொடியாய் நவம்பர¢ முதல் நாளில் முக்கிய பகுதிகளில் ஏற்றி வைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர¢, பல மாநிலத்திற்கு இல்லாத பெருமை, முத்தமிழ் அறிஞர¢ கலைஞர¢ அவர¢களின் ஆட்சிக்காலத்தில் ‘‘தாயகத்திற்கு தனிக் கொடி” என்னும் உரிமை என்பது நினைவுத் தரத்தக்க நிகழ்வாகும்.

பெங்களூரு நகரினை இணைக்கின்ற வகையில் சிட்டி நிலையம், கண்டோண்மெண்ட், கிழக்கு, பானஸ் வாடி, பைப்னஹள்ளி, சிக்குதாளா, கார¢மேலராம், கிருஷ்ண ராஜபுரம், சென்னசந்திரா என பல தொடர¢ வண்டி நிலையங்களும், நகரின் பலப் பகுதிகளுக்கு வலம் வரும், ‘மெட்ரோ தொடர¢வண்டிகளும், மக்களின் பயண நெருக்கடியை பெரும் அளவில் குறைந்து சேவை செய்கின்றன, வேறு எந்த நகருக்குமில்லா பெருமையாகும்.

மக்களின் பெருக்கம் போலவே போக்குவரத்து ஊர¢திகளின் பெருக்கமும் அதிகமாயுள்ளது, தென்ன-கத்தின் குறிஞ்சியாய் புகழ் பெற்று விளங்கும் பெங்களூருவை இரண்டாம் தமிழ்நாடு என்றே கூறுவர¢ ‘புதுவைக்கு வீதியழகு, இலண்டனுக்கு நீதியழகு, பெங்களூருக்கு கவின்மிகு கலையழகு” என்றே அழைக்கலாம்.

பொதுவுடமை அறிஞர¢ பிளாட்டோ ‘‘நம் நாடு எல்லா வளங்களும் பெற்றிருந்தும், தன்னலவாதிகளால் ஒரு பக்கம் வளமையும், ஒரு பக்கம் வறுமையும் பெருகியே உள்ளன” என்று கூறுவது கருநாடக மாநிலத்திற்கும் பொருந்தும் என்றே கூறலாம்.  அதிநவீன கட்டிடக் கலை, தொழில் நுட்பம், உலகத்தர வரிசைப் பட்டியலில் விண்ணை எட்டிப் பிடிக்கும் நிலையில் சிறந்து விளங்குகிறது.

 தமிழர¢களின் பண்பாட்டு அடையாளமாக பெங்களூர¢த் தமிழ்ச் சங்கமும், திருவள்ளுவர¢ சங்கமும் சிறப்பாக நிலையில் உயர¢ந்து விளங்குகின்றன, கல்விக் கொடையின் ‘‘பாரியாய் முனைவர¢. மதுசூதன பாபு லிட்டில் உயர¢நிலைப் பள்ளியும், அம்பேத்கர¢ சட்டக் கல்லூரியைப் பேராசிரியர¢ இராம மூர¢த்தியும் பெயர¢ விளங்கும் செம்மையுடன் நடத்திச் செல்லுவது பெருமையாய் அமைந்துள்ளன.

-இரா.முல்லைக்கோ

என்ன செய்தார் ஈ.வெ.ரா?

ஜாதி என்னும் நாகத்தைத் தாக்கித் தாக்கிச் சாகடித்தப் பெருமை அவர் கை தடிக்கே உண்டு, என்று தந்தை பெரியாரைப் பற்றி எழுதினார் கவிஞர் கண்ணதாசன்.  ஆம், தான் வாழ்ந்த காலமெல்லாம் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், அடக்கப்பட்ட பெண் சமூகத்திற்கு பாடுபட்டு, உழைத்து உரிமைகளை பெற்றுத் தந்த தலைவர் பெரியார்.

என்ன செய்தார் ஈ.வெ.ரா.? என்ன செய்தார் நாயக்கர்? என்று கேள்வி கேட்டு அகமகிழும் ஜாதி, மத வெறியர்களுக்கும், இன்றைய இளைய சமூகத்திற்கும் இந்த கட்டுரை.

பெரியார் ஒரு போதும் இந்திய நாடு சுதந்திரம் பெற்றதாக ஏற்றுக்கொள்ளவில்லை, ‘வெள்ளைக்காரன்  கையிலிருந்து, கொள்ளைக்காரன் கைக்கு சென்றது” என்றார், காரணம் ஜாதி, சுதந்திர நாட்டில் ஜாதி மதம் அப்படி இருந்தால் அது சுதந்திர நாடா என்றார்.

என்னுடைய ஜாதி ஒழிப்புப் பணிக்கு கடவுள் தடையாயிருந்தால், அது கூட ஒழிந்துதான் ஆக வேண்டும் என்றார்.

ஜாதியைப் பாதுகாக்கும் கடவுள், மதம், புராணம், பார்ப்பனர்கள் என்று அனைத்தையுமே எதிர்த்தார்.

9.10.1957இல் ஆத்தூரில் பேசியபோது, ஜாதி ஒழிப்புப் போரில் ஈடுபட விரும்புவோர் இரத்தத்தில் கையெழுத்திட்டு தமக்கு அனுப்புமாறு கோரினார்.

தஞ்சையில் ஜாதி ஒழிப்பு (ஸ்பெஷல்) மாநாடு 4-.11-.1957 அன்று கோலாகலத்துடன் கூடிற்று. இரண்டு லட்சம் ஈட்டிகள் திரண்டதாகப் பெரியாரே வர்ணித்தார். அந்த மாநாட்டில் தான் இந்திய அரசுக்கு மரண அடி கொடுத்தார், ‘‘ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுக்குத் தீ வைப்போம்” என்று 26.11.1957 நாளையும் அறிவித்தார்.

பல ஆயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர், வெறும் காகிதத்தில் அரசியல் சட்டம் என்று எழுதியதற்காகவே 26-ஆம் தேதி மட்டும் நாடு முழுவதும் 3,000 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.       

‘‘நியூயார்க் டைம்ஸ்” ஏட்டில், இந்தியாவில் திராவிடர் கழகத்தினர் இந்திய அரசியல் சட்டத்தை கொளுத்தி, 3000 பேருக்கு மேல் சிறை சென்றனர் என்று செய்தி வெளியிட்டது.

தந்தை பெரியார் மீது 117, 323, 324, 326, 436, 302 ஆகிய பிரிவுகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திருச்சி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி என். சிவசுப்பிரமணிய நாடார் 14.12.1957 அன்று பெரியார் பேசிய மூன்று பேச்சுக்களுக்கும் தனித்தனியே ஆறு மாதம் தண்டனை அளித்து, மூன்றையும் ஏக காலத்தில் அனுபவிக்குமாறு தீர்ப்பளித்தார்.

ஜாதி ஒழிப்பிற்காகச் சிறை சென்ற முதல் தலைவர் பெரியார், 6 மாதம் சிறைவாசம் அடைந்தார், அப்போது அய்யாவின் வயது 79. அன்றைய தி.கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.குருசாமி கைதாகி 9 மாதம் சிறையில் இருந்தார்.

வடநாட்டுத் தலைவர் டாக்டர் ராம் மனோகர் லோகி அரசு அனுமதியோடு பெரியாரை 23-.1-.1968 இல் சந்தித்து பேசினார், ஜாதி ஒழிப்புப் பணிகளில் சரியான உணவின்றி சில தோழர்கள் சிறையிலேயே இறந்தனர்.

பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி 11-.3-.1958 அன்று பலி ஆகினர், மொழித் தியாகிகளை அறிந்திருப்போம், ஜாதி ஒழிப்புத் தியாகிகளை அறிந்திருக்கமாட்டோம், பல ஆயிரக்கணக்கான கருஞ்சட்டை மெழுகுவர்த்திகளால் தியாகத் தழும்புகளால் கட்டமைக்கப்பட்டதே திராவிடர் இயக்கம்.

இரண்டு உடல்களும், அன்னை மணியம்மையார் தலைமையில் முழக்கங்களோடு அடக்கம் செய்யப்பட்டது.

நான் லால்குடி கலந்துரையாடல் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு அம்மாவின் பெயர் ‘‘சிறைச்செல்வி”  ஏன் இந்த பெயர் என்று கேட்டதும், ஜாதி ஒழிப்பிற்காகச் சிறைசென்ற போது அங்கே பிறந்த குழந்தை என்பதால் இந்த பெயர், இதை கேட்டதும் ஆச்சரியப்பட்டேன், அந்த அம்மாவின் அடுத்த தலைமுறையும் அய்யாவின் கொள்கை வழியில், ஆசிரியர் வீரமணி அய்யா தலைமையில் நடக்கின்றனர்.

இன்னும் ஜாதி ஒழியவில்லை, இரண்டாயிரம் ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் போர்.  தங்கள் சுயலாபத்திற்காக, பிழைப்பிற்காகப் படிக்கப் புத்தகம் எடுக்கும் கைகளில் பிளேடுகளைக் கொடுத்து அறுக்கச் சொல்லிக் கொடுக்கின்றது இந்த காட்டுமிராண்டிச் சமூகம்.

இந்த அடுக்குமுறைகளை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம், எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் தந்தை பெரியார் என்ற தலைவனின் ஓர் அறிவிப்பால் சிறை சென்று, உயிர்நீத்த ஜாதி ஒழிப்புப் போராளிகள் போராட்டத்தை அறிவோம், பரப்புவோம், வெற்றி பெறுவோம்.

ஜாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்ற அண்ணன் பழநிபாரதி வரிகளுக்கேற்ப ஜாதியை ஒழிப்போம், சமத்துவம் காண்போம்.

அய்யா அண்ணல் வழியில்

எம் ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு

வீரவணக்கம், வீரவணக்கம்.

பா.மணியம்மை

தலைமையை கற்போம் தலைவர்களிடமிருந்து… டாக்டர் பீமாராவ் அம்பேத்கர்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். கைத்தடி வாசகர்களை ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் சந்திப்பதில் மிக்கமகிழ்ச்சி. ஒரு குழந்தையின் வளர்ச்சி என்பது உடல்வளர்ச்சி, அறிவு வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியது. இன்று குழந்தைகளின் உடலுக்கு வலிமை சேர்க்கும் விளையாட்டுக்களை அடுத்துஅவர்களின் அறிவையும் மனதை பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். இன்றைக்கு தொழில்நுட்பங்கள், பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்கள் வளர்ந்திருக்கும் காலகட்டத்தில் நிறைய மாணவர்கள் உயர்கல்வி படிக்க போராடி பெருமுயற்சிக்குப்பின் இடம் கிடைக்காமலும், அவ்வாறு போராடி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்தபின் அங்கு கல்வி நிறுவனங்கள் தரும் அழுத்தம் தாங்காமலும் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று செய்தியைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமளிக்கிறது.

அதற்கெல்லாம் அரசின் கொள்கை முடிவுகள், குறிப்பிட்ட மக்களின் ஆதிக்கம் போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்த மாதிரியான பிரச்னைகள் சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல வாழ்க்கையில் வெற்றி பெற்றமா பெரும் தலைவர்களுக்கும், அறிஞர்களுக்கும், பெரும் அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கும் இருந்திருக்கிறது என்பதை அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது. இன்றைய இளைஞர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் மற்றும் தலைமைப் பண்புகள் பல தலைவர்களின் வாழ்க்கையில் இருப்பதால் அவர்களிடமிருந்தே அவற்றை கற்கலாம் எனத்தோன்றியது. எனவே தலைமையைக் கற்போம் தலைவர்களிடமிருந்து… என்ற தொடர் கட்டுரையை கைத்தடியில் எழுத உள்ளேன். வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும், படித்து பயன்பெற வேண்டும் என்றும் மேலும் பலருக்கு இதைநீங்கள் கொண்டு செல்ல வேண்டும் என அனைவரையும் அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

தலைமை என்பது பதவியோ பொறுப்போ அல்ல ஆனால் பதவியில் இருப்பவர்களும் பெரும் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய பண்பாகும். என்ன அது பெரும்தலைவர்களுக்கு மட்டும் உரியபண்போ அல்லது ஒரு நிறுவனத்தின் உயர்பதவிகளில் இருப்பவர்கள் மட்டும் வளர்த்துக் கொள்ளவேண்டிய பண்போ அல்ல. அது ஒட்டுமொத்த மனித சமூகமேவளர்த்துக் கொள்ள வேண்டிய பண்பு. ஏனெனில் தலைமைப் பண்பு எல்லாதுறைக்கும் தேவைப்படுகிறது. மேலும் தலைமை என்பது தலையில்மை ஏற்றும் காலத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய பண்பு அல்ல. அது கருவறையில் காலடி எடுத்து வைக்கும் போதிலிருந்தே பழகிக்கொள்ள வேண்டிய பண்பு. அவ்வாறு கற்றுக்கொண் ட பண்பை யார் தன்சுயநலத்திற்காகப் பயன்படுத்தாமல் பொதுநலத்திற்காகப் பயன்படுத்துகிறார்களோ அவர்களே என்றும் மக்கள் போற்றும் தலைவர்களாக அறியப்படுகின்றனர்.

இந்த பூமிக்கு வரும் எந்த மனித உயிர்களும் எப்படி வாழவேண்டும் என்று தெரிந்து கொண்டு இங்கு வருவதில்லை. அவ்வாறு வந்தவர்கள் தானே முயன்று கற்று தங்களை மற்றவர்கள் வாழ்விற்கு முன்னுதாரணமாகிக்கொண்டவர்களில் ஒருவர் தான் டாக்டர்பி.ஆர்.அம்பேத்கர்ஆவார். மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அம்பவதே என்றகிராமத்தில் பிறந்து மஹூ என்ற இடத்தில் இராணுவப் பள்ளியொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தராம் ஜிக்கும்பீமாபாய்க்கும், 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் பிறந்த பதினான்காவது குழந்தைதான் பீம் என்னும் கடைக்குட்டி செல்லப்பிள்ளை. பீம்பள்ளிக்கு சேர்வதற்குள் அவர் தந்தை பணியிலிருந்து ஓய்வுபெற்று தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். அவர் தந்தைக்கு கிடைக்கும் ஓய்வு ஊதியத்திலிருந்து வாழ்க்கையை நடத்துவது என்பது ஓடமில்லாமல் ஆற்றைக்கடப்பது போன்றிருந்தது. தம் சொந்த ஊரில் வேலையில்லாமலும் நிரந்தர வருவாய் இல்லாமலும் இருந்ததைவிட ராம்ஜிக்கு மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால், தான்மஹர் என்ற தீண்டப்படாத வகுப்பில் பிறந்ததால் தன் மகனை பள்ளியில் சேர்த்துக் கொள்ளவில்லையே என்பது தான்.

தன் மகனை பள்ளியில் சேர்த்துக் கொள்ளாத அந்த கிராமத்தை காலிசெய்துவிட்டு பம்பாயில் உள்ள சதாரா என்ற பகுதிக்கு குடியேறி அங்குள்ள ஓர் இராணுவப்பள்ளி ஒன்றில் பீம் சேர்க்கப்பட்டார். பொதுவாக பெற்றோர்களின் வயதான காலத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிபுத்திசாலியாக இருப்பார்கள் என்பார்கள், அதைப்போலவே பீமும் படிப்பில் ஆர்வம்மிக்கவராக இருந்தார். அதேநேரத்தில் தன்னோடு படிக்கும் மாணவர்களோடு வம்பிழுத்துக்கொண்டு வருவதுஅவனது பெற்றோர்களுக்கு வருத்தமாக இருந்தது. பீம் ஆறு வயதாக இருக்கும்போது அவன் தாய் பீமாபாய் உடல்நலக்குறைவால் மறைந்தார். இந்த நேரத்தில் ராம்ஜிக்குகுழந்தைகளை வளர்ப்பதற்கு உடல் ஊனமுற்ற தன் தங்கை மீராபாய் தானாக முன்வந்து உதவினாள். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தன் மனம் தளராமல் நன்றாகப் படித்ததால் அம்பேத்கர் என்னும் ஆசிரியரின் மனம் கவர்ந்த மாணவராகிப் போனார் பீம். பின் தன் பெயரையே பீமாராவ் அம்பேத்கர் என மாற்றிக் கொண்டார். இங்கு தான் நம் இளைஞர்கள் அவரிடமிருந்து கற்க வேண்டும் எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலை ஏற்பட்டாலும் வாழ்கையில் கல்வியை கைவிடக்கூடாது. அது தான் நம்மை நாம் விரும்பும் இடத்திற்கு கொண்டு செல்லக்கூடியது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்தச் சூழ்நிலையின் தாக்கத்தினால் தான் பின்னாளில் அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்கும் அவர்களின் மனிதஉரிமைக்கும் குரல்கொடுத்தார்.

அந்த பண்புதான் அவரை தலைமைப் பொறுப்புக்கு அழைத்துச் சென்றது. ஆறு தான் செல்லும் பாதையில் ஏற்பட்ட தடையால் நின்று போவதில்லை, மண்ணில் விதைத்த விதைகள் தன்மீது அழுத்திக் கொண்டுள்ள மண்ணைத்தாண்டி முளைத்து வருவதுபோல அம்பேத்கர் தனக்கு ஏற்பட்ட தடைகளை எல்லாம் தாண்டி குதித்தார்.

பீம் தான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது பள்ளிக்கு நோட்டுப் புத்தகம் எடுத்துக்கொண்டு போனதை விட பள்ளியில்உட்காருவதற்கு கோணிப்பையைச் சுமந்து கொண்டு போனதுதான் அதிகம். ஒருநாள் வகுப்பறையில் ஆசிரியர் தன்னை கரும்பலகையில் கணக்கு போடச்சொன்னதும் ஆர்வமாகச் செல்வதற்குள் சகமாணவர்கள் சென்று தீட்டுபட்டுவிடும் என்று தனது சாப்பாட்டு பைகளை எடுத்துக்கொண்டு வந்ததும் அந்த வயதில் அவருக்கு மனதில் தீராத காயத்தை ஏற்படுத்தியது. பீம் நான்காம் வகுப்பு படிக்கும்போது ராம்ஜி தன் இருப்பிடத்தை பம்பாயில் உள்ள பரேல் என்ற பகுதிக்கு மாற்றினார். அங்கு ஒரே ஒரு அறைதான் இருந்தது அதில் தான் சமைக்க வேண்டும், படிக்க வேண்டும், தட்டுமுட்டுச் சாமான்களையும் வைத்துக் கொள்ளவேண்டும் மேலும் அங்கேயேதான் தூங்கவும் வேண்டும்.

ராம்ஜி இந்த நேரத்தில் பீமை மாலை நேரத்தில் தூங்கச் சொல்லிவிடுவார், பிறகு நள்ளிரவுக்குப்பிறகு பீமை எழுப்பிவிட்டு படிக்கச் சொல்லிவிட்டு அவன் தூங்கிய இடத்தில் தான் படுத்துக்கொள்வார். மகன் மண்ணெண்ணெய் விளக்கில் விடியவிடிய படிப்பான். இவ்வாறு பள்ளியிலும் தனது வீட்டிலும் மிகுந்த மனவேதனைக்கும் இடநெருக்கடிக்கும் தள்ளப்பட்ட பீம் இவற்றை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு புத்தகத்தின் மீது தன் முழுகவனத்தையும் திருப்பினான்.மெட்ரிகுலேசன் படிப்பில் தான் சமஸ்கிருதம் மொழியை விருப்பப்பாடமாக படிக்க விரும்பியபோது அவருடைய ஆசிரியர் அதை மறுக்கவே வேறுவழியின்றி பாரசீக மொழிப்பாடத்தை எடுத்துப்படித்து வெற்றியும் பெற்றார். பின் கோலூஸ்கர் என்பவரின் நட்பு கிடைத்தது அது நடுக்கடலில் திசை தெரியாமல் தவிக்கும் கப்பலுக்கு கிடைத்த வழிகாட்டியைப்போல் இருந்தது. அவர் மெட்ரிகுலேசன் படிப்பில் தேர்ச்சி பெற்றதைப் பாராட்டி புத்தர் பற்றிய புத்தகம் ஒன்றை பீமுக்கு வழங்கினார், அது மன மாற்றத்திற்கும் மதமாற்றத்திற்கும் உதவியது. அவர்வழிகாட்டுதலில் பல நல்ல புத்தகங்களை படித்ததோடு அமெரிக்கா, இலண்டன் என வெளிநாட்டிற்குச் சென்று சட்டத்தில் பாரிஸ்டர் பட்டமும் பொருளாதரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

இலண்டனுக்கு மேற்படிப்புக்குச் சென்றபோது அங்குள்ளஅருங்காட்சியக நூலகத்தில் தான் தனது பெரும்பாலான நேரங்களைச் செலவிட்டு பல புத்தகங்களை படித்து குறிப்பெடுத்துக் கொண்டார். அந்த பழக்கம் தான் அவருக்குபின் நாளில் ஆய்வுக்கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதுவதற்கு உதவின. அது மட்டுமல்லாமல் உலகத்திலேயே அந்த நூலகத்தை மிக அதிகநேரம் பயன்படுத்தியவர்கள் என்ற பெருமையைப் பெற்றவர்கள் காரல்மார்க்ஸ்க்கும் அண்ணல்அம்பேத்கரும் ஆவர். மாணவர்களும் இளைஞர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம்இது. தனக்கு விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கவில்லை, விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை, விரும்பிய நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தோடு வேலை கிடைக்கவில்லை, தான் விரும்பிய பெண்ணை மணக்க முடியவில்லை என்று விலை மதிப்பற்ற உயிரை மாய்த்து கொள்ளக்கூடாது.மாறாக அண்ணல் அம்பேத்கர் போல் கவனத்தை ஒருமுகப்படுத்தி கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி நன்றாகக் கற்கவேண்டும் என்ற மனஉறுதியைப் பெறவேண்டும்.

அம்பேத்கர் தனது 17 ஆவது வயதில் சுமைதூக்கும் தொழிலாளியின் மகளான ராமியை பெண் பார்த்து நிச்சயம் செய்துவிட்டு திருமணத்திற்கு மண்டபம் தேடினால் ஒருவரும் கல்யாண மண்டபம் கொடுக்கவில்லை. எனவே அப்பகுதியில் இருந்த மீன்மார்க்கெட்டையே கல்யாண மண்டபமாக அலங்கரித்து ராமி என்கிற ராமாபாயை மணந்தார்.திருமணத்திற்குப் பின் வாழ்கை நடத்த, பொருள் வேண்டும் வேலை வேண்டும் என்று பல்வேறு வாழ்க்கைப் பிரச்சனைகள் இருந்தாலும் அவர் மனம் மட்டும் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தது. அவரது ஆர்வத்தைக் கண்டு கேலுஸ்கர், பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாட்டிடமிருந்து உதவித்தொகை பெற்று அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு  மேற்படிப்புக்கு அனுப்பினார்.

அங்கு தான் மனிதர்கள் சாதிவேறுபாடு இன்றி சமமாக நடத்தப்படுவதையும் சகமாணவர்கள் அவரை மதிப்பதையும் கண்டார். நண்பர்கள் எல்லாம் சுற்றிப்பார்க்க அழைத்தாலும் தன் நோக்கத்தில் குறியாக இருந் துகல்வி கற்றார். அவர் எப்பொழுதும் வரலாறு, சமூகவியல், தத்துவம் மற்றும் மனோதத்துவம் போன்ற துறைகளில் ஆர்வம் செலுத்தினார். எளிய உணவுப் பழக்கத்தையும் உடைகளையுமே பின்பற்றினார். அதன் பிறகு இலண்டன் சென்று சட்டம் மற்றும் பொருளாதாரத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். துரதிஸ்டவசமாக அந்த நேரத்தில், அவருக்கு கல்வி உதவித்தொகைக்கான காலம் முடிந்ததால் பரோடா மன்னர் உடனே வரச்சொல்லி கடிதம் போட்டார். வழக்கமாக பரோடாவிற்கு நன்கு கற்றவர்கள் வந்து இறங்கினால் இரயில்நிலையத்திலிருந்து ராஜமரியாதையோடு அழைத்துச் செல்வார்கள். ஆனால் அம்பத்கர் வந்து இறங்கியதும் இரயில்நிலையத்தில் யாரும் இல்லை இவரை வரவேற்க. அதுமட்டுமல்ல அங்கு தங்குவதற்கு யாரும் விடுதியில் அறையும் தரவில்லை.

இறுதியாக ஒரு பார்சி விடுதியில் தங்கிவிட்டு பரோடா மன்னரைச் சந்தித்தார். பரோடா மன்னர் இவருடைய திறமையைப் பார்த்து இராணுவச் செயலாளர் வேலையைக்கொடுத்தார். மன்னர் இவர் மீது மிகுந்த நம்பிக்கையையும் மரியாதையையும் வைத்திருந்தாலும் அவருடன் வேலை செய்கிறவர்கள் யாரும் மதிப்பதற்கு தயாராக இல்லை என்பதனை அவர்களின் செயல்கள் மூலம் உணர்த்தினார்கள். சரியானசூழல் இல்லாவிட்டாலும் மன்னரிடம் கல்விஉதவித்தொகை பெறும் போது போட்ட ஒப்பந்தத்தின்படி வேலைசெய்தார். எனினும் நீண்டநாட்களுக்கு அந்த பணியைத் தொடரமுடியாமல் உதறித்தள்ளினார்.

பின்பு பம்பாயில் உள்ள சைத்தான் ஹாம் கல்லூரியில் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். அவரது சரளமான மொழி, ஆளுமை நிறைந்த பேச்சு மற்றும் கம்பீரமான குரல் வளத்தால் மாணவர்களின் உள்ளம் கவர்ந்த பேராசிரியரானார், அதை சக பேராசிரியர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அவர்கள் அவரை அவமதித்தார்கள் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என நினைத்தார். ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை என்பதையும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார். அங்கு அவருக்கு கிடைத்த 15 ரூபாய் மாதச்சம்பளத்தில் குடும்பச்செலவுக்குப் போக மிச்சம் பிடித்து சேமித்து வைத்த தொகையோடு நண்பர்களிடம் கடன்பெற்று இலண்டனில் பாதியில் விட்டுவிட்டு வந்த படிப்பைத் தொடர்ந்தார். அவர் இலண்டனில் இருந்தாலும் அவர் மனம் எப்போதும் மனிதர்களை மதம் என்ற பெயரில் பிரித்து அவமானம் செய்யும் கும்பலை எதிர்த்துப் போராட வேண்டும் என்று எண்ணியது. தீண்டப்படாத மக்களின் பிரச்சனைகளை மற்றவர்களுக்கு புரிய வைக்கவும் அந்த மக்களை தட்டி எழுப்பவும் எழுத்து மற்றும் பேச்சு என்ற ஆயுதத்தைத் தேர்ந்தெடுத்தார். அதனால் பத்திரிகையை ஆரம்பித்தார் நிறைய ஊர்களில் மேடைகளில் பேசி மக்களின் மனங்களைக கவர்ந்தார். தலைவன் என்பவன் அடுத்தவர்களின் மனங்களைக் கவரவும் மக்களின் உணர்வுகளையும் பிரச்சனைகளையும் புரிந்து அதைத் தீர்க்கவும் வேண்டும். இவையெல்லாம் அம்பேத்கரிடம் இருந்ததால்தான் அவர் ஒடுக்கப்பட்டவர்களின் தலைவனாக மிளிர்ந்தார். புறக்கணிக்கப்பட்டவர்களின் நலன்களைக் காக்க உருவாக்கப்பட்ட ஹித்தகாரணி என்ற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் தீண்டப்படாத மக்கள் உயர்கல்வி கற்பதற்காக அவர்களுக்கு விடுதிகள், நூலகங்கள், வாசகர் வட்டங்கள், பொருளாதார நிலையை உயர்த்த தொழில்பயிற்சி மையங்கள் போன்றவற்றை உருவாக்கி அவர்களின் குறைகளை நீக்கினார்.

இவரின் சமூக அக்கறையை கண்டு 1927 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக பம்பாய் மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக அம்பேத்கரை கவர்னர் நியமித்தார். பின்பு அவரேஅந்தச் சட்டமன்றத்தின் மக்கள் பிரதிநிதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தில் அவர் ஒடுக்கப்பட்டவர்களின் கட்டாயக்கல்வி, சுகாதாரம், மதுக்கட்டுப்பாடு, சமத்துவம் மற்றும் அவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தார். கல்வி மேல் தட்டு மக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்கள் போதிக்கும் கல்வி அடித்தட்டு மக்களுக்கு முழுமையாகச் சென்று சேருவதில்லை எனவே ஒரு சாதியிடமிருந்து மீட்டு பல சாதிக்காரர்களும் கல்வி போதிக்கும் பணிக்கு நியமிக்கப்பட்ட வேண்டும் என்றார் அம்பேத்கர். இப்படி குற்றச்சாட்டுக்களை ஆதாரத்தோடு எடுத்துக்கூறி பல நேரங்களில் காந்தியையே எதிர்த்தார். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் பிரிட்டிஷ்காரர்கள் அவரை வட்டமேசை மாநாட்டிற்கும் அழைத்தார்கள்.

பிரதமர் ஜவஹர்லால் நேருவும் அவரைச் சுதந்திர இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சராகவும் அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராகவும் நியமித்தார். இந்தியாவிலேயே அதிக எண்ணிகையில் ஒரு தலைவருக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளது என்றால் அது அம்பேத்கருக்குத்தான். ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்து, தனக்கு ஏற்பட்ட அவமானங்களை எல்லாம் தாங்கிக்கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே உருவாக்கும் நிலைக்கு உயர்ந்தார் என்றால் அவரின் பண்பும் உழைப்பும் திறமையுமே காரணம், அது போற்றப்பட வேண்டும். அவர் வாழ்க்கை படிக்கப்படவேண்டிய பாடம். அவர் வாழ்க்கையில் இன்றைய இளைஞர்களின் வாழ்வியல் வெற்றிக்கான சூத்திரம் ஒளிந்திருக்கிறது. எனவே அம்பேத்கரின் பண்பை, உழைப்பை, மனஉறுதியைக் கற்போம்.

(தொடரும்…)

கு.முருகேசன்

தமிழர் திருநாள்

திராவிடத்தின் ஆதி மக்களான தமிழர்களுக்கு, தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ளது.

இதன் காரணம் என்னவென்றால், கலாசாரத்துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாசாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக& தமிழ்நாட்டின் தமிழனின் கலாசாரங்களை பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்துவிட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவது கூட மிகமிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாசார பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது மாத்திரமல்லாமல், தமிழனுக்கு வரலாறு, சரித்திரம் என்பதுகூடு இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டது.

எனவே, இன்று தமிழன் கலாசாரம், பண்பு, வரலாறு அற்ற ஒரு அடிமை ஜீவனாக விளங்குகிறான்.  இப்படி விளங்குவதுமாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும் – நடத்தும் கலாசாரப் பண்பு, வரலாறு என்பவள் எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத் தன்மையும் தந்து அவற்றை நிலைநிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன.

தமிழனுக்குள்ள கலைகள் என்பனவெல்லாம் தமிழனை அடிமையாக்குவனவாகவே இருந்து வருகின்றன. தமிழனுக்கு அடியோடு சமயம் என்பதே இல்லாமல் போய்விட்டதே எனலாம், மக்களுக்கு, விழா முக்கியமான தேவையாகும். விழாவை முன்னிட்டு மக்களுக்கு மகிழ்ச்சி, ஓய்வு, மக்களுடன் அளவாளவுதல், கவலையற்ற கொண்டாட்டம் கொள்ளுதல், அன்பு, ஆசைப்பரிமாற்றம், சுயேச்சையான களியாட்டம் முதலியவைகளை அனுபவிக்க முடிகின்றது. இவைகளை ஏற்படுத்துவதால்தான் இவற்றை விழா என்று கூறுகிறோம்.

அரசாங்க விடுமுறைக்கு உரிய பண்டிகைகள் போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், மகாசிவராத்திரி, தமிழ் வருடப்பிறப்பு, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி, சரஸ்வதிபூசை, தீபாவளி.  விடுமுறை இல்லாத பண்டிகைகள் -& பிள்ளையார் சதுர்த்தி, கார்த்திகைதீபம், பங்குனி உத்திரம், தைப்பூசம் இந்தப்படியாக இன்னும் பல உள.

இவைகளில் தமிழனுக்கு, தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழன் பண்பிற்கு, தமிழன் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்திற்கு- ஏற்றவாறு விழா அல்லது பண்டிகை என்பதாக எதையாவது சொல்ல முடிகிறதா?

தமிழனின் இழிவுக்கு மறுக்கமுடியாத- முக்காலத்திற்கும் ஏற்ற நிலையில் ஒரு எடுத்துக்காட்டைக் கூறவேண்டுமானால் தமிழனுக்குக் காலத்தைக் காட்டக்கூடிய சொல், சாதனம், அமைப்பு என்பது இல்லையென்றே கூறலாம்.

கிறித்தவர்கள் காலத்தைக் காட்ட கிறித்துவ ஆண்டு (கி.பி.) இருக்கிறது. முஸ்லிம்கள் காலத்தைக்காட்ட இஸ்லாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது, இது போல, தமிழனுக்கு என்ன இருக்கிறது? இதற்குத் தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது?

மற்றும், இப்படியேதான் தமிழனுக்குக் கடவுள், சமயம், சமயநூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன், மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.

இந்தப் பண்டிகையும் (பிணீக்ஷீஸ்மீst திமீstவீஸ்ணீறீ) அறுவடைத் திருவிழா என்ற கருத்தில்தானே ஒழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திரவிழா என்று சொல்லப் படும் கருத்தில் அல்ல.

இந்தப் பொங்கல் பண்டிகையை தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்.

(கட்டுரை & ‘விடுதலை’ 30.01.1959)

அறிவு+உணர்வு+துணிவு=கி.வீரமணி

தந்தை பெரியார் , தனக்குப் பிறகு தன் கொள்கைகளையும் இயக்கத்தையும் காப்பாற்றவும் பரப்பவும் வழி நடத்தவும் தகுதியும் நம்பிக்கையும் உள்ள தொண்டர்களாக நம்பித்தேர்வு செய்தார் இரண்டு மணிகளை- ஒருவர் அரசியல்மணி என்று முதலில் அழைக்கப்பட்ட மணியம்மை; இரண்டாமவர் கி.வீரமணி!

தந்தை பெரியார் தத்துவத்தையும், சித்தாந்தத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். அந்தக் கருத்துகளைப் பரப்பும் கடமையையும் தம் தலையில் தூக்கிச் சுமந்தார். அதைச் செயல்படுத்தும் களங்களையும் அமைத்து, முதல் தொண்டனாகத் தன்னையே முன்னிறுத்தினார். சிறைவாசம் என்று வந்த போது சிரித்த முகத்துடன்  அதனை மேளதாளத்தோடு வரவேற்றார். அதற்காக எதிர் வழக்காடவில்லை.

பார்ப்பன நீதிபதிகள் ஆசனத்தில் அமர்ந்து தீர்ப்புக் கூறும் நிலையில் இருந்த போதும் கூட, பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு – கடும் புலிகள் வாழும் காடு என்று கர்சித்தார். தனக்குப் பின், தன் கொள்கைகளே, நூல்களே வாரிசு என்று சொல்லியிருந்தாலும்கூட தனக்குப் பின் இந்தக் கொள்கையைக் கொண்டு செலுத்தி, இயக்கத்தை நடத்த ஒருவன் வருவான் என்றார். அவன் எத்தகைய நிலையில் இருப்பான் என்பதை-யும் சொல்லத் தவறவில்லை அந்தத் தத்துவ ஆசான். சிவகங்கை பொதுக்கூட்டத்தில் (10.4.1965)  பேசிய பொழுது, அத்தகைய கருத்-தொன்றைப் பதிவு செய்தார் பகுத்தறிவுப் பகலவன்.

தனது உரையில், தனக்குப் பின் தனது புத்தகங்களே வழி-காட்டும் என்று குறிப்பிட்டார். இந்தத் தொண்டும், பிரச்சாரமும் அறிவை சேர்ந்த-தல்ல; உணர்ச்சியைச் சேர்ந்தது. அந்தப் பக்குவம் உள்ள ஒருவன் இருந்தால், அவன் அடுத்துத் தலைமை ஏற்க வருவான் என்று குறிப்பிட்டார்.

முகம்மது நபியைப் பார்த்து உங்களுக்குப் பின் யார்?என்று கேட்டதற்குஅவர், எனக்குப் பின் வேறு யாருமில்லை என்று கூறிவிட்டார். நான் அப்படிக் கூறவில்லை. அறிவும், உணர்ச்சியும், துணிவும் உள்ள யார் வேண்டுமானாலும் வரலாம் என்று குறிப்பிட்டார். (விடுதலை 23.4.1965).

அறிவு – உணர்ச்சி, – துணிச்சல் மூன்றும் சேர்ந்த ஒருவன் தலைமையேற்க வரக்கூடும் என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் கருத்தும் – கணிப்பும்.

இந்த மூன்றும் நிறைந்த முழு மனிதராக – தந்தை பெரியார் கணிப்பு என்ற கொள்கலனில் பொருந்தக்கூடிய ஒருவராகத் திகழ்பவர்தான் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

1961இல் திராவிடர் கழகப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார். 1962இல் ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1978 அன்னை மணியம்மையார் மறைவுக்குப் பின் திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்று பல சாதனைப் பணிகளைச் செய்தார்.

தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு இயக்கம் இருக்குமா என்று வினா தொடுத்தவர்களுக்கு நெற்றியடி கொடுத்து இருக்கும் – வேகமாக இருக்கும் – புலிப் பாய்ச்சலாக இருக்கும் என்று நிரூபித்துக் காட்டி வருகிறார். இந்தியாவின் தலை நகரிலேயே ஜெசோலாவில் 5 அடுக்குக் கட்டடத்தில் பெரியார் கொள்கையை மய்யம் கொள்ளச் செய்துள்ளார்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் பெரியார் பன்னாட்டு மய்யம் என்ற அமைப்பின் மூலம் பெரியார் கருத்துகளை மய்யம் கொள்ளச் செய்திருக்கிறார்.

பெரியார் மறைவுக்குப் பிறகு, அவர் இருந்த இடத்தை வெறி சோடிப்போகாமல் காப்பாற்றி விட்டார் வீரமணி என்ற கருத்தின் மூலம் (மறைந்த) தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களின் தொண்டிற்கு அங்கீகாரம் அளித்துள்ளார்.

பெரியார் இல்லையென்றால் இந்த இனத்திற்கு விடுதலைஎன்பது இல்லை. அதேபோல் ஆசிரியர் கி.வீரமணி இல்லையேல் இன்று விடுதலை இதழ் இல்லை என்று ஆகியிருக்கும்.

1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் ‘விடுதலை’ அச்சகம் offset  இயந்திரத்தின்மூலம் அச்சாகத் துவங்கியது. இயந்திரத்தைத் துவக்கி வைத்த அன்றைய முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள், ” Upset ஆகிவிடுமோ என்ற நிலையில் இருந்த ‘விடுதலை’ யைஆப்செட்அச்சகம் என்ற நிலைக்கு உயர்த்திய பெருமை வீரமணியையே சேரும்” என்று கூறினார்.

விடுதலை நாளிதழின் ஆசிரியராக 57 ஆண்டுகள் நிறைவுசெய்து இருக்கிறார் ஆசிரியர் கி.வீரமணி. இந்திராகாந்தி அம்மையார் ஆட்சியில் எமர்ஜென்சி நடைமுறைக்கு வந்தபோது, கழுத்து நெறிக்கப்பட்ட பத்திரிகைகளில் விடுதலையும் முதன்மையானது. ஆசிரியர் அவர்கள் மிசா சிறைவாசியாக, சென்னை மத்திய சிறையில் நேரடித் தாக்குதலுக்குள்ளாகி பல துன்பங்களை அனுபவித்துவந்த நேரத்தில், விடுதலை நாளேடு நாள்தோறும் தணிக்கைக்குள்ளாகி பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. பெரியார் என்ற வார்த்தையைக்கூட தணிக்கை செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நேரங்களிலும் பத்திரிகையைத் தொடர்ச்சியாக வெளிவரச் செய்யும் நிலைமையை உருவாக்கியவர் ஆசிரியர் அவர்கள்.

விடுதலையின் 25வது ஆண்டு துவக்கத்தில் ‘’இலட்ச ரூபாய்களை விடுதலை நடப்புக்காகச் செலவிட்டு, நஷ்டமடைந்த நிலையில், இதனை ஏற்க முன்வந்த வீரமணி அவர்களது துணிவையும், தியாகத்தையும் சுயநலமற்ற தன்மையையும் கருதி, விடுதலை வீரமணி அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது’’ என்று தந்தை பெரியார் குறிப்பிட்டிருக்கிறார்.

எப்படிப்பட்ட சூழலில், விடுதலையின் ஆசிரியராக வீரமணி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார் என்பதைப் பெரியாரே விளக்கினார். மேலும் அவரே, ”உண்மையைச் சொல்கிறேன். தோழர் வீரமணி இந்த முழுநேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால் தினசரி விடுதலையை நிறுத்தி வாரப்பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். பெரியாருக்கு அத்தகைய நெருக்கடியான நிலையை ஏற்படுத்தாமல் ஆசிரியர் அவர்கள் விடுதலை நாளேட்டை சிறப்பாக நடத்தத் தொடங்கி இன்றுவரை அதனை மிக அருமையான முறையிலே  திருச்சியிலிருந்தும் ஒரு பதிப்பை  நடத்திவருவதை நாம் அனைவரும் காண்கிறோம்.

மானமிகு ஆசிரியர் கி.வீரமணி எழுதிய நூல்கள் 75 க்கும் அதிகம். அவற்றில் பார்ப்பனர்களை அதிரச்செய்த நூல்களில் சில

சங்கராச்சாரி – யார்?  ஓர் ஆய்வு . கீதையின் மறுபக்கம்

உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?

சட்டப்படி நாம் இன்னும் சூத்திரரே!

மேலும், பெரியார் மணியம்மையார் திருமணத்தைப் பற்றிய பல அய்யப்பாடுகளை விளக்கும் ‘பெரியார் மணியம்மை திருமணம் ஒரு வரலாற்று உண்மை விளக்கம்’ என்ற நூல்! இது பெரியாரியத் தொண்டர்களுக்கும் கையேடாகப் பயன்படுகிறது. வீரமணி என்றால், பார்ப்பன எதிர்ப்பு,கடவுள் மறுப்பு என்று மட்டுமே நினைப்பதற்கு மாறாக அவருடைய ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூல்கள் அவர், உலக வாழ்வை எந்த அளவுக்கு உற்று நோக்குகிறார்  என்பதை புரிய வைக்கின்றன.

மானமிகு என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் திராவிடர் கழகத்தினர் அனைவரும் மானமிகுஎன்று தன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி அதை நடைமுறைப்படுத்தி,டாக்டர் கலைஞர் அவர்களே,தன்னை மானமிகு சுயமரியாதைக்காரன் என்று அழைக்கப்படுவதையே விரும்புவதாக சொல்லும் அளவுக்கு அந்த சொல்லின் பொருளை விளக்கமுறச் செய்தவர்.

1994 ஜூலை 19 ஆகிய இந்நாள் சமூக நீதி வரலாற்றில்  வைரக்கீற்றைப் பொறித்த புதுநாள் ஆகும். இன்றுதான் தமிழ்நாட்டின் 31சி சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்த ஒரு பொன்னாள்.

எந்த மாநிலத்திலும் இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டை விஞ்சக்கூடாது என்ற ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றம் ஆணி அடித்துக் கூறிவிட்டது. (16.11.1992).

தமிழ்நாட்டில் இருந்து வரும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பெரிய பள்ளத்தில் விழுந்துவிட்டது. இனி எழுவது என்பது இயலாத ஒன்று என்று இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் பார்ப்பன ஆக்டோபஸ்கள் ஆனந்த மலர்ப் படுக்கையில் படுத்துப் புரண்டனர்.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இந்த நெருக்கடியிலிருந்து சமூக நீதியைக் காக்கத் தயாரித்துத் தந்த சட்ட முன்வடிவுதான்  இந்திய அரசமைப்புச் சட்டம் 31சி யின் அடிப்படையில் அமைந்த ஒன்றாகும். இந்தச் சட்டம் மூன்று பார்ப்பன அதிகார வட்டத்துக்குள் நுழைந்து வெற்றிகரமாக வெளிவந்தது என்பது சாதாரணமானதல்ல.

தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா (பார்ப்பனர்) சட்டத்தை தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிக் கொடுத்தார். (31.12.1993)நாடாளுமன்றத்தில் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் (பார்ப்பனர்) இச்சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தார். குடியரசுத் தலைவர் சங்கர்தயாள்சர்மா (பார்ப்பனர்) ஒப்புதல் அளித்தார்.

54 முறை கைதான தலைவர்:  மக்களின், சுயமரியாதை, கல்வி-வேலைவாய்ப்பு , இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை ஜாதி இழிவு ஒழிப்பு , மொழிஉரிமை, மாநில உரிமை  நுழைவுத்தேர்வு எதிர்ப்பு,விலைவாசி உயர்வு எதிர்ப்பு, சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு  என்று மக்கள் நலனுக்கான போராட்டங்களை நடத்தி சிறைச்சாலையை மக்கள் நலனை சிந்திப்பதற்கான ஓய்வறையாகப் பயன்படுத்துகிறவர் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள்.

மனுதர்ம அடிப்படையில்தான், இந்து லா சட்டங்கள் இருக்கின்றன. அந்த மனுதர்மத்தைப் பொருத்தவரையில், உயர்ந்த ஜாதி-\தாழ்ந்த ஜாதி,  தொடக்கூடிய ஜாதி – தொடக்கூடாத ஜாதி,  பார்க்கக்கூடாத ஜாதி – பார்க்கக்கூடிய ஜாதி என்று பிரித்திருப்பதோடு மட்டுமல்லாமல், பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்து, பிறவியில் ஆண்கள் எஜமானர்கள்; பெண்கள் அடிமைகள்; எந்தக் காலத்திலும் பெண்கள் சுதந்திரமாக இருக்கத் தகுதியற்றவர்கள்;  கல்வி அறிவு பெறக்கூடாதவர்கள் என்பதை வலியுறுத்துவதோடு, சூத்திரர்கள் என்று மிக பெரும்பாலான உழைக்கின்ற மக்களை, காலங்காலமாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டு களாக ஆக்கி வைத்துள்ளது மனுதர்மமே! அதனுடைய அடிப்படையில்தான் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறார்கள்.

எனவேதான், இந்த ஆபத்தை உணர்த்து வதற்காக, மனு அநீதி, மனுதர்மம் மனித தர்மத்திற்கு விரோதமானது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் தமிழ்நாடு முழுவதும் இந்த மனுதர்ம எரிப்பு நடைபெறுகிறது.என்று சொல்லி மனு (அ)தர்ம நூலை எரித்து  2019 பிப்ரவரி 7 ஆம் நாள் 54 நான்காம் முறையாக கைது செய்யப்பட்டார்.

‘’இப்போது வயது நாற்பத்தி ஆறு. தோற்றம் வயதைத் தெரிவிக்காது என்றாலும் முதிர்ச்சி பெற்ற கருத்துகளை மேடைகளில் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். சற்றுக் குனிந்து வளைந்து ஆனால், யாருக்கும் வளையாத கொள்கைகளை அள்ளித் தருகிறார். கருப்புச் சட்டை மேனியை அலங்கரிக்கிறது. கையிலே சொற் பொழிவுக் கான குறிப்புகள். அருகேயுள்ள மேசையிலே அன்றைய பேச்சுக்கான ஆதாரங்களை எடுத்துக் கூறுவதற்கு வாய்ப்பான பெரிய பெரிய புத்தகங்கள். இங்கேதான் நீங்கள் முக்கியமாய் கவனிக்க வேண்டும், அது தான் முக்கியமானது. மிக முக்கியமானது என்ற சொற்றொடர், அடிக்கடி பேச்சினிடையே வந்து கொண்டிருக்கிறது. மணிக்கணக்கில் பேசுகிறார். யார் இவர்?

வேறு யாருமல்ல, தனது பத்தாவது வயதிலேயே திராவிடர் இயக்க மேடைகளில் பேச ஆரம்பித்தார். இன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் – “விடுதலை” நாளிதழ் ஆசிரியர் வீரமணி அவர்களைத் தான் குறிப்பிடுகிறேன். ”பேசும் கலை வளர்ப்போம்’ நூலில்  கலைஞர் மு. கருணாநிதி, அவர்கள்  நாற்பது ஆண்டுகளுக்கு முன் சொன்ன சொற்கள் இப்போதும் பொருந்துகிறது.

2003 இல் காரைக்குடி அழகப்பா, பல்கலைக்கழகம் இவருக்கு ‘மதிப்புறு  முனைவர்’ பட்டம் அளித்து பெருமைப்படுத்தியது.  ‘டாக்டர்’ பட்டம் வாங்கினாலும், மக்கள் நோய் போக்கும் மாமருத்துவராம் தந்தை பெரியாரின் ‘மானமும் அறிவும்’ என்ற மருந்தை நாடெங்கும் கொடுக்கும் மருந்தாளுனர் என்றே தன்னை அறிவித்துக் கொள்கிறார் ஆசிரியர் வீரமணி (‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ நூலின் முன்னுரையில்)

இயக்க வரலாற்றில் பல நாள்கள் – பல நிகழ்வுகள் முக்கியத்துவம் பெற்றன. அந்த நாள்கள் – நிகழ்வுகளின் பட்டியலில் செப்டம்பர் 22 (2019)  முக்கியமான இடத்தை வகிக்கிறது என்பதில் அய்யமில்லை.அந்த நாளில் தான் அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டன் – மேரிலாண்டில் பெரியார் பன்னாட்டு அமைப்பு – அமெரிக்கன் மனிதநேய சங்கமும் சேர்ந்து மனித நேயம் மற்றும் சுயமரியாதை தத்துவ மாநாடு நடத்தியது.அமெரிக்கன் மனித நேய சங்கம்(American Humanist Association) திராவிடர் கழகத் தலைவர் – ‘விடுதலை’ ஆசிரியர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு 2019ஆம் ஆண்டுக்கான “வாழ்நாள் சாதனையாளர் விருது” (Humanist Lifetime Achievement Award)  அளித்து மகிழ்ந்தது. இந்த விருதினை அமெரிக்கன் மனித நேய சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக் ஹார்ட் (Roy Speck hardt) வழங்கியபோது அரங்கமே குலுங்கிய வண்ணம் கரஒலி எழுந்தது.தந்தை பெரியார் வாழ்க, ஆசிரியர் வாழ்க என ஒலி முழக்கம் எங்கும் – எங்கும்!இந்தத் தருணம் மிக முக்கியமானது – அங்கீகாரத்தன்மை கொண்டது என்பதில் அய்யமில்லை.இதற்கு முன் பால் கர்ட்ஸ் (Paul Kurtz) மற்றும் கார்ல் சாகன் (Carl Sagan) ஆகியோர்க்கு இத்தகைய விருது அளிக்கப்பட்டது.தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு அவர் யாத்த மனித நேய – சுயமரியாதைத் தத்துவத் தொண் டினை வியப்புறு வகையில் ஆற்றிவரும் மகத்தான தலைவருக்கு மிகப் பொருத்தமான வகையில் அமெரிக்கன் மனித நேய அமைப்பு விருது சமுதாயத்தில் நிலவும் சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களையவும், சமூகநீதி காத்து, மனிதநேயம் வளர்க்கவும் இவர் வாழ்நாள் முழுவதும் முழுநேரத் தொண்டு செய்து வருவதைப் பாராட்டி இவ்விருதினை வழங்குகிறோம்.’’ என்று செயல் இயக்குநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

பெரியார்,நான் திராவிடர் சமுதாயத்தைத் திருத்தி, இந்த மக்களை, மானமும் அறிவும் உள்ள மக்களாக ஆக்குவதுதான் என்னுடைய ஒரே பணி; அந்தத் தொண்டை நான் ஏன் என்மேல் போட்டுக் கொள்கிறேன்? அதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது, என்று நீங்கள் கேட்கலாம். வேறு எவரும் செய்ய முன்வராததாலேயே நான் செய்கிறேன். எனக்கு அந்த ஒரு தகுதியே போதும் என்றார்.

தந்தை பெரியாரின் தலைமை மாணாக்கர் கி. வீரமணி.எனக்கு சொந்த புத்தி தேவையில்லை;பெரியார் தந்தபுத்தி போதும்என்று சொல்லி,தொண்டறம்புரிய கால நேரம் ஏதுமில்லை  என்ற முடிவோடு, ஐம்பது வயதில் உடல் நலம் கெட்ட பிறகும், சிலமுறை இதய அறுவை சிகிச்சை செய்த பின்னரும் பலமுறை, மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்திய பிறகும், தோழர்களின் அழைப்பை மறுக்க முடியாமல் சுற்றிச்சுற்றி பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார்  86 வயதே ஆன இளைஞர் கி.வீரமணி!  வாழ்த்துவோம் அவர் இன்னும் நூறாண்டு நலமுடன் வாழ்க!

.- க.அருள்மொழி

திருவிழா

ஆத்திருநாவுக்கு இன்னும்

ஒருமாசம்தான் இருக்கு!

அதுக்குள்ள சொந்தக்காரங்களுக்கு

கடுதாசி எழுதி வரவைக்கனும்!

ஊர்லேயே பெரிய

திருநானா அதுதான்!

எல்லா வீட்லயும் சொந்தம் பந்தங்க

நெறஞ்சி இருப்பாங்க

திருநாவுக்கு மூணுநாள்

நாலுநாள் முன்னாடியே வந்துருவாங்க!

ஊரே அமர்க்களமாய் இருக்கும்!

குப்பாத்தா பாட்டி

ஒண்டிக்கட்டையா ஒத்தை

குடிசையில காலத்த ஓட்டிட்டு

இருந்தது!

இருந்த ஒரேஒரு பொண்ணையும்

ரொம்ப தொலைவுல செங்கத்துக்கு

அப்பால தானிப்பாடில கட்டி

குடுத்துருச்சு!

அப்பப்போ வரபோக முடியாது

ஒட்டுத்திண்ணைல ஒக்காந்துட்டு

ஏதாச்சும் ஒண்ண

பொலம்பிட்டே இருக்கும்!

மகக்காரியோ நெனச்சோ இல்லனா

பேரப்புள்ளைங்கள நெனச்சோ!

பள்ளிக்கோடத்து பையை வீட்ல

தூக்கிப்போட்டுட்டு

வயிறு கலக்குதுனு தாமரைகொளத்து

பக்கமா ஓடுனேன்!

“அமராவதி பையனா கொஞ்சம்

நில்லுடானு” ஒட்டுத்திண்ணைல

உட்கார்ந்த குப்பத்தா பாட்டி கூப்டது

காதுல விழுந்து திரும்புனேன்!

“என் மகக்காரிய திருநாவுக்கு

வரச்சொல்லி ஒரு கடுதாசி எழுதனும்;

கொஞ்சம் எழுதிக்குடுத்துட்டு போயானு”

சொல்லுச்சு

நானும் கொளத்து வரைக்கும் போயிட்டு

வந்து எழுதறேனு சொல்லிட்டு

வேகமா ஓடினேன்!

திரும்பி வரப்போ

பதினஞ்சி பைசா தபால்கார்டை

கையில வச்சிட்டு காத்துட்டு இருந்தாங்க!

“இருங்க பாட்டி நான் போயிட்டு மைக்குச்சி

எடுத்துட்டு வரேனு “வீட்டுக்கு ஓடி

எடுத்துட்டு வந்து சொல்லுங்க பாட்டினு

சொன்னேன்!

“அன்பும் பாசமும் நிறைந்த மகளுக்கு

அம்மா எழுதும் கடிதம்  நான் இங்கு நலம். நீங்கள் எல்லோரும் நலமா? பெரியவனும் சின்னவனும் பள்ளிக்கோடம்  போறாங்களா? பத்திரமா பார்த்துக்கோ. “ சொல்லும்போதே எழுதிட்டியானு கேட்டாங்க!

“ம்ம்ம் எழுதிட்டேன் அப்புறம் சொல்லுங்கனு” மைக்குச்சியை உதறியபடியே சொன்னேன்

“செவலைக்கன்னு கன்னு போட்டுருச்சா

கெடேரியா? சேங்கனையானு கேளுப்பானு” சொன்னாங்க!

“கொல்லையில துவரஞ்செடி பூ எடுத்துருச்சானு” கொஞ்சம் கேட்டு எழுதுப்பான்னாங்க!

“பக்கத்துவீட்டு முருகாயி எப்படி இருக்கா

அப்பப்போ சண்டை போட்டுட்டு ஆத்தா வூட்டுக்கு போயிருவாளே இப்போ சண்டை

இல்லாம ஒழுங்கா இருக்காளானு” கேளுப்பான்னாங்க;

 அப்புறம் எதிர்வூட்டு எல்லம்மா, அம்சா ,முருகாயி, ஏகாம்பரம் கிழவன் “இவங்க எல்லாரையும்

ஒருவார்த்தை கேட்டேனு எழுதுப்பா!

“அப்புறம் முக்கியமா ஒரு விசயம்னு” பாட்டி சொல்லும்போதே

தபால்கார்டு முழுதும் நெறஞ்சி இருந்தது

“இதுக்குமேலே எழுத முடியாது

முகவரி மட்டும்தான் எழுத முடியும்னு சொன்னேன்!

“அய்யோ திருநாவுக்கு வரசொல்லத்தான் கடுதாசியே எழுத சொன்னேன்;

அத மறந்துட்டு என்னன்னமோ எழுதி தொலைச்சிட்டேன்; இந்த சேதிய மட்டும்

ஏதாவது ஒரு மூலையில எழுதிடுப்பானு”

கெஞ்சுனாங்க

எப்படியோ முகவரி எழுதுற

எடத்துக்கு கீழே எழுதிட்டேன்!

இக்கடித்தை கண்டவுடன் ஆத்திருநாவுக்கு

ஒருவாரத்துக்கு முன்னதாக உடனே

புறப்பட்டு வரவும்

மற்றவை நேரில்

இப்படிக்கு

உங்கள் அன்பை என்றும் மறவாத

அம்மா குப்பாத்தா!

எரவானத்துல சொருகிவச்சிருந்த

தாளை எடுத்து நீட்டினார்கள்

அதில்தான் பாட்டியின் முகத்தைப்

போலவே ஆங்காங்கே சுருக்கங்களோடு

இருந்தது முகவரி!

திருநாவுக்கு நாலைஞ்சி நாள்தான்

இருந்தது

ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது

எல்லோர் வீட்லயும் சொந்தக்காரங்க

வந்து குவிஞ்சிருந்தாங்க;

ஒவ்வொரு ஊரைப் பத்தியும் அவங்க

கதைகளையும் ஆளாளுக்கு

சொல்லிட்டு இருந்தாங்க!

திருவிழாவுக்கு ரெண்டுநாள்தான்

இருந்தது; குப்பாத்தா வீடு மட்டும்

வெறிச்சோடி கிடந்தது.

அவளது பார்வை தெருவை வெறித்தபடி

எதிர்நோக்கி கிடந்தது! அவ்வப்போது

அட்ரச சரியா எழுதனானானு தெரியலேயேனு புலம்பல் வேற!

எனக்கும் சங்கடமாகத்தான் இருந்தது

அவர்களை கடந்து செல்ல!

எப்போதும் வெறுமையை உற்று நோக்கும்

அவளது கண்ணில் நீர்த்திவலைகள்!

திருவிழாவுக்கு முந்நாள் ஒன்றரை மணி

டவுன்பஸ்ல குப்பாத்தா மகளும் பேரப்புள்ளைங்களும் தானிப்பாடில இருந்து வந்து எறங்குனாங்க!

நான்தான் ஒரே ஓட்டமா ஓடிப்போய்

குப்பாத்தா பாட்டிகிட்ட மக வர்ற சேதிய

சொன்னேன்!

“தெரியுன்டா ராசா, எம்மக எப்படியும் வந்துருவானு; நீ எழுதுன கடுதாசி கடல்கடந்து பினாங்கு வரைக்கும் போயி

பதில் வந்துருச்சுனா; இது எம்மாத்தூரம்னு

நெனச்சேன்டா

இதோ குப்பாத்தா வாசலில்

மாக்கோலமும் செம்மண் வரிகளும்

பூத்திருந்தது!

திருவிழா வெடிச்சத்தம்

மத்தாப்பூக்களாய் தெறித்தது

அவள் வீட்டு வாசலில்!

  • காமராசன் மண்டகொளத்தூர்